Wednesday 25 May 2016


பத்தாம் வகுப்பு தேர்வில் வ.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளி 91% தேர்ச்சிப் பெற்றுள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 202 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 184 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வ.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் விவரம்:

முதல் இடம் -  G.வைதேகி (வண்ணாரம்பூண்டி)      -   450/500. 
இரண்டாம் இடம் -  M.வாசுகி (வண்ணாரம்பூண்டி)  -  442/500.  
மூன்றாம் இடம்   -  S.அப்ரின் பானு  -   438/500.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கு எமது தளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ...

Tuesday 24 May 2016


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஆட்சியர் க. நந்தகுமாரிடம் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்துள்ளது. மேலும், பல ஏரி, குளங்களில் சீமைக்கருவேல மரங்களும், நாட்டுக் கருவேல மரங்களும் வளர்ந்து அடர்ந்துள்ளது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைந்துவிட்டது. நீர்நிலைகளுக்கு மழைநீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர்நிலைகளின் கரைகளில் மரக்கன்றுகள் நட்டு அவற்றை பாதுகாக்க வேண்டும்.
ஏரி, குளங்களின் உண்மையான பரப்பளவு, நீர் வழித்தடங்கள் ஆகியவை அளவிடப்பட்டு, அதன் முழுமையான பரப்பளவை மீட்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஏரி, குளங்களின் பரப்பளவுடன் கூடிய தகவல் பலகையை அப்பகுதியில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி, வேளாண்மையை வளப்படுத்தி, விளைச்சலை அதிகரிக்கவும், செயற்கை உரங்களின் நச்சுப் பிடியிலிருந்து விடுபடவும், ஏரி, குளங்களின் வண்டல் வீழ்படிவினை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவும், வண்டல் மண் எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நந்தகுமார், ஏரி, குளங்களில் எந்தெந்த வாகனத்தின் மூலம் மண் அள்ளப்படுகிறது என்பதை முன்கூட்டியே மாவட்ட நிர்வாத்திடம் தகவல் அளித்துவிட்டு, விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்றார் அவர்.

-தினமணி.

Monday 23 May 2016



பெரம்பலூர் : கோடை கால விடுமுறை முக்கால்வாசி முடிந்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முறையான பராமரிப்பின்றியும், கேட்பாரற்றும் கிடக்கும் சுற்றுலாத் தலங்களை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள் இருந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியில் பரப்பளவை குறைவாகக் கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியை நம்பியுள்ள விவசாயிகள் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். 

இதனால் இம்மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகித்துவருகிறது. இம்மாவட்டத்தில் தான் மாநிலத்திலேயே மிக அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும், இம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மட்டும் இதுவரை மேம்படுத்தப்படாமலேயே இருந்து வருகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையை கூட அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்துவருவது சுற்றுலா ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

சந்தா சாஹிப்- பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமதுஅலி- ஆங்கிலேய கூட்டுப்படைக்கும் இடையே 1751ல் நடைபெற்ற வால்கொண்டாபோர் ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடைபெற்றதை வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டையில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புனரமைப்பு பணிகள் வெறும் பெயரளவுக்கு மட்டுமே நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

குறிப்பாக சுற்றுலாப் பயணிகளாக இக்கோட்டைக்குச் செல்வோருக்கு குடிநீர், உணவு, கழிப்பிட வசதி என எதுவும் செய்துதரப்படவில்லை. இதனால் தனிமையை விரும்பும் காதல் ஜோடிகளைத் தவிர இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வதில்லை என்பது வேதனை தருகிறது.
 இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சான்றாக சாத்தனூர் கல் மரம் திகழ்கிறது. கடல் இருந்ததாகக் கூறப்படும் இப்பகுதியில் ‘கோனிபர்ஸ்’ எனப்படும் பூக்காத வகை தாவரத்தைச் சேர்ந்த மரமொன்று ஆழிப்பேரலையில் புதையுண்டு காலப்போக்கில் இப்படிக் கல்லாகிப் போனதாக நிலவியல் துறை ஆதாரங்கள் கூறுகின்றன. 

இந்த கல்மரத்தின் அருகே தங்குமிடம் கட்டப்பட்டதே ஒழிய தேவையான போக்குவரத்து, குடிநீர், மின்சார வசதி செய்துதரப்படவில்லை.
 இதே போல் லாடபுரத்தில் உள்ள மயிலூற்று அருவிக்குச் செல்லும் பாதை சிதிலமடைந்து காணப்படுகிறது. சரிவர மழை பெய்யாமல், அருவியில் தண்ணீர் கொட்டாமல், பாதையை மட்டும் சீரமைத்து என்ன பயன் என கருதிய மாவட்ட நிர்வாகம் அதையும் கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டது. 

இவை தவிர கண்ணகி சினம் தனித்தலமாகக் கூறப்படும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் குளங்கள் சீரமைக்கப்படாமலும், பரவாய், ஒகளூர் பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகளும் கண்டுகொள்ளப்படவில்லை. 300 ஆண்டுகள் பழமையான மூலிகை ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோயிலும் சுற்றுலாத் துறையால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், மற்ற மாவட்டங்களைப் போல், பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவை மாவட்ட நிர்வாகத்தோடு கொண்டாடவும், அதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவது மட்டுமே தனது பணியென நினைத்துவிட்டது. 

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள விசுவக்குடி அணைக்கட்டு மட்டுமே உள்ளூர் சுற்றுலா ஆர்வலர்களுக்கு ஆறுதலான ஒன்றாக உள்ளது. அரசுத் துறை அலுவலர்களுக்கு மட்டும் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா மாலைநேர பொழுதுபோக்கு இடமாக உள்ளது. அவ்விடமும் தற்போது கல்லூரி ஜோடிகளின் காமலீலைகளுக்கு புகழிடமாகி விட்டது. 

சிறுவர் பூங்கா என்றாலும், அதில் உள்ள ஊஞ்சல், சாய்வுத்தளத்தை பெரியவர்கள் பயன்படுத்துவதால் பழுதடைந்து பேரீச்சம் பழ வியாபாரத்துக்கு  தயார்நிலையில் உள்ளது. கோடையில் அனுபவிக்க வேண்டிய முக்கால்வாசி லீவு முடிஞ்சேபோச்சு. இதுவும் எஞ்சிய விடுமுறையைக் கொண்டாட மக்கள் திருச்சி, மதுரை, தேனி, நீலகிரி மாவட்டங்களுக்குத் தான் படையெடுத்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த மாநில சுற்றுலாத் துறையும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்பைடையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இன்று புதிதாக சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவியேற்கும் வெல்லமண்டி நடராஜன் தீர்வு காண முன்வர வேண்டும் என்பதே சுற்றுலா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 -தினகரன்.
பெரம்பலூரில் தமிழ்நாடு பிராமணர் சங்க பெரம்பலூர் மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீசிருங்கேரி மடம் சார்பில் சமஸ்கிருத இலவச பயிற்சி வகுப்புகள் மதரசா சாலையில் உள்ள என்.டி.சி.மையத்தில் சனிக்கிழமை மாலை துவங்கியது.
இம்மாதம் 30-ந்தேதிவரை தினமும் மாலை 4மணிமுதல் 6மணிவரை நடக்கிறது. சமஸ்கிருத மொழி பயிற்றுனர்கள் விஷ்ணு, மஞ்சுளா ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். பயிற்சியை பயிற்சி ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமானஆனந்த நடேசன் துவங்கி வைத்து பேசும்போது, இந்த பயிற்சியில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்கள், பெரியவர்கள் இருபாலரும் அனைத்து வயதினரும், சமஸ்கிருதம் பயில ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். பயிற்சி துவக்க விழாவில் சங்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் சுபிக்‌ஷா சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.