Friday, 24 October 2014

    கோவில்களையும் அவற்றின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின் நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 47 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின் சீரழிவையும், கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம். நிலங்கள், தோப்புகள், மனைகள், கட்டிடங்கள், வெள்ளி, தங்கம், நகைகள், வாகனங்கள், பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் என ஒவ்வொரு கோவிலுக்கும் ஏரளமான சொத்துக்கள் உண்டு.
Kovil Nilangalum Aranilaiyathuraiyin Alatchiyamum
அறநிலையத்துறை நுழைவுக்கட்டணம், சிறப்புக்கட்டணம், அர்ச்சனைக்கட்டணம், அன்னதானம், தங்கரதம் செய்வது, கும்பாபிஷேகம் நடத்துவது என்று சகல விஷயங்களுக்கும் பக்தர்களிடமிருந்து பணம் பெறுவதில் காட்டும் திறமையில், பத்தில் ஒரு பங்குகூட, கோவில் சொத்துக்களைப்பாதுகாப்பதிலோ அவற்றிலிருந்து வருமானம் பெறுவதிலோ காட்டுவதில்லை. அனைத்துச் சொத்துக்களைப் பற்றியும் விவரமாகப் பார்த்தால் ஒரு பெரிய நூலே எழுதவேண்டியிருக்கும். ஆகவே, கோவில் நிலங்களைப் பற்றி மட்டும், சில குறிப்பிட்ட விவரங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
திராவிட மாயையில் காணாமல் போன நிலங்கள்
தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்டவை. சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் போன்று பழங்காலத்தில் தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களால் கட்டப்பட்டவை. அவ்வாறு தாங்கள் கட்டிய மாபெரும் கோவில்களுக்கு அம்மன்னர்கள் நிலங்கள் முதலான சொத்துக்கள் ஏராளமாகக் கொடுத்தனர். மன்னர்கள் மட்டுமல்லாமல், பின்வந்த நாட்களில் நிலச்சுவான்தாரர்களும், செல்வந்தர்களும் கூட கோவில்களுக்குப் பலவிதமான சொத்துக்களைத் தானமாகத் தந்துள்ளனர். அந்தச் சொத்துக்கள் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தில் கோவில் நிர்வாகம் மட்டுமல்லாமல், பல்வேறு திருவிழாக்களும், உற்சவங்களும் கொண்டாடுவதும், பசுமடங்கள் கட்டிப் பசுக்களை பராமரிக்கவும் வேண்டும் என்பதே தானமளித்தவர்களின் நோக்கமாகும். மேலும் கோவில் சம்பந்தப்பட்ட, ஹிந்து சமூகம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் பயன்படவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாகும்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளில், கோவில் சொத்துக்கள் குறைந்தும் அழிந்தும் வருவதோடு மட்டுமல்லாமல், இருக்கின்ற சொத்துக்களிலிருந்து கிடைக்கவேண்டிய வருமானமும் நின்றுபோயுள்ளதைக் காண்கிறோம். ஊழலும் சீர்கேடும் நிறைந்த நிர்வாகத்தினால்தான் இந்த நிலை என்பது தெளிவு. உதாரணத்திற்கு, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களின் கணக்கை எடுத்துக்கொள்வோம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரம்மாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் ஆகியவை உள்ளன. இவற்றுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாகக் கடந்த ஆண்டு அரசு வெளியிட்ட அறநிலையத்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் 1986ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட கோவில்களுக்கு மொத்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது 28 ஆண்டுகளில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டன! (தினமலர் - 5 ஆகஸ்டு 2014).

Dinamalar Report on 47000 acres Temple Lands

திராவிட மாயையில் கோவில் நிலங்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு ஒரு உதாரணமாக, சென்னையில் உள்ள திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் சொத்துக்களைக் கூறலாம். அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமாக சென்னையில், அடையாறு ஊருர் கிராமத்தில் 30 ஏக்கர் 18 செண்டில் வீட்டு மனைகள், சென்னை மீர்சாகிப் பேட்டை பகுதியில் 7 ஏக்கர் வீட்டு மனைகள், சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகரில் 23 கிரவுண்டுகள் வீட்டு மனைகள் இருப்பதாகச் சொல்லியிருந்தது கோவில் நிர்வாகம். ஆனால் தற்போது தண்டையார்பேட்டை தனபால் நகரில் இருந்த 23 கிரவுண்டுகள் வீட்டு மனைகள் போன இடம் தெரியவில்லை!
வாடகை பாக்கியும் பதாகைக் காட்சிகளும்
அறநிலையத்துறை கோவில்களுக்குச் சொந்தமான கட்டிடங்களின், மனைகளின் வாடகைதாரர்களிடமிருந்து முறையாக வாடகை வசூலிப்பதில்லை. பல வாடகைதாரர்கள் பல வருடங்களாக வாடகை தராமல் இருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பல கோவில்கள் சம்பந்தப்பட்ட விவரங்களைக் கேட்ட பின்புதான், அறநிலையத்துறை வாடகை வசூலிக்க நடவடிக்கைகள் எடுப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
அதாவது, ஒவ்வொரு கோவிலின் வாசலிலும் வாடகை தராமல் இழுத்தடிக்கும் நபர்களின் பெயர்களையும், அவர்கள் தரவேண்டிய வாடகை பாக்கியையும், இதர குறிப்புகளையும் தாங்கிய பதாகைகளை வைத்திருக்கிறது அறநிலையத்துறை. ஆனால் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட்டதா, வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டதா, என்பதெல்லாம் தெரியவேண்டுமானால் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்தான் கேட்டுப் பெறவேண்டும்.
உதாரணத்திற்கு எழும்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலை எடுத்துக்கொள்வோம். இந்தக் கோவிலுக்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தின் வாடகைதாரர் ”கோடி கிளினிக்கல்” என்கிற நிறுவனம். இந்நிறுவனம் வைத்திருக்கும் வாடகை பாக்கி எவ்வளவு தெரியுமா? ரூ.2,06,17,500/-! இக்கோவிலுக்குச் சொந்தமான மூன்று மனைகளின் வாடகைதாரர்களான எல்.எஸ்.குணசேகரன், எம்.குமர் மற்றும் பி.கே.அப்புகுட்டன் ஆகியோர் முறையே ரூ.6,03,578/-, ரூ.10,79,058/- மற்றும் ரூ.4,31,524/- வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

hrce rent remittenance announcement

இத்தனை ஆண்டுகளாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? இவ்வளவு தாமதமாக அறநிலையத்துறை விழித்துக்கொள்வதற்கான காரணம் என்ன? கட்டிடங்களுக்கும் மனைகளுக்கும் சந்தை நிலவரப்படியல்லாமல் “நியாய வாடகை” என்கிற பெயரில் குறைந்த அளவே வாடகை நிர்ணயம் செய்திருக்கும்போது, அந்தக் குறைந்த வாடகையே பல லட்சங்களும் கோடிகளுமாக சேரும் வரை பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கயும் எடுக்காமல் இருந்ததற்கான காரணங்கள் என்ன? வாடகைதாரர்களுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏதாவது புரிதல் உள்ளதா? இவ்வாறான கேள்விகள் பக்தர்கள் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இக்கேள்விகளுக்கு விடைகளும் இல்லை!
மாற்று மதத்தவர்கள் அனுபவிக்கும் கோவில் சொத்துக்கள்
தமிழக அரசின் அரசு ஆணை (G.O. Ms. No. 689, Home dated 18th February 1958) படி, கோவில் சொத்துக்களை ஹிந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று உள்ளது. ஆனால், பல கோவில்களுக்குச் சொந்தமான கட்டிடங்களும், மனைகளும் மாற்று மதத்தவருக்கு வாடகைக்கு விடப்பட்டு அவர்களும் அனுபவித்து வருகின்றனர். அவ்வாறு அனுபவித்து வரும் பலர் தாங்கள் கொடுக்க வேண்டிய “நியாய வாடகை”யைக்கூட ஒழுங்காகக் கொடுப்பது கிடையாது. அதை வசூலிக்க அறநிலையத்துறையும் முறையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
உதாரணத்திற்கு சென்னை புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ஒரு மனையை “தி சால்வேஷன் ஆர்மி” என்கிற கிறிஸ்தவ நிறுவனம் அனுபவித்து வருகிறது. இந்நிறுவனம் 5.30 லட்சம் ரூபாய் வாடகையும் பாக்கி வைத்துள்ளது. (தினமலர்- 3 செப்டம்பர் 2014)
Dinamalar---Gangadareswarar-Temple-Report-1
இந்நிறுவனம் கடுமையான மதமாற்றத்தில் ஈடுபடும் நிறுவனமாகும். ஹிந்துக்களை கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யும் ஒரு தேச விரோத நிறுவனம், ஹிந்துக்கோவிலின் சொத்தையே அனுபவித்துக்கொண்டு, அதற்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் வாடகையும் தராமல் இருக்கும் நிலை திராவிட ஆட்சியில்தான் நிகழும்.
இம்மாதிரியாகப் பலகோவில்களுக்குச் சொந்தமான கட்டிடங்களையும் மனைகளையும் அனுபவித்து வரும் மாற்று மதத்தினர் அவற்றுக்குப் பல வருடங்களாக வாடகையும் தராமல் இருக்கின்றனர். தன்னுடைய அரசின் ஆணையைத் தானே மீறியதோடு மட்டுமல்லாமல் அதைப் பற்றிக் கவலையும் படாமல் இருக்கிறது அறநிலையத்துறை.
ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதாகக்கூறி நடத்தப்படும் குத்தகை கூத்து
பல ஊர்களில் கோவில்களின் நிலங்கள் தனியாரின் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருக்கின்றன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்நிலங்களை மீட்பதிலும் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது; ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. திடீரென்று சமீபத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றவும் அவை மூலம் வருமானத்தை பெருக்கவும் வேண்டும் என்கிற ஞானோதயம் தமிழக அரசுக்கு வந்தது. உடனே முதல்வர் தலைமையில் அறநிலையத்துறையின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இவ்வருடம் ஜூன் மாதம் 25ம் தேதி நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்நிலங்களில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துடன் “காப்பகத் தோட்டம்” (Captive Plantation) திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, மொத்த வருவாய் பகிர்வு அடிப்படையில், வருவாயில் 70 சதவிகிதம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கும் 30 சதவிகிதம் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கும் என்ற வகையில் மரங்களை வளர்த்திட நீண்டகால குத்தகைக்கு நிலங்களை வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.
செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு மரக்கூழ் அதிக அளவில் தேவைப்படுவதால், அந்நிறுவனமே மரங்களை வளர்க்கும் நோக்கத்துடன் அரசுக்குச் சொந்தமான நிலங்களைப் பெற்று வருகிறது. அதுவும் அரசு நிறுவனம் என்பதால் அரசும்பல்வேரு துறைகளுக்குச் சொந்தமான நிலங்களைக் கொடுத்து உதவுகிறது. அதைப்போலவே, அறநிலையத்துறையின் உயர்மட்ட குழுவும் கோவில் நிலங்களை அந்நிறுவனத்திற்குக் குத்தகை கொடுக்க முடிவு செய்தது.
அம்முடிவின்படி முதல் கட்டமாக, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமான 776 ஏக்கர் நிலமும், திருவள்ளூர் மாவட்டம், தொட்டிக்கலை பகுதியில் உள்ள கேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, கிளாம்பாக்கம் கிராமத்தில் உள்ள, 75.67 ஏக்கர் நிலமும், திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமாக, எடையான் குப்பம், தண்டலம் கிராமங்களில் உள்ள, 71.64 ஏக்கர் நிலமும், திருப்போரூர் அருகே திருவிடந்தையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, அதே கிராமத்தில் உள்ள, 349.46 ஏக்கர் நிலமும், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான, 55.15 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 1328 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளதாகவும், ஆட்சேபணையுள்ளவர்கள் அக்டோபர் 10ம் தேதி சென்னையிலுள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் ஆணையரைச் சந்தித்துத் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. (தினமலர் – 7 செப்டம்பர் 2014)
Nellaiyappar-Temple-Land-Lease-to-TNPL
அரசின் இம்முடிவைப் பொறுத்தவரை பின்வரும் விஷயங்கள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை:
  • தமிழக அரசின் அறநிலையத்துறைக்கான ஆலோசனைக்குழுவானது இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 7வது பிரிவின்படி அமைக்கப்பட்டதாகும். அந்தச் சட்டப்பிரிவின்படி, கோவிலையோ கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்களையோ மேற்பார்வை பார்பதற்கோ நிர்வாகம் செய்வதற்கோ அந்த ஆலோசனைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை. அது ஆலோசனைகள் செய்து அதற்கேற்றவாறு பரிந்துரைகள் மட்டுமே செய்ய முடியும். அவ்வாறு செய்யப்பட்ட பரிந்துரைகள் சரியான ஆய்வின்றி கோவிலுடைய நலத்தைக் கணக்கில் கொள்ளாமல் இருந்தால், அவற்றை நிராகரிக்க கோவிலின் அறங்காவலர் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஏனென்றால் அறங்காவலர்கள் மட்டுமே கோவிலை நிர்வாகம் செய்யும் அதிகாரம் உள்ளவர்கள்.
  • ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு எந்தக் கோவிலுக்கும் அறங்காவலர்களை நியமனம் செய்யவில்லை. வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 47வதுபிரிவின்படி கோவில்களுக்கு அறங்காவலர்கள் அமைப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும். இந்தக் கடமையை செய்யத்தவறிய தமிழக அரசும் அறநிலையத்துறையும், அவர்கள் இஷ்டத்திற்கு அறங்காவலர்களுக்குப் பதிலாக அவர்கள் இடத்தில் “பொருந்தும் நபர்கள்” (Fit Persons) என்கிற பெயரில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிலரையே நியமிக்கின்றன. ஆனால் இந்து அறநிலையத்துறை சட்டத்தில் அரசு அலுவலர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க இடமோ அதிகாரமோ கொடுக்கப்படவில்லை.
  • அறங்காவலர்கள் என்று யாரும் இல்லாதபோது, கோவில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்கும், விற்பதற்கும், வாடகைக்கோ குத்தகைக்கோ விடுவதற்கும் செயல் அலுவலருக்கோ, உதவி/துணை/இணை ஆணையருக்கோ, பொருந்தும் நபருக்கோ சட்டப்படி அதிகாரம் இல்லை. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 23வது பிரிவு ஆணையருக்கு மட்டும் குறைந்த பட்சமாக மேற்பார்வை செய்யும் அதிகாரம் மட்டுமே கொடுத்துள்ளது. அவரும் கூட, குறிப்பிட்ட சொத்து எதற்காகக் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு தேவையான வருமானம் வருகிற அளவில்தான் அந்தச் சொத்தைக் கையாள வேண்டும்.
  • மேலும், இவ்வருடம் ஜனவரி மாதம் 6ம் தேதி, டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி தமிழக அரசுக்கு எதிராகத் தொடர்ந்த சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்து அறநிலையத்துறை சட்டம் 45வது பிரிவின்படி ஆணையர் செயல் அலுவலரை நியமித்தது செல்லாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் அனைத்திலும் இருக்கும் செயல் அலுவலர்களின் நியமனமும் செல்லாததாகிவிடுகிறது. எனவே, அந்தச் செயல் அலுவலர்கள் கோவில் சொத்துக்களைக் குத்தகைக்கு விடவோ குத்தகைதாரர்களுடன் ஒப்பந்தம் செய்யவோ அதிகாரம் அற்றவர்கள் ஆவார்கள்.
  • மேற்கண்ட கோவில்களின் நிலங்களைக் குத்தகைக்கு விட முடிவு செய்த அரசு, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் “காப்பகத் தோட்டம்” திட்டத்தின்படி ஒப்பந்தம் போட முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, “நிகர லாபத்தில் 30% பங்கு அல்லது ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு ரூ.1000/-” என்கிற மிகக் குறைந்த வருமானமே கிடைக்கும். இந்தத் திட்டம் கோவில் நலனிற்குச் சற்றும் உகந்ததாக இல்லை. சாதாரணமாக, கோவில் நிலங்களையோ மடங்களின் நிலங்களையோ குத்தகைக்கு விடும்போது “பாதிவாரம்” என்கிற திட்டம்தான் பின்பற்றப்படுவது வழக்கம். இந்தப் பாதிவாரம் திட்டத்தின்படி, நிலச் சொந்தக்காரரும் குத்தகைதாரரும் நிகர லாபத்தில் சரிசமமாக (50%) பங்கு பிரித்துக்கொள்வர். ஆனால், காப்பகத் தோட்டம் திட்டத்தின்படி 30% லாபம், அதுவும் ஐந்து வருடங்களின் முடிவில்தான் பேசப்படுகிறது. அந்த நிகர லாபம் எப்படி பெறப்படும் என்பதும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. மேலும் நிலங்களுக்கு குத்தகைத் தொகை நியமிப்பதற்கும், ஏலம் விடுவதற்கும் தெளிவான வழிகாட்டுதல் இருக்க, அவை பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
  • மேற்குறிப்பிட்ட கோவில்களின் நிலங்களின் தற்போதைய சந்தை நிலவரத் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அறநிலையத்துறை தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திற்கு மிகவும் குறைந்த தொகைக்கு குத்தகைவிட முயல்வது புரியும். இச்செயல் கோவிலின் நலனுக்கோ அல்லது பக்தர்களின் நலனுக்கோ சற்றும் உகந்ததில்லை. இது பக்தர்களின் மதச்சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25வது க்ஷரத்துக்கு எதிரானதாகும்.
  • இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 78, 79 மற்றும் 79-C பிரிவுகள் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், அக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கும், வாடகை மற்றும் குத்தகைத் தொகைகளை வசூல் செய்வதற்கும் அற்நிலையத்துறை அதிகாரிகளுக்கு தேவையான அதிகாரமும் உரிமையும் அளிக்கின்றன. அந்த அதிகாரங்களைக் கொண்டும் தேவையான அலுவலர்களைக் கொண்டும் கோவில் நிலங்களை சரிவர நிர்வாகம் செய்யாமல் இருப்பது, அறநிலையத்துறை தன்னுடைய ஊழல் நிறைந்த திறமையற்ற நிர்வாகத்தை ஒத்துக்கொள்வதாகும். எனவே, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த மாதிரி குத்தகை ஏற்பாடுகள் செய்வதாகச் சொல்வது வெறும் கேலிக்கூத்து அன்றி வேறில்லை.
அறமற்ற ஏமாற்றுவேலை
நாம் ஏற்கனவே இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள எழும்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமாக உள்ள புரசைவாக்கம் கிராமம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நகர சர்வே எண்:28க்கு உட்பட்ட 7 கிரவுண்டு (1,575 ச.மீ) நிலத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டதாகக் கூறி, அந்த நிலத்தை அந்நிறுவனத்திற்கு விற்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 16-ம் தேதி நடக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று மார்ச்சு மாதம் 4ம் தேதி அறநிலையத்துறை அறிவித்தது. அதன்படி, ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் தங்கள் ஆட்சேபத்தையும் கருத்துக்களையும் எழுத்து வடிவில் ஆணையரிடம் அளித்தனர். அதற்கு அறநிலையத்துறையிடமிருந்து இன்றுவரை எந்த பதிலும் வரவில்லை.
இதனிடையே, இந்த விஷயம் குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டபோது, குறிப்பிட்ட 7 கிரவுண்ட் நிலம் மே மாதம் 2011ம் வருடமே கையகப்படுத்தப்பட்டதென்றும், அதற்கான கிரையத் தொகையான 41.96 கோடி ரூபாய் கோவில் காசோலையாக கோவில் செயல் அலுவலரிடம் அப்போதே ஒப்படைக்கப்பட்டதென்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் பதிலளித்தது. (தினமலர் – 22 ஜூலை 2014)
HR--CE-Temple-land-sold-to-Metro-Rail
அதாவது 2011-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட நிலத்திற்கு, விற்பனை செய்ய ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கச்சொல்லி 2014-ல் அறிவித்து, பொது மக்களை தெரிந்தே ஏமாற்றியுள்ளது அறநிலையத்துறை. இது அறநிலையத்துறை சட்டத்தின் 34வது பிரிவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு விரோதமானது. அதன்படி, இவ்விற்பனை சட்டத்திற்குப் புறம்பானதாகவும் செல்லாததாகவும் ஆகிறது.
கடவுளையும் ஏமாற்றும் “அறம்”
சமீபத்தில் சென்னை புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பற்றிய விவரங்களை, தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலமாகக் கெட்டபோது, “கங்காதரேஸ்வரர் கோவில் மூலவர்; சட்டப்படி தனிநபர்; எனவே அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்து தகவல் அறியும் உரிமைசட்ட்த்தில் பதிலளிக்க இயலாது” என்று அக்கோவிலின் நிர்வாகச் செயலர் பதிலளித்துள்ளார். (தினமலர் – 29 ஆகஸ்டு 2014)
HR--CE-Gangadareswarar-Temple-Report
அதே போலவே சென்னை ஏகாம்பரேஸ்வர்ர் கோவில் செயல் அலுவலரும் பதிலளித்துள்ளார். இருப்பினும் இந்தச் செயல் அலுவலர்களின் நிலைப்பாட்டை அவர்களுடைய மூத்த அதிகாரிகளான துணை ஆணையரோ, ஆணையரோ விளக்கவில்லை; அந்த நிலைப்பாடுதான் தங்களின் நிலைப்பாடா என்பதையும் அவர்கள் தெளிவாக்கவில்லை.
இந்நிலையில், மூலவர் தனிநபர் என்றும் அவர் சொத்துக்களைப் பற்றிய தகவல்களைத் தரமுடியாது என்றும் சொல்கிறவர்கள், அந்தத் தனிநபரின் சொத்துக்களை குத்தகைக்கு மட்டும் எப்படி ஒப்பந்தம் போட முடியும்? அவரிடம் அனுமதி பெற்றுள்ளனரா? இல்லை அந்த மூலவரையும் ஏமாற்றுக்கிறார்களா?
சமீபத்தில் சென்னையில் உள்ள திருவண்ணாமலை கோவிலின் சொத்துக்களை அனுபவித்து வருகிறவர்களிடமிருந்து வாடகைத்தொகையை வசூலிப்பதற்காக நாளிதழில் விளம்பரம் செய்த அறநிலையத்துறை, “வாடகை தராதவர்கள்அக்னி சொரூபமான அண்ணாமலையாரைஏமாற்றி வருகிறார்கள்” என்று சொல்லி, அந்த விளம்பரத்திற்கு “சிவன் சொத்து குல நாசம்” என்று தலைப்பும் கொடுத்திருந்தது.
அந்தச் சொற்றொடரும் தலைப்பும் அறநிலையத்துறைக்கும் பொருந்தும் என்பது பக்தர்களின் கருத்தாக இருக்கிறது.
(தகவல்கள் உதவி: - ஆலய வழிபடுவோர் சங்கம்)

Thursday, 23 October 2014


நண்பகல் 12 மணி. உச்சி வெயில். பூசாரி பூமலைக்குக் கண்கள் சிவந்து உக்கிரம் ஏறிவிட்டிருந்தது. கோயிலுக்கு வெளியே ஒரே களேபரம். சிவனாண்டியைச் சுற்றி குடும்பமே கதறிக்கொண்டிருந்தது.
“இவ்வளவு தூரம் வந்துட்டு மனசு மாறிட்டியே தாத்தா.” இளம் பெண் ஒருவர் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். முதிர்ந்த பெண் ஒருத்தி அவர் காலில் விழுந்து கதறிக்கொண்டிருந்தார். எட்டி உதை விட்டார் சிவனாண்டி. உதிர்ந்த சருகுபோல இருந்த அந்தப் பெண், விழுந்த வேகத்தில் மயக்கமானார். “அப்பத்தா” என்று பதறி ஓடியது சின்னப் பெண். “மாமா, நீங்களே இப்படிப் பண்ணலாமா?” இளைஞர் ஒருவர் சமாதானப்படுத்தினார். சிவனாண்டி எதையும் கேட்கும் நிலையில் இல்லை. “ஏமாத்திக் கூட்டிட்டு வந்தா நான் கோயிலுக்குள்ள வந்துடுவனா?” இடுப்பில் சொருகியிருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டார். லுங்கி அவிழ்ந்து தரையில் விழுந்தது. தீர்ந்துபோன பாட்டிலை வெறிகொண்டு வீச, சில்லுசில்லாகச் சிதறியது.
ஊற்றிக் கொடுக்கும் அம்மா
இவ்வளவு நடந்தும் அக்கம்பக்கம் யாரும் கண்டு கொள்ளவில்லை. பக்கத்து டீக்கடையில் அமைதியாக டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். “ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் ஊறுகாய் பாக்கெட்டும் கொடுப்பா”- நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் வாங்கிக்கொண்டு ஒதுக்குப் புறமான மரத்தடிக்குச் சென்றார். அங்கு ஒரு பெரிய குடும்பமே சுற்றுலாவுக்கு வந்த தினுசில் வட்டமாக அமர்ந்துகொண்டிருந்தது. நடுத்தர வயதுப் பெண்மணி, குவார்ட்டர் பாட்டிலைத் திறந்து, டம்ளரில் மதுவையும் தண்ணீரையும் ஊற்றி மதுவைக் குடிக்கக் கொடுத்தார். அந்தப் பையனுக்கு வயது 16 இருக்கும். அம்மாவின் கையில் இருந்த மது பாட்டிலைப் பிடுங்கி அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டான். அடித்தொண்டையை பலமாகச் செருமியவன், எச்சிலை அம்மாவின் முகத்தில் காறித் துப்பினான். கூடவே, ஒரு கேவலமான வார்த்தையையும் உதிர்த்தான். சகஜம் என்பதுபோல அந்தக் குடும்பம் சலன மில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தது.
ஆட்டோ ஒன்று வந்து நிற்கிறது. சுடிதார் அணிந்து, கல்லூரிப் பெண் போன்ற தோற்றம் கொண்ட பெண்ணுடன் தம்பதி இறங்கினர். கவுரமான தோற்றம். அவசர நடையில் ஒதுக்குப்புறமான இன்னொரு இடத்துக்குச் சென்றார்கள். அப்பா தனது கைப்பையைத் திறந்து ஸ்பிரைட் பாட்டிலை எடுத்து, மகளிடம் கொடுத்தார். மடக் மடக் என்று சரித்துக்கொண்டது அந்த சின்னப் பெண். பார்க்கச் சகிக்காமல் எதிர்ப் பக்கமாகத் திரும்பி முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார் அம்மா. லேசான தள்ளாட்டத்துடன் இருந்த அந்தப் பெண்ணைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்கள்.
தெனந்தெனம் செத்துக்கிட்டிருக்கோம்
அந்தப் பக்கம் சிவனாண்டியின் ஆட்டம் அதிகரித் திருந்தது. காரின் இரண்டு கண்ணாடிகள் உடைந்திருந்தன. கோயிலுக்குள்ளே இருந்த பூசாரி வேகமாக வந்தார். ஓங்கி ஓர் அறைவிட்டார். பெட்டிப் பாம்பாய் அடங்கினார் சிவனாண்டி. அவர் வாயில் எலுமிச்சையைத் திணித்து, மாப்பிள்ளையிடம் ஒரு கயிற்றைக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார். மாப்பிள்ளை கயிற்றைக் கையில் கட்டிவிட, அப்படியே சாந்தமாகி என்னைப் பார்த்துச் சிரித்தார் சிவனாண்டி.
“என்ன தம்பி, அசலூரா?”
“ஆமாங்க ஐயா, சென்னை.”
“இங்க எதுக்காக வந்திருக்கீங்க?”
“குடிப் பழக்கத்தைப் பத்தி எழுத வந்திருக்கேன்...”
அந்தக் குடும்பமே கொல்லென்று சிரித்தது. சற்று நேரத்தில் சூழல் இலகுவாகி என்னிடம் பேசத் தொடங்கினார்கள்.
“குடியில எங்க தாத்தாவைவிட நீங்க பெரிய ஆராய்ச்சி யாளரோ?”- கிண்டலாகக் கேட்டது அந்தச் சின்னப் பெண்.
“ஏய் புள்ள பேசாம இரு... வாய்த்துடுக்கு அதிகம்” - பெரியவர்தான் அடக்கினார்.
“இந்தா தம்பி குங்குமம்.”
கொஞ்ச நேரத்துக்கு முன்பு தாண்டவமாடிய சிவனாண்டியா இவர்? “பத்து வருஷத்துக்கு முன்னாடி பழக்கத்துக்காகத் தொட்டது. ஏழு ரிக் வண்டியை வித்துட்டேன். பஞ்சப்பள்ளி டேம்கிட்ட இருந்த 60 ஏக்கர் மல்லிப்பூ தோட்டமும் போச்சு. மூத்த பொண்ணைக் கைநீட்டி அடிச்சிட்டேன்னு தூக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டா. மாப்பிள்ளைதான் ஏதோ தலையெடுத்து தாங்குறாரு. அவமானமா இருக்கு தம்பி. இத்துனூண்டு இருக்கிற எங்க கிராமத்துக்கு மூணு டாஸ்மாக் கடை தேவையா? முதல்ல இழுத்து மூடச் சொல்லுய்யா அதை... தெனந்தெனம் செத்துக்கிட்டிருக்கோம்” - உணர்ச்சிவசப்பட்டுத் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். அப்படியே அவரைக் கைத் தாங்கலாக அணைத்துக்கொண்டு புறப்படுகிறது குடும்பம்.
தன்னோட மனசாட்சியா…
சங்ககிரி பக்கத்தில் இருக்கிறது பூமுனீஸ்வரர் கோயில். சன்னதியில் பூசாரி முன்பாகக் குடும்பத்துடன் அமர்ந் திருக்கிறார்கள். பூசாரி சொல்வதை அப்படியே திரும்பச் சொல்கிறார்கள்.
“தன்னோட மனசாட்சியா…”
“அம்மா, அப்பா சாட்சியா…”
“மக்கள் சாட்சியா…”
“சந்திரன், சூரியன் சாட்சியா...”
“அனைத்துத் தெய்வங்கள் சாட்சியா…”
“முப்பத்து முக்கோடி தேவர் அறிய...”
“நாப்பத்திரெண்டாயிரம் ரிஷிமார்கள் அறிய...”
“போதைக்குச் சம்பந்தப்பட்ட கள்ளு, கஞ்சா, சாராயம், பீரு, பிராந்தி, விஸ்கி, ரம், ஓட்கா, சீமைச் சாராயம், இருமலு டானிக், இன்ன பிற போதைப் பொருள் எதையும்...”
“ஜய வருடம், புரட்டாசி மாசம், 15-ம் தேதி நல்ல நேரமான ரெண்டு மணி முப்பதோரு நிமிஷத்துல பூமுனியப் பன் முன்னிலையில் போதை எண்ணத்தை மறக்கடிச்சுக் கொடுக்கோணும்.”
எதிரில் இருந்த அந்த இளைஞர் வரிசையாகச் சொல்லி முடித்தபின், தனக்கு முன்னே பற்றவைக்கப்பட்ட கற்பூரத்தில் படார் என்று அடித்துச் சத்தியம் செய்தார். அவர் கையில் கயிற்றைக் கட்டி, வாயில் எலுமிச்சையைச் சொருகி அனுப்பி வைத்தார் பூசாரி.
மாலை 6 மணி வரை கூட்டம் வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் குடிநோயாளிகள் வருகிறார்கள். நாள் முழுக்க அங்கு இருந்ததில் பரிச்சயமாகியிருந்தார் பூசாரி.
“எங்க முப்பாட்டன் காலத்துல இருந்தே இந்தக் கோயிலு இருக்கு. அந்தக் காலத்துல தொழில் விருட்சமாகணும், குழந்தை வரம் வேணும்னுதான் கயிறு கட்டிக்கிட்டுப் போவாங்க. இந்தப் பத்து வருஷத்துலதான் இது குடி நோயாளிகளுக்கான கோயில் ஆயிடுச்சு. தினமும் நூத்துக் கணக்குல வர்றாங்க. நிறையப் பேருக்கு பைத்தியம் முத்தி வர்றாங்கய்யா... பன்னிரண்டு வயசுப் பையனுக்கும் பதினஞ்சு வயசுப் பொண்ணுக்கும் கயிறு கட்டிவிட்டிருக்கேன். குடிநோயாளி ஆகுற வயசாய்யா அது? மொதல்ல கடை எல்லாத்தையும் மூடச் சொல்லுய்யா...”
(தெளிவோம்)
டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

கடுமையான போராட்டங்களைக் கடந்து, திரைக்கு வந்துள்ள நடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான 'கத்தி' பேசுவது 'போராட்டங்கள்' பற்றிதான் என்பதில் தொடங்குகிறது ஆச்சரியங்கள்.
'கிராமத்தில் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நகரத்தில் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும்' என்ற செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்ய 'மாஸ்' முயற்சியில் ஈடுபட்டிருப்பதால், இணையத்தில் கலாய்ப்பதற்காக விஜய் படம் பார்ப்பவர்களை முதலில் குத்தியிருக்கிறது இந்தக் கத்தி.
இரட்டை வேடம், ஆள்மாறாட்டம், ஊறுகாய்க் காதல், உறுதுணை நட்பு என்ற ஃபார்முலா மூலம், தான் சொல்ல வரும் கதையை 2 மணி 46 நிமிடங்களுக்கு நீட்டிச் சொல்லியிருப்பது, விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களை சோதிக்க ஏ.ஆர்.முருகதாஸ் வைத்த கத்தி.
விருதுகளுக்காகவும், சர்வதேசப் பட விழாக்களுக்காகவும் மட்டுமே விவசாயிகளின் அவலத்தையும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல்களையும் பதிவு செய்ய முற்படும் நிலையில், இந்த விவகாரங்களை வணிக நோக்கம் கொண்ட சினிமாவில், மாஸ் நாயகனை வைத்துச் சொல்ல முற்பட்டிருப்பது, கத்தி... உயிர் காக்கும் மருத்துவ அறுவை சிகிச்சைக்கும் உரியதுதான் என்பதை உணர்த்துகிறது.
வழக்கமானா பழி வாங்குதல், ரவுடியிசம் சார்ந்த கதைகளில் 'நடித்து' வந்தவர், மாஸுக்குள் க்ளாஸ் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, துணிச்சல் மிக்க வசனங்களை உத்வேகத்துடன் உதிர்த்து, தனது 'தம்பி'களையும் தாண்டிய ரசிகர்களைக் கவர்ந்திழுக்க முயற்சித்திருப்பது, தனது கேரியரை கத்தி மூலம் கூர்தீட்டிக் கொண்டுள்ளது சிறப்பு.
விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் எங்கெல்லாம் ஆரவாரம் செய்வர் என்பதைக் கணித்து, அதற்கேற்றவாறு பின்னணி இசையை வழங்கியிருக்கும் அனிருத்தின் பங்களிப்பு, கத்திக்கு கெத்து சேர்க்கிறது. ஆனால், 'செல்ஃபி புள்ள' உள்ளிட்ட பாடல்களைக் காட்சிப்படுத்தி இருக்கும் விதம், விஜய் ரசிகர்களை ஏமாற்றும் 'மொக்கைக் கத்தி'த்தன்மையில் முன்னிலை வகிக்கிறது.
முதல் 40 நிமிடக் காட்சிகளால் ரசிகர்களுக்கு இது மொக்கைக் கத்திதான் என்று சலிப்பை ஏற்படுத்திவிட்டு, இடைவேளைக்கு முன்பு வரும் சண்டைக்காட்சியின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் தனது 'டச்' உடன் கெத்தான 'கத்தி'தான் என்று நிரூபித்தது கவனிக்கத்தக்கது.
கதைக்கு ஒட்டாத சமந்தாவின் கதாப்பாத்திரம், ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளப்படும் காதல், சிரிக்கவைக்க ஸ்கோப் இல்லாத நண்பர் வேடத்தில் சதிஷ், தோற்றத்திலும் ஸ்டைலிலும் மட்டுமே 'பந்தா' காட்டும் கார்ப்பரேட் வில்லன் நீல் நிதின் முகேஷ்... இப்படி கத்தியில் நீண்டிருக்கின்றன 'அட்டகத்தி'களின் பட்டியல்.
கார்ப்பரேட் நிறுவனங்கங்களின் முதலாளித்துவ அணுகுமுறைகளைச் சொல்ல முற்பட்டதில் வல்லமையுடன் செயல்பட்டுள்ள கத்தி, அதைக் காட்சிப்படுத்துவதில் பல இடங்களில் குழந்தைத்தனமாக செயல்பட்டு, உறையில் உறங்கும் கத்தியாகிவிட்டது.
பொதுவுடமையின் மகத்துவத்தையும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் "நம் பசி தீர்ந்த பிறகு, நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது. இதுதான் கம்யூனிசம்" உள்ளிட்ட வசனங்கள் மூலம் சொல்ல முற்பட்டுள்ள கத்தியில், விஜய் ரசிகர்கள் கைதட்டலை அள்ளுவதற்காக வசனங்கள் வைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. கைதட்டலை மீறி, ரசிகர்களைச் சென்றடையும் செய்தி, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வெறும் 'வசனம்' மட்டுமே போதாது என்று புத்தியும் சொல்லித் தருகிறது கத்தி.
கெட்டப்களில் வித்தியாசம் காட்டாமலும், தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் மட்டுமே போதும் என்ற எண்ணம் இல்லாமலும் விஜய் கத்தியில் காட்டியிருக்கும் சிரத்தை, மாஸ் ஹீரோக்கள் எனக் கருதப்படுவோருக்கு புதிய பாதையைக் காட்டுவதற்கு கோடு கிழிக்கப் பயன்பட்டுள்ளது.
மீடியாக்களின் நிஜ முகத்தைச் சித்தரித்த விதம், கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை தோலுரிக்கும் காட்சிகளில் உள்ள மேம்போக்கான தன்மைகள், விவரம் அறியாதவர்களின் காதுகளைக் குத்துவதற்குப் பயன்பட்ட கத்தி என்றே சொல்லலாம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் அவல நிலையையும், விவசாயிகளின் போராட்டங்களை அலட்சியப்படுத்தும் நகரவாசிகளை விமர்சனப் பார்வையோடு சுட்டிக்காட்டிய விதத்திலும், மாஸ் படத்தில் நல்ல மெசேஜ் சொல்ல முனைப்பு காட்டிய விதத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்திருப்பது, பார்க்க வேண்டிய பயனுள்ள 'கூர்தீட்டிய கத்தி'யே! 

-t
       அதர்மம் அழிந்து தர்மம் வெற்றி பெற்றதை கொண்டாடும் தீப ஒளித் திருநாள் வ.களத்தூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் தீபாவளியன்று வானம் தெளிவாக காணப்பட்டதால் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட முடிந்தது.

பட உதவி-சத்தியராஜ், விக்னேஷ்.


நேற்று கனடா நாட்டு பாராளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் ஈடுபட்டவர்களில் கொலையுண்டவர் அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர் சமீபத்தில் மதமாறியவர் என்பது தெரியவந்துள்ளது.

மதமாற்றம் என்பது ஒரு வழிபாட்டிலிருந்து வேறொரு வழிபாட்டை ஏற்றுக்கொள்வது என்பதில்லை. தனது தேசியத்தின் அடையாளத்தை நீக்கிக்கொள்வதும், தான் பிறந்து, வளர்ந்த தேசத்தை அழித்தொழிக்கும் அளவிற்கு மூளை சலவை செய்யப்படுகிறது என்பதையும் இந்தத் தாக்குதலில் உலகம் உணர்ந்திருக்கும். இதனைத் தான் செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவமும், இஸ்லாமும் செய்து வருகின்றன.
இதற்கு பல சம்பவங்கள் உலகம் பார்த்துள்ளது, அனுபவித்துள்ளது.

மனித நேயம், மனித உரிமை பேசுபவர்கள், நடுநிலையாளர்கள் இதுகுறித்து உலக அளவில் விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டும். மற்ற மதங்களை வெறுக்கும், அழித்தொழித்து தனது மதமே உலகில் இருக்க வேண்டும் எனும் கருத்தை போதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதவாத சக்திகளுக்கு வரும் நிதியை தடுக்க வேண்டும். மதவாத சக்திகளின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். மனித இனத்திற்கு அச்சுறுத்தலான மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

உயிர்களை நேசிக்கும், பரந்த மனப்பான்மை கொண்டதுமான இந்து மதம், கடந்த பத்தாயிரம் ஆண்டு உலக சரித்திரத்தில் எவரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றியதில்லை, எந்த ஒரு நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு செய்ததில்லை.

உலகிலேயே வேற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களைக் கட்டிக்கொடுத்தது இந்துக்கள், உலகில் வெறுத்து ஒதுக்கப்பட்ட பார்சிகளையும், யூதர்களையும் அரவணைத்தது இந்துக்கள் என்பது சரித்திர உண்மை. ஆனால், இந்துக்களை அழித்தொழிக்க, இந்து சமயத்தை, நூல்களை அழிக்க முற்பட்டவர்கள்தான் முகலாயர்களும், மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளின் ஆக்கிரமிப்பாளர்களும் என்பதை நினைவு படுத்துகிறோம்.

உயிர்களை நேசிக்க கற்றுக்கொடுத்தால் இந்த மதவாத சக்திகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோகும். இதுவே உலகின் அமைதிக்கு நிரந்தரமான வழி என்பதை எடுத்துச் சொல்லவேண்டும் என்று நடுநிலையாளர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Tuesday, 21 October 2014


குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
சூரத் நகரத்தில் வசிப்பவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 70களில் வேலைதேடி சூரத்துக்கு வந்தார். அங்கு தன் உறவினர் ஒருவரிடம் சென்று வியா பாரம் தொடங்குவதற்குக் கடன் பெற்றார். அதை வைத்துக்கொண்டு அவர் சிறிய அளவில் வைர வியாபாரத்தைத் தொடங்கினார். 1992ம் ஆண்டு ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் எனும் வைர வியாபார நிறுவனத்தைத் தொடங் கினார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஓராண்டுக்கு ரூ.6,000 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக அதை மேம்படுத்தினார். தற்போது சூரத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் 9,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருப்பதால், தன்னிடம் பணியாற்றும் சுமார் 1,200 பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
ஊழியர்கள் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். சுமார் 500 ஊழியர் களுக்கு புதிய பியட் புன்டோ ரக கார்களையும், 207 பேருக்கு புதிய வீடுகளையும் மற்றும் 570 பேருக்கு நகைகளையும் சவ்ஜி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் சவ்ஜி தோலாக்கியா கூறும்போது, "என்னுடைய கனவுகள் எல்லாம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களால்தான் நிறைவேறியுள்ளன. இங்கு பணியாற்றும் நகைக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை அவர்கள் அடைந்து விட்டார்கள்.
இது ஹரிகிருஷ்ணா நிறுவனத் துக்கு மிகச் சிறப்பான நாள். அதனால் அனைவருக்கும் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட் டுள்ளன" என்றார்.
இந்த தீபாவளி பரிசுகளுக்காக ஓர் ஊழியருக்கு ரூ.3.60 லட்சம் செலவாகியிருப்பதாகவும், உலகிலேயே ஊழியர்களின் பணித் திறனைப் பாராட்டி இவ்வளவு பரிசுகள் வழங்கியிருக்கும் முதல் நிறுவனம் என்ற பெயரையும் தன்னுடைய நிறுவனம் பெற்றிருப் பதாக அவர் கூறினார்.
இங்கு பணியாற்றும் ஒரு நகைக் கலைஞரின் சராசரி மாதச் சம்பளம் ரூ. 1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

-தி இந்து.

Monday, 20 October 2014


வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால், தமிழகத்தில் மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் இலங்கை- தமிழக கடற்கரையில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது.
இதன் காரணமாக நமது வ.களத்தூரிலும் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் வாணம் மேகமூட்டத்துடன் தூறலாக இருந்தது. இரவு முதல் சிறிது கூடுதலாக மழைபெய்து வருகிறது.