Saturday 4 January 2014


       வ.களத்தூரில், விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக டியுசன் சென்டர் விவேகானந்தர் பிறந்த தினத்தன்று துவக்கப்பட உள்ளது. தேசிய இளைஞர் தினம் என்று கொண்டாடப்படும் 12-01-2014 ல்  துவக்கப்படும் சிறப்பை இந்த சிறப்பு வகுப்பு பெறுகிறது.
      LKG முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு வகுப்பானது ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும், மற்ற மாணவர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும்  பயிற்சி அளிக்கப்படும்.இருபாலரும் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
         வாரம் ஒருமுறை, இன்று பள்ளிகளில் கற்றுகொடுக்க மறந்த பண்பாட்டு கல்வி கற்றுகொடுக்கப்படும். மாதம் ஒருமுறை ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு நடத்தட்டு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த ஆலோசனை செய்யப்படும்.
       வ.களத்தூர் பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு- 99484 46709, 80152 55587, 97867 62199.

Friday 3 January 2014

வேப்பந்தட்டை, : வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் நெறி குறவர் காலனியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
விழாவுக்கு நெறிகுறவர் சங்க மாநில பொறுப்பாளர் நம்பியார் தலைமை வகித்தார். ஹெல்ப்பிங் ஹேன் சொசைட்டி தலைவர் சிலம்பரசி, செயலாளர் சூரியசேகர், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தேசிய மக்கள் உரிமைகள் இயக்க கொள்கை பரப்பு செயலாளரான டாக்டர் கோசிபா, நெறி குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 

நன்றி-தினகரன்.


ஆமதாபாத்: இணையதளத்தை தொடர்ந்து, ‘இந்தியா 272+’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை தொடங்கியுள்ளார் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. சமூக வலைதளங்களை சக்திவாய்ந்த ஊடகமாக கருதக்கூடியவர் நரேந்திர மோடி. இதனால், பேஸ்புக், டிவிட்டரிலும் பிரசாரம் செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை முழுமையாக பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் ‘இந்தியா 272.காம்‘ என்ற இணையதளத்தை தொடங்கி, தனது பிரசாரங்கள் இளைஞர் சமுதாயத்தையும் சென்றடையும் வகையில் மாற்றிக்காட்டினார்.
 இதன் தொடர்ச்சியாக தற்போது ‘இந்தியா 272+’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை தொடங்கியுள்ளார்.( பதிவிறக்கம் செய்ய  http://www.india272.com/  ). வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 272 இடங்களை பாஜ பிடிக்க வேண்டுமென இலக்கு வைத்துள்ள மோடி, அதையே தனது மந்திர எண்ணாக அப்ளிகேஷனுக்கும் வைத்துள்ளார். இந்த புதிய அப்ளிகேஷனில் தன்னார்வலர்கள் இணைந்து தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம், அடுத்த பிரசார கூட்டத்தில் மோடி எப்படி பேசலாம் என்பது பற்றி கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

மேலும், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் புதிய பதிவுகளை இந்த அப்ளிகேஷன் மூலமாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இந்த அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து மோடி தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்த கருத்தில், ‘இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் கட்சிக்கு இன்னும் பல சக்திவாய்ந்த தன்னார்வலர்கள் கிடைப்பார்கள். அவர்கள் எளிதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்‘ என கூறியுள்ளார்.

நன்றி-தினகரன்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஆர். ரம்யாவை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார்.
பள்ளி மாணவர்களுக்கிடையே, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த டிச. 27, 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில், 42 முதல் 44 வரை எடையுடைவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஆர். ரம்யா இரண்டாமிடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி ஆர். ரம்யாவை வெள்ளிக்கிழமை பாராட்டிய  மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகள் படைத்து, தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, விளையாட்டுப் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களையும், முறையான பயிற்சிகளையும் வழங்க வேண்டுமென விளையாட்டுத்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் தரேஸ் அஹமது உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது, முதன்மை கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம், மேலமாத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் செங்குட்டுவன், உடற்கல்வி ஆசிரியர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்க்குப்பை கிராமத்தைச்  சேர்ந்தவர் சோலைமுத்து (42). அவரது உறவினர், கடலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வேலாயுதம் (55).
விவசாயிகளான இருவரும், வெள்ளிக்கிழமை மாலை வேப்பந்தட்டையிலிருந்து, நெய்க்குப்பை கிராமத்துக்கு தொண்டப்பாடி கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, வ. களத்தூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து
மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  காயமடைந்த வேலாயுதம், பெரம்பலூர் அரசுருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வ. களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

நன்றி-தினமணி.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவுள்ளது தகுதியுடையோர் 28.02.2014க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
                    எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்  பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.2008க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.  மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.
மேலும் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினத்தவர்கள் 31.12.2013 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு 50.000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ/மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.
மனுதாரர்கள் தங்களின்  அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வருகை தந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக  பூர்த்தி செய்து  படிவங்கள் 28.02.2014க்குள் அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கலாம்.   இந்த வாய்ப்பை தகுதியுடையோர் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.

Thursday 2 January 2014


non-MRP பாஸ்போர்ட்

கையால் எழுதப்பட்ட / போட்டோ ஒட்டப்பட்ட  மற்றும் 2௦ வருட செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் வரும் நவம்பர் 25- 2௦14 முதல் செல்லாது என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சிவில் விமான அமைப்பு , வரும் நவம்பர் முதல் இத்தகைய பாஸ்போர்டுகளுக்கு அனுமதி வழங்க கூடாது என உறுப்பு நாடுகளுக்கு அறிவுறித்தி உள்ளதால் இனி வெளிநாடுகள், கையால் எழுதப்பட்ட non-MRP என அழைக்கப்படும் எந்திரத்தால் படிக்க முடியாத இத்தகைய பஸ்போர்டுகள் செல்லாது என அறிவிக்க உள்ளன. எனவே இத்தகைய பாஸ்போர்டுகள் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்டுகள் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் உதவிக்கு தேசிய அழைப்பு எண் 18002581800 எண்ணுக்கோ அல்லது www.passportindia.gov.in என்ற இணையதள முகவரிக்கோ சென்று விபரம் அறியலாம். மேலும் பாஸ்போர்ட் விபரம் அறிய 9704100100 என்ற எண்ணுக்கு sms அனுப்பியும் விபரம் பெறலாம்.

தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க ஆதரவுடன் பெரம்பலூர் மக்கள் மன்றம் மற்றும் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா பெரம்பலூரில் 31-01-2014 முதல் 09-02-2014  வரை, புதிய பேருந்துநிலையம் அருகில் நடை பெற உள்ளது.


24 மணிநேர தொலைபேசி 104 மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள்,  தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும்  சந்தேகங்களைக்  கேட்டு தெளிவு பெற   1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள  24 மணிநேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

நன்றி-தினமணி.


 இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ‘வாட்டர் மார்க்‘ என அழைக்கப்படும் பகுதியும், அதில் மகாத்மா காந்தியின் புகைப்படமும், அந்த ரூபாயின் மதிப்பை குறிக்கும் எண்ணும் (அதாவது 100, 1000 என) உள்ளது.  அந்த இடத்தில் வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்களால் ‘பின்‘ அடிக்கப்படுகிறது. இதனால் நாளடைவில் அந்த ஓட்டை பெரிதாகி விடுகிறது. இது மட்டுமல்லாது இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே ‘ஆர்ட்டின் படம்‘ வரைகின்றனர். ஒருவர் பெயரை எழுதி கவிதைகள், காதல் வசனங்கள் கூட எழுதுகின்றனர்.

இந்திய ரிசர்வ¢ வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டில் இந்த வாசகங்கள் இடம் பெறுவது பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. ‘வாட்டர் மார்க்‘ பகுதி மாசடைவதால் அந்த ரூபாய் நோட்டுகளை உண்மை தன்மையை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் எழுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் அளிக்கும் ரூபாய் நோட்டுகளில் எழுத்துக்கள், எண்கள், பின் அடித்த ஓட்டைகள் இருந்தால் அந்த நோட்டுகளை வங்கிகள் மீண¢டும் புழக்கத்திற்கு அனுமதிக்கக் கூடாது.

அந்த நோட்டுகள் புழக்கத்திற்கு அனுமதிக்க தகுதி இல்லாதது. வங்கிகளும் ரூபாய் நோட்டுகளில் எண்ணால் எழுதக் கூடாது. இது ரிசர்வ் வங்கியின் ‘கிளீன் நோட்‘ கொள்கைக்கு எதிரானது. இவ்வாறு அனைத்து வங்கிகளின் தலைவர்கள், முதன்மை செயல் அலுவலர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு 2014 ஜன.1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என ரிசர்வ் வங்கி கூறியதாக தகவல்கள் வெளியானது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் இன்று தான் வங்கிகள் திறக்கப்படும். எனவே, இன்று முதல் கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும்போது அவை மீண்டும் புழக்கத்திற்கு அனுமதிக்கப்படாது என்று தெரிகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஏற்கனவே ரிசர்வ் வங்கி இதுபோன்று அறிவித்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் இந்த திட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என வங்கி கிளைகளுக்கு முறையான தகவல¢ இல்லை‘‘ என்றனர்.

நன்றி-தினகரன்.
மதுரை: எரிவாயு சிலிண்டர் இணைப்புக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த முருகன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். ஆனந்த முருகன் தாக்கல் செய்த மனுவில், ஆதார் அட்டை கேட்கும் எரிவாயு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி எரிவாயு நிறுவனங்கள் ஆதார் அட்டை கேட்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அமைச்சரவை செயலாளர் உட்பட 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை பிறப்பித்தனர்.

நன்றி-தினகரன்.


முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள பொங்கல் பரிசு இன்னும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ஆகியன பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பொங்கல் பரிசுக்கான பொருட்கள் இருப்பு குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
பொங்கல் பரிசு வழங்கும் தேதியை முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு பை வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே சமயத்தில் விநியோகிக்கப்படலாம் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Tuesday 31 December 2013


பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மைய பொறுப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜன. 7-ல் தொடங்குகிறது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட ஒன்றியங்களுக்குள்பட்ட தகுதியான நபர்கள் காலி பணியிட விவரங்களை அந்தந்த வட்டார வள மையத்தில் உள்ள தகவல் பலகையில் தெரிந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை உள்ளிடவற்றுடன் காலை 10 மணிக்கு வட்டார வள மையத்தில் நடைபெறும் எழுத்து தேர்வில் பங்கேற்கலாம்.
காலியாக உள்ள 2 மாவட்ட ஒருங்கிணைப்பாளார் பணியிடத்திற்கு, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் ஜன. 7-ல் எழுதுத் தேர்வு நடைபெற உள்ளது. இப்பணிக்கான கல்வித் தகுதி, ஏதேனும் பட்டப் படிப்பு, கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 6, 000.
பெரம்பலூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள 10 மையப் பொறுப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் ஜன. 7-ம் தேதி நடைபெறும். கல்வித் தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி, மாத சம்பளம் ரூ. 2,000.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 17 மையப் பொறுப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஜன. 8-ம் தேதி, வேப்பந்தட்டை வட்டார வள மையத்தில் நடைபெறும். ஆலத்தூர் ஒன்றியத்தில் 19 மையப் பொறுப்பாளர்களுக்கு, ஜன. 9-ம் தேதி ஆலத்தூர் வட்டார வள மையத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். வேப்பூர் ஒன்றியத்தில் 10 மையப் பொறுப்பாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வு, வேப்பூர் வட்டார வள மையத்தில் ஜன. 10ம் தேதி நடைபெறும். இந்த பணி நியமனம் முற்றிலும் தாற்காலிகமானது.

நன்றி- தினமணி.

Monday 30 December 2013


பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜன. 2 முதல் நவீன செல்போன் பழுதுநீக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் ஜி. பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தப் பயிற்சி பெற விரும்புவோர் 18 முதல் 40 வயதிற்குக் குறைவாக, 10-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 10 நாள்கள் அளிக்கப்படும் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
 பயிற்சிக் காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற விரும்புவோர் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதியை குறிப்பிட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ - 4 ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து பயிற்சி மையத்துக்கு அனுப்ப வேண்டும்.
 மேலும் விவரங்களுக்கு ஐ.ஓ.பி சுய கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரெங்கா நகர் (வாசுகி பால்ராஜ் மருத்துவமனை அருகில்) ஆத்தூர் சாலை, பெரம்பலூர்-  621212 (போன் - 277869) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி-தினமணி.