Monday 26 May 2014

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ரூ. 50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் சார் பதிவாளர் அலுவலகத்தில், வேப்பந்தட்டை வட்டத்திற்குள்பட்ட அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சிகள் உள்பட 29 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 90-க்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்களும், விவசாயிகளும் தங்களுக்கு தேவையான பட்டா, சிட்டா அடங்கல், மனைப்பட்டா பதிவு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவணங்களுக்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.
சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டுமென எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து, வேப்பந்தட்டையில் உள்ள உழவர் சந்தை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 50 லட்சத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கட்டடம் கட்டும் பணி டிசம்பர் 2013-ல் நிறைவடைந்தது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையிலும் அது இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. மேலும், அங்குள்ள கண்ணாடிகளையும் சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.
எனவே, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தால் அரசுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை திறக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதோடு, சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை v.kalathur seithi.

-thinamani.

0 comments:

Post a Comment