Saturday 18 October 2014


விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்துக்கான மறு மதிப்பீட்டின் படி கூடுதலாக ரூ. 14.7 கோடி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கல்லாறு ஒடையின் குறுக்கே ரூ. 19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்ட பணிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் மேலும் கூறியது:

கல்லாறு ஒடையின் குறுக்கே பொதுப்பணித் துறை நீர்வள ஆதார துறையின் மூலமாக செம்மலை - பச்சைமலையின் இடையே விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ரூ. 19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது.

இதன்மூலம் 30.67 மில்லியன் கன அடி நீர் 10 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இங்கு நீர்ப்போக்கி அமைக்க 11 மீட்டர் உயரத்துக்கு கான்கீரிட்டினால் ஆன கட்டுமான அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்துக்கு கரைகள் அமைக்கப்பட்டு, மண் அரிப்பு ஏற்படாத வகையில் கருங்கல் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிக்காக கூடுதலாக மறு மதிப்பீட்டின்படி ரூ. 14.7 கோடி நிதி கேட்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலம் பாசன வசதி பெறும். மதகு மூலமாக வெங்கலம் ஏரிக்கு கீழ் உள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கு உறுதி செய்யப்பட்ட நீரும், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப் பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதோடு, மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

மேலும், அன்னமங்கலம் வழியாக அரசலூர் மற்றும் விசுவக்குடி வரை 1.20 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இங்கு தேக்கப்பட உள்ள 30.67 மில்லியன் கன அடி நீருடன், உள் பகுதி ஆழப்படுத்துவதன் மூலம் கூடுதலாக 10 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் மாநில திட்டக் குழுவுக்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்

ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில், அணைக்கட்டின் கீழ் பகுதியில் பூங்காவும், கரைப்பகுதியில் ஆய்வு மாளிகை அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வை. வேல்முருகன், உதவி பொறியாளர் கார்த்திக், பொதுப்பணித்துறை தரக் கட்டுப்பாட்டுக் கோட்ட செயற்பொறியாளர் சிசில், உதவி செயற்பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


-தினகரன்.

0 comments:

Post a Comment