Tuesday 25 July 2017


பெரம்பலூர்-எளம்பலூர் ரோட்டில் உப்புஓடை அருகே ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இங்கு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த வளாகத்தில் கட்டிட விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்தும், வடமாநிலத்திலிருந்தும் வந்திருந்த கட்டிட தொழிலாளர்கள் கேண்டீன் அருகே கீற்று கொட்டகை அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் அந்த தொழிலாளர்கள் கட்டிடப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் தங்கியிருந்த கீற்று கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீயால் கீற்று கொட்டகை கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதன் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். அப்போது கீற்று கொட்டகையினுள் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் குண்டு வெடித்தது போல் அங்கு சத்தம் கேட்டது.
இதைக்கண்ட அந்த கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் பால்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் எரிந்து கொண்டிருந்த கீற்று கொட்டகையின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கீற்று கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த தீ விபத்தில் கொட்டகையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மொபட் ஒன்று எரிந்து நாசமானது. மேலும் கட்டிட தொழிலாளர்களின் சமையல் பாத்திரங்கள், உடைமைகள், அரிசி-பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மட்டம் பார்க்க பயன்படுத்தப்படும் கட்டிட தொழில் உபகரணங்களும் சேதமடைந்தன. தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என அந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது அந்த கீற்று கொட்டகையினுள் ஆள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் எரிந்து போன கீற்று கொட்டகையை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கட்டைகளை எரித்து சமையல் செய்யும் போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment