Thursday 20 February 2014

கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அகில உலக விஷ்வ ஹிந்து பரிஷித் ஆலோசகரும், கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான ஸ்ரீ வேதாந்தம்.
பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷித் கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்து இயக்க தலைவர்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களின் சந்திப்பை பல ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். இந்து சமயத்தின் பல பிரச்னைகளை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும், இந்து மதத்தலைவர்களும், பூஜாரிகளும் புறக்கணிப்படுகின்றனர். ஆனால், கிறிஸ்துவ அமைப்பு பிஷப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பு பிரநிதிகளை சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை ஏற்று ஆதரவு அளித்து வருகிறார். அதேபோல, இனிவரும் காலங்களில் இந்து மதத் தலைவர்களை சந்தித்து இந்துக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த திமுக ஆட்சி காலங்களில், இந்து சமய அறநிலையத் துறை மூலம் கிராம பூசாரிகளுக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு, அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டது. ஆனால், 2013-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் மீண்டும் நல வாரியம் அமைக்கப்பட்டு, கிராம பூசாரிகளுக்கான சலுகைகள் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்.
வரும் மக்களவை தேர்தலில், இந்து நலனுக்காக பாதுகாப்பு அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க பேரவை முடிவு செய்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில், 2 ஆயிரம் கோவில்கள் வருவாய் உள்ள கோவில்களாகும். இதில், 7 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, மீதமுள்ள கோவில்களை சீரமைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், கிராம பூசாரிகளுக்காக அறிவிக்கப்பட்ட நல வாரியத்தை அமல்படுத்த, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் மாதத்தில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர். 
பேட்டியின்போது, விஷ்வ இந்து பரிசஷ் மாநில தலைவர் ஆளவந்தார், இணை பொதுசெயலர் ஸ்ரீசுவாமி ஆத்மானந்தா, திருப்போரூர் 15-வது பட்டம் சிதம்பர சுவாமி திருமட ஸ்ரீலஸ்ரீ முருகசிவபிராகசம் சுவாமிகள், அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள்,  கிராமக்கோவில் பூசாரிகள் பேரவையின் திருச்சி கோட்ட பொருப்பாளர் பட்டாபி ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி-தினமணி

0 comments:

Post a Comment