Saturday 22 February 2014

சத்திரமனை கிராமத்தில் உலர் தீவனக் கிடங்கு அமைக்க, தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது என்றார் பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சத்திரமனை கிராமத்தில், கால்நடை வளர்ப்போர்க்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்த அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் பருவ மழையில்லாத மாவட்டங்களில் சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமான கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்க, உலர் வைக்கோல் தீவனத்தை மானிய விலையில் தீவன கிடங்குகளின் மூலம் வழங்க, முதல்கட்டமாக ரூ. 12.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் வறட்சி நிவாரணத் திட்டத்தில் சத்திரமனை கிராமத்தில் உலர் தீவன கிடங்கு அமைக்க ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  கால்நடைகளுக்கு 1 கிலோ வைக்கோல் ரூ. 2 வீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில், ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வீதம் அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு வாராந்திர தேவையின் அடிப்படையில், வாரம் ஒரு முறை 105 கிலோ இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கால்நடை வளர்ப்போர் தங்களது குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு 2 போட்டோ, கால்நடைகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகங்களில் அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.  பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் அட்டை மூலம், தீவனக் கிடங்கில் மானிய விலையில் வைக்கோல் பெற்றுக்கொள்ளலாம். சத்திரமனை தீவன கிடங்கு மூலம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், 2-ம் கட்டமாக வி.களத்தூர் கால்நடை மருந்தக வளாகத்தில் அமைக்கப்படும் தீவனக் கிடங்கு மூலம் 29 கிராம ஊராட்சிகளும், கொளக்காநத்தம் கால்நடை மருந்தக வளாகத்தில் அமைக்கப்படும் தீவன கிடங்கு மூலம் 39 கிராம ஊராட்சிகளில் உள்ள கால்நடைகளும் பயன்பெற உள்ளன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பெரம்பலூர் ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.பி. மருதராஜா, துணைத் தலைவர் சி. பிச்சைபிள்ளை, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சந்திரசேகர், உதவி இயக்குநர் மனோகரன், வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) ஆல்பிரட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment