Saturday 29 November 2014


மும்பை: ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த மும்பையை சேர்ந்த பொறியியல் மாணவர் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் வருகிற 8 ஆம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆரிப் மஜித், ஷகீன் தன்கி, பகத் ஷேக், அமன் தண்டேல் ஆகியோர் கடந்த மே மாதம் ஆன்மிக புனித பயண குழுவினருடன் ஈராக் சென்றனர்.

பின்னர் அவர்கள் 4 பேரும் பாக்தாத் நகரில் இருந்து வாடகை கார் பிடித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் மொசூல் நகரத்தை அடைந்தனர். ஈராக், சிரியாவில் தனி நாடு அமைக்கும் முயற்சியில் அரசுடன் சண்டையிட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் அவர்கள் சேர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

இது பற்றிய தகவல் அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர், தங்களது மகன்களை மீட்டு தருமாறு காவல்துறையினர் புகார் அளித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 26ஆம் தேதி ஆரிப் மஜித், போரில் கொல்லப்பட்டு விட்டதாக அவரது சகோதரரை தொடர்பு கொண்டு, அவருடன் சென்ற ஷகீன் தன்கி போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனால் துயரம் அடைந்த குடும்பத்தினர் ஆரிப் மஜித்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரார்த்தனை கூட்டத்தை நடத்தி, சடங்குகளை செய்தனர்.

இந்த தகவல் கிடைத்த சில நாட்களில் ஆரிப் மஜித் தனது தந்தையை போனில் தொடர்பு கொண்டு, தான் பத்திரமாக இருப்பதாகவும், உயிரை காப்பாற்றிக் கொள்ள துருக்கியில் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் நாடு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். இதுபற்றி ஆரிப் மஜித்தின் தந்தை போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது மகனை மீட்டு தருமாறு கோரினார்.

இதைத்தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கருதப்பட்ட கல்யாணை சேர்ந்த மாணவர்கள் 4 பேரையும் மீட்க மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்தது. இந்த பணியில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரும், மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை காவல்துறையினரும் இணைந்து பணியாற்றினர்.

இந்த சம்பவத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து போரில் பலியானதாக கூறப்பட்ட ஆரிப் மஜித் மீட்கப்பட்டு உள்ளார். அவர் துருக்கியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை மும்பை அழைத்து வரப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, தங்களது காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் ( என்.ஐ.ஏ.) அனுமதி கோரினர்.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆரிப் மஜித்தை வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி வரை விசாரிக்க அனுமதி அளித்தது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு, அவருடன் சென்ற கூட்டாளிகள் 3 பேர் பற்றிய தகவல், இந்தியர்கள் வேறு யாருக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்பது போன்ற  கேள்விகளை கேட்டு தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் விசாரணை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இதுபற்றி தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆரிப் மஜித் மீது வழக்குப்பதிவு செய்ய போதிய ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால் இந்த பிரச்னையை நாங்கள் அந்த நோக்கத்தில் பார்க்கவில்லை. இளம் வயதினர் சிலர் இதுபோன்ற கிளர்ச்சி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு பாதிக்கப்படுவது உண்டு. இதுபோன்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மீது சமூகத்துக்கு தவறான பார்வை வந்து விடக்கூடாது என்று கருதுகிறோம்.

 இதனால் ஆரிப் மஜித் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையே உள்துறை அமைச்சகத்துக்கும் பரிந்துரை செய்து உள்ளோம். அவர் துருக்கியில் இருப்பதை நாங்கள் தொலைபேசி எண் மூலம் கண்டறிந்தோம். இதனை அடுத்து தூதரக ரீதியில் அவரை மீட்டு கொண்டு வந்து உள்ளோம். இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கை பணியில் ஈடுபடுபவர்கள் யார்? என்பது பற்றி தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.


0 comments:

Post a Comment