Tuesday 9 December 2014


துபாய், டிச.9-தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்திருக்கிறது.‘தினத்தந்தி’ ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூர், மும்பை, திருப்பூர் ஆகிய 16 நகரங்களில் இருந்து வெளி வருகிறது.

17-வது பதிப்பு துபாய் நகரில் தொடங்கப்படுகிறது.அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், புஜேரா, உம் அல் குவைன், ராசல் கைமா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய் வளம், சுற்றுலா மற்றும் வணிக வளாகங்களுக்கு புகழ் பெற்று விளங்குகிறது.

இதனால் உலகம் முழுவதும் இருந்து பெரும் அளவில் சுற்றுலா பயணிகளும், வணிகர்களும் ஆண்டு முழுவதும் இங்கு வந்து செல்கிறார்கள். வளைகுடா பகுதியில் அசைக்க முடியாத மையமாக திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தில், ஏராளமான இந்தியர்களும், குறிப்பாக தமிழர்களும் வசிக்கிறார்கள்.

இவர்களின் நீண்டகால கனவை பூர்த்தி செய்யும் வகையில் ‘தினத்தந்தி’ தனது 17-வது பதிப்பை துபாய் நகரில் தொடங்குகிறது.இதற்கான தொடக்க விழா துபாய் அல்கூஸ் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிகை (கலதாரி பிரிண்டிங் மற்றும் வெளியீட்டு நிறுவனம்) அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

‘தினத்தந்தி’ துபாய் பதிப்பின் இதழ், நாளை (புதன்கிழமை) முதல் வெளியாகிறது. ‘தினத்தந்தி’ துபாய் பதிப்பின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளுடன் உள்ளூரில் நடக்கும் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும்.

இதன் மூலம் துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ‘தினத்தந்தி’ பெறுகிறது.தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கும் ‘தினத்தந்தி’ நாளிதழ் தொடங்கப்பட்டு 73 ஆண்டுகள் ஆகின்றன.

இப்போது ‘தினத்தந்தி’ அச்சக கலையில் அதிநவீன தொழில்நுட்பங்களை கையாண்டு அச்சிடப்படுகிறது. அச்சு கோர்ப்பதற்கு நவீன கணினி பயன்படுத்தப்படுவதுடன் பல வண்ண ஆப்செட் எந்திரத்தில் மின்னல் வேகத்தில் அச்சிடப்படுகிறது.

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு நவீன மோடம் எந்திரம் மூலமாக புகைப்படங்கள் அனுப்பப்படுகின்றன. இதனால் சென்னையிலோ, மற்ற நகரங்களிலோ நடைபெறும் ஒரு நிகழ்ச்சியின் படத்தை ஒரே நேரத்தில் அனைத்து பதிப்புகளிலும் பிரசுரிக்க முடிகிறது.

இதன் மூலம் உள்நாட்டு செய்திகள் மட்டுமின்றி வெளிநாட்டு செய்திகளும் தாமதம் இன்றி உடனுக்குடன் பிரசுரிக்கப்படுகிறது.

-தினத்தந்தி.

0 comments:

Post a Comment