Friday 24 March 2017


தமிழகத்தின் பல பகுதிகளில் ஏரி, குளங்களைக் காணவில்லை; ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்று மக்கள் அங்காங்கே புகார்கள் கொடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அதேபோல ஏரியைத் தூர்வாரவில்லை என்று நீதிமன்றமும் பல்வேறு விதத்தில் தமிழகஅரசுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. நீதிமன்றத்தைச் சமாதானப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு கட்டமாக அரியலூரில் தூர்ந்துபோய் ஆக்கிரமிக்கபட்டுக் காணாமல்போன ஏரியை, அரியலூர் கலெக்டர் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அவரே முன்னின்று ஏரியைத் தூர்வாரவும் ஐடியா கொடுத்துள்ளார். தற்போது, கலெக்டருக்கு  தமிழகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. இவரைப் பாராட்டி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வளைதளங்களில் செய்திகள் இரண்டு நாளாக வந்துகொண்டிருக்கின்றன.
அரியலூர் மாவட்டம், கல்லாத்தூர் அருகே, மருக்காலங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது, மங்களா ஏரி. இதைக் காணவில்லை என்று கடந்த வருடம் ஜூலை மாதம் அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் புகார் கொடுத்துள்ளார்கள் கிராம மக்கள். அதன் அடிப்படையில் ஏரியைக் கண்டுபிடித்துள்ளார், கலெக்டர்.


ஏரியைக் காணோம் என்று புகார் கொடுத்த உதயகுமாரிடம் பேசினோம். "மங்களா ஏரி 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்தக் காலகட்டத்தில், இந்த ஏரியால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பயன் அடைந்திருக்கிறார்கள். அதேபோல வரத்து வாய்க்கால்கள் சரியாக இருந்ததால், மழைநீர் ஏரியில் கலந்ததால், வற்றாத ஏரியாக இருந்துள்ளது. இருபோகம் விவசாயம்செய்து, எங்கள் பகுதி செழுமையாக இருந்துள்ளது. ஆனால், இப்போது இந்த நிலைமை தலைகீழாக உள்ளது. காரணம், இந்த ஏரியை 50 வருடங்களாகத் தூர்வாராமல் விட்டதால், ஏரி தூர்ந்துபோய், சரிசமமான கட்டாந்தரையாக மாறிவிட்டது. ஒரு சிலர், இந்த இடத்தைச் சரிசெய்து விளைநிலங்களாக மாற்றி, பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒருசில கட்சிப் பிரமுகர்கள், ஆளுக்குஆள் இடத்தை அபகரித்துக்கொண்டு, வீடு கட்டவும் தொடங்கினார்கள். இதை எதிர்த்து, நாங்கள் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள், எங்களை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று மிரட்டினார்கள். அதன் பெயரில், கடந்த ஆண்டு ஏரியைக் காணோம் என்று கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். அவரும் எங்க முன்பே இதை உடனடியாக விசாரித்துத் தகவல் சொல்லுங்கள் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அது மட்டுமில்லாமல், இதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழு விசாரித்ததில், 6 ஏக்கருக்கும் மேல் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்தது தெரியவந்தது. அவர்களை அழைத்து, ''ஏரியின் இடத்தை அபகரித்துள்ளதால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க என்னால் முடியும். இருந்தாலும் உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். நேற்று, 'தண்ணீர் தினம்' என்பதால், எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றிவிட்டு, கலெக்டரே வந்து நின்று ஏரியைத் தூர்வாரவும் உத்தரவிட்டார். உடனடியாக ஜே.சி.பி எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது. இந்த ஏரி, முறையாகத் தூர்வாரி விவசாய பயன்பாட்டுக்கு வந்தால், வடவீக்கம், மருக்காலங்குறிச்சி, தண்டலை, மா மங்களம், வடுகர் பாளையம் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைவதோடு 86 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பயன்தரும். கலெக்டர் முயற்சியால் எங்க ஊர் மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கப்போகிறது" என்றார்.

0 comments:

Post a Comment