Sunday 20 April 2014

இந்தியப் பாராளுமன்றம் “தில்லி தர்பார்” என்றே பொதுவாக அறியப் படுகிறது. தில்லியில் தான் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கங்கள், அமைச்சகங்கள், அரசியல் தரகர்கள் எல்லாமே மையம் கொண்டிருப்பது. பூகோள ரீதியாக தில்லி இருப்பது ஓரிடத்தில் தான். ஆனால் இந்திய நிலப்பரப்பின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அதன் மாயக்கரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு பொதுவான அரசியல் நம்பிக்கை.
ஆனால், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில், நாட்டின் அரசியல் மையம் தில்லியிலிருந்து குஜராத்துக்கு இடம் பெயர்ந்து விட்டதோ என்று சொல்லுமளவுக்கு குஜராத் பற்றிய பேச்சுக்களும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  மோதி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவர் கைகளாலும் ஓசைப்படும் மத்தளமாகி விட்டது குஜராத். தேசிய அரசியலின் மையத்தில், அதிகார வர்க்கத்தினரின் மேல்பூச்சு வாசத்திற்குப் பதிலாக உண்மையான இந்திய மண்ணின் மணம் வீசப் போவதற்கான அறிகுறி இது என்று தவ்லீன் சிங் போன்ற அரசியல் நோக்கர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
“குஜராத்” என்ற பெயரை மதக் கலவரங்கள், சமூக மோதல்கள், வன்முறைகளின் குறியீடாக தேசத்திலும் உலக அரங்கிலும் முன் நிறுத்த மீண்டும் மீண்டும் காங்கிரசும், எதிர்க்கட்சிகளும், போலி அறிவுஜீவிகளும், ஊடக சதிகாரர்களும் தொடர்ந்து முயன்றனர். ஆனால் பல்வேறு புலன் விசாரணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் உண்மையை ஓங்கி அறைந்து வெளிக்கொணர்ந்தன. அந்த முயற்சிகள் மண்ணைக் கவ்வின. இப்போது “குஜராத்” பற்றிய கருத்துரைகள் அனைத்துமே வளர்ச்சி, பொருளாதாரம், சமூகநலத் திட்டங்கள், தொழில்துறை ஆகிய விஷயங்களையே சுற்றி வருகின்றன. வளர்ச்சி பற்றிய சொல்லாடல்களுக்கும், விவாதங்களுக்கும்  ஒரு அளவீடாகவே ஆகியிருக்கிறது, மோதியின் “குஜராத் மாடல்”. இந்த திசைமாற்றம் நரேந்திர மோதியின் தலைமையிலான பாஜக, களத்தில் அடைந்துள்ள முதல் வெற்றி.

நரேந்திர மோதி நாட்டின் தலைமைப் பொறுப்பேற்கத் தகுதியானவர் என்பதை அழுத்தமாக சொல்வதற்காக, அதற்கான நிரூபணமாகத் தான், குஜராத்தில் அவர் செய்த சாதனைகளும், கொண்டு வந்துள்ள மாற்றங்களும் பரப்புரை செய்யப் படுகின்றன. இதன் நோக்கம் மற்ற மாநிலங்களை மட்டம் தட்டுவதோ அல்லது அவற்றில் எந்த வளர்ச்சியுமே ஏற்படவில்லை என்று சொல்வதோ அல்ல.  குஜராத் எட்ட வேண்டிய எல்லா இலக்குகளையும் எட்டி விட்டது, அது எந்தக் குறைகளும் அற்ற சொர்க்க பூமி என்று சொல்வதல்ல. ஆனால், மேம்போக்காக ஒரு சில புள்ளி விவரங்களைப் போட்டுக் காட்டி வெட்டி சவடால்கள் விடும் எதிர்ப்பாளர்களின் ஒரே நோக்கம் மோதியின் ஆட்சித் திறன் பற்றிய உண்மைகளை இருட்டடிப்பது. குறுகிய காலத்தில் மோதியின் தலைமை நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைகள் பற்றிய உண்மைகள் மக்களின் மனதில் பதிவதைத் தடுப்பது. தங்கள் தோல்விகளை மறைப்பது. எந்தவொரு தொலைநோக்குத் திட்டமும் இல்லாமல் வெட்டி அராஜக அரசியல் மட்டுமே நடத்தினாலும் கூட, முன்பே பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களின் இயல்பான தொடர்ச்சியை, ஏதோ தாங்கள் செய்த பெரிய சாதனை போல காட்டிக் கொண்டிருப்பது.
ஒரு புறம் காங்கிரசின் மெகா ஊழல்கள், கடும் தோல்விகள். மறுபுறம் பாஜகவின் நல்லாட்சி நிரூபணங்கள். தொலைநோக்கு செயல்திட்டங்கள். இது தான் இந்தத் தேர்தலில் மையமாக உள்ள  மோதல்.  இதைப் பேசுவதற்குப் பதிலாக, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு விஷயத்துடன் குஜராத் வளர்ச்சியை ஒப்பிட்டு, இங்க பார் குஜராத் ஒரு சதவீதம் கம்மி, அங்க பார், குஜராத் இரண்டு சதவீதம் கம்மி என்று சொல்வதன் மூலம், இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்?  நடப்பது மாநிலங்களுக்கு இடையேயான போட்டி அல்ல,  பாராளுமன்ற தேர்தல். தேசியத் தலைமையை தேர்வு செய்வதற்கான போட்டி.  இப்படி செய்வதன் மூலம் மற்ற மாநில மக்களை உசுப்பி விட்டு, குஜராத்தை விட நாங்கள் இளப்பமா என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, மோதி அலையை மழுங்கடித்து விடலாம் என்று இவர்கள் கணக்குப் போட்டால், அது கட்டாயம் நிறைவேறப் போவதில்லை. அது இவர்கள் மீதே பூமராங்க் ஆகி திருப்பி அடிக்கப் போகிறது.
ஏனென்றால், இந்தியாவின் பொதுஜன கருத்து வெளி என்பது  புள்ளி விவரங்களைப் போட்டு விளையாடும் சாதுர்யம் மட்டும் அல்ல. ஊடகங்களும் பரப்புரைகளும் சொல்லும் செய்திகளை தங்கள் அனுபவங்கள், நேரடியான தகவல் தொடர்புகள் மூலம் உறுதி செய்து கொண்டு தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அரசியல் தேர்வுகளை செய்வார்கள். குஜராத்தை விட தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று ஜெயலலிதா மேடைகளில்  கெக்கலிக்கிறார். அந்தக் கெக்கலிப்புக்குப் பின் உள்ளவை அரைகுறை உண்மைகள் என்பதையும், மிகச் சில துறைகளில் ஏற்பட்டுள்ள ஒரு நீண்டகால வளர்ச்சியைத் தவிர்த்து மற்றதெல்லாம் வெறும்  பம்மாத்து என்பதையும் தமிழக வாக்காளர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.  இதுவரை தமிழகத்தில் நடந்த எல்லா கருத்துக் கணிப்புகளிலும்  60 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் மோதி பிரதமராக வேண்டும் என்று கூறியிருப்பது யாரோ செய்தி சதி அல்ல. தானைத் தலைவர் சொல்வது போல தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்களும் அல்ல. ஜெயலலிதா கடந்த கால சீரழிவு அரசியலின், கழக அரசியலின் ஒரு எச்சம்; ஆனால் மோதி எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியை மையப்  படுத்திய அரசியலின் ஒளிக்கீற்று என்று மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்தக் கதைகளின் உண்மையான ஹீரோக்கள் ஆர்.வெங்கட்ராமன், காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் தானே அன்றி, ஜெயலலிதா அல்ல. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர்  ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் வளர்ச்சிக் கொள்கைகளை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு உள்ள தகுதியின் இலட்சணம் என்ன என்று தமிழக மக்கள் அறிவார்கள். அம்மாவே இப்படி என்னும் போது கலைஞர்களையும், தளபதிகளையும் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
சர். சி வி.ராமன் கண்டுபிடித்ததை “ராமன் எஃபெக்ட்” என்றும், ஜெய்ப்பூரில் வடிவமைக்கப் பட்ட செயற்கைக் கால்களை “ஜெய்ப்பூர் கால்கள்” என்றும் சொல்வது போல, குஜராத்தில் நடைமுறைப் படுத்தியதால் “குஜராத் மாடல்” என்று அழைக்கிறார்கள். மற்றபடி, மோதியின், பாஜகவின் நல்லாட்சி பற்றிய கொள்கைகளும் திட்டங்களும் இந்தியா முழுவதற்கும் பொருத்தமானவையும் ஏற்றவையும் ஆகும். இவை வெறும் கோட்பாடுகளோ, தேர்தல் கோஷங்களோ அல்ல. உண்மையில்  இந்த நல்லாட்சிக் கொள்கைகளை குஜராத்தில் பரிசோதனை செய்து, அதில் உள்ள குற்றம் குறைகளைக் களைந்து மேலும் பல நல்ல அம்சங்களையும் சேர்த்து ஒரு செயல்திட்டமாக மோதி முன்வைப்பது எவ்வளவு அறிவியல் பூர்வமானது என்று யோசித்துப் பாருங்கள். மோதிக்கு ஒரு வாய்ப்பளித்தால், இந்த நல்லாட்சியின் பலனை ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும், ஒவ்வொரு மாநிலமும் அனுபவிக்கும்.  மோதி பிரதமராகவே கூடாது என்று வெறுப்புடனும் வன்மத்துடன் கையெழுத்துப் போட்டு கோரிக்கை விடுக்கும் அறிவுஜீவி, எழுத்தாளர், சிந்தனையாளர் பூர்ஷ்வாக்களுக்கும் அந்த நல்லாட்சியின் பலன்கள் கிடைக்கும். இடைவெட்டு இல்லாத 24 மணி மின்சாரத்தில், இன்னும் ஜோராக பெரிதாக எப்படி மோதி மீது வெறுப்பு கக்குவது, மக்களை முட்டாளாக்குவது என்று அவர்கள் யோசிக்கலாம்.
  • மோதி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்து மோதினாமிக்ஸ் (Modinomics) என்ற புத்தகத்தை சமீர் கோச்சார் எழுதியிருக்கிறார்.  இவர் Skoch  Group  தொழில் குழுமத்தின் தலைவர் சிறந்த பொருளாதார நிபுணர். அனைவரையும் அரவணைக்கும் பொருளாதாரம் (Inclusive Economics),  அனைவரையும் அரவணைக்கும் அரசாட்சி (Inclusive Governance) என்ற இரண்டும் தான் மோதினாமிக்ஸின் தாரக மந்திரங்கள் என்பதை விரிவாக இந்தப் புத்தகத்தில் பல ஆதாரங்களுடன் விளக்குகிறார். பார்க்க: http://modinomics.net/
  • இந்தியா டுடே இதழின் மூத்த பத்திரிகையாளர் உதய் மாஹூர்கர் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள Centrestage: Inside the Narendra Modi Model of Governance என்ற புத்தகம்,  மோதி அரசின் சாதனைகளைப் பற்றியதாக  மட்டுமல்லாமல், சிறு குறைகள், இன்னும் நன்றாக செயல்பட வேண்டிய துறைகள் என்பதைப் பற்றிய நடுநிலையான விமர்சனமாகவும் அமைந்துள்ளது.
*********
மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.


1. குஜராத் மாடல் என்பதை எப்படி வரையறை செய்கிறீர்கள்? அதன் முக்கிய அம்சங்கள் என்ன?
இந்தியாவில் இதுவரை  ஒவ்வொரு “பாதிக்கப் பட்ட” சமூகக் குழுக்களையும் தனித்தனியான அலகுகளாகக் கருதி எந்த ஒத்திசைவும் இல்லாமல் தான் பெருமளவு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப் பட்டு வந்துள்ளன. இது வாக்கு வங்கிகள் உருவாகவும், நீடிக்கவும் தான் வகை செய்திருக்கிறதே தவிர வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, மக்களிடையே எந்தப் பெருமித உணர்வையும் உண்டாக்கவில்லை. இதிலிருந்து மாறுபட்டு, நல்லாட்சி (good governance) மூலமாக, அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரும் வளர்ச்சி என்பது தான் குஜராத் மாடல்.
சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடம் உறைந்துள்ள ஆற்றல் குறித்த சுய பெருமித உணர்வை ஏற்படுத்தி, அதை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைப்பது மோதியின் குஜராத் மாடல்.
சாமானிய மக்களுக்கு “உதவுவது” அல்ல, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க எல்லாவிதமான ஊக்கங்களையும் வசதிகளையும் அளிப்பது.
கண்மூடித் தனமான, பொத்தாம் பொதுவான மானியங்களைத் தவிர்த்து, சுகாதாரம், கல்வி போன்ற குறிப்பிட்ட துறைகளில் மட்டும் ஏழை மக்களுக்கு உண்மையிலேயே நேரடியாக உதவும் வகையில் மானியங்களைப் பயன்படுத்துவது.
காளையின் கொம்பைப் பிடித்து மடக்குவது போல, வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பிரசினைகளை ஆயத்த நிலையில் (mission mode) நேரடியாக எதிர்கொள்வது, அவற்றை துரிதமாகத் தீர்ப்பது.
இந்த மாடல் அமல் படுத்தப் பட்ட போது, நடைமுறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. சில விஷயங்களில் நினைத்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், மோதி அரசு தொடர்ந்து அந்த விஷயங்களில் கூடுதல் கவனமும் அதிக முனைப்பும் செலுத்திக் கொண்டே இருக்கிறது. அது தான் மோதிக்கும் மற்ற அரசியல் தலைமைகளுக்கும் உள்ள வேறுபாடு.
2. சமூக வளர்ச்சியில் குஜராத் மிகவும் பின்தங்கியுள்ளதே.. ?
தீர்க்கவேண்டிய சில பிரசினைகள் உள்ளன என்பது உண்மை தான். ஆனால், “மிகவும் பின் தங்கிய” என்பது எந்த வகையிலும் சரியல்ல.
உதாரணமாக, சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான சராசரியை விட மோசமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், பழங்குடியினர் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் குஜராத் என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற இத்தகைய மாநிலங்களிலும் அந்த விகிதங்கள் சராசரியை விட மோசமாகத் தான் உள்ளன. இதற்குக் காரணம், பழங்குடியினர், கிராம நகர மக்களைப் போல நெருக்கமாக கூடி வசிக்காமல், தூர தூரமுள்ள பிரதேசங்களில் சிதறி வாழ்கின்றனர். அத்தகைய இடங்களுக்கு மருத்துவ வசதிகளைக் கொண்டு செல்வது மிகவும் கடினம்.  அப்படியும் கூட,  மோதி அரசின் சிறந்த முயற்சிகளால் 2002ல் 60 ஆக இருந்த சிறுகுழந்தைகள் மரண விகிதம், இப்போது 38 ஆகக் குறைந்திருக்கிறது.  மேற்கூறிய மற்ற பழங்குடியினர் அதிகமாக உள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பாகவே உள்ளது.
இன்னொரு உதாரணம். ஒரு வருடத்திற்கு 1200க்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களின் இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்யும் யு.என்.மேத்தா இதய சிகிச்சை மையம் முற்றிலும் அரசு நிதியில் இயங்குகிறது. கடந்த பத்து வருடங்களில் இதற்கான நிதி 2 கோடியிலிருந்து 70 கோடி வரை உயர்த்தப் பட்டுள்ளது.
குஜராத்திற்கே உரித்தான சில காரணங்களால், கிராமப் புறங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, பிற மாநிலங்களில் இருந்து டாக்டர்களை வரவழைப்பவது உட்பட பல முன்னெடுப்புகளை மோதி தலைமையிலான அரசு செய்து வருகிறது.

தொடரும்--

நன்றி-http://www.tamilhindu.com/2014/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93/

0 comments:

Post a Comment