டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு (டிஇடி) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பின்னர் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படி 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்டவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘‘பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக வெயிட்டேஜ் வழங்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க மொத்தம் 100 மதிப்பெண் கணக்கிடப்படும். அதில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15, டிடிஎட், டிஇஎட் தேர்வு மதிப்பெண்ணுக்கு 25, டிஇடி தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதில் பிளஸ் 2 தேர்வுக்கு 10, பட்டப் படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, டிஇடி தேர்வுக்கு 60 என மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கான பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. தற்போது 73 ஆயிரம் பேர் புதிய வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பெண் பெறுவார்கள்.
புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது குறித்து பட்டதாரி சங்கங்கள் சார்பில் கூறப்படுவதாவது:
டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 5 சதவீத தளர்வின்படி எஸ்சி எஸ்டி பிரிவினர் உள்ளிட்டவர்கள் குறைந்தபட்சம் 82 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். 5 சதவீத தளர்வு பெற்றவர்கள், புதிய வெயிட்டேஜ் முறைப்படி 49.20 மதிப்பெண்கள் டிஇடி தேர்வில் பெறுகின்றனர். ஆனால் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் வீதம் பெற்றால் தான் அவர்கள் புதிய வெயிட்டேஜில் 100க்கு 64 புள்ளிகளாவது பெறுவார்கள்.
மேலும், 90 மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவினர் (‘எஸ்’ சதவீதப்படி) 54 புள்ளிகள் பெறுவார்கள். மற்ற படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் பெற்றால்தான் அவர்கள் 100க்கு 69 புள்ளிகளை நெருங்குவார்கள். இதன்படி பார்த்தால் 5 சதவீத தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், பொதுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் ஏறத்தாழ சம அளவு புள்ளிகளை பெறும் நிலை ஏற்படுகிறது. இதனால் 73 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறும் தகுதி பெறுகிறார்கள். ஆனால், மொத்தம் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களை இன சுழற்சி முறையில் பிரித்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதனால் ரேங்க் பட்டியலில் இன சுழற்சி வாரியாக முதலில் வருவோருக்கே பணி நியமனம் கிடைக்கும். மீதம் உள்ள சுமார் 58 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. பணி வாய்ப்பு இழந்தவர்கள் மறுமுறையும் தேர்வு எழுத வேண்டுமா அல்லது அவர்களுக்கு அடுத்து வரும் காலிப் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படுமா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்க வேண்டும்.
இவ்வாறு பட்டதாரிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன v.kalathur seithi.
RSS Feed
Twitter
Friday, June 06, 2014
வ.களத்தூர் செய்தி


0 comments:
Post a Comment