Monday 1 September 2014


பாரதத்தின் இரண்டாவது ஜனாதிபதியான ’சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்’ அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் ’ஆசிரியர் தினமாக’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை அனுசரிப்பதுடன் நிறுத்திவிடாமல், ஆசிரியர்கள் போற்றப்படவேண்டும்! வணங்கப்படவேண்டும்!! என்ற நம் நாட்டின் பாரம்பரியப் பண்பாட்டுக்கு உயிர்கொடுக்க மத்திய அரசு இந்த தினத்தை விழாவாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. இதற்கு ”குரு உத்ஸவ்” என்று பெயரிட்டுள்ளது. தர்மமும் நன்றியும் மனசாட்சியும் உள்ள எந்த நபரும் இதை வரவேற்று கொண்டாடுவார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இதை எப்படிப் பார்க்கின்றனர்? இந்தப் பார்வையில் ஏதாவது நியாயம் உள்ளதா?
போஸ்டர்களிலும் ஃப்லெக்ஸ் பேனர்களிலும் சுவர் விளம்பரங்களிலும், கழகக் கண்மணிகளால் தமிழாகவே(!) சித்தரிக்கப்படும் தமிழினத் தலைவர் கருணாநிதியின் பேச்சைப் பாருங்கள்.
//ஆசிரியர் தினம் என்பதற்குப் பதிலாக "குரு உத்சவ்' என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. ஆசிரியர் தினத்தை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்துவர். அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழிக்காக தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை// - (தினமணி செப்டம்பர் 1 2014)
dinamanai newsitem
http://www.dinamani.com/tamilnadu/2014/09/01/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%86/article2408362.ece
இதில் கவனிக்கவேண்டிய சொற்றொடர் //மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்துவர்//. இதில் ’குரு’ என்ற சொல்லை வடமொழி சொல்லாக சித்திரிக்கிறார் தமிழ் இ(ஈ)னத் தலைவர். சமயம் வந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக செம்மொழி மாநாட்டில், செம்மொழி தமிழுக்கு 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் என்று வரையறை நிர்ணயித்த வ(லொ)ள்ளுவர் ஆயிற்றே இவர்! அந்த செம்மொழி மாநாட்டில் இவரால் ’சுத்த தமிழ்’ என்ற சான்றிதழ் பெற்ற ’புறநானூறு’ என்ன சொல்கிறது?
//முருகற் சீற்றத்து உருகெழு குருசில்// - புறநானூறு பாடல் 16 - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி வரி-12
இப்பாடலில் ’பாண்டரங் கண்ணனாரால்’ பாடப்பெரும் சோழ மன்னன் ’பெருநற்கிள்ளி’, இராச சூயம் என்னும் வேள்வி செய்ததனால் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான். இந்த சோழனின் சீற்றத்தை முருகனுக்கு இணையாக உவமைப்படுத்துகிறார் புலவர்.
இப்பாடலில் //குருசில்// என்ற சொல் தலைவன், அதாவது மன்னன் என்ற பொருளில் இடம் பெறுகிறது.
//முருகற் சீற்றத்து உருகெழு குருசில்// – முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா
’கெழுதகை நண்பரே’ என்று முரசொலியில் எழுதும்போது, கெழு என்பதற்குப் பின் 'குரு' என்ற சொல் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது, புறநானூற்றை முறையாக படித்திருந்தால் தெரிந்திருக்கும்.
இராசசூய வேள்வி செய்ததனால் சோழ மன்னனும் சோழர்குலமும் தமிழை அழித்துவிட்டது அதனால் குருசில் என்ற வடமொழி சொல்லை இந்த பாடலில் புலவர் பயன்படுத்துகிறார் என்று சோழனையும், பாடிய சான்றோனையும் ’சோற்றால் அடித்த பிண்டமே!’ என்று முரசொலியில் முரசு கொட்டாமல் இருந்தால் சரி!.
  purananooru
செம்மொழியில் இடம் பெற்ற இதே புறநானூற்றில் புலவர் கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பாடும் போது
//ஓர்க்கும் உறந்தை யோனே குருசில்// - புறநானூறு 68 (வரி 17-18)
இங்கு ’குருசில்’ என்ற சொல் மன்னன் என்ற பொருளில் இடம் பெறுகிறது.
வடமவண்ணக்கன் பேரி சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்தி பாடிய புறநானூற்றுப் பாடலில் குருசில் என்ற சொல் மன்னன் என்று பொருள் படும்படியாக அமைந்துள்ளது.
//வேல் கெழு குருசில்// - புறநானூறு 198 (வரி 10)
(வேலையுடைய தலைவா)
பத்துப்பாட்டு நூற்களுக்கு பின் தோன்றிய நீதி நூல்களை பதினென்கீழ்கணக்கு நூல்கள் என்றழைப்போம். ’நீதி’ என்ற சொல்லின் ‘ந’கர நெடில் குறிலாக ஒலித்து ’நிதி’யாக பைகளிலும் பெட்டிகளிலும் சேர்க்கும் மரபைத் தோற்றுவித்த கருணா(கரன்சி)நிதிக்கு ஆசாரக்கோவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது துரதிருஷ்டம் ஆசாரக்கோவை சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
//குரவர் உரையிகந்து செய்யார் விரதம்// - ஆசாரக்கோவை (பாடல் 17, வரி- 1)
நோன்பே எனினும் ஐம்பெருங் குரவர்களாகிய தாய், தந்தை, ஆசிரியர், அரசன், தமையன் முதலியவர்கள் சொல்லைக் கடந்து செய்யார் என்கிறது உரை.
இங்கு ’குரவர்’ என்ற சொல்லுக்கு ஆசிரியர் என்ற பொருளும் உள்ளது.
இளங்கோவடிகளே சிலப்பதிகாரக் காதையை நேரில் வந்து தன்னிடம் சொன்னது போல் கம்பீரமாக மேடைகளில் மேதாவித் தனமாக பேசியும் பூம்புகார் என்று கதை வசனம் எழுதி சினிமாவில் சம்பாதித்தும், பூம்புகார் வணிகர்களை விடப் பல மடங்கு சம்பாதித்த பெருமைக்குச் சொந்தக்காரர் கருணா(கரன்சி)நிதி. சிலப்பதிகாரத்தில் குரு என்ற சொல் இடம்பெற்றிருப்பதை ஏன் தான் கவனிக்கவில்லையோ. சிலப்பதிகாரத்திற்கு ”கண்ணகியின் இடையிலேயும், மாதவியின் இடையிலேயும் கோவலன் கண்ட வித்தியாசம்” என்ற கிளுகிளுப்பான விளக்கம் அளித்தவருக்கு இது எங்கே தெரியப்போகிறது!.
//இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்// - (சிலப்பதிகாரம் நாடுகாண் காதை, வரி 184)
இறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்
சிலப்பதிகாரமும் குரவன் என்றால் ஆசிரியர் என்கிறது.
அடியார்க்கு நல்லார் தனது உரையில் ’குரவர்’ என்பதற்கு குருமூர்த்தி என்று குறிப்பிடுகிறார். நம் திருக்குவளை தட்சிணாமூர்த்தி குரவன் என்பதற்கு வேறு ஏதாவது பொருள் வைத்திருக்கிறாரா?
wall-paintings



சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதை, குரவன் என்றால் பெற்றோர் என்கிறது
//குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ// - (புறஞ்சேரியிறுத்த காதை வரி 89)
குரு’ என்ற சொல் அரசன், தாய் தந்தையர், ஆசிரியர், தமையன் என்பதைக் குறிக்கும் சொல்லாக விளங்குவது மொழி அறிஞர்களுக்குத் தெரியும். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு, இந்த சொல்லிற்கு மேலும் சில பொருள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது
//குரவனும் நோயும் நிறமும் பாரமும் அரசனும் குரு எனலாகும்// - (பிங்கல நிகண்டு, 10: 370)
இதற்கு தமிழ் இணையதளமான tamilnet.com, Teacher, disease (of the pox or blister type), colour, heaviness and king are termed as Kuru என்ற விளக்கத்தைப் பதிவிட்டுள்ளது. (http://www.tamilnet.com/art.html?catid=98&artid=37228). இந்த தளம் கருணாநிதியின் மொழியில் சொல்லப்போனால் ஆரியக் கலப்பற்ற இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுகிறது.
தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளின் கெழுதகை கூட்டாளியான திரு கா.சு. பிள்ளை, ’சமயக் குரவர் நால்வர் வரலாறு’ என்ற புத்தகத்தை எழுதி அதை சென்னை, பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழ் ஆண்டுப் பிறப்பை மாற்ற கள்ளச் சாட்சியாக கருணாநிதியால் கூண்டில் ஏற்றப்பட்ட மறைமலையடிகளின் கெழுதகை கூட்டாளியான கா.சு. பிள்ளை அவர்கள் குரவர் என்ற சொல்லுக்கு என்ன பொருள் எடுத்துக்கொண்டார் என்பதை இறந்தவர்களையெல்லாம் சாட்சிக்கு அழைக்கும் கருணாநிதி இவர் கல்லறைக்குச் சென்று கேட்டுச் சொல்வாரா?
சமயக்குரவர்கள், சந்தான குரவர்கள் என்று சைவர்களால் அனுதினமும் வணங்கப்படும் ஆசான்கள் தமிழர்கள் இல்லையா? குரவர் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லையா?
samya santhana kuravar



//கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க// (திருவாசகம்)
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க
9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ சமயக்குரவரான மாணிக்கவாசகர் குரு என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இந்த திருவாசகப் பாடல் நமக்குக் காட்டுகிறது.
18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவரின் காஞ்சிப் புராணம் குரு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.
//நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாத னாகிப்// - காஞ்சி புராணம் - கடவுள் வாழ்த்து (பாடல் 10, வரி 2)
என் தம்பி சிவாஜி கணேசன் என்று உறவு முறை பாராட்டி, சென்னை காமராசர் சாலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவினார் கருணாநிதி. இந்தச் சிலையை ஜெயலலிதா அரசு மாற்றியபோது கடும் கண்டனத்தைத் தெரிவித்தவரும் கருணாநிதி. சிவாஜி கணேசனுக்கு ‘கலைக் குருசில்’ என்ற பட்டமும் உண்டு. ’குருசில்’ என்ற பட்டம் எந்த மொழியை அடிப்படையாகக் கொண்டது என்று, ‘முத்தமிழ் வித்தவர்” விளக்கம் தருவாரா?
’குரவன்’ என்ற தமிழ்ச் சொல்லே ’குரு’ என்ற வடமொழிச் சொல்லுக்கு வேர் என்று தனித்தமிழ் பேசும் தேவநேயப் பாவாணர் சொல்லியிருப்பது கருணாநிதிக்குத் தெரியவில்லை போலும்! சிவாலயங்களில் பூசனை செய்பவர்களுக்கு ’குருக்கள்’ என்று பெயர். இதுபோலவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூசனை செய்பவர்களுக்கு ’சிவகுராவ்’ என்று பெயர். இதிலிருந்து ’குரு’ என்ற சொல் ஒரே பொருளை குறிக்கும்படியாக வட பாரதத்திலும், தென் பாரதத்திலும் வழங்கப்படுகிறது. ’குரு’ என்ற சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றிருக்க வேண்டும் என்கிறார் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. S.இராமசந்திரன் அவர்கள். 
devaneya pavanar
குரு’ என்ற உயரிய சொல்லை உலகுக்குக் கொடுத்தது உன்னதத் தமிழ் என்ற உண்மையை மறைத்த பாதகச்செயலை கருணாநிதி செய்துள்ளார். சங்க காலம் முதல் இன்று வரை பழக்கத்தில் இருந்துவரும் ’குரு’ என்ற தூய தமிழ்ச் சொல்லைத் தமிழிலிருந்து அந்நியப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் ஒரு கேடு கெட்ட செயலில் இறங்கியுள்ளார். பிரிவினைவாத நோக்கத்திற்காக தாய்மொழியை காவு கொடுக்கும் கயவருக்கு கலைஞர் பட்டமா?
’குரு’ என்ற சொல்லின் மூலம் தமிழ் என்றாலும், குரு- சிஷ்ய பாரம்பரியம் வெறுக்கத்தக்கது அது தமிழுக்கு எதிரானது என்று கருணாநிதி அவர்கள் கருதலாம். கருணாநிதியை பொறுத்தவரை அவரின் வாழ்க்கைமுறையே தமிழ் வாழ்க்கைமுறை. அவரது அகராதியே தமிழ் அகராதி. அதனால் தானோ என்னவோ தமிழே என்று அவரை அவரே அழைத்துக்கொள்கிறார். பாடம் கேட்கப் போன மாணவியிடம் ஆசிரியர் புணர்ந்ததை வைத்து உடம்படு மெய் என்று தொல்காப்பிய பூங்காவில் ஆசிரியர்-மாணவர் உறவுக்கு விளக்கம் கொடுத்தவராயிற்றே! காவலாளி இல்லாத பூங்காக்களில் இரவு நேரங்களில் ஒதுங்குபவர்களை வைத்து கூட்டம் நடத்துபவரின் தொல்காப்பியப் பூங்கா இப்படித்தானே இருக்கும்! இந்த உடம்படு மெய் சூத்திரத்தின் அடிப்படையில் குருவைப் பார்க்கும் கருணாநிதிக்கு, குருவை தெய்வமாகக் கொண்டாடும் மத்திய அரசின் ’குரு உத்ஸவ்’ கசக்கத்தானே செய்யும்!.
கருணாநிதி கொட்டடித்தால் அந்த தமிழ் தாளத்திற்கு அடிப்படைத் தமிழும், பண்பாடும் தெரியாத ஒரு வேதாளக் கூட்டம் உடனே ஆடிவிடும். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன ஈவேரா கழுத்தில் இருக்கும் வேதாளம் யார் என்பதற்கான போட்டா போட்டி வேறு! எப்போதெல்லாம் சர்க்கரை நோய் கூடுகிறதோ அப்போதெல்லாம் பாத யாத்திரை செல்லும் திரு.வை.கோ அவர்கள் ஏதோ ’குரு’ என்ற சொல் தமிழுக்கு விரோதமானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். சங்கத்தமிழன் என்று சொல்லி தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், இலங்கைத் தமிழருக்கும் சங்கூதும் திருமாவளவன், பழ.நெடுமாறன், போன்றோர் கொதித்தெழுகின்றனர். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ’குரு’ என்ற சொல்லினால் தமிழுக்குத் தீரா இழுக்கும், அழிவும் வருவதை டெலஸ்கோப் மூலம் பார்த்து வானிலை அறிக்கை படித்தனர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன் மற்றும் ’சீன்’ சீமானின் அறிவுக்களஞ்சியமான திரு.ஐயநாதன்.
இந்தப் பண்பாட்டுக்காவலர்களையெல்லாம் ஒரு படி மிஞ்சி நின்றார் காங்கிரஸ் தலைவர் திரு.ஞானதேசிகன் அவர்கள். Teachers day என்பதை ‘குரு உத்ஸவ்’ என்று மாற்றியது தமிழ் விரோதம் என்கிறார். I am the last English man to rule India, என்று சொன்ன ஜவகர்லால் நேருவைப் பின்பற்றும் கட்சியினருக்கு ’குரு’ என்ற சொல் கெட்ட வார்த்தை தானே!
nehru edwina
அரசியலுக்காகவும், பிழைப்பிற்காகவும் மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இந்தக் கூட்டங்கள், ஆங்கிலத்திலுள்ள teachers day ஐ ஏற்றுக் கொள்வார்களாம்!, ஆங்கில ஆண்டுப்பிறப்பான ஜனவரியைப் போற்றிக் கொண்டாடுவார்களாம்!, அரேபிய ரம்ஜானைக் கொண்டாடுவார்களாம் !. அரபும், ஆங்கிலமும் மதுரையிலும், குமரிக் கண்டத்திலும், கோபாலபுரத்திலும் தோன்றியது! சங்க இலக்கியங்களும், ஐம்பெருங் காப்பியங்களும் கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தது! என்று இந்தத் தமிழ் கோமாளிகள் அறிவித்து, அரபியையும், ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

0 comments:

Post a Comment