Monday 15 September 2014


பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பருவம் தப்பிப் பெய்தது. வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றி யது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துபோய் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தஆண்டு குறிப்பிட்ட பருவங்களில் மழைபெய்தாலாவது இழப்பை ஈடுகட்டும் விதமாக வேளாண் சாகுபடியைத் தொடரலாம் என விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்த ஆண்டு ஆடிப்பட்டத்திற்கு பெய்ய வேண்டிய மழையும் பொய்த்து, குறைவாக ஆவணியில்தான் பெய்துள்ளது. புரட்டாசி பட்டத்திற்கு அதுவும் போதாது. குறிப்பாக சிறுவாச்சூர் உள்ளிட்ட பல கிராமங்களில் போதுமான மழை பெய்யாமல் விவசாயிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மழைவேண்டி வருண பகவானை வேண்டியும் 3 ஆண்டுகளாக மழை பெய்யாத காரணத்தால் பொதுமக்கள் கொடும்பாவி ஒன்றினை தெருத்தெருவாக இழுத்துச்சென்று துன்புறுத்தினாலாவது, அந்தக் கொடும்பாவி வருணபகவானிடம் கெஞ்சிக்கேட்டு மழையை பெற்றுத்தந்துவிடும் என முடிவு செய்தனர். இதன்படி நேற்று அவ்வூர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து 10அடி நீளத்திற்கு கொடும்பாவி உருவத்தைத் தயாரித்தனர்.
கருப்புத் துணியை கொடும்பாவிக்கு அணிவித்து கயிறுகட்டி, கொடும்பாவியின் கால்முட்டிகள் தேயத்தேய தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். வழியெங்கும் பெண் களும், ஆண்களும் மார்பில் அடித்துக்கொண்டு அழுது ஒப்பாரி வைத்தனர். புகழ் பெற்ற மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் செல்லும் வீதிகளில் 3 முறை இழுத்துச்சென்ற கொடும்பாவியை, மேளதாளத்துடன் ஊருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையில் பாலத்திற்குத் தெற்கே ஓடையில் போட்டு எரித்தனர். அங்கேயும் ஒப்பாரி வைத்தனர்.
சித்ரவதை செய்வதுபோல் நடத்தப்பட்ட இச்சடங்கு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, வருணபகவான் எங்கள் கிராமத்தை 3 ஆண்டுகளாக வஞ்சித்துவிட்டார். நாங்கள் கேட்டு பயனற்றுப் போனதால், கொடும்பாவி உருவத்தை தெருத்தெருவாக கால்முட்டிகள் தேய இழுத்துச்சென்றால், துன்பம் தாங்க முடியாமல் சிறுவாச்சூருக்கு மழையை கொடுத்துவிடுமாறு வருண பகவானிடம் இந்தக் கொடும் பாவி கேட்டு, எப்படியாவது மழையை பெற்றுத்தரும் என நம்புவதாகத் தெரிவித்தனர். இதில் பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என 100க்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர்.
இச்சம்பவம் நடந்த அதேநேரத்தில் அதிசயமாக நேற்று பெரம்பலூர் மற்றும் சிறுவாச்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு நல்லமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்ய கொடும்பாவி வருண பகவானி டம் கெஞ்சிக்கேட்கும் என சிறுவாச்சூர் மக்களின் நம்பிக்கையாய் உள்ளது.


செய்தி மற்றும் பட உதவி- வசந்த ஜீவா.

0 comments:

Post a Comment