Monday 1 December 2014


சென்னை: ரேஷன் கார்டுகளில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று முதல் தொடங்கும் என அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அவர் அறிவித்தபடி உள்தாள் ஒட்டும் பணி தொடங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை மக்கள் பயன்படுத்தி வருவதால், அவை கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளன. மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆதார் கார்டு அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 75 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆதார் கார்டு எடுக்கும் பணி முடிந்துள்ளதால் புதிய மின்னணு ரேஷன் கார்டு 2015ம் ஆண்டும் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கடந்த 24ம் தேதி பேசும் போது, “தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி 5 கோடியே 87 ஆயிரத்து 395 நபர்களுக்கு உடற்கூறு பதிவுகள் (பயோ மெட்ரிக்) கணினியில் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 4 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 490 பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை 2015ம் ஆண்டுக்கு புதுப்பிக்கும் வகையில் உள்தாள்களை அச்சிட்டு, குடும்ப அட்டையில் இணைத்து, குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலத்தை 1.1.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளுக்கு டிசம்பர் மாதம் அத்தியாவசிய பொருட்கள் பெற வரும் போது, அவர்களுடைய குடும்ப அட்டையில் 2015ம் ஆண்டுக்கான உள்தாளை இணைத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த பொருளும் வேண்டாம் என்ற (என்கார்டு) குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்‘ என்று கூறினார். அமைச்சர் காமராஜ் அறிவித்தபடி, இன்று (டிசம்பர் 1ம் தேதி) முதல் ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் உள்தாள் ஒட்ட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பழைய ரேஷன் கார்டுகளில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் அச்சிடப்பட்டு, நுகர்பொருள் வாணிப கழக துணை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2015ம் ஆண்டுக்கான பதிவேடுகள், அதாவது பயனாளிகள் பெயர், விலாசம் அடங்கிய பதிவேடுகள் இன்னும் தயாராகவில்லை. இந்த பணிகள் முடிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதனால் உள்தாள் மற்றும் 2015ம் ஆண்டுக்கான பதிவேடுகள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்க 10 நாட்கள் வரை ஆகலாம். அதனால், டிசம்பர் 10ம் தேதிக்கு மேல்தான் அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கும்” என்றார்.

-தினகரன்.

0 comments:

Post a Comment