Thursday 27 March 2014

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார்.  பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று  பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி,  மேற்படி பொதுக்கூட்டத்தில்  “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது  போல்,  பாஜகவையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்”  என்று கொக்கரித்துள்ளார்.  யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற் கேள்விக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதில் கொடுப்பார்கள்.
1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து, இன்று வரை நாட்டிற்கு துரோகம் இழைத்த கட்சி எது என்று பார்த்தால் அது காங்கிரஸ் கட்சி மட்டுமே என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க இயலும்.  நாடு பிளவுபடுவதற்குத் துணை போன காங்கிரஸ் கட்சியினர், இன்று தேசியவாதிகளான பாரதிய ஜனதா கட்சியினரை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகக்  கொக்கரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு,  “யோக்கியன் வருகிறான் செம்பை எடுத்து  உள்ளே வை ” என்பார்கள். நாட்டை விட்டு வெளியேற வேண்டிய இத்தாலியர்கள், இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்பது ஆங்கில ஏகாதிபத்தியத்தை நினைவுப்படுத்துகிறது. ராகுல் காந்தியின் பேச்சு, ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை துரத்துவது போல உள்ளது, 

அண்டானியோ மைனோ என்ற சோனியாவின் குடியுரிமைச்சான்றிதழ்
ராகுல் காந்தியின் தாயார் திருமதி சோனியா காந்தி, இந்த நாட்டின் குடியுரிமையை விரும்பிப் பெற்றார் என்று எவராவது சவால் விட்டுக் கூறத் தயாரா?   1968-ம் வருடம் பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ராஜீவ் காந்தி சோனியாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 1983 வரை சோனியா காந்தி இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பக்கவில்லை.  அவர் தொடர்ந்து இத்தாலியப் பிரஜையாகவே வாழ்ந்து வந்தார்.
பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், குறிப்பாக காங்கிரஸ் கட்சியினருக்கே தெரியாத தகவல்,  மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில், பத்ரி நாராயண் சுக்லா என்பவர்  தாக்கல் செய்த மனுவே, சோனியா இந்தியக் குடியுரிமை பெற முக்கியமான காரணமாக அமைந்தது என்பதாகும்.  பிரதம மந்திரி வீட்டில் நாட்டினுடைய பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்கள் போன்ற முக்கியமான தஸ்தாவேஜுகளை சாதாரணமாக வைத்திருப்பதாலும், அவையெல்லாம் வெளிநாட்டவரான சோனியாவின் பார்வைக்கு வரக்கூடிய ஆபத்து இருப்பதாலும், சோனியா அந்த வீட்டில் இருக்கக் கூடாது என மனு தாக்கல் செய்த காரணத்தினால் தான்,  கட்டாயத்தின் அடிப்படையில் அன்டோனியா மைனோ (அவர் தான் சோனியா) இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பத்தார். இதை வெளிப்படையாகக் கூற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி முன்வருவாரா?
திருமதி அன்டோனியா சோனியாவாக மாறிய பின்னரும் கூட,  இத்தாலியக் குடியுரிமையை ரத்து செய்யவில்லை.  இதன் காரணமாக ராஜீவ் காந்திக்கும், திருமதி அன்டோனியாவிற்கு பிறந்த பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் சட்டப்படி இத்தாலிய பிரஜையாகவே (அம்மா வழியில்- இத்தாலிய குடியுரிமை சட்டப்படி) மாறிவிடுகிறார்கள். அவர்களுக்கு இன்றும் இத்தாலிய குடியுரிமை உண்டு.
பாரதிய ஜனதா கட்சியை நாட்டை விட்டே வெளியேற்றுவோம் என்று கொக்கரிக்கும் திருவாளர் ராகுல் காந்தி தனது இத்தாலிய குடியுரிமையை ரத்து செய்து விட்டாரா என்பதை முதலில் மக்கள் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும்.
இந்தியத் திருநாட்டின் சட்டம், இரட்டைப் பிரஜா உரிமையை அனுமதிக்கவில்லை;  ஆனால் பிறப்புரிமை காரணமாக இன்னொரு நாட்டு (இத்தாலி) பிரஜையாக அந்த நாட்டுச் சட்டம் கருதுவதைத் தடுக்காது.   1992-ல் இத்தாலிய குடியுரிமைச் சட்டம் மாற்றப்பட்டு, ஓர் இத்தாலிய பிரஜை வேறு நாட்டுப் பிரஜையாகவும் இருக்க அனுமதி அளிக்கும் விதமாக திருத்தம் கொண்டுவந்து, அது சட்டமாக்கப்பட்டுள்ளது. (யாருக்காக? இது யாருக்காக?)   இதன் அடிப்படையில் ராகுல் காந்தி இத்தாலிய பிரஜையாக உள்ளார். எனவே அந்நிய நாட்டு குடியுரிமையை தன்னிடம் வைத்திருக்கும் ராகுல் காந்தி தேசியவாதிகளான பா.ஜ.க.வை நாட்டை விட்டே வெளியேற்றுவோம் என்பது முரண்நகை அல்லவா? இதைத் தான்  ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பார்கள்!
நாடு விடுதலை பெற ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த வார்த்தை  ‘வந்தேமாதரம்’ என்ற இனிய சொல்.  2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7- ம் தேதி நாடு முழுவதும்  ‘வந்தேமாதரம்’  பாடப்பட்டது.  இது காங்கிரஸ் தலைமையில் நடக்கும் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்திரவு. ஆனால் தில்லியில் நடந்த  நிகழ்ச்சியில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.  ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது இதுவரைக்கும் எவருக்கும் தெரியாது.  நாடு முழுவதும் கோடிக் கணக்கானவர்கள் தங்களது ஜாதி, மதம், பிரதேசம், மொழி போன்ற எல்லா பிரிவினைகளையும் மறந்து இப்பாடலைப் பாடினார்கள்.  ஆனால் இத்தாலிய மணிமேகலை மட்டும் பாடவில்லை.
இந்த நாட்டின் தேசிய கீதமான வந்தேமாதரத்தைப் பாட மறுத்த சோனியாவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா, அல்லது தேசியவாதிகளான சங்க பரிவார் இயக்கங்கங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா? வரும் நாடாளுமன்றத் தேர்தல் நல்ல பதில் அளிக்கும்.
உண்மையில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாகும். கடந்த காலத்தில் நடந்த இரண்டு சம்பவங்களில் சோனியா காந்தியின் செயல்பாடுகள் மேற்படியான கேள்வி எழுப்பக் காரணமாக உள்ளன.
முதலாவது, 1971-ம் வருடம் இந்தியா பாகிஸ்தான் இடையே யுத்தம் மூண்டபோது நிகழ்ந்தது.  அப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகத்தில் பணியாற்றும் எந்த விமான ஓட்டியும் விடுப்பில் செல்ல அனுமதி கிடையாது என்று விதி இருந்தது.  இது நடைமுறையில் இருந்த போர்க்கால நிலைப்பாடு.  அப்போது 1971-ல் திருவாளர் ராஜீவ் காந்தி இந்தியன் ஏர்லைன்ஸில் விமான ஓட்டியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  அரசின் விதிமுறைக்கு மாறாக சோனியா காந்தியின் நிர்பந்தம் காரணமாக விடுப்பு எடுத்துக்கொண்டு, தனது மனைவி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைவரும் இத்தாலிக்குச் சென்றதும், இந்திய- பாகிஸ்தான் யுத்தம் முடியும் வரை அவர்கள் இந்தியா திரும்பாததும் ஏன்?  இம் மாதிரி நடக்க வேண்டிய அவசியம் என்ன?  இதுதான் நாட்டுப் பற்றா?
இரண்டாவது, 1977-ல் இந்திரா காந்தி தேர்தலில் தோல்வியடைந்து ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தவுடன்,   சோனியா காந்தி தனது இரண்டு குழந்தைகளுடன் இத்தாலித் தூதரகத்தில் பாதுகாப்புக் கோரி தஞ்சம் புகுந்த சம்பவம். பின்னர் இந்திரா காநதி, சஞ்சய் காந்தி மற்ற உறவினர்கள் அனைவரும் கேட்டுக்கொண்ட பின்னரே தூதரகத்தை விட்டு அவர் வீடு திரும்பியபோது,  சோனியா காந்தியின் ‘நாட்டுப் பற்று’ வெளிச்சத்திற்கு வந்த்து.
ஆகவே இரண்டு சம்பவங்கள் மூலமாக சோனியா காந்தியின் நாட்டுப் பற்று உலகறிந்த விஷயமாகும்.  இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டில் உலா வந்தபோது, 1962-ல் இந்திய- சீனா யுத்தம் நடந்த போது, யுத்தம் நடந்த எல்லைப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த பாரதிய ஜன சங்கத்தினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார்கள். இந்த தேசபக்தர்கள்  நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசுவது வேடிக்கையானது.
ஆகவே இந்தியா மீது சீனாவோ அல்லது பாகிஸ்தானோ படையெடுத்தால்,  சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியையும், மகள் பிரியங்காவையும் இத்தாலிக்கு அழைத்துச் செல்ல மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க இயலுமா?  இப்படிப்பட்டவர்கள் இந்தியத் திருநாட்டில் வாழலாம், இந்த தேசத்திற்காகவே உயிரை தியாகம் செய்தவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் எனக் கொக்கரிப்பதும், அதை ஊடகங்கள் எந்தக் கேள்வியும் இன்றி பிரசுரிப்பதும் எவ்வகையில் நியாயம்? 

நன்றி- தமிழ் இந்து


0 comments:

Post a Comment