Tuesday 30 September 2014

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீனாவில் இருந்து கண்டெய்னர் கண்டெய்னராக பட்டாசுகள் இந்தியாவிற்கு வருகின்றன. அவை விலை குறைவாக உள்ளன. அவற்றை பதுக்கி வைத்துக்கொண்டு பட்டாசுகள் கேட்கும் போது அவை விற்கப்படுகின்றன அதனால் சிவகாசி பட்டாசுகள் விற்பனை பாதிக்கப்படுகின்றன என்று புகார் தெரிவித்தனர்.

உடனடியாக மத்திய அரசு, இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது சீனா உள்ளிட்ட எந்த வெளிநாடுகளில் இருந்தும் பட்டாசுகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.

அந்த பட்டாசுகளால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். அந்த பட்டாசுகளால் பாதுகாப்பு இல்லை. எனவே சீனபட்டாசுகளை யார்வைத்து விற்றாலும் உடனே போலீஸ்நிலையத்தில் புகார் செய்யுங்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. காரணம் இது கோர்ட்டு தீர்ப்பு. பொதுமக்களை பாதிக்காத வகையில் சம்பவங்கள் நடக்கவேண்டும். பொது மக்களின் முன்னேற்றத்திற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. வன்முறை எங்கும் இருக்கவேண்டாம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

முன்னதாக நிர்மலா சீதாராமன் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற தொழிலாளர் வைப்பு நிதி மண்டல ஆணையம் சார்பில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திரமோடி கொண்டுவந்துள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 பென்சன் திட்டத்தையொட்டி சென்னை மண்டலத்தில் 10 ஓய்வூதியதாரர்களை நிர்மலா சீதாராமன் பொன்னாடை போர்த்தி கவுரவித்து பேசியதாவது:-

பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றதும் ஏழைமக்களை பற்றியே சிந்தித்து வருகிறார். அதனால் தான் சமூக பாதுகாப்பு திட்டத்தை கொண்டுவந்தார். அதன்படி விதவைகள் உள்ளிட்ட ஓய்வூதியம் பெறுபவர்களில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக யாரும் வாங்கக்கூடாது என்று நினைத்து குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார்.

இதனால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஏழைகள் பயன் அடைகிறார்கள். பிரதமர் தன்னை மக்களுக்கு தொண்டு செய்யும் சேவகனாகத்தான் நினைக்கிறார். மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய இயலுமோ அந்த அளவுக்கு செய்யவேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விழாவில் தொழிலாளர் வைப்பு நிதி மண்டல ஆணையர்கள் பிரசாத், மதியழகன், பங்கஜ் ராமன் மற்றும் வருங்கால வைப்பு நிதி பிரதிநிதி இமயம் கக்கன், ரேவதி, சுரேஷ் உள்பட பலர் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

-மாலைமலர்.

0 comments:

Post a Comment