Wednesday 1 October 2014

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச் சண்டையில் நடுவர் தீர்ப்பினால் அநீதி இழைக்கப்பட்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி பதக்கமளிப்பு நிகழ்ச்சியில் கதறி அழும் காட்சி. | படம்: ஏ.பி.
மகளிர் 60 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை அரையிறுதியில் தென்கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிற்கு ஆதரவாக செயல்பட்டார் நடுவர். இதனால் அநீதி இழைக்கப்பட்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.

மேலும் பதக்கம் அளிக்கும் மேடையில் நின்று கொண்டு தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாங்க முடியாமல் கதறி அழுதார்.

அரையிறுதியில் ஜினா பார்க் என்ற கொரிய வீராங்கனையை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி அபாரமாக விளையாடினார். ஜினா பார்க் வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலையில் சரிதா தேவி வெற்றிப் பதக்கத்தை நிச்சயம் எதிர்பார்த்தார்.

ஆனால் நடுவர் சற்றும் எதிர்பாராத வகையில் தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க் வென்றதாக அறிவிக்க அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனையடுத்து சரிதா தேவியின் கணவர் தோய்பா சிங் கடும் கோபமடைந்து நடுவரை நோக்கி திட்டியபடியே குத்துச் சண்டை வளையத்திற்குள் நுழைய முயன்றார்.

சரிதா தேவி பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அழுதபடியே கூறும்போது, “எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது. ஜினா பார்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது என முன் கூட்டியே முடிவெடுத்து விட்டார்கள். இப்படித்தான் தீர்ப்பு என்றால் எங்களை ஏன் விளையாட விட்டிருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து இந்திய அணி நிர்வாகம் சரிதா தேவி அநீதி முடிவை எதிர்த்து முறையீடு செய்தனர். ஆனால் அங்கும் நீதி கிடைக்கவில்லை. நடுவர் தீர்ப்பை மாற்ற முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.

இதனையடுத்து இன்று பதக்க நிகழ்ச்சிக்கு கண்ணீருடன் வந்த சரிதா தேவி பதக்க மேடையில் கதறி அழுதார். வெண்கலப் பதக்கத்தை அணிய அவர் மறுத்து விட்டார். கொரிய வீராங்கனையை அழுதபடியே தழுவிய சரிதா தேவி பதக்கத்தை அவரிடம் கொடுத்தார்.

முன்னாள் ஆசிய மற்றும் உலக சாம்பியனான சரிதா தேவி மனமுடைந்த நிலையில் பதக்கமளிப்பு நிகழ்ச்சியிலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.

சரிதா தேவியின் குத்துச் சண்டை ஆட்டத்திறனுக்கு முன்பாக அன்று ஜினா பார்க் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரசிகர்கள் சரிதா தேவிக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கையில் நடுவர் சற்றும் எதிர்பாராத விதமாக ஜினா பார்க் வென்றதாக அராஜக அறிவிப்பை வெளியிட அனைவரும் திகைத்துப் போயினர்.

அனைத்திற்கும் மேலாக மிகவும் வெளிப்படையாக இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு அநீதி இழைக்கப்பட்டும் மேல் முறையீட்டிலும் நீதி கிடைக்கவில்லை என்பது நடப்பு ஆசிய போட்டிகள் நடத்தப்படும் நேர்மை மீது கடும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதனிடையே, சரிதா தேவிக்கு ஆதரவாக இணையத்தில் ஆதரவு குரல் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது. ட்விட்டரில் #saritadevi என்ற ஹேஷ்டேக்கில் நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான பதிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. 

-தி இந்து.

0 comments:

Post a Comment