Monday 23 December 2013

சங்க சித்திரம் ஒன்று உள்ளது. பாரி தனது தேரை கானகத்தில் ஓட்டிச் செல்கிறான். ஒரு இடத்தில் அந்த தேரின் மீது ஒரு முல்லைக் கொடி படர்ந்துவிடுகிறது. அதை பார்த்த பாரி அந்த தேரை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறான். இந்த ஆழ்ந்த சித்திரம் எதை சொல்கிறது? எதன் உருவகம் அது?  நுண்ணுணர்வு கொண்ட வாசிப்பாளனுக்கு எழும் கேள்வி இதுதான். அந்த தேர் ஒரு அரசின் திட்டங்களை உருவகிக்கிறது. அதன் மூலமாகவே ஒரு அரசு செல்கிறது. அதன் மீது படரும் கொடி என்பது என்ன? இந்த சிந்தனையின் தூல உருவம் நமக்கு சுதந்திரத்துக்கு பின் உருவான இந்தியாவிலிருந்தே கிடைக்கிறது.
சுதந்திர இந்தியாவுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. எந்த ஒரு திட்டத்தையும் ஜனநாயகத்தன்மையுடன் எல்லாவிதமான விதிகளுக்கும் அப்பால் அதில் தொடர்புடைய அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான் அந்த மரபு. இந்த நவீன மரபு சிறிது சிறிதாக திரண்டு வந்து இன்று நாம் அனைவராலும் ஊழல் என அழைக்கப்படும் ஒரு இயக்கமாக மாறியிருக்கிறது. உண்மையில் இது அதிகார பகிர்ந்தளிப்புதான். எந்த ஒரு அரசு திட்டமும் செயல்படுத்தப்படும் போது எந்த அளவு ஊழலைக் கொண்டதாக அறியப்படுகிறதோ அந்த அளவு ஜனநாயகத்தன்மையை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல். இந்த உரையாடலை சமூகமும் அரசு இயந்திரமும் ஊடகமும் நடத்திக் கொண்டே இருக்கிறது. அந்த உரையாடலின் திரண்ட பருப்பொருள் வடிவம்தான் ஊழல். ஏன் இன்றைக்கு சுவிஸ் வங்கி கணக்குகள் என்றெல்லாம் பேசப்படுகிறதே. இதன் அடிப்படை பார்வை ஒரு உலகளாவிய பார்வை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் சங்க புலவனின் பார்வையில் தொடங்கிய அந்த நம் பண்டை தொல்மரபை மீட்டெடுத்தவர் ஜவஹர்லால் நேரு என்றே கூறப்படுகிறது. சீன இந்திய போரின் போது உளவுத்துறையால் தேச பாதுகாப்பு எனும் குறுகிய எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட சில ரெய்ட்களின் போது நேருவின் காப்புரிமை கணக்குகள் சோவியத் வங்கிகளில் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இதை கேட்டு நம் நாட்டின் இறுகிய தேசிய வாத குறுமனக்குழுக்கள் அதிர்ந்திருக்கலாம். ஆனால் இது உண்மையென்றால் நேரு எத்தனை தொலை நோக்குடன் சர்வதேச பார்வையுடன் செயல்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அதன் நீட்சியே இன்று சுவிட்சர்லாந்து வரை இந்திய செல்வம் பரந்து விரிந்து மானுடத்தை தழுவியிருக்கிறது. இந்திய மக்களின் உழைப்பின் பயனால் லாபம் அடைவது சுவிஸ் வங்கிகள் என்றால் அதிலுள்ள கடைநிலை ஊழியனும் லாபம் அடைவானே. ஆக சுவிஸ் வங்கியை சுத்தம் செய்யும் ஒரு கடைநிலை ஊழியன் உறிஞ்சும் தேநீரில் இந்திய உழவனின் பணமும் உள்ளது என்பது எத்தனை விரிந்த மானுட பெருங்கருணையின் சிறு துளி. எனவேதான் காந்தி கூட லண்டன் சென்ற போது அங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் தங்கினார்.
கேரளாவில் இது குறித்த ஒரு ஆழமான காந்திய-மார்க்ஸிய புரிதல்பாடு உள்ளது. ஒரு சிறிய சூரிய மின் சக்தி திட்டத்திலும் கூட ஊழல் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. இதுதான நவீன ஜனநாயகத்தன்மை. இந்த ஊழலின் விளைவாக ஊடகங்கள் அந்த திட்டத்தை குறித்து பரபரப்பாக பேசுகின்றன.  பெண்கள், இளைஞர்கள். அரசியல்வாதிகள் என பலதரப்பு மக்கள் இந்த ஊழலில் பங்கு பெற்றுள்ளனர். ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தன்மையை அது காட்டுகிறது. சிறிது யோசித்து பாருங்கள். இந்த ஊழலின் அளவு பத்து கோடி ரூபாய் என்கிறார்கள். சின்ன திட்டத்திற்கு ஏற்ற கச்சிதமான ஊழல். காந்திய பொருளாதார அறிஞர் ஷீமேச்சர்’ சிறியதே அழகானது’ என கூறினார்.


ஆனால் குஜராத்தில் நடப்பதை பாருங்கள். 16 லட்சம் அலகுகள் கொண்ட சுத்தமான மின்சக்தியுடன் 90 லட்சம் லிட்டர்கள் நீர் ஆவியாகி செல்வதையும் இது தடுக்கும். நர்மதா நதியின் நீர்வழிகளின் ஒட்டுமொத்த நீளம் 19000 கிலோ மீட்டர்கள். இதில் பத்து சதவிகிதம் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் 2200 மெகாவாட் சக்தி உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இதில் எந்த ஊழலும் இல்லை. அதாவது அதிகார பகிர்ந்தளிப்பு இல்லை. அதை அளிக்க மோடியால் முடியவில்லை . என்பதுதான் உண்மை.  இதைத்தான் சர்வாதிகாரம் என்று சொல்கிறோம். சிலர் சொல்கிறார்கள் மோடியை எதிர்த்து குஜராத்தின் தலைநகரிலேயே பிரசுரங்களை மக்களால் எளிதாக விநியோகிக்க முடிகிறதே என்று. இது ஜனநாயகத்தை குறித்த மிகவும் மேலோட்டமான அபத்தமான வாசிப்பு. இணையம் முழுக்க நிரம்பியுள்ள மோடி ஆதரவாளர்களால் இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத்தான் நிகழ்த்த முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் அதிகாரம் செடி போல படர்ந்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்கையில் அந்த செடிகளில் கனியாக தோன்றுவது ஊழல். அது இல்லாமல் மக்கள் நல திட்டங்களை ஒரு அரசு செயல்படுத்துவதென்பதே ஒருவித பாசிச மனநிலைதான்.  


யோசித்து பாருங்கள். கேரளாவின் இந்த சோலார் ஊழலால் இனி எத்தனையோ திரைப்படங்கள் வரக்கூடும். அழகிய பெண். விலை போகும் அரசியல்வாதி, பின்னால் இருக்கும் சோகம், அந்த அரசியல்வாதியின் ஆதி இச்சையான அந்த பெண்ணின் பின்னால் இருக்கும் சோகம்,தனிமை, இதனை பயன்படுத்தும் ஒரு வியாபார உள்ளம்… எத்தனை அருமையான நாவல்கள், எத்தனை எத்தனை திரைப்படங்கள்… இவையெல்லாம் பெரும் அறக் கேள்விகளை  வாசகன  மனதுக்குள்ளும் பார்வையாளரின் அந்தரங்கங்களிலும் எழுப்பிக் கொண்டே இருக்கும். இந்த கேள்விகளின் மூலமாகத்தான் நாம் அறத்தை நோக்கி ஒரு சமுதாயமாக நகர முடியும்.  ஆனால் எல்லா செயல்திட்டங்களும் மக்களுக்காகத் தீட்டப்பட்டு ஊழலில்லாமல் குஜராத் போல அரசு நிர்வாகம் நடந்ததென்றால் அந்த சமுதாயத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? அந்த சமுதாயத்தில் வாழும் கலைஞன் என்ன அறச்சீற்றத்தை அடைய முடியும்? மீண்டும் கூந்தலில் உள்ள மணம் இயற்கையானதா எனும் கேள்விக்கா நாம் திரும்ப செல்வது?
எனவேதான் சொல்ல வேண்டி உள்ளது. ஊழலே இல்லாமல் செயல்படுத்தப்படும்  திட்டங்கள் மூலம் இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் நற்பயன்கள் மட்டுமே கிடைக்கும் ஒரு நிர்வாகத்தை மோடி அளித்துவிடுவார். ஊடகங்களுக்கு யார் வாழ்வளிப்பார்கள்? ஊடக இந்தியா, ஊழல்களால் கொழித்த உயர்குடி இந்தியா எதிர்நோக்கும்  மிகப் பெரிய அபாயம் எது என்றால் நிச்சயமாக அது மோடிதான். இதில் இரண்டுவித கருத்துக்கு இடமே இல்லை.

நன்றி- http://www.tamilhindu.com

0 comments:

Post a Comment