Sunday 26 January 2014


பெரம்பலூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இரூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வழிவகை செய்வதற்காக கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அரசின் திட்டங்கள், பயன் குறித்து தெரிந்துகொள்ள அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இரூர் ஊராட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். ஊராட்சிப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் சுகாதாரத்தைக் காக்கும் வகையில் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அனைத்து மக்களும் தங்களது வீடுகளில் கழிப்பறை கட்ட வேண்டும். தேசிய நுண்ணீர் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ், சிறு  குறு விவசாயிகளுக்கு 100 சதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதமும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஹெக்டேர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது. தோட்டக்கலை அல்லது வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் மூலம், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கிராம கல்விக் குழுக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோயிலில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, நகர் மன்ற துணைத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ந. கிருஷ்ணகுமார், ரா. வெண்ணிலா, கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரன், இரூர் ஊராட்சித் தலைவர் ஸ்டாலின், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். ராஜேந்திரன், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் தி. சின்னதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment