Wednesday 9 July 2014

JeyaFree1
தமிழக இல்லத்தரசிகளைக் கவரும் விலையில்லா திட்டங்கள்…

ஒரு மக்கள்நல அரசு என்பது எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவே இருக்க வேண்டும். சமுதாயத்தில் வலிவுள்ளோர் பெறும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் எளியோர் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இல்லாவிடில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலைக்கு எளியோர் தள்ளப்பட்டு, அவர்களின் முன்னேற்றம் தடைப்படும். எனவே தான் மக்களாட்சி முறையில் எளியோரின் நலமே பிரதானம் என்ற கருத்து உருவானது. ஆனால், எளியோர் யாவர் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. வாக்குவங்கி அரசியலே மக்களாட்சி முறையைத் தீர்மானிப்பதால், எளியோரை மட்டும் கண்டறிந்து அவர்களைக் கைதூக்கிவிடுவது சிரமமான காரியமாகி விடுகிறது. இதற்கு நல்ல உதாரணம், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள்.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இலவசத் திட்டங்களும் (விலையில்லா திட்டங்கள் என்கிறது அரசு), மலிவுவிலை திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே அண்மையில் நடைபெற்ற லோக்சபை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்ற கருத்தும் உண்டு.
இலவச கலாசாரம் துவங்கிய பின்னணி:

Free tv
திமுகவின் இலவச தொலைக்காட்சிப் பெட்டி திட்டம் துவக்கம்

தமிழகத்தில் இலவச கலாசாரத்தைத் துவக்கிவைத்தவர் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி தான். அவருக்கு முன்னரே பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சீருடை, புத்தகங்கள், மிதிவண்டி உள்ளிட்டவை வழங்குவதை எம்.ஜி.ராமசந்திரன், ஜெயலலிதா ஆகியோர் முதலவர்களாக இருந்தபோதே துவக்கி இருந்தாலும், சாமானிய மக்களுக்கு இலவசப் பொருள்கள் வழஙகப்பட்டது கருணாநிதி ஆட்சியில் தான். அவரது சமத்துவபுரம் திட்டம் கூட, திமுகவுக்கு சாதகமான வாக்காளர் படையை உருவாக்கும் நோக்கம் கொண்டதே.
கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் (2006- 2011) வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் மாநிலம் முழுவதும் 50 சதவீத மக்களுக்கு மேல் சென்று சேர்ந்தன. அதில் வேடிக்கை என்னவென்றால், தொலைக்காட்சிப் பெட்டி வாங்க வசதி இல்லாதவர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம், தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கும் மக்களின் அதிருப்திக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற விழிப்புணர்வால், அனைவருக்குமான திட்டமானது. அதன் காரணமாக, வசதி உள்ளவர்களும் கூட- வீட்டில் நவீன தொலைக்காட்சி வைத்திருந்தவர்களும் கூட- தமிழக அரசின் இலவச வண்ன தொலைக்காட்சிப் பெட்டியை வாங்க முண்டியடித்தனர். தமிழக அரசும், இருப்போர்- இல்லாதார் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவித்தது. இலவச சமையல் எரிவாயு இணைப்புடன் அடுப்பு வழங்கபட்டதும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான்.
அதன்மூலமாக, இலவச கலாசாரம் தமிழகத்தில் வேரூன்றியது. தவிர, எளியோருக்கு உதவ வேண்டும் என்ற திட்டத்தின் நோக்கமும் புதையுண்டது. அதாவது, தேர்தலில் மக்களின் வாக்குகளை வெல்வதற்கான உபாயமாக, முன்கூட்டியே வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் கையூட்டாக தொலைக்காட்சிப் பெட்டி மாறியது.
JeyaFree 3
விலையில்லா மடிக்கணினி திட்டம்

இந்த உபாயத்தை வெல்ல, அதிமுக தலைவி ஜெ.ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதே, இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும் என்ற தேர்தல் பிரசார உறுதிமொழி. சொன்னது போலவே, தேர்தலில் வென்று முதல்வரானவுடன், இம்மூன்றையும் அளிக்கத் துவங்கினார் ஜெயல்லிதா. ஒரே வித்யாசம், கருணாநிதி காலத்தில் வழங்கப்பட்ட தொலைக்காட்சி  ‘இலவசம்’ என்று குறிப்பிடப்பட்டது. தற்போது அதிமுக ஆட்சியில் வழங்கப்படும் இலவசப் பொருள்கள்  ‘விலையில்லாப் பொருள்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
ஆனால், இப்பொருள்களுக்கு விலையில்லாமல் இல்லை. திமுக ஆட்சியில் விநியோகிக்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 1000-க்கு வெளிச்சந்தையில் கிடைத்த்து போலவே, அதிமுக ஆட்சியில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் சுமார் ரூ. 5,000-க்கு விற்பனைக்கு உடனுக்குடன் கைமாறுவதையும் காண முடிகிறது.
தற்போதைய சூழலில் மின்விசிறியோ, கிரைண்டரோ, மிக்ஸியோ இல்லாத வீடுகள் குறைவு என்பதால், வீட்டில் ஒன்றுக்கு மேல் இவற்றை வைத்திருப்பதை விட விற்பதே மேல் என்ற எண்ணத்துடன் இவை விற்கப்படுகின்றன. தவிர, இத்திட்டத்திலும், எளியோர் அடையாளம் காணப்படாமல், இருப்பவர்- இல்லாதவர் உள்ளிட்ட  அனைவருக்கும் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
அரசு உண்மையில் எளியோர் மீது அக்கறை கொண்டிருந்தால் வருமான அடிப்படையில் இவற்றை ஏழைகளுக்கு மட்டும் வழங்க முடியும். ஆனால், அதனால் பிறரது அதிருப்தியைச் சந்திக்கும் திராணியின்றி, அனைவருக்கும் அவற்றை அள்ளி வழங்குகிறது அரசு. மதுரையில் இரவில் பலரது வாசல் கதவைத் தட்டிய பொற்கைப் பாண்டியன் கதையைப் போலத்தான் இது இருக்கிறது.
ஒரு மக்கள்நல அரசு, வாக்குகளின் அடிப்படையில் சிந்திக்காமல், ஏழை மக்களை மட்டும் கண்டறிந்து அவர்களை தரம் உயர்த்துவது தான் சரியாக இருக்கும். ஆனால், தேர்தல் அரசியலை மனதில் கொள்ளும் எவரும், ஏழைகளை மட்டும் கவனத்தில் கொள்ளும் துணிச்சல் இல்லாதவர்களாகி விடுகின்றனர். இதற்கு கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே விதிவிலக்கல்ல. எது எப்படியோ, தமிழகத்தில் இலவச அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. இதன் வெற்றியைக் கண்டு, பிற மாநிலங்களும் இத்திட்டங்களை சுவீகரிக்க முயற்சிக்கின்றன.
விலையில்லாத் திட்டங்களின் பெருக்கம்:

JeyaFree 4
பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி திட்டம் 

தமிழகத்தில் தற்போது விலையில்லா நலத்திட்ட உதவிகள் பல வகைகளில் வழங்கப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. தவிர கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கணினி வழங்கப்படுகிறது.
2001-12 நிதியாண்டு முதல் 2013-14 நிதியாண்டு வரையிலான மூன்றாண்டுகளில் சுமார் 17 லட்சம் லேப்டாப் கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் திட்ட மதிப்பு ரூ. 2,500 கோடி. நிகழும் 2014-15 நிதியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து அதிமுக அரசின் பிரதானத் திட்டமான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி திட்டம் மாநிலம் முழுவதும் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கிராமப்புறங்களிலும் அடுத்து நகர்ப்புறங்களிலும் இத்திட்டம் சென்று சேர்ந்து வருகிறது.  இதுவரை 1.05 கோடி வீடுகளை இத்திட்டம் சென்று சேர்ந்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. அதிமுக ஆட்சியின் மீதமுள்ள இரு ஆண்டு காலத்திற்குள் மேலும் 35 லட்சம் வீடுகளை இத்திட்டம் சென்று சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டதிலும், உதகை, கொடைக்கானல் போன்ற குளிர்ப்பிரதேச மக்களின் வேண்டுகோளை ஏற்று, அப்பகுதிகளில் மின்விசிறிக்குப் பதிலாக விலையில்லா மின்சார வெப்பமூட்டி (ஹீட்டர்) வழங்கப்படுகிறது.
இது கலைஞரின் பொங்கல் பரிசு!
இது கலைஞரின் பொங்கல் பரிசு!

அடுத்ததாக தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிப்படி, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமலாகியுள்ளது. இதன்படி, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் (அரை பவுன்) தங்கத்துடன் நிதி உதவியாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை பல்லாயிரக் கணக்கான பெண்கள் பலனடைந்துள்ளனர். தவிர, பார்வையற்றோர் திருமணத் திட்டத்தில், ரூ. 15,000 நிதியுதவியும் அரசால் வழங்கப்படுகிறது.
அதேபோல, ரேஷன் கடைகளில் தகுதியுள்ள 1.80 கோடி குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் தலா 18 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்த அரிசியின் தரமின்மை காரணமாக இத்திட்டம் முழுமையாகப் பயனளிக்கவில்லை. எனினும், வருமானத்திற்கே வழியில்லாத ஏழை மக்கள் பசியாற இத்திட்டம் உதவி வருகிறது. இத்திட்டம் மத்திய அரசின்  ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் பிரதிபலிப்பே. இத்திட்டத்திலும், தகுதியுள்ள பயனாளிகள் மட்டும் வடிகட்டப்படுவது, அரசின் திட்டம் தேவையானோர் அனைவருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும்.
ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருள்கள் திட்டம் வித்யாசமானது. இதனை வழக்கம்போல கருணாநிதி துவக்கிவைத்தார். இதனை அடுத்த நிலைக்கு ஜெயலலிதா கொண்டுசென்றிருக்கிறார். தைப்பொங்கலிட பச்சரிசி ஒரு கிலோ, அரை கிலோ வெல்லம், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய தொகுப்புப் பையை உதயசூரியன் சின்னத்துடன் இலவசமாக வழங்கி மகிழ்ந்தார் முந்தைய முதல்வர் கருணாநிதி. அதையே, கூட நூறு ரூபாய் (நோன்புக் காசு?) செலவுக்கு ரொக்கமாகவும் வழங்கி, ஜெயலலிதா உருவப்படத்துடன் தற்போதைய  ‘அம்மா’ ஆட்சி வழங்குகிறது. இந்த நூறு ரூபாயை வாங்க மாதம் ரூ. 20 ஆயிரம் சம்பாதிப்பவரும் ரேஷன் கடையில் வரிசையில் நின்றதைக் காண முடிந்தது. எல்லாம் இலவசம் படுத்தும் பாடு! :)
இது ‘அம்மா’வின் பொங்கல் பரிசு
இது ‘அம்மா’வின் பொங்கல் பரிசு 

முதியோர் உதவித் தொகையாக ரூ. 500 வழங்கப்பட்டு வந்ததை ரூ. ஆயிரமாக உயர்த்திய ஜெயலலிதா அரசு, 36 லட்சம் முதியோருக்கு இந்த உதவித்தொகையை வழங்கி வருகிறது. இவையல்லாது ஊனமுற்றோருக்கு உதவித் திட்டம், கைம்பெண் உதவித் திட்டம் உள்ளிட்ட பல சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
முந்தைய கருணாநிதி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதன் விளம்பரப்படத்தில் முதல்வர் படம் மட்டும் தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இத்திட்டம் ஒருவகையில் ஏழை மக்களும் நவீன மருத்துவ சிகிச்சை பெற உதவினாலும், இதன் பலனை பெருநிறுவன மருத்துவமனைகள் துஷ்பிரயோகம் செய்வதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்திட்டம் அரசால் அவ்வப்போது மீள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பசுமை வீடுகள் திட்டம்:
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை  மக்களுக்கு பசுமை வீடுகளை தமிழக அரசு கட்டிக் கொடுத்து வருகிறது. சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளில், வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையலறை, தாழ்வாரம் ஆகிய வசதிகளுடன் மழைநீர் சேகரிப்பு அமைப்பும் அமைக்கப்படுகிறது. 300  சதுர அடி அளவில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.
JeyaFree 5
பசுமை வீடு திட்டம்

இதற்கு முதலில் ஒரு ரூ. 1.80  லட்சமாக இருந்த நிதி, பின்னர் ரூ. 2.10  லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த பசுமை வீடுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட நிதியுடன் கழிப்பிடம் அமைக்க ரூ. 11 ஆயிரம் வழங்கப்படுகிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் இதுவரை பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டம் திமுக ஆட்சியில் செயப்டுத்தப்பட்ட சமத்துவபுரம் திட்டத்தின் மேம்பட்ட வடிவமே. எனினும், அரசியல்ரீதியான பயனாளிகள் தேர்வு இத்திட்டத்தில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தவிர, ஏழை விவசாயிகளுக்காக விலையில்லா ஆடு, மாடு வளர்க்கும் திட்டமும் தமிழகத்தின் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 6  மாத வயதுடைய 4 ஆடுகள் (3 பெட்டை 1 ஆண்) வழங்கப்படுகின்றன. மேலும் ஆடுகளுக்கு தீவனம் வாங்கவும், இருப்பிடக் கொட்டகை அமைக்கவும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆடுகள் நோய் தாக்கி இறந்தால் இழப்பீடு பெறும் வகையில காப்பீடும் செய்யப்படுகிறது. இலவச மாடு வளர்க்கும் திட்டம், ஆடு வளர்க்கும் திட்டம் அளவிற்கு அரசால் கவனம் கொடுக்கப்படவில்லை.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டமும் அதிமுக அரசின் கவர்ச்சித் திட்டங்களில் ஒன்று. 2001-2002 இல் தாழத்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சார்ந்த மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2005இல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
திருக்கோவில் அன்னதானத் திட்டம்
திருக்கோவில் அன்னதானத் திட்டம்

இத்திட்டத்தில் ஆண்டுதோறும் பயனடையும் மாணவர்களின் எண்ணிக்கை பல லட்சமாகும். நடப்பு நிதியாண்டில், 2.86 லட்சம் மாணவர்களுக்கும், 3.57 லட்சம் மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கல், திருக்கோவில்களில்  அன்னதானத் திட்டம்,  மசூதிகளுக்கு ரமலான் நோன்பிற்கான இலவச அரிசி வழங்கும் திட்டம் ஆகியவையும் ஜெயலலிதாவின் கவர்ச்சி அரசியல் திட்டங்களில் முக்கிய இடம் வகிப்பவை.
அடுத்து, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ‘அம்மா’  திட்டங்கள் குறித்தும்,  அவற்றின் தாக்கம் குறித்தும் விரிவாகக் காணலாம். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்ற பழமொழியை தமிழக அரசு மத்திய அரசு நிதியைக் கொண்டு எவ்வாறு வெற்றிகரமாக நிரூபித்து வருகிறது என்பதையும் அடுத்த பகுதியில் காணலாம் v.kalathur seithi .

நன்றி- தமிழ் இந்து.

0 comments:

Post a Comment