Monday 7 July 2014


இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், தமிழகத்தில் தொடர்ச்சியாக கொல்லப்படுவதால், தமிழக பா.ஜ., தலைவர்கள் கவலையில் ஆழ்ந்திருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னால், அரவிந்த ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், வரிசையாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.

மர்ம நபர்களால்... :

அது தொடர்பான போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்க, கடந்த ஒரு மாதத்துக்கு முன், சென்னை அருகில் ஆவடியில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி செயலர், சுரேஷ் குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அது தொடர்பான பதற்றம் அடங்குவதற்குள், நேற்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி செயலர் ஜீவராஜ், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் குடும்பப் பிரச்னையில்தான் கொல்லப்பட்டார் என சொல்லப்பட்டாலும், அவருக்கு தீவிரவாதிகளிடம் இருந்து, தொடர் மிரட்டல்கள் இருந்து வந்தது, என்றும் நெல்லை மாவட்ட இந்து முன்னணியினர் தெரிவிக்கின்றனர். இப்படி தொடர்ச்சியாக, இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள், தமிழகத்தில் வெட்டிக் கொல்லப்பட்டு வருவது, பா.ஜ., தலைவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்களில் கூறியதாவது:

குறிவைத்து கொல்லும்...:

லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையான இடங்களில் வென்று, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பது, இந்து அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும், தீவிரவாதிகளாலும் தீவிரவாத அமைப்புகளாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.இந்து அமைப்புகளிலும், பா.ஜ.,விலும் யாரெல்லாம் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனரோ, அவர்களையெல்லாம் குறிவைத்து கொல்லும் காரியங்களில், அவர்கள் இறங்கி இருக்கின்றனர். அதோடு, இயக்க செயல்பாடுகளில், தீவிரமாக ஈடுபடும் அந்த நபர்களை கொல்வதன் மூலம், இந்தியா முழுவதும் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தவும், அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். மோடி அரசாங்கத்தை நிம்மதியாக செயல்பட விடக்கூடாது என்பதிலும், அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

பலம் பெறக்கூடாது:

தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தை அவர்கள் குறி வைத்திருக்கின்றனர். காரணம், தமிழகத்தில் இந்து அமைப்புகளும், பா.ஜ.,வும் பலம் பெற்றுவிடக் கூடாது என்றும் எண்ணுகின்றனர். இதற்காக அவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் கொலை பட்டியலில், 30க்கும் அதிகமானவர்கள் இருப்பதாக, ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதனால், பா.ஜ.,வில் இருக்கும் அத்தனை தலைவர்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். இருந்தும், திருவள்ளூர் சுரேஷ் குமார், சங்கரன்கோவில் ஜீவராஜ் ஆகியோரை பயங்கரவாதிகள் கொன்று விட்டனர். கடந்த 1ம் தேதி, வெள்ளையப்பனின் முதலாவது நினைவு தினம். அதேபோல வரும் 19ம் தேதி, ஆடிட்டர் ரமேஷ், இறந்த தினம் வருகிறது. இந்த இரண்டு தினங்களுக்குள், இரண்டு பேரை தீவிரவாதிகள் கொல்ல திட்டம் போட்டிருப்பதாக, கிடைத்த தகவல் படியே, கொலை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதனால், அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஆகிவிட்டதால், பா.ஜ., மாநிலத் தலைவர் பணியை முழுமையாக செய்ய முடியவில்லை. அதனால், தமிழக பா.ஜ.,வுக்கு உடனடியாக புதிய தலைவரை கட்சித் தலைமை நியமிக்க வேண்டும்.அதன்பின், அவர் மாநில அரசுடன் பேசி, இந்த கொலை பயங்கரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர் v.kalathur seithi.

-தினமலர்.

1 comment:

  1. சங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள்!
    http://www.dailythanthi.com/News/Districts/2014/07/06001826/After-slitting-the-throat-of-a-leading-figure-in-the.vpf

    ReplyDelete