Wednesday 9 July 2014

‘தோட்டத்தில் பாதி கிணறு என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைப படிக்கும் எவரும், அதிலுள்ள விலையில்லாத் திட்டங்களுக்கான பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டைக் காண முடியும்.
உளுந்தூர்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் மரத்தடி வகுப்பு
உளுந்தூர்பேட்டை மேல்நிலைப் பள்ளியில்   மரத்தடி வகுப்பு

தவிர, பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும் இதேபோன்ற இலவசத் திட்டங்களுக்கு மடை மாற்றப்படுகிறது. உதாரணமாக, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாணவ மாணவிகளின் விலையில்லாத் திட்டங்களுக்கு திசை திருப்பப்படுகிறது; சமூகநலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி திருமணத் திட்டத்திற்கு பயனாகிறது.
இது தவறு என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், ஒவ்வொரு துறையிலும் கவர்ச்சி அரசியலைத் தாண்டிச் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான பல பணிகள் உள்ளன. அதற்கான நிதி போதிய அளவுக்குக் கிடைக்காததால் அத்துறைகளின் வளர்ச்சியை எட்ட முடிவதில்லை.
உதாரணமாக, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையான கட்டட வசதியும் ஆசிரியர் பணியிட உருவாக்கமும் அரசின் முக்கியமான கடமை. ஆனால், அதற்குரிய நிதி பெரும்பாலும் கல்வித்துறைக்கு வழங்கப்படுவதில்லை. இதன்காரணமாக, பல அரசுப் பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களிடம் உயர்ந்த தரத்துடன் கல்வி கற்பித்தலை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்துக்கு சமூகநலத்துறையின் நிதி செலவிடப்படுவது ஏற்கத் தக்கதே. ஆனால், ஆதரவற்றோர் நலம், முதியோர் நலம் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு விஷயங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டுமே. அதற்கான நிதி அத்துறைக்கு கிடைப்பதில்லை. இதற்கு, முன்யோசனையின்றி தடாலடியாக அறிவிக்கப்பட்டும் கவர்ச்சி அரசியல் திட்டங்களே காரணம்.
மத்திய அரசிடம் நிதிக்கு கெஞ்சல்:
மத்திய அரசிடம் நிதி கோரிக்கை
மத்திய அரசிடம் நிதி கோரிக்கை

இதன் காரணமாகவே மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்புப் பணிகளுக்கும் கூட மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 4-ஆம் தேதி தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, 64 பக்கங்கள் கொண்ட, கோரிக்கை மனுவை அளித்தார். அதில் தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு, ரூ. 3.54 லட்சம் கோடி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
அவர் அளித்த கோரிக்கை மனுவில் இடம் பெற்றுள்ள பல திட்டங்கள் மாநில அரசின் நிதி வரம்பில் வருபவை. உதாரணமாக, கீழ்க்கண்ட சில கோரிக்கைகள் கவனத்திற்குரியவை:
தமிழக காவல் துறையை நவீனப்படுத்த, ரூ. 10 ஆயிரம் கோடி  வழங்க வேண்டும்; தமிழகத்தில், அத்திக்கடவு- அவிநாசி வெள்ளநீர் கால்வாய் இணைப்புக்கு, ரூ. 1,862 கோடி வேண்டும் (கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டம் குறித்து அரசுகள் வாக்குறுதி அளித்து வந்துள்ளன) ; பெண்ணையாறு- பாலாறு இணைப்புக்கு, ரூ. 500 கோடி; காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக்கு, ரூ.  5,166 கோடி; தமிழகத்தில் உள்ள, 32 ஆயிரம் கட்டுமரங்களை மோட்டார் படகுகளாக மாற்ற, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 9 கோடி; ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குத் தேவையான,  உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள,  ரூ. 420 கோடி; மீன்பிடித் துறைமுகங்களை ஆழப்படுத்த,  ரூ. 1,520 கோடி ரூபாய் தேவை. எனவே, ஆண்டுக்கு,ரூ. 10 கோடியாவது ஒதுக்க வேண்டும். காவிரி கால்வாய்களை நவீனப்படுத்த, ரூ. 11,421 கோடி வழங்க வேண்டும்.
இவ்வாறாக, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களின் பட்டியலைப் படித்தாலே மலைப்பாக உள்ளது. இவை அனைத்திற்கும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதீதமானது. இவ்வாறு வழங்கப்படும் நிதி மாநில அரசின் இலவசத் திட்டங்களுக்கு அளிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதைத் தான் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது’ என்று சொல்கிறார்களோ?
மத்திய அரசுக்கு மாநில அரசு வழங்கும் வரவினங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால், மத்திய நிதிநிலையே வலுவாக இல்லாத நிலையில், அனைத்து மாநிலங்களும் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைக்கும்போது மத்திய அரசால் என்ன செய்ய முடியும்?
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு மீது  ‘தமிழகத்தின் தேவைகளை மன்மோகன் அரசு புறக்கணிக்கிறது; மாநில அரசு கோரும் நிதியில் மிகக் குறைந்த அளவே வழங்கப்படுகிறது’ என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டிவந்தார். அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. மன்மோகன் தலைமையிலான மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கண்டித்திருக்கிறார். அவர்தான் இப்போது நாட்டின் பிரதமர்.  ‘அனைத்து மாநிலங்களும் சம உரிமையுடன் நடத்தப்படும்’ என்ற அவரது அறிவிப்பு அனுபவப்பூர்வமானது.
அதேசமயம், மத்திய அரசால் பூர்த்தி செய்ய இயலாத அளவிற்கு கோரிக்கை மனுவை சமர்ப்பிப்பதால் யாருக்கு லாபம்? தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு இலவச (விலையில்லா) திட்டங்களில் செலவழிக்கப்படும் நிதி முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டாலே தமிழக அரசு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய நிலைமை வராதே? வரவுக்கேற்ற செலவு தானே நிம்மதியான பொருளாதாரச் சூழலை அளிக்கும்?
விலையில்லாத் திட்டங்கள் ஏழை, எளியவருக்கானவை; அவற்றின் பயனாளிகளைக் கட்டுப்படுத்த வருமான வரம்பு கண்டிப்பாக அவசியம். அவ்வாறில்லாமல், வாக்களிக்கும் அனைவருக்கும் விலையில்லாத் திட்டங்கள் சென்றுசேர வேண்டும் என்று எண்ணுவது தேர்தல் அரசியலுக்கு உதவுமே ஒழிய, ஏழை மக்களுக்கு நலம் சேர்க்காது.
அதிமுகவின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இப்போதே 2 ஆண்டுகள் கழிந்துவிட்டன. மீதமுள்ள காலத்தில் அரசின் நலத்திட்டங்கள், உண்மையாகவே தேவைப்படும் கடையருக்குச் சென்றுசேர வேண்டும். அனைவருக்கும் விலையில்லாத் திட்டங்கள் என்ற கோஷம் அதற்கு உதவாது. தவிர, மாநில அரசின் நிதிச்சுமையை அதிகரித்து, பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தொடரவே வழிவகுக்கும்.
அபாயமான அஸ்திவாரம்:
போதையில் வீழ்ந்துகிடப்பது தமிழகம் மட்டும் தானா?
போதையில் வீழ்ந்துகிடப்பது தமிழகம் மட்டும் தானா?

தமிழக அரசின் விலையில்லாத் திட்டங்கள் பல மாநிலங்களாலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகின்றன. இத்திட்டங்களை அப்படியே நகலாக்கம் செய்ய பல மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. இலவச மடிக்கணினித் திட்டம் உத்தரப் பிரதேசத்திலும், மிதிவண்டித் திட்டம் பிகாரிலும் பின்பற்றப்படுகின்றன. அம்மா உணவகத்தை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களே ஆய்வு செய்கின்றன. இவை பெருமைக்குரியவையே. ஆனால், இத்திட்டங்கள் எந்தக் கட்டுமானத்தின் மீது எழுப்பப்படுகின்றன என்ற கேள்வியும் அத்தியாவசியமானது.
தமிழகத்தின் பெரும்பாலான விலையில்லாத் திட்டங்களுக்கு நிதி வழங்குவது, தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) அளிக்கும் மது விற்பனை வருவாயே என்ற தகவல் எளிதாகக் கடந்துபோகக் கூடியதல்ல. இந்த நிதி போதாமல் தான் மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்கிறது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால், தமிழகத்தில் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. அப்போது அதன் முதலீட்டுத் தொகை ரூ. 15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 21,500 கோடி. 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 மடங்கு வளர்ச்சி. நாட்டில் வேறெந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது. ஆனால் இது நிதர்சனத்தில் ‘வளர்ச்சி’ தானா?
மது விற்பனையை தனியார் மூலம் (ஏலமுறையில்) நடத்திவந்த அரசு 2003 -04 இல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த ஆண்டு வருவாய் ரூ. 2,828 கோடி. 2012- 13-இல் இது ரூ. 21,500 கோடியைத் தாண்டி விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் (2010- 2013) மட்டும் ரூ. 55,000 கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
tn_Data
டாஸ்மாக் வருவாய்- ஒரு புள்ளிவிவரம்

அண்மையில் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம்  பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில்,  “டாஸ்மாக் மூலம் 2013-14-ம் ஆண்டு ரூ. 23,401 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  இதில் விற்பனை வரியாக ரூ. 17,533 கோடியும்,  கலால் வரியாக ரூ. 5,868  கோடியும்  செலுத்தப்பட்டுள்ளது. 2014-15-ம் ஆண்டு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 26,295 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் ரூ. 19,812 கோடி விற்பனை வரியும்,  ரூ. 6,483 கோடி கலால் வரியும் கிடைக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, 2003- 04ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ. 2,828 கோடி வருமானம் கிடைத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 2013-14ஆம் நிதியாண்டில் இது ரூ. 21,500 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருமானத்தில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதில் பெரும்பகுதி தான் விலையில்லாத் திட்டங்களில் செலவிடப்படுகிறது.
இதைத் தான் “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” என்று ஆவேசத்துடன் கேட்பார் மகாகவி பாரதி. இந்த டாஸ்மாக் வருமானம் முழுவதும் தமிழக இளைஞர்களின் ஆற்றலை உறிஞ்சி, தமிழகப் பெண்களின் கண்ணீரில் விளைவிக்கப்பட்ட வருவாய் தான். மாநிலத்தையே மலடாக்கும் டாஸ்மாக் அளிக்கும் வருவாயில் தான் தங்களுக்கு விலையில்லாத் திட்டங்கள் அள்ளிவிடப்படுகின்றன என்ற உண்மையை சாமானிய தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்களா?
எனவே தான் பல்வேறு சமூகநல இயக்கங்களின் தொடர் போராட்டத்தையும் மீறி தமிழகத்தில் மதுவிற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது. தனது அரசியல் வெற்றிக்காக இலவசங்களை வழங்கும் கவர்ச்சி அரசியலைக் கட்டவிழ்த்துவிடும் தமிழக திராவிட அரசியல்வாதிகள் (இவ்விஷயத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் வேறு வேறல்ல), தமிழகத்தின் இளைய தலைமுறை பாழாவது பற்றி ஏன் அச்சம் கொள்வதில்லை?
தமிழகத்தின் எந்தத் தெருவிலும் வீழ்ந்து கிடப்பது போதை ஆசாமிகள் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்காலமும் தான் என்பதை ஏன் தமிழக முதல்வர் ஜெயலலிதா உணர மறுக்கிறார்?
1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்டம் (பி.ஏ.பி.), பவானிசாகர், அமராவதி உள்ளிட்ட அணைக்கட்டுகளும், துவக்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் (என்.எல்.சி.), திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் (பெல்), மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை போன்ற பெருந்தொழில் நிறுவனங்களும் தான் இன்றும் தமிழகத்தை வாழவைக்கின்றன.
கல்விக்கண் திறந்த காமராஜர்
கல்விக்கண் திறந்த காமராஜர்

அவரும் இலவசம் வழங்கினார்-  ஏழை மாணவர்கள் வயிறார உண்டால் தான் கல்வி செழிக்கும் என்றுணர்ந்து இலவச மதிய உணவுத் திட்டத்தை அவர்தான் கொண்டுவந்தார். அதன்மூலமாக கல்வியை அனைவருக்கும் கொண்டுசேர்த்தார். அத்திட்டம் தான் பின்னாளில் எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவுத் திட்டமாக மாறியது. தற்போது அதில் முட்டை, கலவை சாதங்கள் வழங்கல் என்று திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. காமராஜரின் இலவசம் கவர்ச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. தற்போதைய திட்டங்களை அவ்வாறு ஒப்பிட முடியுமா?
இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் எதிர்காலத்தில் எவ்வாறு நினைவுகூரப்படப் போகிறது? போதையில் தமிழகம் தள்ளாடக் காரணமான ஆட்சியாகவா? விலையில்லாத் திட்டங்களுக்காக தங்களை அறியாமலேயே அடகு வைத்த பரிதாபமான மக்களிடம்  ‘விலையில்லாக் கையூட்டு அளித்து’ செல்வாக்குப் பெற்ற ஆட்சியாகவா?
தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் காட்சி, எங்கும் அம்மா, எதிலும் அம்மா என்பதாகவே இருக்கிறது. இதன் உடனடி அரசியல் சாதகங்கள் புலப்படுவது போலவே, எதிர்கால வீழ்ச்சியின் தடயங்களும் தென்படுகின்றன. அவ்வாறு தமிழகம் வீழுமானால், அதற்கும் அம்மாவின் இணையற்ற ஆட்சியே காரணமாக இருக்கும்.
எனினும், இலவசங்களை வாரி இறைக்கும் விலையில்லாத் திட்டங்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் மட்டுமே அமலாகிவரும் சில பிரத்யேகத் திட்டங்களும் கவனத்திற்குரியவை.  ‘அம்மா’வை கடுமையாக விமர்சிக்கும்போது, இத்திட்டங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
உதாரணமாக, தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்கள்,  விற்பனையாகும் அம்மா உப்பு, அம்மா குடிநீர், அண்மையில் துவக்கப்பட்ட அம்மா மருந்தகம்,  ‘அம்மா முகாம்’ எனப்படும் மக்களைத் தேடி வருவாய்த்துறை முகாம்கள் போன்றவை மாநிலம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரவலாக நல்ல பெயரை ஏற்படுத்தி உள்ளன. அவை குறித்து அடுத்த பகுதியில் காணலாம் v.kalathur seithi .

நன்றி-தமிழ் இந்து.

0 comments:

Post a Comment