Wednesday 16 April 2014

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இக் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வழக்கம்போல தபால் துறை ஊழியர் ஒருவர், கடிதங்களைக் கொண்டு வந்துக் கொடுத்துள்ளார். அதில் ஒரு கடிதத்தில், டீக் கடை நரேந்திர மோடி பாரதப் பிரதமரானால் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில், மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயில்களை வெடிவைத்து தகர்ப்போம். இப்படிக்கு, பன்னா இஸ்மாயில், தமுக, திருவண்ணாமலை என்று எழுதப்பட்டு இருந்ததாம்.
இதைப் படித்து அதிர்ச்சியடைந்த கோயில் ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக கோயில் இணை ஆணையரும், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையருமான ந.திருமகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மிரட்டல் கடிதம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இணை ஆணையர் புகார் கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள ஏதோ ஒரு தபால் பெட்டியில் போடப்பட்டு, கோயிலுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ள இக் கடிதத்தை எழுதியது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு:
மிரட்டல் கடிதத்தையடுத்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்குள் செல்லும் அனைத்து பக்தர்களும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர். இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, தேர்தலையொட்டி கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுள்ளோம். மற்றபடி வேறொன்றும் இல்லை என்றார்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment