Tuesday 6 May 2014


கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு முன் அந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வு ஆகிய 3 அம்சங்களை மாணவர்கள் கவனிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் கூறினார்.
"தினமணி' மற்றும் "ஸ்ரீ சாஸ்தா கல்வி குழுமம்' ஆகியவை இணைந்து பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியை சென்னையில் திங்கள்கிழமை நடத்தின. இதில் மன்னர் ஜவஹர் பேசியதாவது:
உயர் கல்வியில் ஏராளமான படிப்புகள் உள்ளன. கலை, அறிவியல் படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகள் என ஏராளமான படிப்புகள் உள்ளன.
பிளஸ் 2 முடித்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்புகளிலேயே சேரவே விரும்புகின்றனர். தமிழகம் முழுவதும் இப்போது 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 3 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன. எனவே, பொறியியல் படிக்க இடம் கிடைப்பது எளிது. ஆனால், சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம்.
இவ்வாறு பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கு முன்பு 3 முக்கிய அம்சங்களைப் பார்க்க வேண்டும்.
ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதி மற்றும் வேலைவாய்ப்புக்கான வளாகத் தேர்வு ஆகிய மூன்றையும் அறிய வேண்டியது மிக அவசியம்.
ஆசிரியரைப் பொருத்தவரை உயர் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதைவிட, ஆசிரியர்கள் அனைவரும் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கின்றனரா, ஆசிரியர் - மாணவர் உறவு எப்படி இருக்கிறது உள்ளிட்டவற்றைக் கவனிக்க வேண்டும்.
உள்கட்டமைப்பு வசதிகளைப் பொருத்தவரை நூலகம், ஆய்வகம், வகுப்பறை, கம்ப்யூட்டர் வசதிகள் முழுமையாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
வளாகத் தேர்வை பொருத்தவரை, ஆண்டுக்கு ஆண்டு கல்லூரியில் மாணவர்களைத் பணிக்குத் தேர்வு செய்ய எத்தனை நிறுவனங்கள் வருகின்றன என்பதை அறிய வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதால், அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் ஈடுபாட்டோடு பணிபுரிய வாய்ப்புகள் அதிகம். உள்கட்டமைப்பு வசதிகளும் முழுமை பெற்றிருக்கும்.
ஆனால், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்த மூன்றும் முழுமை பெற்றிருப்பதை உறுதி செய்வது கடினம். எனவே, இந்த கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள், அவற்றில் படித்த நண்பர்கள் மூலம் அந்தக் கல்லூரிகளின் நிலை குறித்து அறிந்து கொண்டு அதன் பிறகே கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்.
விருப்பமான பிரிவை தேர்வு செய்ய வேண்டும்: பொறியியல் படிப்புகளில் மெக்கானிக்கல், சிவில், எல்க்ட்ரிக்கல், பயோ-டெக்னாலஜி என 89 பிரிவுகள் உள்ளன. இவற்றில் தங்களுக்கு விருப்பமானப் பிரிவை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆலோசனை வழங்குவதோடு நிறுத்திவிட வேண்டும். உயர் கல்வியில் மாணவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்களோ, அதைப் படிக்க அனுமதிப்பதே சிறந்தது.
முதலாமாண்டு மட்டுமே கடினம்: தமிழகத்தில் பொறியியல் சேர்பவர்களில் 68 சதவீதம் பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு படிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால், தமிழ் வழியில் படித்து வந்தோம் என்கிற தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். இதனால், இந்த மாணவர்கள் பல்வேறு சூழல்களில் பின்தங்க வேண்டியச் சூழல் ஏற்படுகிறது.
இந்த எண்ணத்தை கிராமப்புற மாணவர்கள் முதலில் கைவிட வேண்டும். பள்ளி படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு, பொறியியல் படிப்பில் முதலாமாண்டு மட்டும்தான் கடினமாக இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்பு மிகவும் எளிதாகிவிடும். எனவே, தேவையற்ற அச்சத்தை மாணவர்கள் கைவிடவேண்டும் என்றார் மன்னர் ஜவஹர் v.kalathur seithi .

0 comments:

Post a Comment