Friday 24 January 2014

பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி மற்றும் சிறுவாச்சூர் தொகுப்பு அலுவலகங்களில், வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பினர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆலம்பாடி மற்றும் சிறுவாச்சூரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, வங்கி இணைப்பு பணிகளை மேற்கொள்ள வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தாற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். ஆலம்பாடி தொகுப்பில் அம்மாபாளையம், ஆலம்பாடி, கோனேரிப்பாளையம், வடக்குமாதவி, எசனை, கீழக்கரை, மேலப்புலியூர், லாடபுரம், எளம்பலூர், களரம்பட்டி ஆகிய ஊராட்சிகளும், சிறுவாச்சூர் தொகுப்பில் அய்யலூர், பொம்மனப்பாடி, சிறுவாச்சூர், புதுநடுவலூர், நெச்சியம், கல்பாடி, கவுள்பாளையம், செங்குணம், சத்திரமனை, வேலூர் ஆகிய ஊராட்சிகளும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், ஆலம்பாடி மற்றும் சிறுவாச்சூர் தொகுப்பு அலுவலகங்களுக்கு, அந்தந்த ஊராட்சிகளுக்கு உள்பட்ட ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாகவும், 35 வயதிற்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.  12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கணினி அனுபவம், தகவல் தொடர்பு திறன் மற்றும் கையெழுத்து அழகாக எழுதத் தெரித்தவராக இருக்க வேண்டும்.
இந்த தகுதியுடைய நபர்கள், தங்களது ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பின் பரிந்துரையுடன், திட்ட அலுவலர், தமிழ்நாடு ஊராக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு ஜன. 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றுகளுடன் பிப். 5-ம் தேதி மேற்கண்ட முகவரியில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில் வெற்றி பெற்றவர்கள் பணிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment