Wednesday 19 March 2014

ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்த எந்த ஒரு நபரும், தேர்தலில் ஓட்டளிக்க தகுதியுடைய நபராக கருதப்படுகிறார். அதன்படி, புதிய வாக்காளராக சேர்க்கப்படும் பலரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது, சட்ட சிக்கலால் கேள்விக்குறியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின், தற்போதைய நடைமுறைப்படி, ஜனவரி, 1ம் தேதி அன்று, 18 வயதை அடையும் இளைஞர்கள், வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு அடுத்த நாளான, ஜனவரி, 2 அன்று, 18 வயது பூர்த்தி அடையும் நபர், தன்னை தகுதியுடைய வாக்காளராக பதிவு செய்ய இயலாது. அவர், அடுத்த, ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும்.நாடு முழுவதும், இதுபோல், ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தும், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாமல் உள்ளனர். இதனால், ஜனவரி, 1 என்ற கெடு தேதிக்கு பதிலாக, ஓராண்டில், 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டது.

தேர்தல் கமிஷனின், இந்த பரிந்துரையை, சட்ட அமைச்சகம் ஏற்க மறுத்துவிட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே, இதை அமல்படுத்த முடியாது. ஓட்டுரிமை குறித்து தெளிவுபடுத்தும், அரசியல் அமைப்பு சட்ட விதி, 326ல் உள்ளபடி, 18 வயது அடைந்தவர்களுக்கு, ஓட்டுரிமை என்பதில் மாற்றம் செய்தால் தான், இதை அமல்படுத்த முடியும் என, தெளிவுபடுத்தியுள்ளது.'தேர்தல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல; அதற்காக முறையான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகம் இப்போதும் தெரிவித்துள்ளது.இதனால், 18 வயதாகும், இளைஞர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சித்த, தேர்தல் கமிஷன் முயற்சி, பின்னடைவைச் சந்தித்துள்ளது.வாக்காளர் பட்டியல் என்பது, அந்தந்த மாநில அரசுகள் தயாரிக்கும், ஓட்டளிக்க தகுதியுள்ளோர் பட்டியல்; அதில், பெயர் இருப்பவர்கள் மட்டும் தான், தேர்தல்களில் ஓட்டளிக்க முடியும்.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment