Monday 17 March 2014

மதுரையில் மட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில், அடுத்தடுத்து, ஐந்து குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. ஏழு இடங்களில், குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், இந்த வழக்குகளில், ஒருவர் கூட, இதுவரை கைது செய்யப்படவில்லை. குண்டை யார் வைக்கின்றனர் என, போலீசுக்கு தெரிந்திருந்தும், 'ஆதாரம்' இல்லை; 'விவகாரத்தைக் கையிலெடுத்தால் சிக்கலாகி விடும்' என்ற காரணத்திற்காக, வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாலேயே, தொடர்ந்து குண்டுகள் வெடிக்கின்றன. இப்போது மதுரையில், எதற்கெடுத்தாலும், சிறிய அளவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குண்டு வைப்பது சகஜமாகி விட்டது. கடந்த, பிப்.,11ல், மதுரை உத்தங்குடி தனியார் வணிக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இரும்பு பைப் வெடிகுண்டு தவிர, மற்ற குண்டுவெடிப்பு, குண்டு கண்டெடுப்பு சம்பவங்களில் குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகின்றனர். மறைமுக அமைப்பு கடந்த, 2002ல், மதுரையைச் சேர்ந்த, இமாம்அலி மற்றும் அவரது கூட்டாளிகள், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்களில் சிலர், ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட துவங்கினர். இதற்கு, அரசு தடை விதித்தது. இதுநாள் வரை, அந்த அமைப்பினர் மறைமுகமாக செயல்படுகின்றனர்.
இமாம்அலியை கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தவும் திட்டமிட்டு, 2011ம் ஆண்டு, ஏப்.,30ல், மதுரை, மாட்டுத்தாவணி, டாஸ்மாக் கடையில், 'டைம் பாம்' வெடிக்க செய்தனர். அதே ஆண்டு செப்.,30ல், புதுார் பஸ் டிப்போவில், பஸ்சிலிருந்து, 'டைம்பாம்' கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில், மதுரையில், ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி மேற்கொண்டார். அவர் செல்ல திட்டமிட்டிருந்த, திருமங்கலம் அருகே, ஆலம்பட்டி ஓடைப்பாலத்தின் அடியில், சக்தி வாய்ந்த இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. எகிறும் போலீஸ் பி.பி.,
தேசிய தலைவர் விவகாரம் என்பதால், சம்பவம் நடந்த மூன்று நாட்களில், 'போலீஸ்' பக்ருதீன், பிலால்மாலிக் உட்பட சிலரை, போலீசார், குற்றவாளிகள் என, அறிவித்தனர். அதேசமயம், 'டைம்பாம்' வழக்குகளில் குற்றவாளிகள் யார் என, அறிவிக்காத நிலையில், டிச.,7ல் திருவாதவூர் பஸ்சில், 'டைம் பாம்' இருந்தது, போலீசாரின் ரத்தக் கொதிப்பை எகிற வைத்தது.
பின், நான்கு மாதங்கள் போலீஸ் விசாரணை இழுத்து கொண்டிருந்த நிலையில், 2012, மே 1ம் தேதி, அண்ணாநகர் ராமர் கோவில் சுற்றுச் சுவரையொட்டி நிறுத்தியிருந்த சைக்கிளில், 'டைம்பாம்' வெடித்தது. அதைத் தொடர்ந்து, போலீசார், 'விசாரணையிலேயே' இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம், சவுராஷ்டிரா சமூகத்தினரின் மாநாட்டிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வருவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'டைம்பாம்' வைக்கப்படக் கூடும் என, போலீஸ் கருதிய நிலையில், மதுரை தெற்குகிருஷ்ணன் கோவிலில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும், உமர்பாரூக் என்பவரின் கடைக்கு, 'டைம் பாம்' வந்து சேர்ந்தது.

'ஈகோ' பிரச்னை

இதில், புகார்தாரரான உமர் பாரூக்கையே, தெற்குவாசல் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன், சில மாதங்களுக்கு பின், கைது செய்தார். இதற்காக, மோகனுக்கு பாதுகாப்பு கருதி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், நவ.,2ல் திருப்பரங்குன்றம் மலையில், சிலர், 'டைம் பாம்' தயாரிப்பதாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. அங்கு ஆய்வு நடத்தி, உதிரி பாகங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கை, உள்ளூர் போலீசார், அப்போதைய கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில், விசாரித்தனர். இவர்களுக்கும், மத அமைப்பினரை கண்காணிக்கும், சிறப்பு பிரிவு போலீசாருக்கும், 'ஈகோ' பிரச்னை ஏற்பட, விசாரணை ஓராண்டுக்கும் மேலாக இழுத்தது.

ஒரே ஸ்டைல்

இதுவரை கைப்பற்றிய குண்டுகள் அனைத்தும், டைமர், பேட்டரி, ஒயர், கரிமருந்து என, ஒரே, 'ஸ்டைலில்' இருந்ததால், 'குறிப்பிட்ட நபர்களே இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்' என, போலீசார் முடிவுக்கு வந்தனர். அவர்களும் போலீஸ் கண்முன்னேயே நடமாடியபடி இருந்தனர். ஆனால், ஆதாரம் இல்லாததால், அவர்களை விசாரிக்கக் கூட, போலீசார் பயந்தனர்.
இச்சூழலில் தான், கடந்த ஆண்டு நவ.,20ல், நெல்பேட்டையில், வழக்கறிஞர் அக்பர்அலி காருக்கு அடியிலும், காதர்மொய்தீன் டூவீலரிலும் குண்டு வெடித்தது. இவர்கள் பொறுப்பு வகிக்கும், சுங்கம் பள்ளிவாசலில், கேமரா வைத்தது தொடர்பாக, எச்சரிப்பதற்காகவே, குண்டு வைக்கப்பட்டது என, விசாரணையில் தெரிய வந்தது. இதிலும், சிலர் மீது, போலீசாரின் சந்தேக கண் இருந்தாலும், 'தொட்டால் சிக்கல்' என்ற அச்சம் காரணமாக, கண்டும் காணாமல் உள்ளனர். இந்த தைரியத்தில் தான் தொடர்ந்து குண்டு வைத்து, 'விளையாட்டு' காட்டுகின்றனர்.
போலீசார் 'அமைதி'யாக இருக்கும்பட்சத்தில், மதுரையில் தொடர்ந்து நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

நன்றி-தினமலர்.

0 comments:

Post a Comment