Sunday 30 March 2014

தோல்விமுகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதையாவது செய்து மீடேற வேண்டும் என்ற துடிப்பில் செய்வதறியாமல் பல தவறுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய வாக்குவங்கியை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக அக்கட்சி நடத்தும் நாடகங்கள் விபரீத எல்லைகளைத் தொட்டு வருகின்றன.
நாடு முழுவதும் மோடி அலை ஏற்படுத்திவரும் தாக்கத்தால் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்ட்தை அதன் துணைத்தலைவர் ராகுலின் அபவாதப் பேச்சில் இருந்தே புரிந்துகொள்ளலாம். அரதப் பழசான  மகாத்மா காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் தேர்தல் பிரச்னையாக்க முயன்றிருக்கிறார் காங்கிரஸின் இளவரசர்.
காந்தி கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது நீதிமன்றத்திலேயே உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், கபூர் கமிஷன் உள்ளிட்ட பல விசாரணை ஆணையங்களில் ஆர்.எஸ்.எஸ். நிரபராதி என்று தீர்ப்பு எழுதப்பட்ட பின்னரும், இதனை 60 ஆண்டுகளுக்கு மேலாக எழுப்பி வருகிறது காங்கிரஸ். தாங்களே நாட்டின் அறிவுஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் முற்போக்குகளும் இதே அவதூறு பிரசாரத்தை பன்னெடுங்காலமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தான் நீதிமன்றத் தீர்ப்புகளை அனைவரும் மதிக்க வேண்டும் என்று அறிவுரையும் கூறுபவர்கள்! 
இம்ரான் மசூத்.

லோக்சபா தேர்தலில் என்ன முடிவு கிடைக்கும் என்பதை இப்போதே கண்டுவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு இப்போதே ஜன்னி கண்டுவிட்டது. அதன் விளைவாக ராகுல் மீண்டும் காந்தி கொலைவழக்கு விவகாரத்தை எழுப்ப முயன்றிருக்கிறார். ஆனால், இதுவரை நடைபெற்றது போலல்லாமல், இம்முறை அதற்கு நல்ல குட்டுப் பட்டிருக்கிறார்.
எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். தன் மீதான அவதூறுப் பிரசாரங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. இம்முறை, ராகுலின் அபவாதத்தைக் கண்டித்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் மானநஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தவிர, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, ராகுலிடம் எந்தச் சத்தத்தையும் காணோம். அநேகமாக, தேர்தல் முடிவத்ற்குல் ராகுல் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கலாம். வழக்கமாக இத்தகைய உளறல்களை அதற்கென்றே தயாரிக்கப்பட்டவரான திக்விஜய் சிங் கொட்டுவது தான் வழக்கம். இப்போது ராகுல், சோனியா வரை உளறல் வியாதி பரவிவிட்டது.
தலையே இப்படி இருந்தால், அதன் வால்கள் எப்படி இருக்கும்? உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பிரசாரத்தில் பேசிய முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவர் மோடியை கொல்லப் போவதாகக் கொக்கரித்ததை, ராகுலின் தொடர்ச்சியாகவே காண வேண்டும். உ.பி.யின் சஹரான்பூரில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் இம்ரான் மசூத் தான் இவ்வாறு முட்டாள்தனமாகவும் வெறித்தனமாகவும் உளறியவர். உளறல் திலகம் திக்விஜய் சிங்கே இம்ரானைக் கண்டித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
குற்றப் பின்னணி:
இந்த இம்ரான் மசூத் காங்கிரஸ் வேட்பாளரானது எப்படி என்று படித்தாலே தலை சுற்றும்! நடப்புத் தேர்தலில் கொலை மிரட்டலுக்காக கைது செய்யப்பட்டுள்ள முதல் வேட்பாளரின் பின்னணி குறித்து அறியாமல் இருக்கலாமா? இதோ அவரது சிறப்புக் குறிப்பு…
இந்த இம்ரான் மசூத் மீது உ.பி.யில் மட்டுமே பல குற்றவியல் வழக்குகள் உள்ளன. பணம் பறிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பெருமைக்குரியவர் இவர். காங்கிரஸ் கட்சிக்குத் தோதான வேட்பாளர் தான்.
இவரது மாமா ரஷீத் மசூத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஊழல் குற்றத்திற்காக  சிறைத்தண்டனை பெற்றதற்காக, முதன்முதலாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி. பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் ரஷீத் மசூத். திரிபுரா மருத்துவக் கல்லூரியில் தகுதியில்லாத மாணவர்களை பணம் பெற்றுக்கொண்டு சேர்த்துவிட்ட ஊழல் வெளிப்பட்டு, அதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையின் இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 2013-ல் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ரஷீத். அதையடுத்து காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த ரஷீத் மசூத்தின் பதவி பறிக்கப்பட்டது. அவரது சகோதரர் மகன் தான், மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இம்ரான் மசூத். 
ரஷீத் மசூத்

லோக்தளம், ஜனதா, ஜனதாதளம் கட்சிகளில் அரசியல் செய்து அலுத்த ரஷீத் மசூத், பிற்பாடு முலாயமின் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் லோக்சபா உறுப்பினரானார். அங்கிருந்து 2011-ல் காங்கிரஸ் கட்சிக்கு சென்ற சட்டசபைத் தேர்தலின்போது தாவிய ரஷீத்திற்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி அளித்து அழகு பார்த்தது காங்கிரஸ். தனது மாமாவுடன் அப்போது காங்கிரஸில் அடைக்கலம் புகுந்தவர் தான் இம்ரான் மசூத்.
ஆனால், தனக்கு காங்கிரஸில் எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி, மீண்டும் சமாஜ்வாதிக்குத் தாவினார் இம்ரான். அங்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் பெஹித் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். இன்னிலையில், ஊழல் குற்றச்சாட்டால் பதவி இழந்த ரஷீத்தும் மீண்டும் சமாஜ்வாதிக்கு இடம் பெயர்ந்தார். எந்தக் கேள்வியும் இன்றி அவரைச் சேர்த்துக்கொண்டு மதச்சார்பின்மையைக் காத்தார் முலாயம்.
முதலில் சஹரான்பூர் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக இம்ரான் மசூத் தான் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், ரஷீத் மசூத்தின் நிர்பந்தத்தால், அவரை மாற்றிவிட்டு, அவரது மகன் ஷாஜன் மசூத்தை வேட்பாளராக்கினார் முலாயம்.  சகோதரர் மகனைவிட சொந்த மகன் தானே ஜனநாயகத்திற்கு முக்கியம்? சிறைத் தண்டனை பெற்ற ரஷீத் மசூத் தேர்தலில் சஹரான்பூரில் போட்டியிட முடியாவிட்டால், அவரது சொந்த மகன் அங்கு போட்டியிடுவது தானே மதச்சார்பின்மை நியாயம்?
திடீரென வேட்பாளர் மாற்றப்பட்டவுடன் கொந்தளித்த இம்ரான் மசூத், மீண்டும் காங்கிரஸ் முகாமில் சேர்ந்தார். எந்தக் கேள்வியும் இன்றி மீண்டும் அவரை சேர்த்துக் கொண்டார் ராகுல். அவரையே சஹரான்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகவும் அறிவித்தார். அதாவது, ஒரே தொகுதியில் ரஷீத்தின் மகனும் சகோதரர் மகனும் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுகிறார்கள். எவர் வென்றாலும் குடும்பத்தில் ஒருவர் எம்.பி!
ஆனால், காலம் ரஷீத் மசூத்தை விட புத்திசாலித்தனமானது. இப்போது வீசும் மோடி அலை, சஹரான்பூர் இஸ்லாமிய வாக்குவங்கியை அடித்துக்கொண்டு போய்விடும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதனால் ஏற்பட்ட பதற்றமே, இம்ரானின் கொலை மிரட்டலில் வெளிப்பட்டிருக்கிறது. தவிர இஸ்லாமிய வாக்குகளை அள்ளுவதில் ஏற்பட்ட போட்டியும் அவரை ஆத்திரக்காரராக மாற்றிவிட்டது.
மார்ச் 28-ல் தனது தொகுதியில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய இம்ரான் மசூத், தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அவர் பேசியதன் சாராம்சம் இது:
“உத்தரப்பிரதேசத்தை குஜராத் போலக் கருதுகிறார் மோடி. குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் தான் உள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். எனவே அவர் உத்தரப்பிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற முயன்றால், அவரை துண்டு துண்டாக வெட்டிக் கூறு போட்டு விடுவேன். நான் தெருவிலிருந்து வந்தவன். நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்…” என்று பேசினார்.
இந்தத் திடுக்கிடும் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது உள்ளூர் தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பானது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய குறுந்தகடு சஹரான்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான சந்தியா திவாரிக்கு கிடைத்தது. அவர் அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, உள்ளூர் போலீசார் இம்ரான் மசூத் மீது வழக்குப்பதிவு செய்து, மார்ச் 29, அதிகாலையில் கைது செய்தனர்.
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவின்கீழ், இரு தரப்பினரிடையே பகைமை உணர்வைத் தூண்டுதல், வன்முறை, மத உணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,  மத நம்பிக்கைக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்துதல்,  குற்றம் செய்யும் நோக்கத்துடன் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ், இம்ரான் மசூத் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்கொடுமை தடுப்புச் சட்டமும் மசூத் மீது பாய்ந்துள்ளது.
பல்டி மன்னர்கள்:
இதனிடையே தனது பேச்சுக்கு இம்ரான் மசூத் மன்னிப்பு கேட்டிருந்தார். பிரசாரச் சூட்டில் அப்படிப் பேசிவிட்டேன். தேர்தல் காலத்தில் இவ்வாறு நான் (மற்ற சமயத்தில் பேசலாமா?) பேசியிருக்கக் கூடாது. நான் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்’ என்று அவர் கூறியிருந்தார்.ஆனால், கைதான உடனே தியாகிப் பட்டம் பெற வேண்டி, “நான் தவறுதலாக எதுவும் பேசவில்லை. இது எல்லாமே பாஜக-வின் சதி. இதற்காக மோடியிடம் நான் வருத்தம் தெரிவிக்கத் தேவையில்லை” என்று இம்ரான் மசூத் கூறி இருக்கிறார். 
இம்ரான் மசூத் கைதாகியுள்ளதால், அங்கு மார்ச் 29-ல் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த ராகுல் தனது பிரசாரத்தை ரத்து செய்வதாகக் கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சஹரான்பூர் வந்த ராகுல், இம்ரான் மனைவியுடன் அதே மேடையில்  ‘கர்ஜனை’ செய்தார்.  வெறுப்பூட்டும் பேச்சுக்களை காங்கிரஸ் விரும்புவதில்லை என்று பெரும்போக்காகக் கூறிய ராகுல்,  இம்ரான் பேச்சுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால்,  சஹரான்பூர் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்தை ராகுல் உடனடியாக மாற்றியிருக்க வேண்டுமே?
இப்போது காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் உ.பி. மக்களுக்கு புலப்படத் துவங்கி இருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள 40-க்கு மேற்பட்ட தொகுதிகளில் முஸ்லிம் மக்கள் 40 சதவிகிதத்திற்கு மேல் உள்ளனர். அவர்களது வாக்குகளை கபளீகரம் செய்ய அக்கட்சி எந்த அளவிற்கு தரம் தாழவும் தயாராக உள்ளது. ஆனால், வாக்காளர்களைப் பிளவுபடுத்தும் காங்கிரஸின் இப்போக்கு இந்து மக்களை பாஜக-வுக்கு சாதகமாக ஓரணியில் தானாகவே திரட்டிவிடும் என்பதை முட்டாள் இளவரசர் உணராமல் இருக்கிறார்.
கடநத 6 மாதங்களாகவே, காங்கிரஸின் துஷ்பிரசாரம் எல்லை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதூறுகளை ராகுலின் மதச்சார்பினமி குருவான திக்கிராஜா பரப்பிக்கொண்டே இருக்கிறார். மோடியின் பால்ய மணத்தை பற்றியும் கூட விவாதிக்கப்பட்டது. இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக பிரச்னை எழுப்பியும் காங்கிரஸ் பிரசாரம் செய்தது. மோடியை டீக்கடைக்காரர் என்று ஏளனம் பேசியது. இவை அனைத்துமே காங்கிரஸுக்கு எதிர்மறையான பலன்களையே தந்தன.
சென்ற குஜராத் சட்டசபைத் தேர்தலின் போது மோடியை  ‘மரண வியாபாரி’ என்று விமர்சித்தார் சோனியா. கர்நாடகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய சோனியா, தேர்தலுக்காக விஷவிதைகளை பாஜக தூவுவதாகவும் குற்றம் சாட்டினார். இப்போது மரண வியாபாரி யார் என்பதும், விஷவிதை தூவும் கட்சி எது என்பதும் இம்ரான் மசூத் மூலமாக அம்பலமாகிவிட்டது.
இந்தத் தேர்தல் களம், மோடி ஆதரவு- மோடிக்கு எதிர்ப்பு என்று இருகூறுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒருபுறம் மோடியின் அபார சாதனைகள் பிரசாரம் செய்யாமலே மக்களை ஈர்க்கின்றன. மறுபுறம், மோடியின் பிராபல்யத்தால் நடுங்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட மதச்சார்பின்மை வியாதி கட்சிகள் மோடியின் புகழைக் குலைக்க அவதூறுப் பிரசாரங்களை அள்ளித் தெளிக்கின்றன. 2002 குஜராத் கலவரத்தை இஸ்லாமியர்கள் மறந்தாலும் இவர்கள் மறக்க விட மட்டார்கள்.
இத்தனைக்கும் குஜராத் கலவரங்களில் அம்மாநில முதலவராக இருந்த நரேந்திர மோடிக்கு எந்தப் பங்கும் கிடையாது எனப் பல ஆணையங்களும், நீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதிப்படுத்திவிட்டன. குஜராத் கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் 250-க்கு மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டதையோ (கலவரத்தை மோடி வேடிக்கை பார்த்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா?), சபர்மதி ரயில் எரிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட 59 கரசேவகர்களைப் பற்றியோ இக்கட்சிகளுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது.
இத்தனையையும் செய்துவிட்டு,  “வெவ்வேறு மதத்தினரிடையே மோதலை ஊக்குவிக்கும் வெறுப்பு அரசியலை பாஜக கட்டவிழ்த்துவிடுகிறது” என்று பேச ராகுலுக்கு எத்துணை துணிவு வேண்டும்? மண்டபத்தில் யார் எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே மேடையில் படிக்கலாமா ராகுல்?
கடந்த சனிக்கிழமை (மார்ச் 29) கூட, பிரதமர் மன்னுமோகனார் அசாமில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “பிளவுபடுத்தும் அரசியல் நடத்தும் பாஜக-வால் ஒருபோதும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது” என்று கூறி இருக்கிறார். என்ன நெஞ்சழுத்தம்! எல்லாப் பிளவு அரசியலையும் செய்துவிட்டு, அதையே எதிரணி மீது தூக்கிப் போடுவது  எவ்வளவு  மோசமான தந்திரம்? இந்த மன்னுமொகனைத் தான் எந்த அரசியலும் தெரியாத அப்பாவி என்று செய்தி வாசிக்கின்றன ஊடகங்கள்.
காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே, தேர்தலில் வெல்லவும், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் நடத்தும் இத்தகைய நாடகங்கள் தான், சமுதாயத்தில் ஆழமான பிளவை உருவாக்குகின்றன. இதை இஸ்லாமியர்கள் உணரத் துவங்கிவிட்டனர் என்பதையே, பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர்,  மஹாராஷ்டிராவின் அனைத்திந்திய ஹஜ் கமிட்டி தலைவர் சலீம் ஜக்காரியா உள்ளிட்டவர்கள் பாஜக-வில் சேர்ந்துள்ளது காட்டுகிறது.
ஆனால், படிப்பறிவற்ற, வறுமை நிலையில் தவிக்கும் முஸ்லிம் மக்களை செக்யூலர் அரசியல்வாதிகளின் பொய்யான பிரசாரம் திசைதிருப்பிவிடும் வாய்ப்பு உள்ளது. அவர்களை நம்பித்தான் இப்போது செக்யூலர் படை தங்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறது.
ஏற்கனவே, மோடியைக் கொல்லத் திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நால்வர் (மார்ச் 23) ராஜஸ்தானிலும்,  மேலும் இருவர் உ.பி.யின் கோரக்பூரிலும்  (மார்ச் 27) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த விழைவோருக்கு தூண்டுகோலாக இருக்கின்றன, செக்யூலர் பித்தலாட்டக்காரர்களின் மாய்மாலங்கள். சேலத்தில் மசூதி ஒன்றின் முன்பு வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர் சுதீஷை, திமுக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் திட்டமிட்டு தகராறு செய்து துரத்தியுள்ளது (மார்ச் 28), இதற்குத் தகுந்த உதாரணம்.
இந்த நேரத்தில் மோடி ஆதரவாளர்களும், பாஜக கூட்டணியினரும் நிதானம் காப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் இன்னதென்று தெரிந்தே தான் தவறு செய்கிறார்கள். தோல்விமுனையில் இருக்கும் அவர்களுக்கு, இழப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, வெற்றிச் சிகரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது.
இப்போது அவர்கள் தங்கள் பொய்முகங்களை தாங்களாகவே தோலுரிக்கிறார்கள். அதை மட்டும் மக்களிடம் பிரசாரம் செய்தாலே-நாட்டு மக்களை கூறுபோட்டு அரசியல் நடத்த முயலும் எத்தர்களை மக்கள் மன்றத்தில் அடையாளம் காட்டினாலே- போதும். இனிமேலும் அவதூறுப் பிரசாரங்களினாலும், மிரட்டல் அரசியலாலும் இந்திய மக்களை முட்டாளாக்க முடியாது. 16-வது லோக்சபா தேர்தல் முடிவு அதை நிச்சயம் காட்டும்.

0 comments:

Post a Comment