Sunday 30 March 2014

ஒட்டுமொத்த தமிழகத்திலும் அம்மா அலை வீசுவதாக ஊடகங்கள் தீர்மானித்துவிட்ட நிலையில்தான் இந்தக் கூட்டணி அமைந்து, அனைவரையும் யோசிக்கச் செய்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டணி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இதன் பின்புலத்தில் பல மாதங்களாக விடாமுயற்சியுடன் பாடுபட்ட ஒரு குழு இருக்கிறது. இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் பாஜக தலைவர்கள் கொண்ட முனைப்பு போலவே அதன் நண்பர்கள் குழாம் மேற்கொண்ட உழைப்புக்கும் பங்கிருக்கிறது.
இந்தக் கூட்டணி ஒருமாதம் முன்னதாக அமைந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கக் கூடும். ஆனால் ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து தானே வைத்திருக்கிறான்? எந்த முயற்சியும் காலமும் இடமும் பொருந்தாவிடில் வெற்றிபெறாது.  பாஜகவின் தொலைநோக்கிலான கூட்டணி முயற்சி கனிந்துவர சில காலம் தேவைப்பட்டிருக்கிறது. இந்தத் தாமதத்திற்கான முழுக் காரணமும் பாஜகவையே சாரும். எவ்வாறு கூட்டணிக்கு பாஜக காரணமோ, அதேபோல அதன் தாமதத்திற்கும் பாஜக தான் காரணம்.
தேசியக் கட்சியான பாஜக மாநிலத்தில் தன்னை நன்கு வளர்த்துக் கொண்டிருந்தால், இந்தக் கூட்டணி சற்று முன்னதாகவே சாத்தியமாகி இருக்கும். ஆனால், பாஜக தமிழகத்தில் இன்னமும் வளர வேண்டியுள்ளது. இப்போதைய கூட்டணி பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் அதிவிரைவான வளர்ச்சியால் தான் சாத்தியமாகி இருக்கிறது. பாஜகவை நெருங்க விழையும் கட்சிகள் தங்களுக்கு அதனால் லாபம் என்ன என்று சிந்திப்பது இயற்கை. அதற்கான தூண்டுதலை மோடியின் பிராபல்யம் அளித்தது.
ஆனால், மாநில பாஜக-வில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் இருந்தன. ஒருதரப்பு திமுகவுடன் சேர்ந்தால் சிரமமின்றி 10-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல முடியும் என்றது. இன்னொரு தரப்பு அதிமுகவுடன் சேர்ந்தால் அதிகபட்ச லாபம் இருக்கும் என்றது. இத்தகைய சிந்தனைப் போக்குகள் ஜனநாயக ரீயிலான ஒரு கட்சியில் இருக்கவே செய்யும். தவிர, தேசியத் தலைமையின் வழிகாட்டுதலுடன் தான் எந்த ஒரு முடிவையும் மாநிலத் தலைமை எடுத்தாக வேண்டிய நிலைமை. அவர்களோ ஆரம்பத்தில் சிரமமில்லாத கூட்டணி அமைக்க முடியுமா என்றே சிந்தித்தார்கள்.
இந்த சமயத்தில் தான் பாஜக-வின் நலம் விரும்பும் நண்பர்கள் குழு, பாஜக தமிழகத்தில் மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தது. அதேசமயத்தில் காந்தீய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் இக்கருத்தை பொதுமேடைகளில் பேசத் துவங்கினார். பாஜக-வின் நண்பர்கள் மாநிலத் தலைவர்களுடனான் சந்திப்புகளில் மாற்று அணியின் சாத்தியக் கூறுகளை விவாதிக்கத் துவங்க, அதற்கான கரு உருவாகத் துவங்கியது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்.
பாஜக-வின் மாநிலத் தலைமை தேசியத் தலைமையின் ஒப்புதலுடன் திமுக, அதிமுக அல்லாத கட்சிகளின் கூட்டணிக்கு ஆயத்தமானது. தமிழருவி மணியன் பாஜக-வின் தன்னிச்சையான தூதுவராக மதிமுக, தேமுதிக, பாமக தலைவர்களைச் சந்தித்து மாற்று அணியின் அவசியம் குறித்து பேசிவந்தார். இதில் முதலில் மதிமுக-விடம் இருந்து சாதகமான பதில் வந்தது. அதன் தலைவர் வைகோ தில்லி சென்று பாஜக உயர்தலைவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்டார்.
ஆனால், தேமுதிக, பாமக-வை சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆசைகாட்டுதல்கள், அன்பான எச்சரிக்கைகள், தனிப்பட்ட தொடர்புகளால், பாஜக பக்கம் இவ்விரு கட்சிகளும் நெருங்கத் தாமதம் ஆனது. மறுபுறம் திமுக-வும் தேமுதிக-வுக்கு வலைவீசி வந்தது. தேர்தல் அரசியல் பலகோடிகள் புரளும் வியாபாரமாகிவிட்ட சூழலில், கூட்டணி அரசியல் சார்ந்த முடிவுகளை எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, தேமுதிக, பாமக இரு கட்சிகளும் மாநிலத்தின் பல பகுதிகளில் சமபலத்துடன் உள்ள கட்சிகள். பாமக தலைவர் ராமதாஸ்- தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருவருக்கும் நல்லுறவும் இல்லை. இந்தச் சூழலில் அவர்களை ஒரே அணியில் இணைக்கும் முயற்சி சவாலானதாக இருந்தது.
ஆனால். பாமக தலைவரின் மகன் அன்புபுமணியும், தேமுதிக தலைவரின் மனைவி பிரேமலதாவும் தமிழக அரசியல் நிதர்சனத்தையும் பாஜக-வுடன் சேர்வதன் அவசியத்தையும் உணர்ந்திருந்தனர். அதனால் தான் ஆறு மாதம் பாடுபட்டதற்கு மார்ச் 20-ல் பலன் கிடைத்தது. தனித்தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த மதிமுக-வும் பாமக-வும் பாஜக பக்கம் வருவதற்கு, அக்கட்சிகளின் முந்தைய கூட்டணி அனுபவமும் ஒரு காரணம். வாஜ்பாய் தலைமையில் தே.ஜ. கூட்டணி ஆட்சி நடந்தபோது (1998- 2004) இக்கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதையும், இப்போதும் பாஜக தலைவர்கள் காட்டிய பெருந்தன்மையும் அவர்களை இயல்பாக தோழமைக் கட்சிகளாக்கின.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பல்வேறு ஜாதி சமுதாயங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்த நடத்திய சமூக நல்லிணக்க மாநாடுகளில் பங்கேற்ற பல அரசியல் தலைவர்கள் ஏற்கனவே பாஜக-வின் தொடர்பு எல்லைக்குள் வந்திருந்தார்கள். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம், பாமக-வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் போன்ற பலரது தொடர்பு இப்போது கூட்டணி அமைய உதவியது. பல்வேறு கட்சித் தலைவர்களுடனான தனிப்பட்ட நட்புறவைக் கொண்டிருந்த பாஜக நண்பர்களின் உதவியும் இதற்கு மிகவும் பயன்பட்டது. சுதேசி இயக்கத் தலைவர்கள் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, பேராசிரியர் ப.கனகசபாபதி, ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து போன்ற பலரது தனிப்பட்ட முயற்சிகளுக்கு கூட்டணியின் உருவாக்கத்தில் பெரும் பங்குண்டு.
இந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்ற பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், கே.என்.லட்சுமணன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் குழு விடாமுயற்சியுடன் பாடுபட்டது. கூட்டணிக்கு வரச் சம்மதிக்கும் ஒவ்வொரு கட்சியின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து, அவர்களின் நம்பிக்கையை இழக்காமல், அதேசமயம் அவர்களது நிர்பந்தங்களையும் புரிந்துகொண்டு நிதானமாக பாஜக குழு இயங்கியது. அதன் பலன் அழகிய  கூட்டணியாக இப்போது மலர்ந்திருக்கிறது. இதனை வெற்றிக் கூட்டணியாக்குவது இனிவரும் நாட்களில் கூட்டணித் தோழர்களின் உழைப்பில் தான் உள்ளது.
கூட்டணியில் இணைவது என்று மதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துவிட்டாலும், எந்த கட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்ற கேள்வி அடுத்த சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி என்ற முறையிலும், மக்களிடையே உள்ள விஜயகாந்துக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையிலும், தேமுதிக-வுக்கு 14 தொகுதிகள் என்று முடிவானது.
அடுத்து ஏற்கனவே சமுதாய அமைக்களை ஒருக்கிணைத்து இயங்கிவந்த பாமக-வுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தேமுதிக-வுக்கு அளித்த அதே எண்ணிக்கையில் தனக்கும் தொகுதிகள் வேண்டும் என்றது பாமக. இந்தக் கோரிக்கையால் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியானது. கூட்டணியின் சாதக பாதகங்களை விளக்கி, இறுதியில் பாமக-வுக்கு 8 தொகுதிகள் என்ற முடிவுக்கு ஒருவாறாக சம்மதம் பெறப்பட்டது.
பாஜக-வின் இயல்பான நண்பராக இருந்த வைகோ, அரசியல் சூழலின் கட்டாயங்களை உணர்ந்து எந்த கெடுபிடியும் இன்றி 7 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பார்வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, புதுவை ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு தொகுதிக்கு சம்மதித்தன. மீதமிருந்த (தமிழகம் மற்றும் புதுவை) 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடத் தீர்மானித்தது.
ஆக, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகிவிட்டது. இக்கூட்டணியின் தலைவர்களான வைகோ, விஜயகாந்த், ராமதாஸ்  ஆகியோர் மாநிலம் அறிந்த தலைவர்கள். இவர்களது மோடிக்கு ஆதரவான பிரசாரம் பாஜக கூட்டணிக்கு மிகவும் தெம்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.
தொகுதிகளின் எண்னிக்கை இறுதி செய்யப்பட்டாலும், எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பதைத் தீர்மானிப்பது அடுத்த சவாலாக இருந்தது. கூட்டணியின் லாபத்தைப் பெறுவதிலும், தனது இருப்பை உறுதிப்படுத்துவதிலும் எந்த ஒரு கூட்டணிக் கட்சியும் முனைவது இயற்கையே. இதில் ஒவ்வொரு கட்சியும் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்து இறுதியில் சமரசம் கண்டன. ஊடகங்களின் ஏளனமான விமர்சனங்களையும் நையாண்டிகளையும் தாண்டி, பொறுமையுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறது பாஜக. இப்போது தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளும் பாஜக தலைமையிலான கூட்டணியால் அதிர்ந்து போயிருப்பதாகத் தகவல்.

0 comments:

Post a Comment