Thursday 13 March 2014

வாக்குக்கு பணம் கொடுப்பது தொடர்பான விடியோ அல்லது புகைப்படங்கள் அடங்கிய சாட்சி ஆவணங்களை அனுப்ப மாவட்டம்தோறும் தனி மின்னஞ்சல் (இ-மெயில்) முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. வாக்களிக்க பணம் கொடுப்பது தொடர்பாக இதுவரை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், புகைப்படங்கள் உள்பட இன்னபிற ஆவணங்கள் இருப்பின் அவற்றை இந்த இ-மெயிலில் அனுப்பி வைக்கலாம். இந்த சாட்சி ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் வாக்களிக்க பணம் கொடுப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக தனி கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டாலும், குற்றச்செயல்கள் புரிவோரைத் தண்டிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இருந்தன.
ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய கட்சியினர் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்தப் புகார்களை ஆதாரத்துடன் நிரூபிக்கும் வகையில், அதற்கான சாட்சி ஆவணங்களை இ-மெயிலில் (மின்னஞ்சல்) அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
முகவரிகள் என்ன? மாவட்ட வாரியாக, 32 மாவட்டங்களுக்கும் இ-மெயில் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, சென்னை மாவட்டத்துக்கு chennai2014complaints@gmail.com என்ற இ-மெயில் தரப்பட்டுள்ளது. இதேபோன்று, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதனுடைய பெயருடன் 2014complaints@gmail.com என்ற வாசகத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை: இ-மெயில் மூலமாகத் தெரிவிக்கப்படும் புகார்கள் மற்றும் அதற்கான சாட்சி ஆவணங்களை பரிசீலித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
இதன் மூலம், வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்களிப்ப்பு-தினமணி.

0 comments:

Post a Comment