Tuesday 7 January 2014


லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் சந்தித்து தங்களின் அமைப்பில் சேர மூளைச்சலவை செய்ததாக தற்போது திடுக் தகவல் வெளியாகியிருக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பதில் உறுதியாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த இம்மாநில இளம் முதல்வர் அகிலேஷ் அரசின் சட்டம், ஒழுங்கு மற்றும் போலீசாரின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும் அளவிற்கு போய் விட்டது. இது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு டில்லி சிறப்பு படையினர் முஷாபர்நகர் விரைந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் உ.பி., மாநிலம் முஷாப்பர்நகர் பகுதியில் இரண்டு பிரிவினர் மோதிக்கொண்டனர். இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் பேர் வீடுகள் இழந்தனர். பலர், வாழ்ந்த பகுதியில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்னும் பலரும் தங்களின் இல்லங்களுக்கு திரும்பாமல் உள்ளனர்.

கடந்த மாதத்தில் உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி அரியானா மாநிலம் மெவாத் என்ற பகுதியில் ஹபீஸ் ரஷீத், ஷாகித் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் மதக்குருக்கள் ஆவர். இந்த இருவரும் டில்லியில் தாக்குதல் நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும் உளவுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. ஒரு போனை இடைமறித்து கேட்டபோது இந்த விஷயம் தெரிய வந்ததாக உளவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல முறை முஷாப்பர்நகர் சென்றதாகவும், இங்கு பலரிடம் தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பணியாற்றுமாறு சிலர் கேட்டனர். ஆனால் நான் மறுத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

முஷாபர்நகரில் வசிக்கும் முகம்மது ஷாகித், அப்துல்சுவாப் உள்ளிட்ட 3 பேர் இதற்கான பணச்செலவு செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரிக்க டில்லியில் இருந்து சிறப்பு செல் பிரிவு போலீசார் முஷாப்பர் நகர் விரைந்துள்ளனர்.

முன்கூட்டியே ராகுல் தகவல்: கலவரம் தொடர்பாக ஒரு கூட்டத்தில் ராகுல் பேசுகையில் முஷாப்பர்நகரில் கலவரத்தில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர் என கூறியிருந்தார். இதற்கு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது முக்கிய பிரச்னை ஆகும். மத்திய அரசு இது குறித்து சிறப்பு விசாரணை நடத்த வேண்டும், இதற்கு அரசு பதில் சொல்லி தெளிவுப்படுத்த வேண்டும் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவேட்கர் கூறியுள்ளார்.

சரியாக சொன்னார் ராகுல்: இது குறித்து காங்., செய்தி தொடர்பாளர் திக்விஜய்சிங் கூறுகையில்: ராகுல் சொன்னது சரியா போச்சு, அது நிரூபிக்கப்பட்டுள்ளது. எது உண்மையோ அதையே ராகுல் பிரதிபலித்துள்ளார் என்றார்.

Click Here

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment