Monday 6 January 2014


மூக்கணாங்கயிறு

பெரம்பலூர், : பெரம்பலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளைகள், பசுக்களுக்கு கட்டும் புத்தம்புது மூக்கணாங் கயிறு மற்றும் சலங்கைகள் விற்பனை களை கட்டியுள்ளது.
பொங்கல் என்றதும் செங்கரும்பு, மஞ்சள் நம் நினைவுக்கு வருவது போல், உழவர் திருநாள் என்றால் உழவர்களின் உற்றத் தோழனாகத் திகழும் காளை மாடுகளும், இல்லந்தோறும் உள்ளம் மகிழும் பசுக்களும் கட்டாயம் நம் நினைவுக்கு வரும்.
பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் புத்தம் புது பானையில் சமைத்த பொங்கலை படையலிட்டு முதலில் வயலை உழுத காளை மாடுகளுக்குத்தான் ஊட்டி விடுவர். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளை மாடுகளை பெருமைப்படுத்த மாடுகளின் கொம்புகளை சீவி, வண்ணமடித்து, குளிப்பாட்டி வண்ண வண்ண பொட்டுகள் இட்டு, கழுத்தில் விதவிதமான சலங்கைகள் கட்டி அலங்கரிப்பது வழக்கம்.
மேலும், மாடுகளுக்கு வழக்கமாக அணிவிக்கப்பட்டிருக்கும் பழைய மூக்கணாங் கயிறுகளை மாற்றிவிட்டு, புத்தம் புது கயிறுகளை வாங்கி அணிவிப்பர். இதன் படி, பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாடுகளுக்கு அணிவிக்கும் சலங்கைகள், மாட்டு வண்டிக்கும், கொம்புகளுக்கும் பூசக்கூடிய வண்ண வண்ண பெயிண்டுகளோடு, மூக்கணாங் கயிறுகளின் விற்பனையும் பெரம்பலூர் நகரில் களை கட்டியுள்ளது. இங்குவிற்கப்படும் மூக்கணாங் கயிறு, சலங்கைகள் ஆகியவற்றை பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தோல் பட்டைகளில் இணைத்துள்ள விதவிதமான சலங்கைகள், கழுத்துக் கயிற்றில் தொங்கவிடும் சலங்கைகள் என விதவிதமான சலங்கைகள் விற்பனைக்காக கடைகளின் முன்பு தொங்கவிடப்பட்டுள்ளன.
ஊருக்கே  உணவுத் தானியங்களை உற்பத்தி செய்ய, உழைத்து வாழும் தங்களுக்குத் தோள் கொடுக்கும் தோழனாக விளங்கிடும் காளைகளுக்கும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் அன்றாடம் சத்துள்ள அமிர்தமாக பாலைத் தரும் பசுக்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அவற்றை அலங்கரிக்கும் பணியில் உழவர்கள் இப்போதே ஈடுபட்டுள்ளனர்.

நன்றி-தினகரன்.

0 comments:

Post a Comment