Friday 2 May 2014


டீசல், உதிரிப் பாகங்கள் விலையேற்றம், காப்பீடு பிரீமியம் உயர்வு உள்ளிட்டவற்றால் லாரிகளை இயக்குவதில் ஏற்பட்டு வரும் சிரமங்களைச் சமாளிக்க லாரி வாடகையை 30 சதம் உயர்த்திப் பெற்றிட தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்து அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த வாடகை உயர்வுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் கே.நல்லதம்பி வெள்ளிக்கிழமை நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு கடந்த 2013, ஜனவரி 1ஆம் தேதி முதல் 2014, ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் டீசல் விலையை 21 முறை உயர்த்தியது. இதனடிப்படையில், ஏறத்தாழ டீசல் லிட்டருக்கு ரூ.9 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த ஓராண்டில் லாரிகளுக்கான டயர் விலை 16 சதவீதம், காப்பீட்டு பிரீமியம் தொகை 20 சதமும், உதிரிப் பாகங்களின் விலை 10 சதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிமென்ட் ஆலைகள் போன்ற பெரிய தொழில்சாலைகளில் அரசின் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மிக அதிகமான எடையை லாரிகளில் ஏற்றிட கட்டாயப்படுத்தப்படுகிறது. அவ்வாறு லாரிகளில் அதிகப்படியான எடை ஏற்றுவதால் லாரிகளின் உதிரிப் பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமன்றி, விபத்துகள் நிகழவும் காரணமாகிறது. தவிர, இந்த அதிகப்படியான சுமை காரணமாக லாரிகளுக்கு சரக்குகள் கிடைப்பதிலும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது.
தொடரும் இந்த லாரி போக்குவரத்துத் தொழில் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 30ஆம் தேதி நிலவர லாரி வாடகை தொகையில் இருந்து 30 சதம் உயர்த்திப் பெற தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. எனவே, லாரி புக்கிங் ஏஜெண்டுகள், சரக்கு உற்பத்தியாளர்கள், வாங்குவோர், விற்போர் என அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து, லாரி வாடகையை 30 சதம் உயர்த்தி வழங்கி லாரி போக்குவரத்துத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்.
முதல்வருக்கு நன்றி..: லாரி போக்குவரத்துத் தொழிலில் நிலவும் ஓட்டுநர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஓட்டுநர்களுக்கான கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதை தளர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இதை நிறைவேற்றும் வகையில், எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் 8ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் எழுதப் படிக்கத் தெரிந்த லாரி ஓட்டுநர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, 8ஆம் வகுப்பு தேர்வு எழுதி சான்றிதழ் பெற முடியும். தொடர்ந்து, அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிடவும் வழிவகை ஏற்படும் என்பதால், தமிழக அரசின் இந்த அறிவிப்பு லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி என்றார் அவர். v.kalathur seithi .

நன்றி-தினமணி.

0 comments:

Post a Comment