Thursday, 1 May 2014

church enjambakkam1 small
சென்னை ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையில் புனித தோமையர் ஜெபவீடு உள்ளது. இந்த ஜெபவீடு அந்த பகுதியின் இந்து மீனவ சமுதாயத்தினருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தாம்பரம் சிவில் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

 ஈஞ்சம்பாக்கம் சர்ச்
இந்த நிலையில் கடந்த 27.4.14 அன்று ஜெபவீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் ஜெபவீட்டை விரிவுபடுத்தி புதிய கொட்டகை அமைக்கும் பணியில் சர்ச் நிர்வாகம் ஈடுபட்டது. இதற்காக வெளியூர்களிலிருந்து வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவலாயத்தில் கூடியிருந்தனர். இதனை அறிந்த இந்து மீனவ சமுதாய மக்கள் ஒன்று கூடி சர்ச் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து மீனவ சமுதாயத்தை சார்ந்த ஆண்களும் பெண்களும் அதிகளவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த போலீசார் அங்கு உடனடியாக விரைந்து வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்தனர், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே தடியடி நடத்தி மீனவ மக்களை விரட்டி அடித்தனர். இதில் பல பெண்கள் காயம் அடைந்தனர். இது குறித்து அப்பகுதி ஊர்மக்கள் கூறுகையில் //இந்த இடத்தில் ஈஸ்டர் கொண்டாட தற்காலிகமாக பந்தல் அமைக்க மட்டுமே நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. புதிய ஓலை கொட்டகை அமைப்பதன் மூலம் அவர்கள் எங்கள் நிலத்தை ஆக்கரமிக்கின்றனர்// என்றனர்.

பிரச்சினையின் வீரியத்தை புரிந்து கொண்ட சோழிங்கநல்லூர் தாசில்தார் திரு. ரவிச்சந்திரன் அவர்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும் இருதரப்பினரையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு சர்ச் நிர்வாகத்தினர் வர மறுத்துவிட்டனர். சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் உள்ள பாழடைந்த கொட்டகையை அகற்றி புதிய கொட்டகை அமைக்க யாருடைய அனுமதியையும் பெற தேவை இல்லை என்று ஃபாதர் மார்ட்டின் ஜோசப் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நியாயமற்ற அடாவடி சர்ச் தரப்பினர் மிரட்டலுக்கு அடிப்பணியக்கூடாது என்று வலுவாக இந்து மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் வேறு வழியின்றி சர்ச் நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும், மீண்டும் பிரச்சினை வராமல் தடுப்பதற்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..

இந்த சம்பவம் குறித்து அறிந்து கொள்ள வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தினர், இந்து முன்னணி நிர்வாகி திரு. சத்ய நாராயணனுடன் ஈஞ்சம்பாக்கம் சென்று, அப்பகுதி வாழ் மக்களை நேரில் சந்தித்தனர். ஈஞ்சம்பாக்க மீனவ சமுதாய பிரதிநிதி திரு. மதியழகன் அவர்கள் நமது குழுவுக்கு அளித்த நேர்காணலில் இந்த சர்ச் இடப்பிரச்சினையின் வரலாற்றை தெளிவாக விளக்கினார்.

 mathialgan enjambakkam small
1965ல் ஈஞ்சம்பாக்கத்தில் திரு. அருளப்பா என்ற பாதிரியார் மீனவர்களுக்கு பண உதவி மற்றும் பொருளுதவி கொடுத்து உதவ இந்த ஊருக்கு வந்தார். இப்பணிகளுடன் சேர்த்து எங்களுக்காக பிரார்த்தனை செய்ய ஒரு சிறிய இடத்தை கேட்டார். நாங்களும் கொடுத்தோம். இங்கிருக்கும் பெரும்பாலான மீனவர்கள் இந்துக்களே. அவருடைய ஜபத்தில் பெரும்பாலும் எங்கள் சமுதாய மக்கள் தான் கலந்து கொள்வர். ஜபக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பழைய கம்பளி,பனியன் மற்றும் பால் பவுடர் இலவசமாக கொடுத்து உதவுவார். சில மாதங்களுக்குப் பிறகு திரு. அருளப்பா அவர்களை சாந்தோம் சர்ச்சுக்கு மாற்றிவிட்டனர். அவருக்குப்பிறகு வந்த சர்ச் நிர்வாகம் இந்த இடத்தில் உங்களுக்காக பள்ளிக்கூடம் அமைக்கப்போகிறோம் என்றனர். நாங்களும் இவர்களின் நிலமோசடி மற்றும் மதமாற்ற சதியை புரிந்துகொள்ளாமல் எங்கள் சமுதாய குழந்தைகளின் படிப்பை நினைத்து இந்த இடத்தைக் கொடுத்தோம். கொடுத்த இடத்தில் 1980 முதல் 1987 வரை சுமார் ஏழு ஆண்டுகாலம் மட்டுமே அந்தப் பள்ளி இயங்கியது. நானும் இந்தப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினேன். திடீரென போதிய இடவசதி இல்லை என்ற காரணத்தைக்காட்டி பள்ளியை வெட்டுவாங்கண்ணி என்ற இடத்திற்கு மாற்றிவிட்டனர். பள்ளிக்கூடத்தை மாற்றியபின் அந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்ட முயற்சித்தனர். இதனை நாங்கள் தடுத்தோம். ஆனால் மீனவ மக்களுக்காக ஜபம் செய்வதற்காக சிறிய அளவிலான இடமாவது தாருங்கள் என்று எங்களை பாதிரியார் நச்சரிக்க இவர்களின் சூழ்ச்சியை அறியாது நாங்களும் ஒத்துக்கொண்டோம். காலம் செல்லச், செல்ல சத்தமில்லாமல் ஓலைக்குடிசையில் இயங்கிய ஜெபக்கூடம் பெரியளவிலான கட்டிடமாக எங்களின் எதிர்ப்பையும் மீறி உருவானது என்று திரு. மதியழகன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த புனித தோமையர் சர்ச் வந்த பிறகு இப்பகுதியில் மதமாற்றங்கள் நடந்து வருகின்றது. அமெரிக்காவிலிருந்து உங்களுக்கு உதவி பெற்றுத் தருகிறோம். கட்டுமரம்,மீன் வலை வாங்கித்தருகிறோம் என்று ஆசை வார்த்தை சொல்லி பலரையும் மதம் மாற்றியுள்ளனர். கிருஸ்துவத்திற்கு மதம் மாறியவர்கள் மூலம் எங்களின் பாரம்பரியத்தை மாற்ற முயல்கின்றனர். மேலும், எங்கள் பாரம்பரியத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத புதிய பழக்க வழக்கங்களை திணிக்கின்றனர்.

கிருஸ்துவ மதபோதகர்கள் இந்து மீனவ பகுதிகளில் செய்யும் மதமாற்ற செயல்பாடுகளை நாங்கள் தடுக்க நினைத்தாலும் இவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி மதமாற்ற மோசடி வலையில் சிக்கி சில அப்பாவிகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறி விடுகின்றனர். சில நேரங்களில் இதனால் பிரச்சினைகளும் வருகின்றன என்றார். சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார் திரு.மதியழகன். நாங்கள் ஆடிமாதத்தில் கூழ்வார்க்கும் திருவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம். அந்தவேளைகளில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பேண்டு இசை முழங்க கிருஸ்துவர்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த கிறிஸ்தவர்கள் கலவர நோக்கத்தோடு நடத்தும் பேண்டு ஊர்வலம் நம் இந்து மீனவர்களின் கடுமையான எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது.

இப்படி மதமாற்ற நோக்கத்துடன் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் தொடர் தாக்குதலால் அமைதி இழந்த இந்த ஊர் மீனவர்கள் இந்த சர்ச்சைக்குறிய ஜெபவீட்டை அப்புறப்படுத்தாமல் ஓயப்போவதில்லை என்று உறுதிபட கூறினர்.

தொடர்ச்சியாக மதமாற்றத்திற்காக இங்கு கிறிஸ்தவர்கள் ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறார்கள். இந்த பணம் வெளிநாடுகளிலிருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உதவிக்காக வந்த பணம். இந்த பணத்தை மோசடி செய்து அதில் வானளாவிய உயரத்திற்கு சர்ச்களை கட்டி மேலும் வெளிநாடுகளிலிருந்து பண உதவியை பெற்று வருகின்றனர் என்று சொன்னார் ஒரு மீனவ பிரமுகர்.

இந்த சர்ச் நிர்வாகத்தினர் அரசிடம் அனுமதிப் பெற்று கிருஸ்துவ விழாக்களை கொண்டாடுகின்றனர். ஆனால் எங்களின் இடத்தை ஆக்கிரமிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பெரிய பந்தல் அமைக்கின்றனர். இனி இதுபோல் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவதோடு இந்த கட்டிடத்தை அகற்றும் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கும் நாங்கள் தயாராகிவிட்டோம் என்றார் மதியழகன். இந்தப் பகுதியில் இனி மேலும் மதமாற்றம் நடக்காமல் தடுக்க இந்தப்பகுதி இந்து மீனவ குழந்தைகளுக்கு சமயவகுப்புகள் நடத்தவேண்டிய அவசியத்தையும் தெரிவித்தார்.

மீனவர்களின் இடத்திற்கான பாரம்பரிய உரிமையை சர்ச் பிடியிலிருந்து மீட்டு மீனவர்களிடமே கொடுக்க வேண்டும். அதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் அவர்களுக்கு உதவவேண்டும். பாதிக்கப்படும் நம் மீனவ சொந்தங்களின் போராட்டத்தில் நாமும் பங்கெடுப்போம். v.kalathur seithi 

0 comments:

Post a Comment