காசோலை பயன்பாட்டில், ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள, சி.டி.எஸ்., என்ற புதிய நடைமுறை, இன்று முதல் தீவிரமாக கடைபிடிக்கப்பட உள்ளது. இதனால், சி.டி.எஸ்., திட்டத்திற்கு மாறாத காசோலைகளை, வங்கி களில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, அதிக நாட்கள் காத்திருக்க வேண்டும்.
பழைய காசோலை திட்டத்தின் படி, பொது மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் காசோலையில், தேதி, வாடிக்கையாளர் கணக்கு எண், வங்கியின் பெயர், சின்னம், குறியீட்டு எண் போன்றவை வங்கிக்கு வங்கி மாறுபடும். காசோலையின் நீள, அகலத்தில் கூட, மாற்றம் இருக்கும். காசோலைகளை வங்கியில் செலுத்தும் போது, வங்கி ஊழியர் மூலம், ரிசர்வ் வங்கி கருவூலத்திற்கு சென்று, அங்கிருந்து, மற்ற வங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும். இதனால், காசோலைகள் சரிபார்த்தல் மற்றும் பண பரிவர்த்தனையில், காலதாமதம் ஏற்பட்டது. முறைகேடு நடக்கவும், தொலைந்து போகவும் வாய்ப்பு இருந்தது. எனவே, சில ஆண்டு களுக்கு முன், 'பண பரிவர்த்தனையில், மோசடியை தடுக்கவும், காலதாமதத்தை குறைக்கவும், காசோலையின் தரத்தை உறுதிப்படுத்த, வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, 2008ல், டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில், சி.டி.எஸ்., (செக் டிரங்கேஷன் சிஸ்டம் - cheaque truncation system), என்ற புதிய காசோலை திட்டத்தை, வங்கிகள் அறிமுகம் செய்தன. அதன்படி, வங்கியில் செலுத்தப்படும், சி.டி.எஸ்., காசோலைகள், ரிசர்வ் வங்கி மூலம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ஊழியர் மூலம் அனுப்புவதற்கு பதில், அதை, 'ஸ்கேன்' செய்து, 'நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா - என்.பி.சி.ஐ.,' என்ற ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனத்திற்கு கம்ப்யூட்டர் சர்வர் மூலம் அனுப்பப்படும். அங்கிருந்து, சி.டி.எஸ்., காசோலைகளின், 'இமேஜ்' சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, கம்ப்யூட்டர் சர்வர் மூலம் அனுப்பப்படும். வங்கிகள், அதை சரிபார்த்து, எந்த பிரச்னையும் இல்லையெனில், வாடிக்கையாளர் கணக்கில், பணத்தை வரவு வைக்கும்.
கணக்கில் பணம் இல்லை; பிழை போன்ற காரணங்களால், காசோலை 'ரிட்டர்ன்' ஆனால், அந்த விவரம், என்.பி.சி.ஐ., மூலம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்கப்படும். பின், அந்த சி.டி.எஸ்., காசோலை வங்கிகள் மூலம், வாடிக்கையாளர்களிடம் திரும்ப அளிக்கப்படும். முதல் கட்டமாக, டில்லியில் அறிமுகம் செய்யப்பட்ட, சி.டி.எஸ்., காசோலை திட்டத்திற்கு, அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து, நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. டில்லியை தொடர்ந்து, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில், 2010ல், சி.டி.எஸ்., காசோலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 'வாடிக்கையாளர்கள், சி.டி.எஸ்., காசோலை திட்டத்திற்கு மாற வேண்டும்' என, வங்கிகள், பலமுறை அறிவுறுத்தியும், ஒரு சில வாடிக்கையாளர்கள், இன்னும் புதிய திட்டத்திற்கு மாறவில்லை. இந்நிலையில், 'மே, 1ம் தேதி முதல் சி.டி.எஸ்., காசோலை திட்டத்திற்கு மாறாத காசோலைகள், வங்கிகளுக்கு வரும் போது, திங்கள் மற்றும் வெள்ளி என, வாரத்திற்கு, இரண்டு நாட்கள் மட்டும், பணப் பரிவர்த்தனைக்காக, ரிசர்வ் வங்கி கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். அக்டோபர், 1ம் தேதி முதல், வாரத்திற்கு ஒரு முறை மட்டும் அனுப்ப வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், சி.டி.எஸ்., திட்டத்திற்கு மாறாத காசோலைகளை, இன்று முதல், வங்கிகளில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுத்துறை வங்கியின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'பழைய காசோலைகளை, வங்கி கிளைகளில் கொடுத்து, புதிய சி.டி.எஸ்., காசோலைகளை பெற்று கொள்ளலாம்' என, பல முறை அறிவுறுத்தப்பட்டது. சில வாடிக்கையாளர்கள், இன்னும் இந்த திட்டத்திற்கு மாறவில்லை. அடுத்த ஆண்டு முதல், சி.டி.எஸ்., காசோலை மட்டும் நடைமுறையில் இருக்கும். பழைய முறையில், காசோலையை வங்கியில் செலுத்தினால், பண பரிவர்த்தனைக்கு, மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். சி.டி.எஸ்., முறையின் படி, இரு தினங்களில், பண பரிவர்த்தனை முடிந்து விடும். இத்திட்டத்தை, ம.பி., மகாராஷ்டிரா, உ.பி., பஞ்சாப் மாநிலங்களில், அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
சிறப்பு என்ன?
'சி.டி.எஸ்., 2010 ஸ்டேண்டர்டு' என்று, அச்சிடப்பட்ட காசோலையில், தேதி, கணக்கு எண் போன்றவை எழுதுவதற்கு, தனித்தனி கட்டங்கள் உள்ளன. அனைத்து வங்கிகளின் காசோலையும், ஒரே நீள, அகலத்தில் இருக்கும். காசோலையில், வங்கியில் கணக்கு வைத்துள்ளவரின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். இந்த காசோலையை, 'கலர் ஜெராக்ஸ்' எடுக்கும் போது, போலி என, கண்டுபிடிக்க, தனியாக, ரகசிய குறியீட்டு எண்ணும் அச்சிடப்பட்டுள்ளது. v.kalathur seithi
நன்றி-தினமலர்.
0 comments:
Post a Comment