Wednesday, 27 August 2014

உலகளாவிய பயங்கரவாதம்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-1
இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சந்திக்கும் பெரும் சவாலாக இருப்பது பயங்கரவாதம். உலகளாவிய பயங்கரவாதம் பெருகிக்கொண்டே போகிறது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பித்த இஸ்ரேல்-அரபு பிரச்சனை இன்னும் முடிவு பெறாமல் இருப்பதற்கு இந்த பயங்கரவாதம் ஒரு காரணம். அதே போல இரான் – இராக் நாடுகளுக்கு இடையே 1980-ல் ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதும் பயங்கரவாதத்தினால்தான். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் பயங்கரவாதத்தினால் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பயங்கரவாதம் ஒரு மாபெரும் பிரச்சனையாக இருக்கின்றது. கிழக்கு நாடுகளும் விதிவிலக்கல்ல. நமது நாட்டிலிருந்து பிரிந்த பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் பயங்கரவாதச் செயல்கள் நடக்காத நாட்களே கிடையாது. ஆஃப்கானிஸ்தான், சிரியா, இராக், உக்ரைன், பாலஸ்தீன் என்று உலகில் பல இடங்களில் பயங்கரவாதம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
இந்தியாவில் பயங்கரவாதம்
நமது இந்தியாவும் பயங்கரவாதத்தினால் மிகவும் கொடுமைகளையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில், பாரதப் பிரிவினையின் போது ஆரம்பித்த பயங்கரவாதப் பிரச்சனை இன்று வரை தீர்ந்தபாடில்லை. காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், நமது நாட்டைச் சிதறடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில், தன்னுடைய மண்ணில் தான் வளர்த்து வரும் பயங்கரவாத இயக்கங்கள் மூலம் பல தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம்; பல்லாயிரக்கணக்கானோர் வாழ்நாள் முழுவதும் துன்பமுறும் வகையில் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். லஷ்கர்-இ-தையபா, ஜமாத்-உத்-தவ்வா, ஜெயிஷ்-இ-முகம்மது போன்ற இயக்கங்கள் மூலமாக பாகிஸ்தானும் பங்களா தேஷும் நமது நாட்டின் மீது பயங்கரவாதத்தை ஏவி விடுகின்றன; ஆஃப்கானிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அல்-கைதா இயக்கமும் அவ்வப்போது நமது நாட்டைக் குறிவைத்து இயங்குகிறது.
நமது நாட்டில் இருக்கும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம், இந்தியன் முஜாஹிதீன், அல் உம்மா போன்ற பல உள்நாட்டு அமைப்புகளும் அன்னிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக அமைதியாக இருந்துகொண்டிருந்த இந்திய முஸ்லிம் மக்களிடையே இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருக ஆரம்பித்ததற்கு இந்த உள்நாட்டு அமைப்புகளே காரணம். அன்னிய இயக்கங்களால் ஊக்குவிக்கப்பட்டு வரும் இந்த உள்நாட்டு அமைப்புகள், முஸ்லிம் மக்களிடையே அடிப்படை வாதத்தையும், மாற்று மதத்தினர் மீதான துவேஷத்தையும், பிரச்சாரத்தின் மூலம் பெருக்கி வருகின்றன. இதனால், மக்களிடையே நிலவி வந்த மதநல்லிணக்கம் குறைந்து பிணக்கங்கள் அதிகமாகி வருகின்றன. ஆங்காங்கே மத வன்முறைகள் வெடிப்பது வாடிக்கையாகிவிட்டது.
இந்தியா சந்திக்கும் புதிய பிரச்சனை
இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருகப் பெருக, இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களிடம் பயங்கரவாதத்தின் மீதான கவர்ச்சி அதிகரித்து வருகின்றது. அந்தக் கவர்ச்சியை நாடெங்கும் உள்ள முஸ்லிம் அமைப்புகள் தூபம் போட்டு வளர்த்து வருகின்றன. இதன் விளைவாக, இந்தியாவிலிருந்து முஸ்லிம் இளைஞர்கள் சிரியா, இராக் போன்ற இடங்களில் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து வருகின்றனர். காஷ்மீர், மஹாராஷ்டிரம், மேற்கு வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் அந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இராக் நாட்டில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எல். (ISIL - Islamic State of Syria and Levant) என்கிற இயக்கத்திலும் இந்திய இளைஞர்கள் சேர்ந்துள்ளதாக உளவுத்துறையினர் தெரிவிக்கின்றனர். காஷ்மீரத்திலிருந்து 26 வயதான அதில் ஃபயாஸ் என்கிற இளைஞன் சேர்ந்துள்ளான். அவனைப் போலவே, மஹாராஷ்டிரா, கேரளா, ஆகிய மாநிலங்களிலிருந்து 10 இளைஞர்கள் இஸ்லாமிய காலிஃபேட் அமைக்க உதவும் எண்ணத்துடன் அந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள் என்றும் உளவுத்துறை சொல்கிறது. இந்த இளைஞர்கள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருந்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
ஏன், தமிழகத்திலிருந்துகூட சில இளைஞர்கள் சென்று அவ்வியக்கங்களில் சேர்ந்துள்ளனர். கடலூரைச் சார்ந்த குல் முகம்மது மரக்காச்சி மரைக்காயர் என்பவர் முஸ்லிம் இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார். இவர் சிங்கப்பூரிலிருந்து வந்து தற்போது கடலூரில் இருக்கிறார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த உஸ்மான் அலியின் 37 வயது மகன் ஹாஜா ஃபக்ருதீன் தனது மனைவி ஆயிஷா சித்திக்கா, மூன்று குழந்தைகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு இராக் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். அதன் பிறகு தன் தந்தைக்கு ஃபோன் மூலம் தெரிவித்துவிட்டு இணைப்பையும் துண்டித்து விட்டார். இவர் சிங்கப்பூரில் சூப்பர் மார்கெட் ஒன்றில் நல்ல பணியில் இருந்துள்ளார். இவருக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி வைத்தவர் மரைக்காயர். சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் இந்த ஹாஜா ஃபக்ருதீனால் மூளைச் சலவை செய்யப்பட்டு சிரியாவில் ஜிகாதிகளாகப் பணிபுரிவதாகவும் செய்தி வந்துள்ளது.
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-3
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஜிகாதில் ஈடுபடும் நோக்கத்துடன் இராக் செல்ல முற்பட்ட ஐந்து இளைஞர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கான ஆதரவு பெருமளவில் அதிகரித்து வருவது காவல்துறைக்குக் கவலை அளித்து வருகிறது. சென்ற மாதம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சுமார் 25 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் சின்னம் குறிக்கப்பட்ட பனியன்களை அணிந்து கொண்டு பெரிய மசூதி வாசலில் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிதும் இடம் பெற்றது. அது பின்னர் காவல்துறையின் கவனத்திற்குச் சென்று விசாரணை செய்யப்பட்டு, அப்துல் ரகுமான், ரில்வான் என இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அப்துல் ரகுமான் அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு வியாபாரம் நிமித்தமாகப் பயணம் செய்பவராம். அவரின் வேண்டுகோளின்படி, திருப்பூரில் உள்ள ஃபைய்ஸூர் ரகுமான் என்கிற இமாம்தான் அந்த பனியன்களை அனுப்பியிருக்கிறார். அவரையும் காவல்துறைக் கைது செய்தது. ஆயினும், அரசு தரப்பு சரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்காததால், அவர்கள் மூவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
இதனிடையே உத்திரப் பிரதேசம் லக்னோவில் உள்ள தருல் உலூம் நத்வா என்கிற இஸ்லாமிய நிறுவனத்தின் தலைவரான மௌலானா சையத் சல்மான் ஹுஸ்ஸைனி நத்வி என்பவர், இஸ்லாமிய காலிஃபேட் நிறுவுவதற்காக இராக் மற்றும் சிரியாவில் போரிட்டுக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக இந்தியாவிலிருந்து 5 லக்ஷம் சன்னி முஸ்லிம் இளைஞர்களை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவர் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களால் பெரிதும் போற்றப்படும் இஸ்லாமிய அறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்த மாதிரியான இமாம்களும், மௌலானாக்களும் இளைஞர்களைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்வதும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இவர்களது பேச்சினல் கவரப்பட்டு இராக் செல்லத் தயாரக இருப்பதும் இந்திய அரசாங்கத்திற்கும், உளவுத்துறை மற்றும் காவல்துறைகளுக்கும் பெரும் சவாலான பிரச்சனையாக இருக்கின்றது.
உலகின் பொது பிரச்சனை
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-4
தங்களுடைய மத நூலையும் மதக் கோட்பாடுகளையும் சுட்டிக்காட்டி, அடிப்படைவாதம் புரிந்து, மூளைச் சலவை செய்து, மௌலானாக்கள் இளைஞர்களைத் தீவிரவாதப் பாதையில் வழிநடத்திச் செல்வது உலகெங்கும் நடந்து வருகின்றது. பல நாடுகளிலிருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதத்தின்பால் வசீகரிக்கப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கைதா, போகோ ஹராம் போன்ற இயக்கங்களில் சேர்ந்து ஜிகாதில் ஈடுபட்டு வருகின்றனர். உலகையே இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்பதே இந்த இயக்கங்களின் முதன்மையான குறிக்கோள். அந்த நோக்கத்தில்தான் இவர்கள் உலகின் பல பகுதிகளில் ஜிகாத் என்னும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வருகின்றனர். உலகில் ஜனநாயக முறைப்படி இயங்கி வரும் நாடுகளில் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்கள் மூலம் வஹாபிய தீவிரவாத கலாச்சாரம் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது. இதுவே இன்று உலக நாடுகள் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.
பயங்கரவாத இயக்கங்கள் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் பல வருடங்களாகத் தொடர்ந்து பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு, அவர்களுக்கு நிதியுதவியும், ஆயுத உதவியும் எவ்வாறு கிடைக்கிறது? என்ன மாதிரியான ஆயுதங்கள் இவர்களுக்குக் கிடைக்கின்றன? இவர்களுக்கு உதவுபவர்கள் யார், யார்? ஒவ்வொரு இயக்கத்திற்கும் தொடர்பு உண்டா? இந்த மாபெரும் வலைப்பின்னலில் தொடர்புள்ள நாடுகளும், பிரமுகர்களும் யாவர்? இந்தக் கேள்விகளுக்கெல்லம் பதில் தேடும் முகமாக ஆராய்ந்து பார்க்கும்போது, நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது. உடல் சில்லிட்டுப் போகிறது; மனம் மரத்துவிடுகிறது. இந்த பயங்கரவாதத்திலிருந்தும் அதை ஊக்குவிக்கும் மரண வியாபரிகளிடமிருந்தும் இவ்வுலகம் தப்பிக்குமா என்கிற சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போகிறது.
ஆயுதங்களைக் கடத்தி விற்கும் ராட்சத வியாபாரிகள்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-6
உலகெங்கும் இருக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்குப் பலவிதமான ஆயுதங்களைக் கடத்தி விற்பனை செய்வதற்கென்று ராட்சத வியாபாரிகள் குழு ஒன்றும் இயங்கி வருகின்றது. சர்வதேச அளவில் சட்டத்தின் படியும் சட்டத்திற்குப் புறம்பாகவும் இந்த வியாபரிகள் இயங்கி வருகிறார்கள். இவர்களில் முக்கியமானவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஃபரேஸ் எம் மன்னா (FARES M MANNA): மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இவர் இயங்கி வருகிறார். பல்கேரியா, க்ரொயேஷியா, உக்ரைன், அஸர்பைஜான், மோல்டோவா ஆகிய நாடுகளில் உள்ள கள்ள ஆயுத மார்கெட்டுகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இயங்கி வருகிறார். அல்- ஷப்பாப் (AL-SHABBAB) போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு இவர் ஆயுதங்கள் வழங்கி வருகிறார்.
முகம்மது சையத் (என்கிற) ஆடம் (MOHAMMED SAID ALIAS ATOM): சோமாலியா நாட்டில் சனாக் என்கிற இடத்தில் ஒரு சிறிய பயங்கரவாத குழுவை நடத்தி வருகிற இவர், யேமன் மற்றும் எரித்ரியா ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வந்து அல் ஷப்பாப் இயக்கத்திற்கு வழங்கி வருகிறார்.
ஆத்னன் கஷோக்கி (ADNAN KHASHOGGI): இவர் சௌதி அரேபியாவில் ஆயுத வியாபாரியாக இருந்து பின்னர் தொழிலதிபராக மாறியவர். 1985 முதல் 1987 வரை அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வந்து இரானுக்கு வழங்கியவர். எண்பதுகளில் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டவர். இப்போதும் மொரோக்கோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்துகொண்டே ஆயுத வியாபரிகளுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துபவராகச் செயல்பட்டு வருகிறார்.
செமியான் மொகிலெவிச் (செமிஒன் மொகிலெவிச்) : உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவரான இவர் “தாதாக்களின் தாதா”(Boss of Bosses) என்று அழைக்கப்படுகிறார். ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும் கடத்துவதற்காகவே போலி நிறுவனங்களை முன்னிறுத்தி அவைகள் மூலம் செயல்படுகிறார். உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் முக்கியமான அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, ஸ்லொவேகியா, போலந்து ஆகிய நாடுகளின் வழியாக இயங்கி வருகிறார்.
விக்டர் பௌட் (VIKTOR BOUT): ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவரான விக்டர் பௌட், கடந்த 15 ஆண்டுகளாக உலகில் பயங்கரவாதம் நடந்துகொண்டிருக்கும் அனைத்து இடங்களுக்கும் ஆயுதங்கள் வழங்கி வருகிறார். பயங்கரவாத இயக்கங்கள் எப்போது எந்தவிதமான ஆயுதங்கள் கேட்டாலும் உடனே ஏற்பாடு செய்து கொடுப்பதில் வல்லவர் இவர். அந்த அளவுக்கு இவருடைய தொடர்புகளின் வலைப்பின்னல் விரிந்து பரந்து உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பயங்கரவாத இயக்கத்தவர்கள் இவரை “தபால் காரர்” (The Mailman) என்று அழைப்பது வழக்கம்.
ஸ்லொபோதன் தெஸிக் (SLOBODAN TESIC): செர்பியாவைச் சேர்ந்தவரான இவர், லைபீரியா, இராக், லிபியா, யேமன் ஆகிய நாடுகளில் இருக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கு பல பில்லியன் டாலர்கள் அளவுக்கு ஆயுதங்களும் ஏவுகணைகளும் வழங்கிவருகிறார். 2009-ம் ஆண்டு, 95 மில்லியன் டாலர் அளவுக்கு ஸ்னைபர் ரைஃபில்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் போன்ற ஆயுதங்களை, யேமன் நாட்டு ராணுவத்திற்கு வழங்கியுள்ளார். பின்னர், அவற்றில் பல கள்ள மார்கெட்டுகளுக்கும் வந்துள்ளன.
ஸர்கிஸ் சொகனாலியன் (SARKIS SOGHANALIAN): லெபனான் நாட்டில் பிறந்த அமெரிக்கரான இவர் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை சத்தாம் ஹுஸ்ஸைன் இராக் அதிபராக இருந்தபோது வழங்கியுள்ளார். நிகராகுவா, அர்ஜண்டைனா, யேமன் மற்றும் காங்கோ ஆகிய நாடுகளில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கும் கிளர்ச்சியாளர் குழுக்களுக்கும் ஏராளமான ஆயுதங்கள் வழங்கியுள்ளார். இவர் ஒரு விமான நிறுவனமும் நடத்தி, அந்த விமானங்கள் மூலம் கொலம்பியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ‘ஏகே’(AK) ரக இயந்திரத் துப்பாக்கிகளையும் குண்டுகளையும் கிளர்ச்சியாளர்கள் உள்ள பகுதிகளில் வானிலிருந்தபடியே விமானத்திலிருந்து இறக்கியவர்.
மோன்ஸெர் அல் கஸ்ஸார் (MONZER AL-KASSAR): சிரியா நாட்டைச் சேர்ந்த இந்த ஆயுத வியாபாரி, இராக் மற்றும் சோமாலியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்களும் ஏவுகணைகளும் வழங்கியவர். எழுபதுகளில் போலந்து நாட்டிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி ஏமன் அரசுக்கு வழங்கிய இவர், அதன் பிறகு உலக அளவில் அறியப்பட்ட ஆயுத வியாபாரியானார். இவர் ”மரபெல்லா இளவரசர்” (Prince of Marabella) என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். 1984-ல் இங்கிலாந்திலிருந்து விரட்டப்பட்டார். எந்த நாட்டிலெல்லாம் ஐ.நா.சபை ஆயுதங்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளதோ, அந்த நாடுகளுக்கெல்லாம் ஆயுதங்களை வழங்கி நல்ல லாபம் பார்த்து வருகிறார் இவர்.
பயங்கரவாதிகளிடம் புழங்கும் முக்கியமான ஆயுதங்கள்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-5
விமான எதிர்ப்பு துப்பாக்கி (ZU-23-2 ANTI-AIRCRAFT GUN): இதன் விலை 100,000 டாலர். இது 2.5 கிலோமீட்டர் உயரத்தில் தாழ்வாக பறந்து கொண்டிருக்கும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை வீழ்த்த வல்லது. இது ஐ.எஸ்.ஐ.எல், ஹமாஸ் மற்றும் சிரியா, லிபியா ஆகிய நாடுகளின் கிளர்ச்சியாளர்கள் ஆகியோரிடம் உள்ளது.
பிஜிஎம்-71 டோவ் (BGM-71 TOW): இதன் விலை 80,000 டாலர் முதல் 2 மில்லியன் டலர் வரை. இது தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கை வீழ்த்தும் ஏவுகணையாகும். 4200 மீட்டர் தொலைவில் உள்ள பீரங்கிகளை வீழ்த்த வல்லது. அமெரிக்கத் தயாரிப்பான இந்த ஏவுகணை ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாத இயக்கத்தின் வசம் உள்ளது.
பக் ஏவுகணைகள் (BUK MISSILE SYSTEM): முன்னாள் சோவியத் யூனியன் தயாரிப்பான இந்த ஏவுகணைத் திட்டம் தரையிலிருந்து வான் நோக்கி, மேலே பறந்துகொண்டிருக்கும் இலக்கைத் தாக்க வல்லது. சுமார் 18 மைல்கள் உயரத்தில் இருக்கும் இலக்கை ராடார் உதவியுடன் வீழ்த்தவல்ல இந்த ஏவுகணையின் விலை 60 மில்லியன் டாலர். சமீபத்தில் உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் எம்.ஹெச்-17 (MH17) விமானம் தாக்கப்பட்டது இந்த ஏவுகணையினால்தான். இந்த ஏவுகணை, உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அல்-கைதா, அன்ஸார் டைன் ஆகியோரிடம் உள்ளது. இவர்கள் லிபியாவில் உள்ள ஆயுத வியாபாரிகளிடமிருந்து இதை வாங்குகிறார்கள்.
டி-55 பீரங்கி (T-55 TANK): இந்த பீரங்கியின் விலை 44,500 டாலர்கள் முதல் 50,000 டாலர்கள் வரை. சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கைக்கூட சுலபமாகத் தாக்கி வீழ்த்த வல்லது. இது ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் சூடான் நாட்டு கிளர்ச்சியாளர்களிடம் இருக்கிறது. சிரியாவிடமிருந்து சுமார் 30 பீரங்கிகளை ஐ.எஸ்.ஐ.எல் கைப்பற்றியது.
டி.எஸ்.ஹெச்.கே இயந்திரத் துப்பாக்கி (DSHK MACHINE GUN) : இதன் விலை 3000 டாலர்கள். இந்த கனமான இயந்திரத் துப்பாக்கி 2000 மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை பெற்றது. ஒரு நிமிட நேரத்தில் 600 குண்டுகளை இதன் மூலம் செலுத்தி இலக்கைச் சுடலாம். இது ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் தாலிபான் பயங்கரவாதிகளிடம் உள்ளது.
எம் 60 பிற்சுழற்ச்சியற்ற துப்பாக்கி (M 60 RECOILLESS GUN) : யுகோஸ்லேவியாவில் தயாரிக்கப்பட்டு குரோயேஷியா கிளர்ச்சியாளர்களால் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கட்த்தப்படுகிறது இந்த பீரங்கி எதிர்ப்பு துப்பாக்கி. சுமார் 1000 மீட்டர் தொலைவில் நகரும் இலக்கைச் சுட்டு வீழ்த்த வல்லது. சிரியா கிளர்ச்சியாளர்களிடமும், ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகளிடமும் இருக்கும் இந்த ஆயுதத்தின் விலை குறிப்பிடப்படவில்லை.
ஆர்.பி.ஜி 6 க்ரினேடுகள் செலுத்தும் துப்பாக்கி (RBG 6 MULTIPLE GRENADE LAUNCHER) : தோளில் வைத்து இயக்கக்கூடிய இந்த மென்கன க்ரினேட் துப்பாக்கி 400 மீட்டர் முதல் 500 மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க வல்லது. லிபியா நாட்டின் கள்ளச் சந்தைகளில் கிடைக்கிறது. இது ஐ.எஸ்.ஐ.எல், போகோ ஹராம், ஹமாஸ் மற்றும் அல்-கைதா பயங்கரவாதிகளிடம் உள்ளது. இதன் விலை 2000 டாலர்கள்.
ஆர்.பி.ஜி 7எஸ் (RPG 7S): இது தோளில் வைத்து இயக்கக்கூடிய பீரங்கிக்கு எதிரான ஏவுகணைத் துப்பாக்கி. சுமார் 920 மீட்டர் தொலைவில் இருக்கும் பீரங்கிகளைத் தாக்கி வீழ்த்த வல்லது. சோமாலியா மற்றும் யேமன் நாடுகளிலிருந்து வரவழைக்கப் படுகிறது. இதன் விலை 2000 டாலர்கள். இது ஹமாஸ், ஐ.எஸ்.ஐ.எல், அல் கைதா, தாலிபான் மற்றும் போகோ ஹராம் ஆகிய பயங்கரவாதிகளிடம் இருக்கிறது.
ஆர்.பி.ஜி. 22 (RPG 22): இது ஒற்றை-விசை பீரங்கி-எதிர்ப்பு ராக்கெட் செலுத்தி. இதன் விலை 200 டாலர்கள். லிபியா மற்றும் யேமன் நாடுகளின் சந்தைகளில் கிடைக்கும் இந்த ஆயுதம், ஐ.எஸ்.ஐ.எல், அல் கைதா, தாலிபான், போகோ ஹராம், அல் ஷப்பாப் மற்றும் எ.கியு.ஐ.எம் (AQIM) ஆகிய பயங்கரவாத இயக்கங்களிடம் உள்ளது.
ஸ்டிங்கர் மேன்பேட் (FIM-92 STINGER MANPAD): இதன் விலை 40,000 டாலர். இது பூமியிலிருந்து வான் நோக்கி ஏவப்படும் ஏவுகணை. தோளில் வைத்துக்கொண்டு செயல்படுத்தப்படும் ஆயுதம். கிட்டத்தட்ட 3000 மீட்டர் தூரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வீழ்த்த வல்லது. இந்த ஆயுதம் ஐ.எஸ்.ஐ.எல், போகோ ஹராம் மற்றும் உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் ஆகியோரிடம் உள்ளது.
ஸ்ட்ரெலா (STRELA 2): இதன் விலை 45,000 டாலர். தோளில் வைத்துக்கொண்டு இயக்கப்படும், தரையிலிருந்து வான் நோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணை. இதன் முனையில் வெடிக்கக் கூடிய குண்டுகளையும் கொண்டது. லிபியா நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த முகம்மது கட்டாஃபி விரட்டப்பட்ட பிறகு அந்நாட்டிலிருந்து கடத்தப்பட்டது இந்த ஆயுதம். தற்போது பாலஸ்தீனிய பயங்கரவாத இயக்கமான காஸாவிடத்திலும், இராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடமும் உள்ளது. ஏ.பி.ஏ.எம் (ABAM) இயக்கத்திடமும் உள்ளது.
குரோம் ஏவுகணை (PZR GROM MISSILES): இதன் விலை 80,000 டாலர். தரையிலிருந்து வான் நோக்கி ஏவப்படும் ஏவுகணையான இது போலந்து நாட்டின் தயாரிப்பு. சுமார் 3400 மீட்டர் தொலைவில் பறந்துகொண்டிருக்கும் விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் வீழ்த்த வல்லது. உக்ரைன் கிளர்ச்சியாளர்களிடம் உள்ளது.
ரெட் ஏர்ரோ ஏவுகணை (HJ-8 OR RED ARROW-8): இதன் விலை 2.5 மில்லியன் டாலர். பீரங்கிகளைத் தகர்க்கவல்ல டியூப் மூலம் வீசப்படும் இரண்டாம் தலைமுறை ஏவுகணையான இது, சீனாவிலும் பாகிஸ்தானிலும் தயாரிக்கப்படுகிறது. இது ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகளிடம் இருக்கிறது.
எம்302 தரை ஏவுகணை (M302 SURFACE-TO-SURFACE MISSILE); சிரியாவில் தயாரிக்கப்படும் இந்த தரை ஏவுகணை சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வீழ்த்த வல்லது. பாலஸ்தீனிய பயங்கரவாத இயக்கமான ஹமாஸ், இஸ்ரேலில் ரிஷோன், லெஸியோன், டெல் அவிவ், ஹைஃபா மற்றும் ஜெருசலேம் ஆகிய பகுதிகளைத் தாக்க இதனைப் பயன்படுத்துகிறது. இதன் விலை குறிப்பிடப்படவில்லை.
எம்79 ஓ.எஸ்.ஏ ராக்கெட் (M79 OSA ROCKETS) : நெருங்கிய யுத்தத்தில், சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல பஸூக்கா ராக்கெட்டுகள் (Bazooka Rockets) இவை. அதிக பட்சமாக 1960 மீட்டர்கள் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய இந்த ஆயுதம், ஒரு நிமிடத்திற்கு 6 ராக்கெட்டுகளைச் செலுத்த வல்லது. யேமன் நாட்டில் உள்ள ஆயுதக் கடத்தல் வியாபாரிகளால் விற்கப்படுகிறது. இது ஐ.எஸ்.ஐ.எல், அல் கைதா, ஹமாஸ், போகோ ஹராம், தாலிபான் மற்றும் எ.க்யு.ஐ.எம் (AQIM) ஆகிய இயக்கங்களிடம் உள்ளது.
ஸ்டிங்கர் ஏவுகணை (STINGER Surface to Air Missile): இதன் விலை 1,50,000 டாலர். இது தாலிபான், அல்-கைதா ஆகிய இயக்கங்களிடம் உள்ளது.
க்ரினேட் (GRENADE) : க்ரினேட் என்று சொல்லக்கூடிய கையெறி குண்டின் விலை 7 டாலர். இந்தக் கையெறி குண்டுகள் அனைத்து பயங்கரவாத இயக்கங்களிடமும் உள்ளன.
முக்கியமான ஆயுத சந்தைகள்
சோமாலியா நாட்டில் மொகாடிஷு (MOGADISHU IN SOMALIA) என்கிற இடம், யேமன் நாடில் ஜிஹானா மற்றும் சாடா (JIHANA, SAADA IN YEMEN) ஆகிய இடங்கள், இராக் நாட்டில் பாக்தாத், பாஸ்ரா மற்றும் கிர்குக் (BAGHDAD, BASRA AND KIRKUK IN ITAQ) ஆகிய நகரங்கள், லிபியாவில் இஸ்மைத் என்னும் நகரம் (ISMAID IN LIBYA), பாகிஸ்தானில் தார்ரா கேல் மற்றும் வஸிரிஸ்தான் ஆகிய ஊர்கள் (DARRA KHEL AND WAZIRISTAN IN PAKISTAN) மற்றும் லெபனான் (LEBANON), ஆஃப்கானிஸ்தான் (AFGHANISTAN) ஆகிய நாடுகள் முக்கியமான ஆயுதச் சந்தைகளாக விளங்குகின்றன.
சுலபமாகக் கிடைக்கும் ஆயுதங்கள்
7 டாலர் விலை கொண்ட க்ரினேட் (Grenade) என்று சொல்லப்படும் கையெறி குண்டிலிருந்து 18,000 டாலர் விலை கொண்ட ஏகே-47 (AK 47) ரக துப்பாக்கி வரையிலான ஆயுதங்கள் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை. 1700 டாலர் முதல் 1800 டாலர் வரை விலை கொண்ட ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஏகே-47 துப்பாக்கிகள், 500 டாலர் முதல் 900 டாலர் வரை விலை கொண்ட சீனாவில் தயாரிக்கப்படும் ஏகே-47 ரக துப்பாக்கிகள், 1000 டாலர் விலை கொண்ட எம்-16 ரக அஸ்ஸால்ட் ரைஃபில் (M 16 Assaul Rifle), 2000 டாலர் முதல் 5000 டாலர் வரை விலை கொண்ட ஆர்.பி.கே இயந்திரத் துப்பாக்கி (RPK Machine Gun), 2500 டாலர் விலை கொண்ட எம்-4 அஸ்ஸால்ட் ரைஃபில் (M-4 Assault Rfile), 1500 டாலர் முதல் 3500 டாலர் வரை விலை கொண்ட 120 மோர்டார் பீரங்கி (120 Mortars), 1200 டாலர் முதல் 2500 டாலர் வரை விலை கொண்ட 80 மோர்டார் பீரங்கி (80 Mortars), 7 டாலர் முதல் 95 டாலர் வரை விலை கொண்ட க்ரினேட் கையெறி குண்டுகள் (Grenades) ஆகிய ஆயுதங்கள் மேற்கூறப்பட்ட சந்தைகளில் எளிதாகக் கிடைக்கின்றன.
ஆயுதங்கள் கடத்தப்படும் பாதைகள்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-7
பாதை-1:  அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளான டெக்ஸாஸ் மற்றும் அரிஸோனா (TEXAS & ARIZONA) ஆகிய இடங்களில் வசிக்கும் அமெரிக்க மற்றும் மெக்ஸிக குடிமகன்கள் (Americans and Mexican Nationals), மெக்ஸிகோ மற்றும் கரீபியன் நாடுகளுக்கு (Mexico and Caribbean nations) ஆயுதங்களை அனுப்புகிறார்கள்.
பாதை-2: உக்ரைன்(UKRAINE) மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளில் (ERSTWHILE SOVIET UNION NATIONS) தேவைக்கும் அதிகமாக ஏராளமான ஆயுதங்கள் உள்ளன. அவற்றை எப்போதுமே கலவரத்தில் இருக்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, நைஜீரியா, லிபியா, எகிப்து, சிரியா, இராக் மற்றும் லெபனான் (SOMALIA, NIGERIA, LIBYA, EGYPT, SIRIYA, IRAQ AND LEBANON) ஆகியவற்றிற்கு உக்ரைன் நாட்டில் இருக்கும் ஆயுதக் கடத்தல் வியாபாரிகள் அனுப்புகிறார்கள். கென்யா மற்றும் தென் சூடான் (KENYA AND SOUTH SUDAN) ஆகிய நாடுகளுக்கும் இதே பாதையில் ஆயுதங்கள் அனுப்பபடுகிறது.
பாதை-3:  தஜிகிஸ்தான் (TAJIKISTAN) பகுதியில் இருக்கும் ரஷ்ய போர் வெறியர்கள் ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் அல் கைதா மற்றும் தாலிபான் இயக்கங்களுக்கு ஆயுதங்களை அனுப்புகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா (Khyber Pakhtunkhwa Province) என்னும் மாகாணத்தில் இருக்கும் தர்ரா ஆதம் கேல் (Darra Adam Khel) என்னுமிடத்திலிருந்தும் தாலிபான் ஆயுதங்களை வாங்குகிறது.
மனிதத்திற்கு எதிரான பயங்கரவாதம்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-8
பயங்கரவாதத்தின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள சில சமீபத்திய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
கடந்த மே மாதத்தில் மட்டும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் 317 அப்பாவிப் பொது மக்களைக் கொன்றுள்ளனர். போகோ ஹராம் கடந்த 6 மாதங்களில் 2000க்கும் அதிகமானோரைக் கொன்று குவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 48 மணி நேரத்தில் 700 அப்பாவிகளைக் கொன்றுள்ளது ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாத இயக்கம். இராக்கில் போர் தொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வியக்கம், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 2000க்கும் அதிகமானோரைக் கொன்றுள்ளது. மேலும் யாஜிதிகள் எனப்படும் சிறுபான்மையின மக்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டு அடிமைகளாக்கப் பட்டிருக்கிறார்கள். 50,000க்கும் மேற்பட்டோர் சிஞார் என்கிற மலைப் பிரதேசத்தில் சிறைவைக்கப் பட்டிருக்கிறார்கள். உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுக்காமல் அவர்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகுமாறு சித்தரவதை செய்யப்படுகிறார்கள்.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இஸ்ரேலை சீண்டிப்பார்க்கும் ஹமாஸ் இயக்கம் அப்பாவிப் பொதுமக்கள் புழங்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி வருகின்றது. பொது மக்களையும் குழந்தைகளையும் கேடையமாகப் பயன்படுத்தி இஸ்ரேலுடன் போர் புரிந்து, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களும் குழந்தைகளும் இறந்துபோகுமாறு செய்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் 17-ம் தேதி எம்ஹெச்-17 (MH-17) என்கிற மலேஷிய விமானம் உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 295 பேரும் இறந்துள்ளனர்.
பாகிஸ்தானிலும் ஆஃப்கானிஸ்தானிலும் தொடர்ந்து பயங்கரவாத நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. ஆஃப்கானிஸ்தானில் ஜனநாயகம் தழைக்கக் கூடாது என்று தாலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து கிளர்ச்சியிலும் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் சன்னி பிரிவு பயங்கரவாதிகள் ஷியா மற்றும் அஹமதியா பிரிவினைரைக் கொன்று குவித்து வருகிறார்கள். அங்குள்ள ஹிந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்து விட்டனர். பாகிஸ்தானில் உள்ள பக்தூனிஸ்தான் மற்றும் பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களில், பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்கு முறையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு லக்ஷக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
பாகிஸ்தானின் ராணுவமும் அதன் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ நிறுவனமும் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை இந்தியா மீது ஏவிவிட்டு இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
ஆயுதங்கள் கடத்தி வழங்கப்படும் முறை
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ராட்சத வியாபாரிகள், ஆயுதங்களைத் தயாரிக்கும் நாடுகளுடன் வலுவான அரசியல் தொடர்பு கொண்டுள்ளார்கள். அந்நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட ஆயுத வியாபாரிகளுடனும், இடையில் இயங்கும் சக்தி மிக்க தரகர்களுடனும், தொடர்பில் உள்ளார்கள். அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் ராணுவத் தளபதிகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு உண்டு.
இந்த சக்தி மிக்க வலைப்பின்னலில் கப்பல் நிறுவனங்களுக்கும் தொடர்பு உண்டு. கப்பல்கள் மூலமாக பெரும்பான்மையான ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன. இதற்கு உதாரணம் அமரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் உள்ளது. அந்த அறிக்கையின்படி, யேமன் நாட்டில் மட்டும் மேற்கண்டமாதிரியான 29 ஆயுத வியாபாரிகள் இயங்குகிறார்கள். யேமன் ராணுவம் சார்பாக உலகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆயுதச் சந்தைகளில் பலவிதமான அயுதங்களைக் கொள்முதல் செய்கிறார்கள். ஆனால், யேமன் ராணுவத்திற்கு வந்தவுடன் அவற்றிலிருந்து வெறும் 20 சதவிகிதம் மட்டுமே ராணுவத்தின் கணக்கில் ஏற்றப்படுகிறது. மிச்சம் உள்ள 80 சதவிகித ஆயுதங்கள் ராணுவத் தளபதிகள் மற்றும் தரகர்களினால் பெரும் லாபத்திற்கு வெளியே விற்கப்படுகின்றன. அவ்வாறு விற்கப்படும் ஆயுதங்கள் கடத்தப்பட்டு ரகசியமாக இயங்கும் கப்பல் அதிபர்கள் மூலம் (யேமன் நாட்டைச் சேர்ந்த அபு இப்ராஹிம் என்கிற கப்பல் அதிபர் இந்தக் கடத்தலில் பெரிதும் ஈடுபடுபவர்) எகிப்து, காஸா (பாலஸ்தீன்), இராக், ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
கப்பல் வழிக் கடத்தல் மட்டுமல்லாமல் வான்வழிக் கடத்தலும் உண்டு. இதைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வை குழுவின் அறிக்கை ஒன்று விவரிக்கிறது. அதாவது ஆயுதக் கடத்தல்காரர்கள், அதிகமாக மக்கள் புழங்காத, அவ்வளவாக போக்குவரத்து இல்லாத விமான நிலையங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் வழியாகவும் ஆயுதங்களைக் கடத்துகின்றனர். 2007-ல் சோமாலியாவில் இயங்கிவந்த ஐநாவின் மேற்பார்வைக் குழு, ஏரோகன் ஏவியேஷன் என்கிற விமான நிறுவனத்தின் போயிங்-707 சரக்கு விமானம் மூலம், அல்-கைதாவின் சகோதர இயக்கமான அல்-ஷப்பாப் இயக்கம் பலவிதமான ஆயுதங்களைக் கடத்தியதைக் கண்டுபிடித்தது. அந்த குறிப்பிட்ட விமானம் மட்டும் போலியான போக்குவரத்துத் திட்டங்களைக் காட்டி, போலி விற்பனைப் பட்டியல்கள் கொண்டு, அஸ்மாராவிலிருந்து சோமாலியாவில் உள்ள மொகாடிஷு விமான நிலையத்திற்கு 13 முறை வந்து சென்றுள்ளது. இதில் ஆயுத வியாபாரிகளுக்கும் சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பும் வெளிவந்துள்ளது.
2008-ல் சோமாலியா கடற்கொள்ளைக்காரர்களால் பிடிக்கப்பட்ட எம்வி ஃபைனா என்கிற பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் (MV Faina – Registered in Panama), 33 டி-72 பீரங்கிகள், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 40,000 ஏகே ரக இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் செலுத்திகள் ஆகியவை இருந்துள்ளன. அந்த ஆயுதங்கள், உக்ரைன் நாட்டிலிருந்து கெனியா ராணுவத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஆவணங்களைச் சரிபார்க்கும்போது, உண்மையில் அவை உக்ரைன் நாட்டில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் தெற்கு சூடானில் உள்ள பயங்கரவாத இயக்கமான மக்கள் விடுதலைப் படைக்குக் கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.
போதைப் பொருட்களுக்கு ஆயுதங்கள்
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-11
போதைப் பொருட்களுக்குப் பதிலாக ஆயுதங்கள் வழங்கும் குழுக்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னலும் உலக அளவில் இயங்கி வருகின்றது. உதாரணத்திற்கு, ஒரு கிலோ கோகெய்ன் (Cocaine) போதை பொருளுக்கு இரண்டு சீனத் தயாரிப்பு ஏகே-47 ரக துப்பாக்கிகள் கிடைக்கிறது. தென் அமெரிக்காவில் பெரிதும் பயிரிடப்படும் இந்த கோகெய்ன் போதைப் பொருளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கிராக்கி அதிகம். அதே போல ஆஃப்கானிஸ்தானில் பெரிதும் பயிரிடப்படும் ஹெராய்ன் (Heroin) என்னும் போதைப் பொருளுக்கு கிராக்கி அதிகம். ஒரு கிலோ ஹெராய்னுக்கு 55 ஏகே-47 ரக துப்பாக்கிகள் கிடைக்கும்.
இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இயங்கி வரும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து கொலம்பியா வரை இந்த “போதைப் பொருட்களுக்கு ஆயுதங்கள்” வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள். அதே போல தஜிகிஸ்தான் பகுதியில் இயங்கி வரும் ரஷ்ய ஆயுதக் கடத்தல்காரர்கள் தாலிபான் மற்றும் அல்-கைதாவிடமிருந்து போதைப் பொருட்கள் வாங்கி அவற்றிற்குப் பதிலாக இயந்திரத் துப்பாக்கிகள், ஸ்னைப்பர் ரைஃபில்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவற்றைத் தருகிறார்கள். உக்ரைன் பாராளுமன்ற விசாரணைக் கமிஷனின் அறிக்கைப்படி, ‘போதைப் பொருட்களுக்கு ஆயுதங்கள்’ வியாபாரத்தின் மூலம் 32 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ராணுவ ஆயுதங்களும் குண்டுகளும் திருடி விற்கப்பட்டுள்ளன.
நம்மைக் கொதிக்க வைக்கும் கசப்பான உண்மைகள்
இந்த அளவிற்கு அபரிமிதமாக போதைப் பொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்படுவதும், அப்பாவி மக்கள் லக்ஷக்கணக்கில் படுகொலை செய்யப்படுவதும், போதைக்கு அடிமையாகி நாசமாவதும் தொடர்ந்து நடந்து வருவது எவ்வாறு என்று ஆய்ந்து நோக்கும்போது, வல்லரசு நாடுகளாகக் கருதப்படும் நாடுகளே தங்களிடையேயான பனிப்போரில் மேற்கண்ட தீய செயல்களை ஊக்குவித்தும், வாய்ப்பு கிடைக்கும்போது அவற்றில் பங்கெடுத்தும் வருகின்ற உண்மை நமக்குப் புலப்படுகிறது.
முன்னாள் ஐக்கிய சோவியத் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கி ஊக்குவித்தவை தான் அல்-கைதா மற்றும் தாலிபான் பயங்கரவாத இயக்கங்கள்.
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி இராக் நாட்டை ஆக்கிரமித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்த அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்பட்ட இயக்கம்தான் ஐ.எஸ்.ஐ.எல் என்கிற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எல் முன்னிறுத்தும் இஸ்லாமிய காலிஃபேட் அமெரிக்காவால் ஆதரவு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதே அமெரிக்க தற்போது அவ்வியக்கத்திற்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சி.ஐ.எ (CIA) சிரியாவில் கிளர்ச்சியும் வன்முறையும் நிகழ்த்திவரும் ஜிகாத் பயங்கரவாதிகளுக்கு, பல வருடங்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு, 600 டன் அளவிலான ஆயுதங்கள், வழங்கியிருக்கும் உண்மை தெரியவந்துள்ளது.
Ulakai-Kalakkum-Marana-Viyabaarikal-12
அமெரிக்காவின் இந்தச் செயல்களுக்கு கத்தார், சௌதி அரேபியா மற்றும் துருக்கியும் ஒத்துழைக்கின்றன.
கத்தார், துருக்கி மற்றும் சௌதி அரேபியா போன்ற நாடுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனையை முடிவுக்கு வராமல் பார்த்துக்கொள்வதிலும் முனைப்பு காண்பிக்கின்றன. இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவு காண்பிக்கும் விதமாக அவ்வப்போது இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனையில் இஸ்ரேலுக்குச் சாதகமாகவும் சில முடிவுகளை எடுக்கின்றன. இராக்கிலிருந்து பிரியத் துடிக்கும் குர்திக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேல் இருக்கிறது.
ஐக்கிய சோவியத் உடைந்ததிலிருந்தே வெறுப்புற்று இருக்கும் ரஷ்யா தற்போது முன்னாள் ஐக்கிய சோவியத் நாடுகளில் ஆங்காங்கே கிளர்ச்சிகளை மூட்டி வருகிறது. உதாரணத்திற்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களை ஊக்குவிப்பது ரஷ்யாதான்.
இந்தியாவுடன் நட்பு ரீதியாக உறவு கொண்டிருப்பதாக நடிக்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்குப் பெரிதும் உதவி வருகின்றது. சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி வருகின்றது. உலக அளவில் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக விளங்கும் அளவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வளர்த்து வருகிறது.
ரஷ்யாவைப் போலவே சீனாவும் பலவிதங்களில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகிறது. அதிக அளவில் ஆயுதங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தங்களுடைய ஆயுத விற்பனையைப் பெருக்க பலவிதங்களில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன.
ஒருபுறம் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரடுவதாகக் காட்டிக்கொள்ளும் இந்நாடுகள்தான் மறுபக்கம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் செய்கின்றன.
இந்தியா வல்லரசாக வேண்டியது அவசியம்
இந்த மாதிரியான சூழ்நிலையில் அமைதியை விரும்பும் இந்தியா போன்ற நாடுகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். இந்தியா பயங்கரவாதத்தினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்க முடியாது. பயங்கரவாதம் நாட்டில் எந்த வழியில், எந்தவிதமான உருவத்தில் வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது அவசியம். ஆனால் தற்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால், இந்தியாவில் பயங்கரவாதம் ஓரளவிற்குக் கால் ஊன்றியுள்ளதை மறுக்க இயலாது. தேசிய அளவில் இது ஒரு புறம் இருக்க, சர்வதேச அளவிலும் பயங்கரவாதத்தில் ஈடுபட இந்திய முஸ்லிம் இளைஞர்கள் தயாராக இருப்பது மிகவும் கவலை தரும் விஷயம்.
நாம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தது போல, ஐ.எஸ்.ஐ.எல் போன்ற பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்து இஸ்லாமிய காலிஃபேட் அமைப்பதற்காக ஜிகாத் பணியில் ஈடுபடத் தயாராக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயத்தை இந்திய அரசு தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதை முளையிலேயே தகர்த்தெறியத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இஸ்லாமிய காலிஃபேட் கொள்கைகளைப் பரப்பும் சாதனங்களும், ஐ.எஸ்.ஐ.எல் இயக்கத்தின் தலைவன் அல் பக்தாதியின் இஸ்லாமிய காலிஃபேட்டுக்கான அறைகூவல் விடுக்கும் பேச்சுக்களும் இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்களிடம் கொட்டிக் கிடப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவற்றையெல்லாம் கேட்டும் படித்தும் இந்திய முஸ்லிம் இளைஞர்கள் உந்துதலுக்கு உள்ளகிறார்கள் என்றும் உளவுத்துறை தெரிவிக்கிறது. சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் பயங்கரவாத மற்றும் காலிஃபேட் கொள்கை விளக்கங்களினால் கவரப்படுகிறார்கள் இளைஞர்கள். அந்த மாதிரித் தங்களைத் தாங்களே மூளைச் சலவைக்கு உள்ளாக்கிக் கொள்ளும் இளைஞர்களைத் தடுத்து நிறுத்த வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.
அதோடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பல மாநிலங்களில் பரவி வரும் அடிப்படைவாதத்தையும், இந்திய கலாச்சரத்திலிருந்து விலகி வஹாபிய கலாச்சாரத்தில் வீழ்வதையும் அழித்தொழிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். உள்நாட்டில் பல மாநிலங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் அடிப்படைவாத தீவிரவாத இயக்கங்களின் தேச விரோத நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து, அவ்வப்போது தேவையான நடவடிகைகளை எடுத்துத் தண்டனை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் அவ்வியக்கங்களையும் அமைப்புகளையும் தேசிய அளவில் தடை செய்யவும் வேண்டும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைப்புறங்களில் ராணுவத்தின் இருப்புகளை அதிகரித்து நடவடிகைகளையும் துரிதப்படுத்த வேண்டும். காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பிரிவினைவாதத்தைப் பூண்டோடு அழிக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக அரசியல் அமைப்புச் சட்ட்த்தின் 370வது க்ஷரத்தை நீக்கி, காஷ்மீர் மாநிலத்தைத் தேசிய நீரோட்ட்த்தில் இணைக்க வேண்டும்.

பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்டக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை மீண்டும் கொண்டுவரவேண்டும்.
சர்வதேச அளவில் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்க வேண்டும். முதற்கட்டமாக தெற்கு ஆசியப் பகுதியில் தன்னுடைய தனித்தன்மையையும் தலைமையையும் மேலாதிக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும். சார்க் (SARC) நாடுகளை ஒருங்கிணைத்து தெற்கு ஆசியப் பகுதியில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி அமைதி நிலவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, தன் தலைமையில் எடுக்க வேண்டும். அதற்கு சார்க் நாடுகளுடனான நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானை வழிக்குக் கொண்டுவர மற்ற நாடுகளை ஒருங்கிணைத்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது, இந்தியா வல்லரசாவதற்கான முதற்படியாகும். அதுவே உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அமைதியை நிலைநாட்டவும் இந்தியாவிற்கு உலகின் மற்ற பிராந்தியங்களிலிருந்து ஆதரவு பெற்றுத்தரும்.
(ஆங்கிலப் பத்திரிகைச் செய்திகள் மற்றும் கட்டுரைகளிலிருந்து தொகுத்து எழுதப்பட்டது)
http://www.thehindu.com/news/national/chennai-youth-fighting-in-syria-jihad/article5827857.ece
http://www.rediff.com/news/slide-show/slide-show-1-how-isis-is-attracting-muslim-youths-through-online-merchandise/20140805.htm
http://midnightwatcher.wordpress.com/2014/07/26/india-influential-muslim-scholar-offers-to-raise-global-islamic-army-of-500000-jihadists-for-caliphate/
http://www.newindianexpress.com/magazine/The-New-Merchants-of-Death/2014/08/03/article2357941.ece 

Thanks to -vsrc

Tuesday, 26 August 2014


நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கிக் கணக்கையும், ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டு வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும் "பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்)' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
சுதந்திர தினத்தன்று இந்தத் திட்டத்தை மோடி அறிவித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இதை நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் முதல் படியாக, வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு "ரூபே' என்ற வங்கிப்பற்று அட்டையும் (டெபிட் கார்டு),  ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடும் வழங்கப்படுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் மோடி, மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் நரேந்திர மோடி திங்கள்கிழமை கூறியதாவது:
ஜன்தன் திட்டத்தின் கீழ், விபத்துக் காப்பீடு வழங்கப்படுவதுடன், ஓய்வூதியத் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்திக் கொடுக்க தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன், வங்கி கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே அரசின் லட்சியம்.
இந்தத் திட்டத்தின் கீழ், 7 கோடி பேருக்கு வங்கி கணக்கு ஏற்படுத்தித்தர திட்டமிடப்பட்டுள்ளது. நவீனமாக மாறிவரும் உலகில், வங்கியின் நவீன முறைகளையும், அதன் நிதி முறைகளையும் அனைத்து தரப்பினரும் உபயோகப்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் "ஜன் தன்' திட்டத்தை 28ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அன்றைய தினம் மற்ற மாநிலங்களில் நடைபெறும் இந்தத் திட்டத்தின் தொடக்க விழாக்களில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

-தினமணி.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வ.களத்தூர் போலீசார் எஸ்.ஐ., மாரிமுத்து தலைமையில் நேற்று முன்தினம் இரவு வி.களத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வ.களத்தூர் கல்லாற்றில் திருட்டுத்தனமாக இரண்டு டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு டிராக்டர்களை மடக்கி விசாரித்தனர். அதில், திருவாளந்துறை கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (49), அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (20) ஆகிய இருவரும் பர்மிட் பெறாமல் கல்லாற்றில் மண் அள்ளியது தெரிய வந்தது.
இது குறித்து எஸ்.ஐ., மாரிமுத்து வழக்கு பதிந்து இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தார். இது குறித்து பெரம்பலூர் சப்கலெக்டர் மதுசூதன்ரெட்டி மேலும் விசாரிக்கிறார்


- தினகரன்.