புது தில்லியின் ஒரு நகர்ப்புற நடுத்தர வர்க்க
குடும்பத்தின் இல்லம். அந்தக் குடும்பத்துப் பெண் உயர்கல்வி பெற்று நல்ல
பணியில் இருப்பவள். அவளது கலப்பு காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல்
அளித்திருந்தனர். அதே பொருளாதார அந்தஸ்தில் இருந்த பையன் வீட்டுக்
காரர்களுக்கும் கருத்தளவில் சம்மதமே. திருமணம் பற்றிப் பேச அவர்கள் அந்த
இல்லத்தில் நுழைந்ததும் அங்கு வரவேற்பறையில் டாக்டர் அம்பேத்கர் படம்
மாட்டியிருப்பதை கவனிக்கிறார் பையனின் அப்பா. வழக்கமான குசல
விசாரிப்புகளுக்குப் பிறகு, மெதுவாக தயங்கிய படியே கேட்கிறார் – “நீங்கள்
எந்த ஆட்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் தலித் இல்லையே..”.
பெண்ணின் அப்பா தனது வழக்கமான புன்னகை மாறாமல் நிதானமாக அதற்கு
பதிலளிக்கிறார். தனது தலைமுறையில் வறுமையின், தாழ்வின் கோரப் பிடியில்
இருந்து போராடி தான் வென்ற கதையைச் சொல்கிறார். மிக சகஜமாக உரையாடுகிறார்.
அவர் ஒரு ஆர் எஸ் எஸ் தொண்டரும் கூட. பையனின் அப்பாவுக்கு தனது செயல்
குறித்தே வெட்கம் ஏற்படுகிறது. மன்னிப்பு கோருகிறார். பிறகு எல்லாம்
சுமுகமாக முடிந்து திருமணம் நடந்தேறுகிறது.
அண்மையில் மூத்த ஆர் எஸ் எஸ் தலைவர் திரு
ரமேஷ் பதங்கே
அவர்களை ஒரு நிகழ்ச்சியின் போது சந்தித்து உரையாடுகையில் மேற்கண்ட
சம்பவத்தைக் குறிப்பிட்டார். அந்தப் பையனின் அப்பாவுடையது போன்றது தான்
இன்றும் இந்திய சமூகத்தின் பொது மனநிலை. ஆனால் அத்தகைய மன விலகல்களை
முறிக்கும் மாமருந்தாகத் திகழ்கிறது இந்துத்துவம் என்று கூறினார். சராசரியை
விட அதிகமாக, ஆர் எஸ் எஸ் இயக்கத் தொண்டர்களின் குடும்பங்களில் சாதி
இணக்கத் திருமணங்கள் நடக்கின்றன என்பதை சமூகவியலாளர்களும் சுட்டிக்
காட்டியுள்ளார்கள்.
திரு பதங்கே சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். 1980களில் சமரஸதா
மஞ்ச் என்னும் சமுதாய சமத்துவ அமைப்பை நிறுவியவர். “விவேக்” என்ற
சங்கத்தின் பிரபல மராத்தி இதழின் ஆசிரியராக நீண்ட நாள் பணியாற்றியவர்.
தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் ஆர் எஸ் எஸ் பணிகளையும் இணைத்து
“சங்க, மனு ஆணி மீ” (சங்கம், மனு, நான்) என்ற நூலை அவர் எழுதியுள்ளார்.
(தமிழில் “மனுவாதமும் ஆர் எஸ் எஸ் எஸ்ஸும்” என்ற பெயரில் வந்துள்ளது).
மும்பையில் “சாள்” எனப்படும் குப்பங்களில் மிக ஏழ்மையான சூழலில் பிறந்து
வளர்ந்தவர் அவர். சிறு வயதில் ஆர் எஸ் எஸ் ஷாகாவின் பண்பாட்டு சூழல் தான்
தன்னை பல தீய பழக்கங்களிலிருந்து பாதுகாத்து, தனது வாழ்க்கைக்கு ஒரு திசையை
அளித்தது என்று கூறுகிறார். “உங்களது சாதி காரணமாக அவமானவே ஏற்பட்டது
இல்லையா?” என்று பல நண்பர்கள் கேட்டிருக்கின்றனர். “ஆர் எஸ் எஸ்ஸில்
அப்படிப் பட்ட அனுபவம் ஒரு போதும் ஏற்பட்டதில்லை. ஆனால் பொது வாழ்வில்,
வெளி சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ளது” என்பதே அவரது பதிலாக இருந்துள்ளது.
பிக்கு இதாதே, தாமு அண்ணா, சுகதேவ் நவ்லே, ரமேஷ் பதங்கே ஆகிய தலைவர்கள்
சங்கத்திற்குள் பெற்றிருந்த பெரு மதிப்பு, இயல்பான ஒன்று. இவர்கள்
அனைவரும் தலித் சமுதாயங்களை சேர்ந்தவர்கள். சங்கம் “இந்து ஒற்றுமை” என்ற
கருத்து நிலையை மட்டும் கொண்டிருந்தால் போதாது. தலித் மக்களின்
பிரசினைகளில் நேரடியாக ஈடுபட்டு உதவ வேண்டும்; தலித் சிந்தனையாளர்கள்,
இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றவும் வேண்டும் என்ற கொள்கை மகாராஷ்டிரத்தில்
இன்றளவும் மிக வெற்றிகரமாக செயல்படுத்தப் படுகிறது என்பதற்கான சிறந்த
ஆவணம் பதங்கே அவர்களின் நூல்.
1994ம் ஆண்டு ஒரு பிரபல கருத்தரங்கம். வழக்கம் போல முற்போக்குகளும், சில
தலித் அறிவுஜீவிகளும் குத்தலாக ஹிந்துத்துவம் என்பதே ஜாதியவாதம்; ஆர் எஸ்
எஸ் ஒரு மனுவாத இயக்கம் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர்.
“ஹிந்துமதம் புனித நூல்களுக்கும் வரையறைகளுக்கும் அடங்காதது, எனவே, ஜாதிப்
பிரிவினைகள் அதன் அங்கம் அல்ல. ஹிந்து மதத்தின் தீமைகளுக்கு ஹிந்துக்கள்
மட்டுமே பொறுப்பாளி; ஆனால் நல்லதெற்கெல்லாம் காரணம் இயல்பான மனிதாபிமானம்
என்ற உங்களது வாதம் பசப்பானது. ஒரு மனு கிடைத்தாலும் கிடைத்தார். சும்மா
அதை வைத்துக் கொண்டு ஹிந்துத்துவத்தைத் தாக்கி வருகிறீர்கள்” என்று அதே
மேடையில் அமர்ந்திருந்த பதங்கே உறுதியாக பதிலடி கொடுத்தார். உடனே
அம்பேத்கர் அகாதமி தலைவரான டாக்டர் சாளுங்கே எழுந்து, “மனுஸ்மிருதியை
ஆதரிக்கும் இவர்கள் தான் உண்மையில் ஹிந்துத்துவத்தை கொலை செய்பவர்கள்.
மனுஸ்மிருதி உயர்ந்தது என்ற நம்பிக்கையை என் மனதில் ஏற்படுத்த
முடியுமானால், எனது நூல்களை எல்லாம் கொளுத்தி விடுகிறேன். நீங்கள்
விவாதிக்கத் தயாரா?” என்று அறைகூவினார். அதைத் தொடர்ந்து பெரும் கூச்சலும்
குழப்பமும் எழுந்தது. அந்த சவாலுக்கு பதங்கே உடனே எழுந்து பதிலளித்தார் –
“அவரது கருத்தை முழுமையாக ஏற்கிறேன். மனுஸ்மிருதி தற்காலத்துக்கு ஒவ்வாதது.
ஹிந்துத்துவத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. எனவே, எனக்கும்
அவருக்குமிடையில் விவாதம் என்ற பேச்சே இல்லை. மனுஸ்மிருதியை
ஆதரிப்பவர்களுடன் அவர் நிச்சயம் விவாதிக்க வேண்டும்”. எழுந்த புயல் உடனே
அடங்கியது. பதங்கேயின் இடதுசாரி நண்பர்கள் இதற்காக உன்னை ஆர் எஸ் எஸ்
தண்டிக்கும். உனது பதவிகளை இழப்பாய் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால்
உண்மையில் நடந்தது என்ன? சங்கம் இந்த நிலைப்பாட்டை முழுமையாக
அங்கீகரித்தது. பதங்கேஜியின் கருத்துக்களை சங்கம் மேலும் பரவலாக எடுத்துச்
சென்றது.
1990 அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் தலித் இயக்க முன்னோடி ஜோதிபா
ஃபுலே நினைவு நூற்றாண்டு. அயோத்தி இயக்கம் நாடுமுழுவதும் பெரும் வீச்சில்
இருந்தது. அப்போதும், சங்கம் இவ்விருவரையும் கௌரவிக்கும் வகையில் மாபெரும்
யாத்திரையை நடத்தியது. பிரகாஷ் அம்பேத்கர் உட்பட பல தலித் தலைவர்கள்
அழைக்கப் பட்டனர். அப்போது அரசியலில் பாஜகவுக்கு எதிராக இருந்த கடும்
“தீண்டாமை” காரணமாக அதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தனர். ஆனால், சங்கத்தின்
இந்தச் செயலைக் குறித்து மிக்க மகிழ்வும் பெருமையும் அவர்களுக்கு
ஏற்பட்டது. இந்தத் தீண்டாமையும் சில வருடங்களில் ஒழிந்தது. நாமதேவ் தஷால்,
சாந்தாராம் நந்தகாவ்கர் போன்ற தலித் தலைவர்கள் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டனர். சங்கத்தின் சமுதாய சமத்துவப் பணிகளை மனம் திறந்து பாராட்டினர்.
இதற்குக் காரணம் சங்கம் வெறும் வாய்ச்சொல்லோடு நின்று விடாமல், ஒவ்வொரு
சவாலான சூழ்நிலைகளிலும் தனது மாண்பை செயலில் காட்டியது தான். அதோடு, தலித்
சமூகங்களின் மேம்பாட்டிற்காக சங்கம் ஏற்படுத்தியுள்ள அற்புதமான சமூகசேவைப்
பணிகளையும் பதங்கே விவரிக்கிறார். அந்தப் பணிகளுக்கு எப்படி “சனாதனிகள்”,
“சாதி இந்துக்கள்” என்று பொதுவாக வசைபாடப் படும் மக்கள் மனமுவந்து
உதவினார்கள் என்பதைப் பற்றிய நெகிழ்ச்சியான பல சம்பவங்களையும் கூறுகிறார்.
1987இல் மகாராஷ்டிர அரசு அம்பேத்கர் படைப்புகள் முழுத் தொகுதியில்
’ரிடில்ஸ் ஆஃப் ராம் அண்ட் கிருஷ்ணா ‘ எனும் அத்தியாயத்தையும்
வெளியிட்டது. நமது தெய்வங்களை, அவதார புருஷர்களைக் குறித்த கடுமையான
முதிரா விமர்சனங்கள் கொண்ட அந்த நூல் குறித்து, பின்னர் அம்பேத்கரே அதிகம்
பேசவில்லை. அவரது பிந்தைய கருத்துக்கள் இந்த திசையிலும் இல்லை. ஆனால்
முற்போக்குகளும் சோஷலிஸ்டுகள் இது குறித்த பெரிய சர்ச்சையைக் கிளப்பினர்.
சரத் பவார் – எஸ் பி சவாண் பதவிப் போட்டியில், சவாணுக்கு தலைவலி தருவதே
அவர்களது முக்கிய நோக்கம். சிவசேனா களமிறங்கியது. அந்த அத்தியாயத்தை நீக்க
கோரியது. அம்பேத்கரை இந்து விரோதியாக சித்தரிக்கும் முயற்சிகள் நடந்தன.
மறுபுறம் தலித் தலைவர்கள் களமிறங்கினர். இரு பக்கமும் போட்டி பேரணிகள்,
வசை பாடல்கள் நடந்தன. இந்நிலையில் ஆர் எஸ் எஸ் எடுத்த நிலைப் பாடு சமுதாய
பிரச்சனைகளை அந்த இயக்கம் எப்படி அணுகுகிறது என்பதை அருமையாக எடுத்துக்
காட்டும். ‘விவேக்’ பத்திரிகையில் பதங்கே எழுதிய கட்டுரையில் ‘ரிடில்ஸ்’
அந்த தொகுதியிலிருந்து அகற்றப்பட அவசியமில்லை என்று கருத்து தெரிவித்தார்.
சங்கத்தின் மூத்த தலைவர் ஸ்ரீபதி சாஸ்திரி, “இந்த அத்தியாயம் இடம் பெற்றால்
அதனால் ஹிந்து சமுதாயத்திற்கு ஆபத்து எதுவுமில்லை. இதனால் இந்து சமுதாய
சீர்திருத்த சிற்பி என்ற அம்பேத்கரின் புகழுக்கும் பங்கமில்லை” என்று
அறிவித்தார். தங்கள் சொந்த அரசியல் லாபங்களுக்காக இந்து சமுதாயத்தை தலித் –
தலித் அல்லாதவர் என்று இரு ஓட்டு வங்கிகளாக ஆக்கி, உடைக்கத் திட்டமிட்ட
அரசியல் வாதிகளின் மூக்குகள் தான் உடைந்தன.
இட ஒதுக்கீடு விஷயத்திலும் இதே போன்ற ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டைத் தான் சங்கம் எடுக்கிறது.
“பாரதமாதாவின் கடன் பத்திரத்தில் 7ம் பக்கம்” என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுகதேவ் நவ்லே கூறிய அருமையான உதாரணம் இன்றளவும் சங்கத்தின் கொள்கை வழிகாட்டியாக இருக்கிறது.
1990களில் மராட்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை
சூட்டுவது தொடர்பான பிரசினை மாநிலம் முழுவதும் பற்றி எரிந்தது. மிகச்
சரியாகவே, தலித் தலைவர்கள் இதை கௌரவ பிரசினையாக கருதினர். சிவசேனா
பிரதேசவாதத்தை முன் நிறுத்தி அம்பேத்கர் பெயர் சூட்டப் படுவதை வெளிப்படையாக
எதிர்த்தது. முற்போக்குகளும் சோஷலிஸ்டுகளும் காங்கிரஸ் அரசியல்வாதிகளும்
உள்ளூர அம்பேத்கருக்கு இந்த கௌரவம் அளிக்கப் படுவதை விரும்பவில்லை.
அதற்கான பழியை இந்துத்துவம் மீது போடுவதற்கான பொன்னான வாய்ப்பை
எதிர்பாத்திருந்தனர். ஆனால் ஆர் எஸ் எஸ் அதை முழுவதுமாகப் பொய்யாக்கியது.
பாஜக – சிவசேனா உறவு, அரசியல் கூட்டணிக் கணக்குகள் எல்லாவற்றையும் மீறி
அம்பேத்கர் பெயரை வைப்பதற்கான முழு ஆதரவு தெரிவித்த்து. வேறு வழியில்லாமல்
மகாராஷ்டிர அரசு அதை செய்ய வேண்டியதாயிற்று.
1927ல் நாசிக் காலா ராமர் கோயிலில் அம்பேத்கர் தலைமையில் நடந்த ஆலயப்
பிரவேசத்தை வெறி கொண்டு தடுத்து நிறுத்தினர் கோயில் அர்ச்சகர் –
தர்மகர்த்தா (மஹந்த்) தலைமையிலான சனாதனிகள். 2005ம் ஆண்டு அதே மஹந்த்தின்
பேரன் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திடம் தம் முன்னோர் செய்த தவறுக்காக
மன்னிப்பு கேட்டார். கோயில் நிதியிலிருந்து தலித் மாணவர்கள் கல்விக்கான அறக்கட்டளை ஏற்படுத்தினார். இந்த மனமாற்றத்தை சாத்தியமாக்கியது ஆர்.எஸ்.எஸ்.
ங்கம் எப்போதும் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் நன்மையை, பரஸ்பர சகோதர
மனோபாவத்தை மனதில் கொண்டு தனது முடிவுகளை எடுக்கிறது. ஆர்ப்பாட்டம்
இல்லாமல், அதே சமயம் அமைதியாக தொலைநோக்குடன் செயலாற்றுவது அதன் பாணி.
இந்து சமுதாயம் முழுதும் ஒரு குடும்பம் என்ற சங்கத்தின் கொள்கை
உறுதியானது. இந்தக் குடும்பத்தின் உள்ளே இருக்கும் சில அவலங்களையும்,
எதிர்மறையான விஷயங்களையும், வேறு எவரையும் விட ஆர் எஸ் எஸ் மிக நன்றாக
உணர்ந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, திருமாவளவன் போன்ற தமிழகத்தின் தலித் இயக்க தலைவர்கள்
தொடர்ந்து ஆர் எஸ் எஸ்ஸை வசைபாடி வருகின்றனர். ஆனால் இஸ்லாமிய மதவெறி
அமைப்புகளுடனும், தேசவிரோத சக்திகளுடனும் வெட்கமில்லாமல் கைகோர்த்து
வருகின்றனர். மகாராஷ்டிரத்தில், அம்பேத்கர் பிறந்த மண்ணின் தலித்
தலைவர்கள், ஜிகாதிகளுடனும், கிறிஸ்தவ மதமாற்றிகளுடன் உறவாடும் இழிசெயல்களை
ஒருபோதும் செய்ததில்லை. ஏனென்றால், அம்பேத்கரின் கருத்துக்களில் ஊறியவர்கள்
அவர்கள். மேலே அம்பேத்கரின் படத்தைப் போட்டு, அவரது கொள்கைகளை கீழே போட்டு
மிதிப்பவர்கள் திருமா போன்றவர்கள்.
மகாராஷ்டிரத்தில் சங்கம் செயல்படுத்தி வெற்றி கண்ட சமூக விசைமுடுக்கல்
(Social Engineering) பரிசோதனைகள் தான் மாயாவதி உ.பியில் தேசத்தின் முதல்
தலித் பெண் முதல்வராக ஆன வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை
சாத்தியமாக்கியது. அந்த விசையை நீடித்து வைத்திருக்காமல் போனதால் தான்
உ.பி.யில் பா.ஜ.க செல்வாக்கிழந்து தத்தளிக்கிறது. “மனுவாதமும்
ஆர்.எஸ்.எஸ்ஸும்” நூலின் கருத்துக்கள் தமிழகத்தின் இந்துத்துவ ஆதரவாளர்கள்,
எதிர்ப்பாளர்கள், தலித்தியர்கள் என்ற மூன்று தரப்பினரும் படித்து,
சிந்தித்துப் பார்க்க வேண்டியவை. நாளைய தமிழக அரசியல் திசைகளுக்கான
முக்கியமான வழிகாட்டுதல்கள் அதில் கிடைக்கக் கூடும்.
ஆனால், சமூக மாற்றம் என்பது அரசியலால் மட்டும் நிகழ்வதல்ல, ஒவ்வொரு
தனிமனிதனிடத்தும் குடும்பத்திலும் சமுதாய சமத்துவ உணர்வு தோன்ற வேண்டும்.
புத்தகத்தில் ஓரிடத்தில் பதங்கேஜி கூறும் இந்தக் கருத்து என்றென்றும் நாம்
நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
“முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுவது எளிது. ஆனால், சாதி பேதம், ஏற்றத்
தாழ்வு இவற்றை எதிர்த்துப் போராடுவது ஒரு கடினமான வேலை. காரணம், இந்தப்
போராட்டம் நம்மவர்களுக்கு இடையேயானது. இந்த சமுதாயப் பிரசினைகளுக்குத்
தீர்வுகாண நாம் புறப்படும்போது, பல சமயம் நம்மையே குற்றவாளிக் கூண்டில்
ஏற்றி விடுகிறார்கள். நமது முன்னோர்களின் பாவச் சுமையை நம் தோள்களில்
உள்ளது. அதைச் சுமக்க நாம் தயாரில்லை.. இப்படிப் பட்ட சமூகச் சூழலில்,
சங்கக் கருத்துப் படி வாழ்ந்து வரும் குடும்பங்கள் பாலைவனத்தில் இனிய
நீரூற்று போல எனக்குத் தோன்றுகின்றன. குடும்பம் சமுதாய மாற்றத்தின் ஓர்
அலகு ஆகும். இப்படிப் பட்ட குடும்பங்களில் தான் சமுதாய உணர்வு
பிரதிபலிக்கிறது…”
நூல் கிடைக்குமிடம்: ஆர்.எஸ்.எஸ். புத்தக நிலையம், “சக்தி”,
எம்.வி.தெரு, பஞ்சவடி, சேத்துப்பட்டு, சென்னை – 31. தொலைபேசி: 2836-2271.
புத்தகக் கண்காட்சியில் “விஜயபாரதம்” அரங்கிலும் கிடைக்கும்.
நன்றி_
http://www.tamilhindu.com/2013/12/rssambed/
|
ரமேஷ் பதெங்கே மற்றும் கட்டுரையாளர் |