அரசு நிர்வாகத்தில் நாட்டு மக்கள், தங்கள்
கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் "மை கவ்'
http://mygov.nic.in/home_new# என்ற புதிய இணையதள சேவையை பிரதமர் நரேந்திர
மோடி தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 60
நாள்கள் நிறைவடைந்துள்ள தினத்தில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும், மக்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் செயல்படும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு தங்கள் நேரத்தையும்,
உழைப்பையும் அளிக்க பொது மக்கள் தயாராக உள்ளனர். இதை கடந்த 60 நாள்
ஆட்சியில் எனது அரசு உணர்ந்துள்ளது.
ஆகையால்தான், அரசு நிர்வாகத்துக்கு நாட்டு மக்கள், தங்கள்
கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்காக இந்த புதிய இணையதளம்
(ம்ஹ்ஞ்ர்ஸ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) தொடங்கப்பட்டுள்ளது.
இதில், கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல், திறன் மேம்பாடு போன்ற முக்கிய
விவகாரங்கள் குறித்து, மக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்யலாம். இது
அரசு நிர்வாகத்துக்கும், பொது மக்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கும்
பாலமாக செயல்படும். பொதுமக்கள் பங்களிப்பில்லாமல் ஜனநாயகம் எப்போதும்
வெற்றி பெறாது.
மக்களின் பங்களிப்பு தேர்தலுடன் நின்றுவிடக்கூடாது. இந்த இணையதளத்தை
நடைமுறைப்படுத்தியுள்ள மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை, அதைத் தொடர்ந்து
கையாளும். தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த இணையதளம், நல்லாட்சிக்கு
மக்களும் பங்களிப்பு செய்யும் வகையில் வாய்ப்பு வழங்கும் என்று செய்திக்
குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 மாதங்களில் ஆய்வு: இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மின்னணு, தகவல்
தொழில்நுட்பத் துறைச் செயலர் ஆர்.எஸ். சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல், பெண் குழந்தைகளுக்கான கல்வி, சுத்தமான
இந்தியா, திறன் மிக்க இந்தியா, வேலைவாய்ப்பு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட
இந்தியா என ஆறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அந்த இணையதளத்தில்
தற்போதைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து மக்களுக்கு விரிவாக
எடுத்துரைக்கப்பட்டு அவர்களின் கருத்துகள், ஆலோசனைகள், எண்ணங்கள்
பெறப்படும்.
அவை நிபுணர்கள் குழுவில் வைக்கப்பட்டு, விவாதம் நடத்தப்படும். அதில்
ஏற்றுக் கொள்ளப்படும் கருத்துகள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த
இணையதளத்தின் செயல்பாடு குறித்து 3 மாதங்களில் ஆய்வு செய்யப்படும். அரசு
நிறைவேற்றியுள்ள திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் மீதும் மக்கள்
தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்' என்று கூறினார்.
கருத்து பதிவு செய்வது எப்படி?: இந்தப் புதிய இணையதளத்தில் ஆங்கிலம்,
ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். இதற்காக
"ஆலோசனை', "செயல்' என்ற இரு பிரிவுகள் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
அதைச் சொடுக்கி (கிளிக் செய்து) தங்கள் விவரங்களைப் பதிவு செய்து
"பயன்பாடு பெயர்' மற்றும் "கடவுச் சொல்' பெறலாம். அதைக் கொண்டு, பல்வேறு
விவகாரங்களில் கருத்துகளை பதிவு செய்யலாம்.
அரசுச் செயலர்களுடன் ஆலோசனை: இதனிடையே, நாட்டின் பொருளாதாரத்தை
மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, உள்கட்டமைப்பு தொடர்பான முக்கிய
அமைச்சகங்களின் செயலர்களுடன் மோடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது
குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மின்னுற்பத்தி, ரயில்வே, சாலைப் போக்குவரத்து,
கப்பல் போக்குவரத்து, பெட்ரோலியம், விமானப் போக்குவரத்து, தகவல்
தொழில்நுட்பம், மாற்று எரிசக்தி, நிலக்கரி உள்ளிட்ட அமைச்சகங்களின்
செயலர்கள் பங்கேற்றனர்.
மத்தியத் திட்டக் குழுவின் செயலர் சிந்துஸ்ரீ குல்லர், 2013-14ஆம்
ஆண்டில் முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்தும், நிகழாண்டில்
அந்தத் துறைகளுக்குள்ள சவால்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்ததாகக்
கூறப்படுகிறது.
நிகழாண்டில் 300 கி.மீ. தூரம் புதிதாக ரயில் பாதை அமைப்பதற்கும், 700
கி.மீ. இரட்டை வழி ரயில்பாதை அமைப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பிரச்னை
குறித்தும், 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு 2017ஆம் ஆண்டுக்குள் அகண்ட
அலைவரிசை சேவை வழங்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.