Sunday, 27 July 2014


பெரம்பலூர் ஆட்சியரக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் 537 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 9 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரத்தில் கல்விக்கடன் பெறுவதற்கான ஏற்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆணைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:
பெரம்பலூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கி அலுவலர்களும் பங்கேற்றனர்.
664 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டதில், 586 பேரின் விவரங்கள் கணினிகள் மூலம் பதியப்பட்டு, அவர்களுக்கு ஒப்புகைச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
வங்கியாளர்களிடம் கல்விக்கடன் கேட்டு வழங்கிய 537 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளின் கல்லூரிக் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, கல்விக்கடன் பெறுவதற்கு ஏற்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டன.
மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று கல்விக்கடன் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.
இவர்களுக்கு தேவையான வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் விவரங்கள் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட விஏஓ, வருவாய் ஆய்வாளர்களால் கணினியில் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதன் அடிப்படையில் வட்டாட்சியர்களின் மின் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. 68 மாணவ, மாணவிகளுக்கு உடனடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம் ஆக. 2-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றார் அவர்.
முகாமில், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, ஒன்றியக் குழுத் தலைவர் து. ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் என். ராஜா (தஞ்சை), கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் ராமசாமி, முதன்மை மேலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment