Wednesday, 30 July 2014


கும்பகோணம், : ஆடிபெருக்கு விழாவுக்காக கும்பகோணத்தில் அவல் இடிப்பதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழர்களின் முக்கிய திருவிழாவில் ஒன்று ஆடிபதினெட்டாம் நாள் வரும் ஆடிப்பெருக்கு விழா. இந்த விழா காவிரி ஆறு துவங்கும் தலைக்காவிரியில் தொடங்கி அந்த ஆறு கடலோடு கலக்கும் பூம்புகார் வரை நடக்கிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், விவசாயிகளை காப்பாற்றி வரும் நீர் ஆதாரமாக திகழும் ஏரி, குளம், ஆறுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு வரும் 3ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் எவ்வளவு உற்சாகமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறதோ, அதே போல் காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் பதினெட்டாம்பெருக்கு விழா மட்டும் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், தங்களுக்கு விவசாயத்தை வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக விளங்கும் நீர் நிலைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரி கரையோர மக்கள் குறுவை, சம்பா இப்படி எந்த போகத்தில் நெல் விளைந்தாலும் அந்த நெல்லில் கொஞ்சம் எடுத்து காவிரி தாய்க்கு படைப்பதை இன்றளவும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இப்படி எடுத்து வைத்த நெல்லை அவலாக இடித்து இதை காவிரிக்கு படைப்பதும், உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வதும் வழக்கம்.
குறிப்பாக காவிரி, கொள்ளிடம் கரையோர மக்களும், வீராணம் ஏரிக்கரையோர மக்களும் அதிகளவில் ஆடிப்பெருக்கு விழாவில் அவல் வைத்து படைத்து வருகின்றனர். இதற¢காக விளைந்த நெல்லை எடுத்து அவலாக இடித்து வருகின்றனர். கும்பகோணம் பகுதியில் உள்ள மில்லில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று அவல் இடித்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்குடி, த.பழூர், அரியலூர், மதனத்தூர், நீலத்தநல்லூர், அணைக்கரை, முள்ளங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பெண்கள், ஆண்கள் அதிகாலை முதல் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அவல் இடிக்கும் மில்லில் குவிய துவங்கினர். நேற்று அதிகாலை 5 மணி முதல் வரிசையில் நின்று நெல்லை கொடுத்தனர். இந்த நெல்லை வாங்கி அதை வறுத்து பின்னர் அவலாக இடிப்பதற்கு ஒரு கிலோவுக்கு கூலியாக ரூ.7 வசூல் செய்யப்படுகிறது.
இந்த அவலை சில மணி நேரங்களில் கொடுப்பதும் உண்டு. கூட்டம் அதிகமாக இருந்ததால் மறுநாள் வழங்கப்படுவதும் உண்டு. அவல் இடிப்பதற்காக காசிராமன் தெருவில் நேற்று மட்டும் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.  இதுகுறித்து அணைக்கரையை சேர்ந்த விசாலாட்சி கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஆடிபெருக்குக்கு கும்பகோணத்தில் அவல் இடிப்பது வழக்கம். இந்த பகுதியில் இங்கு மட்டும் தான் அவல் மிஷின் உள்ளது. நான் காலை 5 மணிக்கு வந்து 8 மணிக்கு தான் மில்லில் கொடுத்துள்ளேன். நாளை தான் கிடைக்கும் என்கின்றனர். வழக்கம்போல் இந்தாண்டும் கூட்டம் அதிகமாக உள்ளது என்றார்.
ஒழுகச்சேரி ராஜேஸ்வரி கூறுகையில், ஆடிப்பெருக்கு விழாவில் பழங்கள் வைத்து படையலிட்டாலும் அவல் தான் முக்கியம். வயலில் விளைந்த நெல்லை விற்பனை செய்யும் முன் ஒரு 6 மரக்கால் எடுத்து தனியாக வைத்துவிடுவோம். ஆடிபெருக்கு வரும்போது அந்த நெல்லை எடுத்து அவல் தயாரிப்போம். எங்கள் ஊரிலிருந்து 30 பெண்கள் வந்துள்ளோம். காலை 6 மணிக்கு நெல்லை கொடுத்துள்ளோம் என்றார்.
அவல் தயாரிப்பாளர் தங்கப்பன் கூறுகையில், காலம்காலமாய் இந்த பழக்கவழக்கம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வடக்குகரையில் உள்ளவர்கள் தான் இங்கு அதிகம் வருகின்றனர்.
பெரம்பலூர், அரியலூர், கும்பகோணம் பகுதியை எடுத்து கொண்டால் கும்பகோணத்தில் இங்கு மட்டும் தான் மில் உள்ளது. ஆடிபெருக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவல் தயாரிப்பு துவங்கிவிடும். இதற்காக இரவு பகலாக தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் வேலைபார்த்து வருகிறோம். முன்பெல்லாம் நெல்லை கொடுத்து 2 மணி நேரத்தில் அவல் பெற்று செல்லலாம். கூட்டம் அதிகமாக இருப்பதால் நெல்லை வாங்கி கொண்டு மறுநாள் வரச்சொல்கிறோம். முடிந்தால் அன்றே கொடுத்து விடுவோம். தற்போது நாள் ஒன்றுக்கு 6 டன் நெல்லை அவலாக இடித்து தருகிறோம் என்றார்.தாய் வீட்டு சீதனமாக அவல்
தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு எப்படி தாய் வீட்டு சீதனம் பெண்களுக்கு அனுப்பப்படுகிறதோ, அதேபோல் ஆடிப்பெருக்கு விழாவிற்கு கொள்ளிடம் கரையோர கிராமத்தில் அவல் சீதனமாக வழங்கப்படும். பிறந்த பெண்களுக்கு அவலை மகிழ்ச்சியாக வழங்கினால் அந்த வீடும் மகிழ்ச்சியாக ஆண்டு முழுவதும் இருக்கும் என்பது ஐதீகம். இதனால் பெண்கள் இடித்து செல்லும் அவலில் அதாவது 6 மரக்கால் இடித்தால் 2 மரக்கால் பெண்களுக்கு வழங்கப்படுவதுண்டு.
உற்சாகமான நாள்
காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றாலும், ஆடிப்பெருக்கு விழாவின்போது அந்தந்த ஊர்களில் உள்ள கோயில்களுக்கு சென்று புதுமண தம்பிகள் மட்டுமல்லாது, கிராம மக்கள் அனைவரும் வழிபாடு செய்வர். புதுமண தம்பதிகள் மஞ்சள் கயிறு மாற்றி கொள்வதும், சர்க்கரை கலந்து அவலை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வதையும் உற்சாகமான விழாவாக கொண்டாட போவதாக அவல் உடைக்க வந்த பெண்கள் பலரும் தெரிவித்தனர்.

-தினகரன்.

0 comments:

Post a Comment