Saturday, 27 September 2014


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்து என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. வாசகர்கள் கேள்வி எழுப்ப தி இந்து (ஆங்கிலம்) இதழின் கே.வெங்கடராமன் பதில் அளித்துள்ளார்.

மேல்முறையீடு செய்யலாமா? அல்லது இதோடு அனைத்தும் முடிந்ததா?

அவர் மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றமே.

அடுத்த முதல்வர் யார்?

இதனை யார் வேண்டுமானாலும் ஊகிக்கலாம். இதே போன்ற ஒரு சூழலில் முன்பு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார். இப்போது விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயர் பட்டியலில் முதலில் இருக்கிறது.

ஜெயலலிதா உடனடியாக காவலில் வைக்கப்படுவாரா?

தண்டனை 3 ஆண்டுகள் வரை கிடைத்தால், தீர்ப்பளித்த நீதிமன்றமே குற்றவாளி மேல்முறையீடு செய்வதை அனுமதிக்கும் விதமாக சிறையில் தள்ளப்படுவதை சற்றே ஒத்திவைக்க வாய்ப்புண்டு. ஆனாலும் இது நீதிமன்றத்தின் முழு விருப்பம் சார்ந்ததே. 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்படுமெனில் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஜாமீன் அளிக்கும் அதிகாரம் கிடையாது. குற்றவாளி உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். இப்படியொரு நிலை ஏற்பட்டால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படலாம்?

சட்டப்படி ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெறலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் குற்றவாளிகள் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யாக இருக்கத் தடை விதிக்கிறது. ஆனால் முதல்வர்/பிரதமர்/அமைச்சர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கப்படும் சட்டப்பிரிவு எது? ஜெயலலிதா எம்.எல்.ஏ.பதவியை இழந்தாலும் முதல்வராகத் தொடர வாய்ப்பிருக்கிறதா?

1951, மக்கள் பிரதிநித்துவச் சட்டம், எந்த ஒருவரையும் முதல்வர்/பிரதமர்/அமைச்சர் ஆவதை தடை செய்யவில்லை. இது அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவாகும். ஒருவர் எம்.எல்.ஏ. ஆக இல்லை என்றால் கூட 6 மாதங்களுக்கு முதல்வராகலாம். இப்படியிருந்தாலும், 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதிலும் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரது பதவியை தகுதி இழப்பு செய்தது. தற்போது தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தே தகுதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சொத்துக்கள் என்ன செய்யப்படும்?

வருவாய்க்கு அதிகமாகக் குவிக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை ஏலம் விடலாம். ஆனால் இதற்கெல்லாம் நீண்டகாலமாகும். காரணம் மேல்முறையீடு என்ற நடைமுறையெல்லாம் இருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை என்ன ஆகும்?

சட்டப் பேரவை தொந்தரவு செய்யப்படமாட்டாது.

அடுத்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா?

தகுதி இழப்பு ஏற்பட்டது தொடர்ந்தால் அவரால் போட்டியிட முடியாது. இந்தத் தீர்ப்பு மேல்முறையீட்டில் மாற்றப்பட்டாலோ அல்லது குற்றவாளி என்ற தீர்ப்பு இடைநீக்கம் செய்யப்பட்டாலோ அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம்.

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு என்ற போதிலும் தற்போதைய அமைச்சர்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?

அமைச்சரவை என்பது முதல்வரின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்படுவது. இப்போது அவர் முதல்வர் இல்லை. முதல்வர் இல்லாத அமைச்சரவை கிடையாது. ஆகவே அடுத்த முதல்வர் ஆளுநரிடம் அமைச்சர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.

சிறைத்தண்டனை என்றால் அவர் எந்த மாநில சிறையில் அடைக்கப்படுவார்?

இப்போதைக்கு கர்நாடகா. ஆனால் தமிழகச் சிறைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை வைக்க உரிமை உண்டு.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்து தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியுமா?

மாநில அளவில் நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவர 18 ஆண்டுகள் ஏன்?

2000ஆம் ஆண்டிலேயே விசாரணை முடிவடையும் நிலையை எட்டியது. ஆனால் 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்த பிறகு அனைத்து சாட்சிகளும் தங்கள் வாக்குமூலங்களை மாற்ற வைத்தது. இதனையடுத்த் உச்ச நீதிமன்றத் தலையீட்டின் பேரில் கர்நாடகாவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அங்கு இந்த வழக்கு மீண்டும் புதிதாகத் தொடங்கியது. பல மனுக்கள், ஏகப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் மாற்றங்கள் ஆகியவற்றால் காலதாமதம் ஆனது. 

-தி இந்து.
சேலத்தில் பஸ் உடைப்பு.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.

ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அதிமுக-வினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

சிறிய அளவில் உள்ள காவலர்களும் அதிமுக-வினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அங்கும் போலீஸ் வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கிறது.

மதுரையில் பதற்றம் கூடுதலாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவினர் கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டு வன்முறை செய்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள கடைகள் மூடப்பட்டுவிட்டன. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியிலு பதற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு வரும் வோல்வோ பேருந்துகளை ரத்து செய்துள்ளது. 

-தி இந்து.

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக, அவர் ஜாமீனில் வெளிவர முடியாது என்பதால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
சிறைத் தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சில மணி நேரத்துக்குப் பின்னர், பிற்பகலில் ஜெயலலிதாவுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட்டார்.
மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக, நீதிமன்றம் அறிவித்தது. .

முதல்வர் பதவியை இழந்தார் ஜெ:
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் 'தி இந்து'விடன் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார்.
அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு பின்னணி:
கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. வழக்கு
குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.
இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டது.
எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.
எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்துள்ளனர்.
எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதம்:
ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம் வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக்கிற்கும் தொடர்பில்லை. திமுகவின் அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியிருந்தார். 

-தி இந்து.
பெங்களூர்: கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு தீர்ப்பினை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி நீதிபதியாக உயர்ந்தது வரை நேர்மையானவராகவே இருந்து வந்துள்ள நீதிபதி குன்ஹா அளித்துள்ள தீர்ப்புக்கள் சரியானதாகவே இருந்துள்ளதாம்.
 6 நீதிமன்றங்கள்
 1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது.

90 நீதிபதிகள் விசாரணை
சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை ஏராளமான நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துனர். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் கடும் உழைப்பும், அசராத அணுகுமுறையுமே முக்கிய காரணம்.

வழக்கறிஞர் டூ நீதிபதி
மங்களுர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய நீதிபதி குன்ஹா 2002ல் நீதிபதி தேர்வு எழுதி பெல்காம் மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார். உமாபாரதிக்கு எதிராக 1994ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றியதனால் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உமாபாரதி மீது கலவரத்தை தூண்டுதல், கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது.  2002ஆம் ஆண்டு இந்த வழக்கினை திரும்ப பெற அப்போதய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு மாவட்ட நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. ஆனால் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உமாபாரதி எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஹூப்ளி மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.குன்ஹா, நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து ஹூப்ளி நீதிமன்றத்தில் உமாபாரதி சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் குன்ஹா. லோக் ஆயுக்தா லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அதன் பிறகு ஹார்வா மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின், பெங்களூரு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அங்கிருந்து பெங்களூரு புறநகர் கோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார்.
ஊழலுக்கு எதிரானவர்
ஊழலுக்கு எதிராக செயல்படுபவர் என்று பெயரெடுத்தவர். அதனால்தான் இவரை கர்நாடக அரசு விஜிலென்ஸ் துறையில் பதிவாளராக நியமித்தது. இந்த வழக்கை விசாரிக்க குன்ஹாதான் சரியான நபராக இருப்பார் என்று கர்நாடக அரசே இவரைப் பரிந்துரைத்தது.
 14 வது நீதிபதி குன்ஹா
 1997-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜான் மைக்கேல் டி'குன்ஹா 14-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
11 மாதங்களில் தீர்ப்பு
பெங்களூர் சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்,பெங்களூர் மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த 11 மாதங்களில் வழக்கை தீர்ப்பை நோக்கி நகர்த்தியுள்ளார்.அதற்கு காரணம் அவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகு முறையும்தான் காரணம்.

கண்டிப்பான நீதிபதி
மேலும் மனு மேல் மனு போட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தனியார் நிறுவனங்களின் மனுக்களை மிகச்சரியாக கையாண்டார். முதல் முறையாக அவர்களுக்கு அபராதம் விதித்தார். அரசு வழக்கறிஞருக்கும் அபராதம் விதித்த கண்டிப்பான நீதிபதி இவர்.
 18 மணிநேர வேலை
 டி'குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் வாரத்தின் 5 நாட்களும் விசாரணையை தொடர்ந்து நடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரம் ஒதுக்கி வேலை செய்தார். தீர்ப்புக்கு ஆயத்தம் அதுவும் தீர்ப்பு தேதியை குறித்த பிறகு, நீதிமன்றத்தை சுத்தம் செய்பவர்கள் வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து விடுவார். வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் படித்து, அவ்வப்போது குறிப் பெடுத்துக்கொள்வார் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதி டி'குன்ஹாவின் பாணி குறித்து விவரிக்கின்றனர்.
 இரவு வரை பணி
 காலை 8.18 மணிக்கு தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குன்ஹா மாலை 7.30 மணி வரை பணியில் மூழ்கினார்.இன்று வழங்கவிருக்கும் தீர்ப்பின் பக்கங்களுக்கு இறுதிவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதுவும் தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே கடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சு செய்துள்ளார். திருத்த முடியாத தீர்ப்புக்கள் நீதிபதி டி'குன்ஹாவை பொறுத்தவரை அவர் ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர்நீதி மன்றங் களை அணுகினாலும் தோல்வியே அடையும்.அந்த அளவுக்கு தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என கர்நாடக நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Read more at: http://tamil.oneindia.in/news/india/jayalalithaa-s-asset-case-judge-michael-d-cunha-211814.html

Friday, 26 September 2014

Annamalaiyar-Sothu-Kaappaatrappadumaa---1
புகழ்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகத்தில் நிறைய சொத்துக்கள் உள்ளன. அவற்றில் சென்னை அடையாறு பகுதியில் ஆயிரக்கணக்கான சதுர அடிகள் நிலம் உள்ளது. இந்த நிலங்களும் மனைகளும் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பாளர்களின் பயனில் இருக்கின்றன. இந்த நிலங்களுக்கும் மனைகளுக்கும் சந்தை நிலவரப்படி வாடகைப் பணம் தீர்மானித்திருந்தால் கடந்த பலவருடங்களாக கோடிக்கணக்கான ரூபாய்கள் கோவிலுக்கு வருமானமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அறநிலையத்துறை மிகக் குறைவான கட்டணமே நிர்ணயித்து அதை “நியாய வாடகை” என்றும் பெயரிட்டுள்ளனர். சொத்துக்களின் பயனாளர்கள் கோவிலுக்குத் தரவேண்டிய நியாய வாடகையையும் பலவருடங்களாகத் தராமல் இருக்கின்றனர். பலர் தங்கள் வசம் உள்ள மனைகளை உள்வாடகைக்கு விட்டுப் பெரும்பணம் சம்பாதிக்கின்றனர்.
அறநிலையத்துறையின் விளம்பரம்
இந்நிலையில், அறநிலையத்துறை தினத்தந்தி நாளிதழில் செப்டம்பர் 14-ம் தேதியன்று பின்வருமாறு ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது:

“அடையாறு ஊருர் கிராமத்தில் அமைந்துள்ள பழைய சர்வே எண் 41-ல் கீழ்காணும் விவரப்படியான சொத்துக்களில் கீழ்வரும் நபர்கள் வாடகைதாரர்களாக அனுபவித்து வருகிறார்கள். திருக்கோயில் அனுமதியின்றி வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை தங்கள் விருப்பம் போல் கட்டிக்கொண்டு மாதம் ஒன்றுக்கு பல இலட்சக்கணக்கான ரூபாய் உள்வாடகைக்கு விட்டு சட்ட விரோதமாக இலாபம் சம்பாதித்து வருகிறார்கள். அரசு நியாய வாடகை நிர்ணயம் செய்தபடி திருக்கோயிலுக்குச் செலுத்தவேண்டிய வாடகையை செலுத்தாமல் ‘அக்னி சொரூபமான அண்ணாமலையாரை’ ஏமாற்றி வருகிறார்கள். கீழ்வரும் திருக்கோயில் கேட்பு, வசூல், நிலுவை பதிவேட்டில் இடம்பெற்றுள்ள வாடகைதாரர்கள் தங்கள் நிலுவை வாடகையை இந்த அறிவிப்பு கண்ட 7 தினங்களுக்குள் செலுத்த அறிவிக்கப்படுகிறது. தவறினால் வாடகைதாரர்களின் வாடகை உரிமம் மறு அறிவிப்பின்றி ரத்து செய்ததாகக் கருதப்படும். இந்து சமய அறநிலைய சட்டம் 1959 சட்டப்பிரிவு 78-ன் கீழ் வாடகை செலுத்தாதவர்கள் ஆக்கிரமிப்பாளராகக் கருதப்பட்டு சுவாதீனத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது இதன் மூலம் இறுதியாக அறிவிக்கப்படுகிறது” என்று கூறி, 88 நபர்களின் பெயர்கள், மற்ற விவரங்களுடன் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது அறநிலையத்துறை. இந்த விளம்பரத்திற்கு “சிவன் சொத்து குல நாசம்” என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
Annamalaiyar Sothu Kaappaatrappadumaa - 2
இந்த விளம்பரத்தின்படி, அறநிலையத்துறைக்கு வரவேண்டிய பணம் ரூ.5,25,31,906/-. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் இரண்டாவது பட்டியலையும் தினத்தந்தி நாளிதழில் வெளியிட்டுள்ளது அறநிலையத்துறை. அதன்படி நிலுவையில் உள்ள தொகை ரூ.8,92,65,344/-. ஆக மொத்தம் அண்ணாமலையாரின் அடையாறு பகுதி சொத்துக்களின் பயனீட்டாளர்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டிய பணம் ரூபாய் பதினாலு கோடியே, பதினேழு லக்ஷத்து, தொண்ணூற்று ஆயிரத்து இருநூற்றி ஐம்பது (ரூ.14,17,97,250) ஆகும்.
மேலோட்டமாகப் பார்க்கையில் அறநிலையத்துறை வாடகை பாக்கியை வசூலிப்பதில் தீவிரமான நடவடிக்கை எடுத்துள்ளது போலத் தோன்றினாலும், அறநிலையத்துறையின் கடந்தகால நிர்வாக லட்சணத்தை நோக்கும்போதும், எந்த அளவுக்குத் தீவிரமாக இந்த நடவடிக்கையில் இறங்குவார்கள் என்பதை யோசிக்கும்போதும், நமக்குத் துறையின் மீது நம்பிக்கை எழவில்லை. நம் மனதில் எழும் நம்பிக்கையின்மைக்குக் காரணமாக இந்த மேற்கண்ட அறிவிப்பு விளம்பரத்திலிருந்தே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
அரசு விதிகளுக்குப் புறம்பான செயல்
ஜே.தாமஸ் என்பவரின் சுவாதீனத்தில் 83,602 சதுர அடி நிலம் உள்ளது. இதற்கு நியாய வாடகையாக மாதத்திற்கு ரூ.590 நிர்ணயம் செய்துள்ளது அரசு. இதில் இரண்டு விஷயங்கள் கவனத்திற்கு உரியவை.
முதலாவதாக, பயனாளியான தாமஸ் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். ஹிந்துக் கோவிலின் சொத்துக்களை மாற்று மதத்தவருக்கு வாடகைக்கோ குத்தகைக்கோ விடக்கூடாது என்பது விதி. அரசு ஆணை (G.O. Ms. No. 689, Home dated 18th February 1958) படி, கோவில் சொத்துக்களை ஹிந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று உள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரத்தின்படி, தாமஸ் மட்டுமல்லாது, எட்வர்ட், அப்துல் கரீம் போன்ற மேலும் சில மாற்று மதத்தவர்களும் அண்ணாமலையர் சொத்தை அனுபவித்து வருகின்றனர். அரசு ஆணைப்படி அவர்களை வெளியேற்றாதது மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து மிகக் குறைந்த வாடகையையும் இத்தனை வருடங்களாக வசூலிக்காமல் இருந்ததும் அறநிலையத்துறையின் குற்றமாகும்.
இரண்டாவதாக, D.Dis.No.2599/58, dated 1st February 1958 - D.Dis.No.2311/58, dated 7th April 1958 படி, கோவில் நிலங்களையும், மனைகளையும், கட்டிடங்களையும் வாடகைக்கு விடும்போது, அவற்றை உள்வாடகைக்கு விடக்கூடாது என்றும், அந்நிலங்களில் வாடகைதாரர்கள் எந்தவிதமான கட்டிடங்களையும் கட்டக்கூடாது என்றும் விதிகள் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட தேதியில் வாடகை ஒப்பந்தம் தானாகவே ரத்தாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏல அறிவிப்பிலும், வாடகை அறிவிப்பிலும் இந்த விதிகளைக் கட்டாயமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அடையாறு பகுதியில் உள்ள அண்ணாமலையாரின் சொத்துக்கள் வாடகைக்கு விடப்பட்டபோது இந்த விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பது தெளிவாக இல்லை. அவ்வாறு பின்பற்றப்பட்டிருந்தால் மேற்கண்ட நிலைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இத்தனை வருடங்களாக கோவில் நிர்வாகத்தினரும் சென்னை அறநிலையத்துறை தலைமை அலுவலர்களும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.
Annamalaiyar-Sothu-Kaappaatrappadumaa-2

மூன்றாவதாக, சந்தை நிலவரப்படி அடையாறு பகுதியில் 83,602 சதுர அடிக்கு மாத வாடகை பல லட்சங்கள் இருக்கும் என்றாலும், அரசின் பார்வையில் ரூ.590 தான் “நியாயமாக”த் தெரிந்துள்ளது. சாதாரணமாக இந்த மாதிரி மிகக் குறைந்த வாடகை, தோப்பு அல்லது விவசாய நிலம் ஆகியவற்றிற்குத்தான் நிர்ணயம் செய்யப்படும். ஒரு மாநகரில் பெரும் மதிப்புள்ள பகுதியில் உள்ள நிலத்திற்கு இவ்வளவு குறைந்த வாடகை நிர்ணயித்திருப்பது வியப்பையும் சந்தேகத்தையும் அளிக்கிறது.
தனியார் நிறுவனங்கள் இப்பகுதியில் சதுர அடிக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை என்கிற கணக்கில் வாடகை வசூல் செய்கிறார்கள். ஆகவே, சந்தை நிலவரப்படி, தாமஸ் என்பவரின் சுவாதீனத்தில் இருக்கும் 83,602 சதுர அடி நிலத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வாடகை வரவேண்டும். இதே நிலத்தில் இரண்டு அடுக்கு தளமாக இருந்தால் ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாமல் வாடகை பெறலாம். அதே இடத்தை ஒரு சிறந்த வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு கொடுத்தால் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை கூட வாடகை பெறலாம். ஆக, சுமார் 5 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் வரவேண்டிய இடத்திலிருந்து வெறும் 7080 ரூபாய் தான் பெறுகிறது அறநிலையத்துறை.
அறநிலையத்துறையின் விளம்பரத்தின்படி, அடையாறின் அந்தப் பகுதியில் அண்ண்ணாமலையாரின் சொத்தானது கிட்டத்தட்ட 13 லட்சம் சதுர அடிகள் (13, 14, 640) இருக்கிறது. எனவே, மொத்தத்தில் குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் அண்ணாமலைக்கு வருமானம் பெற்றுத் தரவேண்டிய வேண்டிய அறநிலையத்துறை வெறும் சில லட்சங்கள் தான் பெற்றுத் தருகிறது. அந்த சொல்பத் தொகையிலிருந்தும் கோவிலை நிர்வாகம் செய்வதற்காக 14% தொகையைத் தான் எடுத்துக்கொள்கிறது அறநிலையத்துறை. மேலும் கடந்த 30 வருடங்களாக சந்தை நிலவரத்தின்படி வாடகை வசூலித்திருந்தால் குறைந்த பட்சமாக 500 கோடி ரூபாய்கள் கிடைத்திருக்கும். அந்த 500 கோடி ரூபாய் வருமானத்தில் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள் துவக்கியிருக்கலாம்! எத்தனை கோசாலைகள் திறந்து லட்சக்கணக்கான கால்நடைகளைக் காப்பாற்றியிருக்கலாம்! எத்தனை ஆயுர்வேத மருத்துவ மனைகள் கட்டியிருக்கலாம்! எத்தனை நலிவடைந்த கோவில்களைப் புனர்நிர்மாணம் செய்திருக்கலாம்! எத்தனை சிற்பக்கல்லூரிகள் திறந்திருக்கலாம்! எத்தனை வேத ஆகம பாடசாலைகள் கட்டியிருக்கலாம்! எத்தனை திருமுறை திவ்யப்பிரபந்தப் பள்ளிகள் ஆரம்பித்திருக்கலாம்!
ஒரு கோவிலின் சொத்துக்கே இவ்வளவு செய்ய முடியும் என்றால், அனைத்துக் கோவில்களின் சொத்துக்களுக்கும் சந்தை விலையில் வாடகையும் குத்தகையும் வசூல் செய்திருந்திருந்தால் இத்தனை ஆண்டுகளில் பொது மக்களுக்கு எவ்வளவு சேவைகள் செய்திருக்க முடியும்! தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறியிருக்கும்!
விடையில்லா கேள்விகள்
அறநிலையத்துறையின் மேற்கண்ட அந்த விளம்பரத்தில் தாமஸ் என்பவர் மூன்று வருடங்களாகத் தரவேண்டிய நிலுவையில் உள்ள வாடகைத்தொகை 23,350 ரூபாய். மாதாமாதம் பல்லாயிரம் ரூபாய்கள் சம்பளம் பெறும் நிர்வாக அதிகாரி மூன்று வருடங்களாக வாடகை வசூலிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? வாடகை தராமல் இருக்கும் தாமஸ் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் படி நடவடிக்கையெடுத்து அவரை வெளியேற்றிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?
ஒரு புறம் வாடகைகளை வசூலிக்காமல் இருக்கும் அறநிலையத்துறை, மறுபக்கம் தன்னுடைய நிர்வாகச் செலவுக்காக, கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக இக்கோவிலிலிருந்து கட்டணமாக எடுத்துக்கொண்டுள்ளது.
எந்த ஒரு நிறுவனமும் தனது கணக்குகளைத் வெளித்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். தனக்குத் தானே ஒரு தணிக்கையை செய்துகொள்ள முடியாது. ஆனால் அறநிலையத்துறை தன் கணக்குகளை வெளித்தணிக்கைக்கு உட்படுத்துவது கிடையாது. தானேதான் சரிபார்த்துக்கொள்கிறது. இவ்வாறு ஒரு முறையை “அறிவியல்” பூர்வமாக வகுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். கடந்த 30 ஆண்டுகளாக தன்னுடைய கணக்கு வழக்கைத் தானே தணிக்கை செய்துகொண்டு வரும் அறநிலையத்துறையின் நிர்வாக லட்சணத்திற்கு இந்த ஒரு கோவில் உதாரணம் போதாதா? இதன் மூலமே அறநிலையத்துறையின் நிர்வாகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டதே!
அரைகுறை ஆவணங்கள்
ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு ஆண்டும் “கேட்பு, வசூல், நிலுவை பதிவேடு” என்கிற ஆவணத்தைத் தயார் செய்ய வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. அனால் அதில், தற்பொழுது இந்தச் சொத்தின் பயனாளிகள் யார் என்கிற விவரம்தான் இருக்கின்றதே தவிர, வாடகை ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. அறநிலையத்துறை “கேட்பு வசூல் நிலுவைப் பதிவேட்டில் உள்ளவர்” என்றுதான் குறிப்பிடுகிறது. அதாவது, குடியிருக்க ஒப்பந்தம் செய்துகொண்ட ஒருவர் அவ்விடத்தில் வணிக நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தால் அது அறநிலையத்துறையின் ஆவணத்தில் தெரியாது. ஆனால் சட்டப்படி, குடியிருக்க ஒப்பந்தம் செய்த ஒருவர் அவ்விடத்தை வணிகம் செய்வதற்குப் பயன்படுத்தத் தொடங்கிய அன்றே ஒப்பந்தம் காலாவதி ஆகிவிடும்.
அதன்படி, அண்ணாமலையார் கோவில் சம்பந்தமாக முதன் முதலில் தயாரிக்கப்பட்ட கேட்பு வசூல் நிலுவைப் பதிவேட்டில், வாடகை ஒப்பந்தங்கள் முதலான விவரமான ஆவணங்கள் இருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டபோது, அந்த ஆவணங்கள் தன் அலுவலகத்தில் இல்லை என்று கூறிவிட்டது அறநிலையத்துறை.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இக்கோயிலுக்கு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட கேட்பு வசூல் நிலுவை பதிவேட்டின் நகல்களை வழங்கச் சொல்லியும், சம்மந்தப்பட்ட பதிவேட்டில் உள்ள அசையா சொத்துகள் ஏதேனும் தற்பொழுது கோயில் வசம் இல்லாமல் இருக்கிறதா? அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்தச்சொத்து உள்ள கிராமம், சர்வே எண், மொத்த அளவு, அந்தச் சொத்து கோயிலிடம் இருந்து யாருக்கு கிடைக்க பெற்றது? அந்தச் சொத்தைப் பெற்ற நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவலையும் வழங்கச் சொல்லியும் கேட்கப்பட்டது. மேலும், மேற்படி சொத்து விற்கப்பட்டது தொடர்பான அரசின் உத்தரவு, ஆணையரின் உத்தரவு, கோயில் தக்கார் மற்றும் அறங்காவலர் அனுமதி தொடர்பான ஆவண நகல், இது தொடர்பாக கொடுக்கப்பட்ட விளம்பர நகல்களை வழங்கவும் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம், “முதன் முதலில் தயாரிக்கப்பட்ட கேட்பு வசூல் நிலுவைப் பதிவேடு ஆவணங்கள் தன்வசம் இல்லை; திருக்கோவில் சொத்துப்பதிவேட்டில் பதியப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் திருக்கோவில் வசம் உள்ளது என்ற விவரம் தகவலாகத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று பதிலளித்திருக்கிறது.
அதாவது, பல நூறுகோடி ரூபாய் முறைகேட்டை வெளிக்கொண்டு வர உதவும் முக்கிய ஆவணங்களைத் தன்னிடம் இல்லையென்று, கோவிலிலிருந்து “நிர்வாகத்திற்காக” ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ளும் அறநிலையத்துறை கூறுகிறது. அறநிலையத்துறையின் இந்தப் போக்குதான் அதன் மீதான நம்பிக்கையின்மையை அதிகரிக்கிறது.
மேற்கண்ட விளம்பரத்தின் கூறப்பட்டுள்ள அடையாறு பகுதியில் உள்ள பயனாளர்கள் அனைவருக்கும் மின்சார இணைப்பு உள்ளது; அவர்களுக்கு வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆகியவைகளும் உண்டு. ஆகவே மின்சார அலுவலகம், ரேஷன் அலுவலகம், தேர்தல் அலுவலகம் ஆகியவற்றின் மூலம் இந்தப் பகுதியில் இருப்பவர்களின் தகவல்களைத் திரட்டுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. மேலும், அந்தப் பகுதியில் இருக்கும் வங்கிகளிடமும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் கணக்குகள் இருக்கும்; சாலைப் போக்குவரத்து அலுவலகத்திலும் (RTO) அந்தப் பகுதியில் வாகனப் பதிவுகள் செய்தவர்களின் விவரங்கள் இருக்கும்; அந்தப் பகுதியில் வாணிபம் செய்பவர்களின் தகவல்கள் பதிவுத்துறை அலுவலகங்களிலும் இருக்கும். ஆகவே, மேற்கண்ட தினத்தந்தி விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 88 பேர் அவர்கள் சுவாதீனத்தில் உள்ள இடங்களை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரங்களைச் சேகரிப்பது ஒன்றும் கடினமான காரியம் இல்லையே! எத்தனை பேர் ஆரம்ப காலத்திலிருந்து குடியிருப்போர், எத்தனை பேர் புதியதாகக் குடியேறியவர்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் போன்ற தகவல்களைச் சுலபமாகச் சேகரிக்கலாமே! முறைகேடு செய்துள்ளவர்களை சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுத்து வெளியேற்றலாமே!
கோவிலுக்குப் பயன்படாத வாகனங்கள்
தினத்தந்தி விளம்பரத்தில், குறிப்பிட்ட பயனாளிகள் பல கட்டடங்களைக் கட்டியுள்ளனர் என்றும், உள்வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிக்கின்றனர் என்றும் கூறியுள்ள அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் உதவியுடன் அந்த சட்டத்திற்குப் புறம்பான கட்டிடங்களை இடித்திருக்கலாமே! புறம்போக்கு நிலத்தைக்கூட வருடத்திற்கு இரண்டு முறை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதிகள் உள்ள நிலையில், கோவில் சொத்துக்களை வருடத்திற்கு ஒருமுறை கூட பார்வையிட வேண்டும் என்கிற சட்ட விதிமுறை எதுவும் இல்லையா என்ன? ஆயிரக்கணக்கில் மாதச் சம்பளம் பெறும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதைவிட வேறு என்ன வேலை?
கோவில் பயன்பாட்டிற்கு என்று சொல்லி லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து வாகனங்களை வாங்கிக் குவிக்கும் அறநிலையத்துறை, அந்த வாகனங்களை வைத்துக்கொண்டு என்ன செய்கிறது? இந்த கோவில் சொத்துக்களை முறையாகப் பார்வையிடுவதற்கு அந்த வாகனங்களை பயன்படுத்தாமல் வேறு எந்த காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அனுப்பிய மனு ஒன்றிற்கு, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் கடந்த 2004ம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பிறகு, கோவில் பயன்பாட்டிற்காக, 1 டிராக்டர், 3 பொலீரோ ஜீப்புகள், 1 மினி டிப்பர் லாரி, 1 டாடா ஏஸ் ஆகிய வாகனங்களை வாங்கியிருப்பதாகவும், இதில், ஒரு பொலீரோ ஜீப்பு மட்டும் 18-04-2012 முதல் அறநிலையத்துறை அமைச்சர் அலுவலகப் பயன்பாட்டில் உள்ளதெனவும், அதற்கு 17-06-2013 முதல் ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டுனராக மாதம் ரூ.12,000/- சம்பளத்தில் பணியில் இருப்பதாகவும் பதில் அளித்திருக்கிறது. மற்ற இரண்டு பொலீரோ ஜீப்புகளும் ஒரு டாடா ஏஸும் எந்த்த் துறையின் பயன்பாட்டில் இருக்கின்றன, எந்த அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர், ஓட்டுனர்கள் யார், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் போன்ற கேள்விகளுக்கு கோவில் நிர்வாகம் பதிலளிக்கவில்லை.
கோவில் நிர்வாகத்திற்கு என்று வாகனங்கள் வாங்கிவிட்டு அவற்றைக் கோவில் நிர்வாகத்திற்குப் பயன்படுத்தாமல், அமைச்சரின் அலுவலகப் பயன்பாட்டிற்கும் மற்ற துறைகளின் பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்தி வருகிறது அரசு. அதாவது கோவில்களிலிருந்து கிடைக்கும் வருமானம் மற்ற துறைகளின் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
நிர்வாக லட்சணம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி அனுப்பிய மனுவுக்குப் பதிலாக, அண்ணமலையார் கோவில் 1934ம் வருடம் மே மாதம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் மற்றொரு மனுவிற்குப் பதிலளிக்கையில் 1964-ம் ஆண்டு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் வந்த்தாகக் கூறப்பட்டுள்ளது. .
இந்து அறநிலையத்துறை சட்டம் 29ம் பிரிவின்படி கோவிலைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அடங்கிய பதிவேடு (Ledger 29) ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 30ன் படி, அப்பதிவேடும் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டின் கூட்டல்கள், கழித்தல்கள் கணக்கில் கொண்டு (Updating) சரி செய்யப்படவேண்டும். சட்டப்பிரிவு 31ன் படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பதிவேடு (Ledger 29) முழுமையாகத் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் அண்ணாமலையார் கோவிலில் இந்தப் பதிவேடுகள் முறையாகத் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்படவில்லை. முதல் சொத்துப் பதிவேடு 1954-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டப்பதிவேடும் மரப்பதிவேடும் 1998ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தும் பதிவேடுகள் முறையாகத் தயாரிக்கப்படவில்லை.
கோவிலுக்குச் சொந்தமாக 390 ஏக்கர் 56 செண்ட் நிலமும், 28,885 சதுர அடி மனையும், 34, 590 சதுர அடி கட்டிடமும் உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை அடையாறு பகுதியில் மட்டுமே லட்சக்கணக்கான சதுர அடிகள் உள்ளதைப் பார்த்தோம். ஒரு எளிய கேள்விக்குப் பதிலளிப்பதில் கூட நிர்வாகம் அலட்சியமாக நடந்துகொள்வது இதன் மூலம் தெரிகிறது.
மற்றொரு மனுவிற்கு அளித்துள்ள பதிலில் சென்னையில் அடையாறு ஊருர் கிராமத்தில் 30 ஏக்கர் 18 செண்டில் வீட்டு மனைகள், சென்னை மீர்சாகிப் பேட்டை பகுதியில் 7 ஏக்கர் வீட்டு மனைகள், சென்னை தண்டையார்பேட்டை தனபால் நகரில் 23 கிரவுண்டுகள் வீட்டு மனைகள் இருப்பதாகச் சொல்லியிருந்தது கோவில் நிர்வாகம். ஆனால் தற்போது தண்டையார்பேட்டை தனபால் நகரில் இருக்கும் 23 கிரவுண்டுகளும் கோவில் வசம் இல்லை. ஏனென்றால் மற்றொரு கேள்விக்கு ஊருர் கிராமம் மற்றும் மீர்சாகிப் பேட்டை சொத்துக்களை மட்டும்தான் தெரிவித்திருக்கிறார்கள். தண்டையார்பேட்டை சொத்தை மீட்கப்போகிறார்களா என்பது விடையில்லா கேள்வி!
கோவிலின் கோசாலையில் பசுக்கள் இறந்துபோய், அதன் பிறகு தொடரப்பட்ட வழக்கில் தற்போது உயர்நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட மூவர் குழு தமிழகமெங்கும் உள்ள பசு மடங்களை ஆய்வு செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தக் கோவிலில் கோசாலை எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, அது சம்பந்தமான விவரம் அலுவலகத்தில் இல்லை என்று பதில் கூறியுள்ளது. ஆனால், மற்றொரு மனுவுக்குப் பதில் அளிக்கையில் கோசாலை 1991-ம் ஆண்டு துவங்கப்பட்டதாகச் சொல்லியுள்ளது. அந்தக் கோசாலைக்கு 2007 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை ரூ.49,59,151/- செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது கோவில் நிர்வாகம். அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் கோசாலை பராமரிப்புக்குச் செலவு செய்துள்ளது! ஆயினும் பசுக்கள் தொடர்ந்து இறந்து வந்துள்ளன. பசுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்துள்ளது; பசுமடத்திலும் பசுக்கள் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்குவதற்கான ஏற்பாடுகளும் இல்லை; தீவனங்களும் அவ்வளவாகக் கொள்முதல் செய்யப்படுவதில்லை; செலவு மட்டும் லட்சக்கணக்கில் காண்பிக்கப்படுகிறது.
கோவிலின் சொத்துக்களுக்கும் பசுக்களுக்கும் தான் பாதுகாப்பு இல்லையென்றால் அனுதினமும் இறைவனைப் போற்றித் திருப்பணி செய்து வரும் குருக்கள்களுக்கும் சரியான பொருளதாரப் பாதுகாப்பு இல்லை. இக்கோவிலின் பணியாளர்களுக்கு 01-07-1997 முதல் 10-06-98 தேதியிட்ட அரசு ஆணை நிலை எண் 257ன் படியும், 17-06-98 தேதியிட்ட ஆணையரின் உத்தரவுப் (எண் 2534097 ஐ 1) படியும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 11 குருக்கள்களுக்கு அந்த உத்தரவின்படியான ஊதியம் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஐந்து பேருக்கு ரூ.800ம் ஒருவருக்கு ரூ.785ம் மற்றும் ஐந்து பேருக்கு முறையே வெறும் ரூ.94, ரூ.72, ரூ.67, ரூ.66, ரூ.65, மாதச் சம்பளமாகத் தரப்படுகிறது (பட்டியல் புகைப்படத்தைப் பார்க்கவும்). இந்த பதினோரு பேருக்கும் அரசு ஆணையின் படி ஊதிய நிர்ணயம் செய்யாதது மட்டுமல்லாமல், அதற்கான காரணமும் விளக்கப்படவில்லை.
Annamalaiyar Sothu Kaappaatrappadumaa-3
கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானம் உள்ள ஒரு பெரிய கோவிலிலேயே குருக்கள்களின் நிலை இதுவென்றால், வருமானம் இல்லாத நூற்றுக்கணக்கான கோவில்களில் இறைப்பணி செய்யும் குருக்கள்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் வேதனையும் வருத்தமும்தான் மிஞ்சுகிறது. அறநிலையத்துறையின் அலுவலர்கள் யாராவது ஒருவராவது இந்த மாதிரி 60 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்ப்பாரா? அல்லது துறை அதிகாரிகள்தான் இந்த மாதிரியான ஊதியத்தைத் தங்கள் அலுவலர்களுக்கு நிர்ணயம் செய்வரா? அடுக்குமா இந்த அராஜகம்?

 இந்த நிர்வாக லட்சணத்திற்குக் கோவிலிலிருந்து நிதி
கோவிலின் சொத்து மற்ற விவரங்கள் பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு ஆண்டும் முறையாகத் தயாரித்துப் பராமரிப்பதில்லை என்பதைப் பார்த்தோம். மேலும் கோவிலின் கணக்கு வழக்குகளை வெளித்தணிக்கைக்கு விடாமல் இவர்களே பெயருக்கு ஒரு தணிக்கை செய்கிறார்கள் என்பதையும் பார்த்தோம். இவர்களின் இந்தத் தணிக்கை நாடகத்திற்கு ”தணிக்கைக் கட்டணம்” என்கிற பெயரில் கோவிலிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக கடந்த 2001ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரைக்கும் 11 ஆண்டுகளுக்கு தணிக்கக் கட்டணமாக மொத்தம் இரண்டு கோடியே ஐம்பத்தியேழு லட்சத்து தொண்ணூற்றி எட்டாயிரத்து அறநூற்று இருபத்தி ஐந்து (ரூ.2,57,98,625/-) எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூபாய் 23 லட்சத்திற்குக் குறையாமல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதே போல கோவில் சொத்துக்களையும் பசுமடங்களையும் இவர்கள் எவ்வாறு நிர்வாகம் செய்கிறார்கள் என்பதையும் விரிவாகப் பார்த்தோம். இந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்வதற்கு, ”சகாயத்தொகை” என்கிற பெயரில் லட்சக்கணக்கான ரூபாய்கள் ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக மேற்கண்ட அதே 2001ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரையிலான 11 வருடங்களுக்கு மொத்தமாக ஆறு கோடியே எண்பத்திநாலு லட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து இருபத்தி ஏழு ரூபாய் (ரூ.6,84,98,027/-) நிர்வாகக் கட்டணமாக கோவிலிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூபாய் 62 லட்சத்திற்குக் குறையாமல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதோடு மட்டுமல்லாமல், ”ஆணையர் பொதுநல நிதி” என்கிற பெயரில் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள். இதற்காகவும் கணிசமான தொகையை கோவிலிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள். 2001ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டுவரையிலான 11 ஆண்டுகளுக்கு ஒரு கோடியே ஐம்பத்தி மூன்று லட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபாய் (ரூ.1,53,90,000/-) எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொதுநல நிதியிலிருந்து, திருக்கோவில்கள் திருப்பணிகளுக்குச் செலவு செய்வதாக அறநிலையத்துறை சொல்கிறது.
கனன்று கொண்டிருக்கும் எரிமலை
ஆயினும் முறையாகக் கணக்கு வழக்குகளும் தணிக்கைகளும், நிர்வாகமும் இல்லாத நிலையில், இந்த மாதிரியான தணிக்கைக்கட்டணம், சகாயத்தொகை மற்றும் பொதுநல நிதி ஆகிய பெயர்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் எடுத்துக்கொள்ளப்படுவது பலவித கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பத்தான் செய்கிறது. இந்த மாதிரி எடுத்துக்கொள்ளப்படும் நிதி, திருக்கோவில் காரியங்களுக்குத்தான் செலவு செய்யப்படுகிறதா? அல்லது அரசாங்கத்தின் பொது விஷயங்களுக்கும் (Civic Issues), மற்ற துறைகளின் செலவுக்கும் (Issues concerning other departments) மற்ற மதத்தவரின் விஷயங்களுக்கும் (Minority Issues) செலவு செய்யப்படுகிறதா? இந்த அண்ணாமலையார் கோவிலின் நிர்வாகமே குறைகளுடனும் குளறுபடிகளுடன் இருக்கும்போது, அவற்றையெல்லாம் நீக்கிச் சரி செய்யாமல், மற்ற செலவீனங்களுக்கு இங்கேயிருந்து நிதி எடுக்க வேண்டுமா, என்கிற கேள்வியும் எழுகிறது.
கோவிலுக்குச் சொந்தமான கணக்கும் நிலையும் தெரியவில்லை; அவற்றிற்கு வரவேண்டிய வாடகை மற்றும் குத்தகைத் தொகைகளை முறையாக வசூல் செய்வதில்லை; பசுமடங்களைச் சரியாக நிர்வாகம் செய்து பசுக்களைப் பாதுகாப்பதில்லை; இறைப்பணி செய்யும் குருக்கள்களுக்கும் நியாயமான சம்பளம் கொடுப்பதில்லை; அனைத்து வரவு செலவுகளுக்கும் கணக்கு வைத்துக்கொண்டு முறையாகத் தணிக்கை செய்வதில்லை; நிலங்களுக்கும் பசுக்களுக்கும் பாதுகப்பு இல்லாத சூழலில், கோவிலில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள பஞ்சலோக மூர்த்தங்களுக்கும் வெள்ளி, தங்க, வைர நகைகளுக்கும் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது, பதிவேடுகள் முறையாகத் தயார் செய்யாத நிலையில் அவைகள் பத்திரமாக இருக்கின்றனவா, போன்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.
இந்த ஒரு கோவிலின் நிர்வாகமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, தமிழகமெங்கும் உள்ள அனைத்து கோவில்களின் நிர்வாகமும் கழக அரசுகளின் கரங்களில் சிக்கிக்கொண்டிருப்பதை தமிழ் ஹிந்துக்கள் எவ்வாறு சகித்துக்கொண்டிருக்க முடியும்? கனன்று கொண்டிருக்கும் இப்பிரச்சினை எரிமலையென வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க நிதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது வலுவடைந்து வரும் இரு நாட்டு உறவை திசை திருப்பும் முயற்சி என்று வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மோடி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முக்கியத்துவம் இல்லாத தவறான நோக்கம் கொண்டது என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற வழக்கு விசாரணையில் தம் மீதான குற்றச்சாட்டுகளை மோடி மறுத்துள்ளார் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மோடி மீதான குற்றச்சாட்டுகள் யூகத்தின் அடிப்டையிலானவை என்று இந்திய நீதிமன்றங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே முடிவு தான் அமெரிக்க நீதிமன்றத்தால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிலும் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தலைவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தபடுவது இது முதல் முறை இல்ஙலை என்றும், இதே போல் டெல்லி சீக்கியர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீதும் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படுகின்றனர் சர்வதேச பார்வையாளர்கள்.

எனவே மோடிக்கு அமெரிக்க நிதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ள விவகாரத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டியது இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  2002-ம் ஆண்டு மோடி முதலமைச்சராக இருந்த போது குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக  அமெரிக்க நீதிமையம் என்னும் மனித உரிமை தொடர்ந்த வழக்கில் நியூயார்க் நிதிமன்றம் மோடிக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-தினகரன்.

சிமென்ட் விலை உயர்வால் குறைந்த, நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சலுகை விலையிலான "அம்மா' சிமென்ட் விற்பனைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190 என்ற விலையில் விற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வீடு கட்டும் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் சிமென்டினை குறைந்த விலையில் ஏழை மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தேன். அதன்படி, மலிவு விலையில் "அம்மா' சிமென்ட் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்படும். இந்த சிமென்ட் மூட்டைகள் தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிடங்குகளில் இருப்பு வைத்து மூட்டைக்கு ரூ. 190 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிகபட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமென்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டடத் திட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் துறை அலுவலர், பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர், பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.
வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமெண்ட் விற்பனை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முகவர்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படும்.
இந்த சிமென்ட் விற்பனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 250 கிட்டங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
மாவட்ட விநியோக மற்றும் விற்பனைச் சங்கங்களுக்குச் சொந்தமான கடைகளின் மூலமாக அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 400 மூட்டைகள் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு சிமென்ட் விற்பனை செய்யும் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுவின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தும்.
ஊரக வளர்ச்சித் துறையின் கிட்டங்கிகளின் மூலமாக விற்பனை செய்யப்படும் சிமென்ட்டை பெற்று வழங்கிட, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல-மண்டல மேலாளர் ஒருங்கிணைப்பு முகவராக தொடர்ந்து செயல்படுவார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாவட்டங்களில் செயல்படும் கிடங்குகளின் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்படுவார்.
பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் மூலம் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.220 என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், இந்தத் திட்டங்களின் பயனாளிகளுக்கும் அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் சிமென்ட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
காரணம் என்ன?
அம்மா சிமென்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் மாதமொன்றுக்கு சராசரியாக 17 முதல் 18 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து மாதத்துக்கு 4 முதல் 4.5 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் வரப் பெற்று விற்பனையாகி வந்தது. இது தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த சிமென்ட்டில் நான்கில் ஒரு பங்காகும்.
அண்டை மாநிலங்களிலுள்ள சிமென்ட் நிறுவனங்கள், குறிப்பாக ஆந்திரத்திலுள்ள சிமென்ட் நிறுவனங்கள், சிமெண்ட் விலையை மூட்டைக்கு ரூ.80 முதல் ரூ.100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.
இது இப்போது மூட்டைக்கு ரூ.310 என்ற அளவில் ஆந்திரத்தில் இருந்து விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக, முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் சிமென்ட் அளவு மாதத்துக்கு 1.50 லட்சம் முதல் 3 லட்சம் மெட்ரிக் டன் வரை குறைந்தது.
இது முந்தைய வருகையில் 35 முதல் 60 சதவீதம் மட்டுமே ஆகும். இது தமிழகத்திலுள்ள சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிமென்ட் விலையை ஏற்றுவதற்கு உரிய சாதகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்துள்ளது.
சிமென்ட் விலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சலுகை விலையில் சிமென்ட் விற்பனை செய்யும் அம்மா சிமென்ட் திட்டம் என்னும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

-தினமணி.

Thursday, 25 September 2014


சிவகங்கை: மானாமதுரை மாணவர் ஒருவர், வறுமையால் சுடுகாட்டில் பிணம் எரித்து கல்லூரி படிப்பை தொடர்கிறார்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தில் வசிப்பவர்கள் முருகேசன்,- பஞ்வர்ணம். இத் தம்பதிக்கு ஆனந்தன், மணிகண்ட ன், சங்கர் , பரிமளா, ராக்கம்மாள் என, 5 குழந்தைகள். முருகேசனுக்கு சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழில். இதில், கிடைக்கும் வருமானத்தில் இவர், 2 மகன், ஒரு மகளை கரையேற்றினார். ஒரு மகள் இறந்துவிட்டார். இருமகன்கள், மகள் தனித்தனி குடும்பமாக வசிக்கின்றனர். திருமணமாகாத மகன் சங்கருடன் முருகேசன், பஞ்சவர்ணம் வசிக்கின்றனர்.பள்ளிப்படிப்பை முடித்த சங்கருக்கு கல்லூரி எட்டாத இடமாக இருந்தது. வெளியூர் சென்று படிக்க வசதியில்லை, 'வெட்டியான்' தொழிலிலும் வருமானம் குறைவு. வறுமை துரத்தினாலும், தன்னம்பிக்கை இழக்காத சங்கர், தந்தைக்கு உதவியாக சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழிலுக்கு சென்றார்.கிடைக்கும் வருமானத்தில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பி.எஸ்.சி.,(வேதியியல்) படித்து முடித்து, எம்.எஸ்.சி,க்கு உயர்ந்தார். அவரது தொழிலை பிறர் ஏளனமாக பேசினாலும், 'செய்யும் தொழில் தெய்வம்' என அவர் கூறியது தன்னம்பிக்கையை காட்டுகிறது.

அவரை சந்தித்தபோது கூறியதாவது:சாதாரண குடிசை வீட்டில் வசிக்கிறோம். தந்தையின் சொற்ப வருமானத்தில் சகோதரர், சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். அவரவர் குடும்பத்தை ஓட்டுவதே கஷ்டம். எனது உயர் படிப்பு கனவு நிறை வேறுமா என்ற அச்சம் இருந்தது. எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்தது. தந்தையுடன் சுடுகாட்டில் பிணம் எரிக்க சென்றேன். இரு நபர்கள் என்றால் சில நேரத்தில் கூடுதல் பணம் கிடைக்கும். திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நானே பிணம் எரிப்பேன். பிணம் எரிந்து கொண்டிருக்கும் போது, அதன் வெளிச்சத்திலும் படித்துள்ளேன். பி.எஸ்.சி., முடித்த பின், அரசு வேலை கிடைக்கும் என நம்பினேன். கிடைக்காததால் எம்.எஸ்.சி.,யில் சேர்ந்தேன். படிப்பு செலவு, குடும்ப செலவு என, வருமானம் போதவில்லை. நேரம் கிடைக்கும்போது, மானமாமதுரை ரயில்வே ஸ்டேஷன் கேன்டீன் மூலம் ரயில் வரும்போது, பிளாட்பாரத்தில் டீ, காபி விற்பேன். டான்ஸ் கற்றுக்கொண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செல்கிறேன். ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவரை குருவாக கருதுகிறேன். அவர் என்னை ஒரு ஓவியனாக மாற்றினார். தற்போது, ஓவியனாகவும் வலம் வருகிறேன். பல்வேறு போட்டியில் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளேன். ஓவியத்தில் 'சுடர்மணி' விருது பெற்றுள்ளேன். வெட்டியான், டான்சர், ஓவியன் என, மும்முனையில் வறுமையை வென்று படிப்பை முடிக்க வேண்டும். அரசு வேலையில் சேர்ந்து எனது குடிசையை மாற்ற வேண்டும். 'வெட்டியான்' கள் நல வாரியத்தில் பெற்றோர் உறுப்பினர்களாக இருந்தும், அரசு வேலைக்கான வாய்ப்பு, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. எனது சுய தொழில் மீது நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் உயர்வேன், என்றார்.

-தினமலர்.

Wednesday, 24 September 2014


“ரஞ்சன்குடி கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும்” என்கிறார் அந்தக் கோட்டையில் 37 ஆண்டு காலம் காவலராக இருந்த ஹாசீம் பாய்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை நவாப்கள் ஆட்சி செய்த இடம். 55 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கோட்டை வளாகம் இப்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் முறையான பராமரிப்பு இன்றி கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருகிறது. 1972-லிருந்து இந்தக் கோட்டையில் காவலராக இருந்தவர் ஹாசீம் பாய். 37 ஆண்டு காலம் பணி செய்து 2008-ல்
விருப்ப ஓய்வு பெற்றுவிட்டாலும் ரஞ்சன்குடி கோட்டைக்குள் புதைந்து கிடக்கும் வரலாற்றுத் தடயங்களை உலகம் அறிய வேண்டும் என துடிக்கிறார் ஹாசீம்பாய். இதற்கு காரணம் பரம்பரை பரம்பரையாய் அவரது குடும்பத்துக்கும் அந்தக் கோட்டைக்கும் உள்ள தொடர்பு.
அதுகுறித்து நம்மிடம் பேசினார் ஹாசீம்பாய். “நாங்களும் நவாப் மன்னர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான். ரஞ்சன்குடி கோட்டையை கடைசியாக ஆற்காடு முகமதலி ஆட்சி செய்திருக்கிறார். எனது மூன்றாவது பாட்டனார் பாக் பாபாஜி, நவாப்கள் ஆட்சியில் போர்ப் படைத் தளபதியாக இருந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்தவர்களும் இந்தக் கோட்டையில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளனர்.
சுதந்திரத்துக்கு பிறகு எனது தந்தையாருக்கு இந்தக் கோட்டையை காவல் காக்கும் காவலர் பணி கொடுத்தார்கள். அவருக்குப் பிறகு 1972-ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக எனக்கு காவலர் பணி கொடுத்தார்கள். முன்னோர்கள் ஆட்சி செய்த அரண்மனை என்பதால் இந்தக் கோட்டையை எனது வீடு மாதிரிதான் நான் பார்த்தேன்; இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்வத்துடன் கோட்டையைச் சுற்றிக் காட்டுவேன். அப்படி சுட்டிக்காட்டியபோதுதான் மேலே இருந்து தவறி விழுந்து எனது இடது கால் முடமாகிவிட்டது.
மழைக்காலங்களில் இந்தக் கோட்டைப் பகுதியில் காலாற நடக்கும்போது அந்தக் காலத்துச் செப்புக் காசுகளை ஏராளமாக கண்டு எடுத்திருக்கிறேன். மொகலாயர்கள், பாண்டியர்கள், சோழர்கள், விஜய நகரப் பேரரசர்கள் பயன்படுத்திய காசுகள் எல்லாம் என் கைக்குக் கிடைத்து அவைகளை பள்ளிக்கூடத்துப் பிள்ளை கணக்காய் சேர்த்து வைத்திருந்தேன். எம்.ஜி.ஆர். காலத்தில் மாநில தொல்லியல் துறை இயக்குநராக இருந்த நாகசாமி, நான் சேமித்து வைத்திருந்த காசுகளை தரும்படி கேட்டார். அப்போது எனக்கு இதன் அருமை தெரியவில்லை. நான் சேமித்து வைத்திருந்த முக்கால் படி செப்புக் காசுகளை அவரிடம் எடுத்துக் கொடுத்தேன்.
அவருக்குப் பிறகு நடனகாசிநாதன் இயக்குநராக இருந்தபோதும் என்னிடம் இருந்த காசுகளை கேட்டு வாங்கினார். இவர்கள் இருவருக்கும் கொடுத்த பிறகு சேமித்த காசுகளைத்தான் இப்போது நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இப்போதும் வாரம் ஒருமுறை ரஞ்சன்குடி கோட்டைக்குச் சென்று அதன் அழகை ரசித்துவிட்டு வருவேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோட்டையில் பல பகுதிகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன.
எனக்கு தெரிந்தே கோட்டைக்குள் 11 கிணறுகள் இருந்தன. அவை அத்தனையும் இப்போது மண் மூடிவிட்டது. அந்தக் கிணறுகளுக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நவாப் தளபதிகள் போர் கருவிகளைப் பதுக்கி வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் கிணறுகள் இருந்த இடமும் கோட்டைக்குள் புதைந்துபோன இன்னும் சில முக்கியமான பகுதிகளும் எனக்கு மட்டும்தான் தெரியும்.
அவற்றை எல்லாம் தோண்டி எடுத்து அதனுள்ளே உள்ள வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொண்டு வரவேண்டும். அதற்காக, நான் உயிருடன் இருக்கும் காலத்திலேயே என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தொல்லியல் துறைக்கு பலமுறை கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. தொன்மையான இந்தக் கோட்டைக்குள் புதைந்திருக்கும் வரலாற்றுத் தடயங்களை வெளியில் கொண்டுவர முழுமையான அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டும். இந்தக் கோட்டையை சுற்றுலா தலமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உணர்ச்சி ததும்பச் சொன்னார் ஹாசீம் பாய். 

-தி இந்து.

Tuesday, 23 September 2014



சென்னை, செப்.24-

சென்னை ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளராக இருப்பவர் வி.விஜயன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

புதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கேட்டு 53 மனுக்களை அனுப்பியுள்ளார். அதில், சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார்.

தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் முடித்து வைக்கப்பட்டது பற்றிய விவரமும், தலைமை பதிவாளர் நியமனத்தில் தனி நடைமுறைகள் இல்லை என்ற விவரமும் அவருக்கு பதிலாக வழங்கப்பட்டது. இதுதவிர வேறு எந்த பதில்கள் எல்லாம் வழங்க முடியுமோ அவைகளும் வழங்கப்பட்டு விட்டது.

ஆனால், அவர் தகவலறியும் உரிமைச் சட்ட விதிகளைத் தவறாகப் பயன்படுத்தும் வகையிலும், நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் 53 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தில் பாரதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், அவர் கேட்கும் தகவல்களை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் விஜயன் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் விசாரித்து, கடந்த 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருந்ததாவது:-

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் படி, தகவல்களை பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அந்த உரிமையானது தகவல் அறியும் சட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டதாகும்.

அந்த விதிகளில், எந்தவிதமான தகவல்களை ஒருவர் கேட்கலாம்? அந்தத் தகவல்களைக் கேட்க அவருக்கு என்ன உரிமை உள்ளது? என்பது கூறப்பட்டுள்ளது. அதேநேரம், அந்த உரிமைகளை வரையறுக்கப்படாமல் உள்ளது.

எனவே, தகவல் அறியும் உரிமையானது ஒரு நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். அதேநேரம், அந்த நோக்கம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கும் நபர், அந்த தகவல் கேட்பது சொந்த நலனுக்காகவா? அல்லது பொதுநலனுக்கா? என்பது குறித்து குறைந்த பட்ச விவரங்களையாவது மனுவில் தெரிவிக்கவேண்டும். அந்த விவரங்களை தெரிவிக்கவில்லை என்றால், தகவல் கேட்கும் கேள்வி திருப்திகரமாக உள்ளதாக கருத முடியாது.

அதேநேரம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வழங்கப்படும் தகவல்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதைப் போல, தகவல் கோருபவருக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எந்த நோக்கத்துக்காக தகவல் கோரப்படுகிறது என்பதை தெரிவிக்காமல் தகவல் கேட்க முடியாது.

அரசு நிர்வாகத்தில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்டு வரும் நோக்கத்துக்காக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தச் சட்டம் தவறான நோக்கத்துக்காகவும், நிர்வாகத்தை மிரட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டால், அது அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் தன்னுடைய பாதையில் இருந்து விலகிச் செல்ல வழிவகுத்து விடும்.

அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, தகவல் கோருபவற்கு அதற்கான நியாயமான காரணங்கள் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளது. நியாயமான நோக்கத்தில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் அதேநேரத்தில், தவறான நோக்கத்தில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

இந்த வழக்கில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எதிர்மனுதாரர் பி.பாரதி ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார். இதனால், ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்துள்ளது. ஐகோர்ட்டின் பதிவாளர் அலுவலகம் தகவல்களை வழங்குவதற்காக பணி நேரத்தை செலவு செய்ய முடியாது. எனவே, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்கிறோம்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த கருத்தானது, தகவல் அறியும் சட்டத்தை நல்ல நோக்கத்துக்காக பயன்படுத்தும் சில சமூக ஆர்வலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஒரு திருத்தத்தை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் நேற்று செய்துள்ளனர்.

முந்தைய தீர்ப்பின்படி, தகவல் கோருபவருக்கு எதற்காக அந்த தகவல் தேவைப்படுகிறது? என்பது தெரிவிக்கப்பட வேண்டும் என்பது போல் பொருள்படும் வகையில் நீதிபதிகளின் கருத்து செய்திகளில் வெளியாகியிருந்தது.

நேற்று வழங்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்ப்பின்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மனு செய்யும் விண்ணப்பதாரருக்கு எதற்காக அந்த தகவல் தேவைப்படுகிறது? என்பது தொடர்பான காரணங்கள் எதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், மனுதாரர்களை தொடர்புக் கொள்ளும் தேவைக்கன்றி, வேறு எவ்விதமான தனிப்பட்ட விபரங்களையும் அவர்கள் இணைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மாலைமலர்.

அகமதாபாத், செப்.24-

குஜராத் மாநிலத்தின் சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதத்தலைவர், மவுலானா மெஹ்தி ஹஸன்.

கடந்த 2011-ம் ஆண்டு, அந்நாள் குஜராத் முதல்மந்திரி நரேந்திர மோடி ‘சத்பாவனா’ என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்தபோது, உண்ணாவிரத மேடையின் மீது ஏறிய மவுலானா மெஹ்தி ஹஸன், அவரது தலையில் குல்லா ஒன்றினை அணிவிக்க முயன்றார். அதனை, அணிந்துக் கொள்ள மோடி மறுத்து விட்டார்.

இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் ஊடகங்களில் மவுலானா மெஹ்தி ஹஸனின் பெயர் அடிபட ஆரம்பித்தது. அதிலிருந்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

கடந்த 20-ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இவர், நவராத்திரி திருவிழாவை ’அரக்கர்களின் திருவிழா’ என்று குறிப்பிட்டார். இது இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

’நவராத்திரி திருவிழா ஊர்வலத்தின்போது குடிக்காரர்களும், கற்பழிப்பாளர்களும் அதிகம் பங்கேற்கின்றனர். அதனால்தான், நவராத்திரி திருவிழாவை அரக்கர்களின் திருவிழா என்று குறிப்பிட்டேன். நவராத்திரி விழாக்களில் இதைபோன்ற நபர்களை விலக்கி வைப்பது நல்லது என சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துக் கொள்வதற்காகதான் நான் அப்படி குறிப்பிட்டேன்’ என்று தனது பேட்டிக்கு அவர் விளக்கமும் அளித்திருந்தார்.

இந்த கருத்துக்கு விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துமத இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

நவராத்திரி தொடங்கவுள்ள இம்மாத 25-ம் தேதிக்குள் மவுலானா மெஹ்தி ஹஸனை போலீசார் கைது செய்யாவிட்டால் பெரும் போராட்டத்தை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, பிற மதத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் குற்றப்பிரிவின்கீழ் மவுலானா மெஹ்தி ஹஸனை போலீசார் நேற்று கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-மாலைமலர்.

Sunday, 21 September 2014


அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான 'டைம்', இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 'நாளைய உலகின் தலைவன்' என்று பட்டம் சூட்டி கவுரவப்படுத்தியுள்ளது.
பெங்களூரில் வசிப்பவர் அலோக் ஷெட்டி (28). கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கட்டிடக் கலை தொடர்பான முதுநிலைப் படிப்பை முடித்த இவர், தற்போது கட்டிடக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.
பெங்களூரில் உள்ள பரிணாம் அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அந்நகரத்தில் உள்ள எல்.ஆர்.டி.இ. குடிசைப் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
எந்த மழையையும், வெள்ளத்தையும் தாங்கி நிற்கும் என்பதே இந்த வீடுகளின் சிறப்பம்சமாகும். மூங்கில் மற்றும் மரக்கட்டைகள் கொண்டு இந்த வீடுகளைக் கட்ட 300 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.18,000) செலவாகும். இந்த வீட்டை சுமார் நான்கு மணி நேரத்தில் கட்டி முடித்துவிட முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இந்த வீடுகளை மேலும் பல ஏழைகளுக்குக் கட்டித்தர மானியம் கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் அலோக் ஷெட்டி. இவரது இந்தச் சேவையைப் பாராட்டி 'டைம்' பத்திரிகை இவரை 'நாளைய உலகின் தலைவன்' என்று தேர்வு செய்து கவுரவப்படுத்தி யுள்ளது.
தனது பணியைப் பற்றி அலோக் ஷெட்டி கூறும்போது, "எப்போதுமே எளிய தீர்வுகள்தான் சிறந்த தீர்வுகளாகவும் இருக்கும். இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் திறன் கொண்ட கட்டிடங்களைக் கட்டுவதே இப்போதைய தேவையாகும். இதன் மூலம் நமது வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க முடியும்" என்றார். 

-தி இந்து.