|
தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் |
மக்களவைக்கு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 12ஆம் தேதி வரை 9
கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40
தொகுதிகளுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவியை ராஜிநாமா
செய்து விட்டதால், அந்த தொகுதிக்கும் ஏப்ரல் 24ஆம் தேதி இடைத் தேர்தல்
நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் 16ஆம்
தேதி எண்ணப்படுகின்றன.
மக்களவையின் பதவிக்காலம் ஜுன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவடைவதால், மே
மாதம் 31ஆம் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றாக வேண்டும்.
இதனையடுத்து மக்களவைக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த ஒரு
மாதத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், மாநிலத் தேர்தல் ஆணையர்கள்,
பாதுகாப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் தீவிரமாக
ஆலோசனை நடத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள்
சந்திப்பில் மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை மற்றும் தெலங்கானாவை
உள்ளடக்கிய ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குமான
தேதி, பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்
தேர்தல் தேதி ஆகியவற்றை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்
வெளியிட்டார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஹெச்.எஸ். பிரம்மா, எஸ்.என்.ஏ.
ஜைதி ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறியதாவது:
மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி, மே மாதம்
12ஆம் தேதி வரையிலும் 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்
கட்டமாக ஏப்ரல் 7ஆம் தேதியன்று, அஸ்ஸாம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்களில்
உள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
2வது கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதியன்று, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர்,
மேகாலயா, மிசோரம், நாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு
தேர்தல் நடத்தப்படுகிறது.
3வது கட்டமாக ஏப்ரல் 10ஆம் தேதி 14 மாநிலங்களில் உள்ள 92
தொகுதிகளுக்கும், 4வது கட்டமாக ஏப்ரல் 12ஆம் தேதி 3 மாநிலங்களில் உள்ள 5
தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5வது கட்டமாக ஏப்ரல் 17ஆம் தேதியன்று 13 மாநிலங்களில் உள்ள 122
தொகுதிகளுக்கும், 6வது கட்டமாக ஏப்ரல் 24ஆம் தேதி 12 மாநிலங்களில் உள்ள 117
தொகுதிகளுக்கும், 7வது கட்டமாக ஏப்ரல் 30ஆம் தேதி 9 மாநிலங்களில் உள்ள 89
தொகுதிகளுக்கும், 8வது கட்டமாக மே 7 ஆம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 64
தொகுதிகளுக்கும், 9வது கட்டமாக மே 12ஆம் தேதி 3 மாநிலங்களில் உள்ள 41
தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
மக்களவையுடன் சேர்த்து தெலங்கானா பகுதியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த
ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல்
நடத்தப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் பணிகள் அனைத்தும் 72 நாள்களில் முடிவடைந்து விடும்.
அதாவது கடந்த மக்களவைத் தேர்தலை காட்டிலும் இது 3 நாள்கள் குறைவாகும்.
நடத்தை விதிகள் உடனடியாக அமல்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால்,
அரசியல் கட்சியினர் மற்றும் அரசுகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள்
உடனடியாக அமலுக்கு வருகின்றன.
கடந்த ஜுன் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி,
இந்தத் தேர்தலில் 81.45 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவர். கடந்த
2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 71.3 கோடியாக இருந்தது.
அந்த எண்ணிக்கை தற்போது 10 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்தத் தேர்தலில் 18 முதல் 19 வயது வரையுடைய 2.3 கோடி பேர் புதிதாக வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.
தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் பொருட்டு தேர்தல்
பணியில் 1.1 கோடி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தத் தேர்தலில்
பங்கேற்று, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்
என்று சம்பத் கேட்டுக் கொண்டார்.
இடைத் தேர்தல்: ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தேமுதிகவைச்
சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அந்தக் கட்சியில் இருந்து விலகியதுடன்,
தனது பதவியையும் ராஜிநாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 24ஆம்
தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிகார் (2), குஜராத் (7), உத்தரப்பிரதேசம் (4), மேற்கு வங்கம்
(6), மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள தலா
ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் மக்களவைத்
தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசிவாய்ப்பு: வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு கடைசி
வாய்ப்பாக தங்களது பெயரை சேர்த்து கொள்ள நாடு முழுவதும் உள்ள 9.30 லட்சம்
வாக்குச்சாவடிகளில் மார்ச் 9ஆம் தேதி சிறப்பு முகாமுக்கு தேர்தல் ஆணையம்
ஏற்பாடு செய்துள்ளது.
17 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேர்தலுக்காக 17 லட்சம் மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பணியில் 1.1
கோடி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் பாதுகாப்பு
படையினர் ஆவர்.
நன்றி-தினமணி.