சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர்
தொலைவில் தமிழக-ஆந்திர கடற்பரப்பு எல்லையில் இருக்கும் ஒரு சிறிய தீவு
பழவேற்காடு. 16-ம் நூற்றாண்டில் போர்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த
பழவேற்காடு, பின்னர் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. 19-ம்
நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பு அதிகரித்த பிறகு அவர்கள் வசம்
வந்தது.
இங்கே, 11-ம் நூற்றாண்டில் பிற்காலச்
சோழர்களால் கட்டப்பட்ட சமய ஈஸ்வரர் ஆலயமும், 13-ம் நூற்றாண்டில் விஜயநகரப்
பேரரசால் கட்டப்பட்ட ஆதி நாராயண பெருமாள் ஆலயமும், உள்ளன. இவை
மட்டுமல்லாமல், டச்சுக்காரர்களின் இடிந்த கோட்டைகள், கொத்தளங்கள் மற்றும்
கல்லறைகள் இருக்கின்றன. மேலும் இது ஒரு பறவைகள் சரணலாயமாகவும் உள்ளது.
ஆகவே, பழவேற்காடு ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கிறது.
மேற்கூறப்பட்ட இரண்டு கோவில்களையும்
சீரமைக்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டிருந்த நிலையில், சென்னை
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை
இம்மாதம் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று விசாரித்த சென்னை உயர்
நீதிமன்றம், கோவில் சீரமைப்புப் பணிக்குத் தடையுத்தரவு பிறப்பித்தது.
வழக்கின் பின்னணி
பழவேற்காடு
சுற்றுலாத்தலமாக இருந்தாலும், தொல்லியல் துறை டச்சுக் காரர்களின்
கோட்டையையும் கல்லறைகளையும் பராமரிக்கக் காண்பிக்கும் ஈடுபாட்டை,
பழமையையும் பெருமையையும் வாய்ந்த நமது கோவில்களைப் பராமரிப்பதில்
காண்பிக்கவில்லை. சொல்லப்போனால், இரண்டு ஆலயங்களும் நமது கலாச்சார
மாண்பையும், கட்டிடக்கலையின் சிறப்பையும், சிற்பக்கலையின் பெருமையையும்
பகர்கின்றதாக இருக்கும்போது, டச்சுக் காரர்களின் கட்டிடங்கள் நமது அடிமை
வாழ்வைச் சித்தரிக்கும் சின்னங்களாகத்தான் இருக்கின்றன என்பதே உண்மை. ஆனால்
தொல்லியல் துறையானது அந்த அடிமைச் சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கக்
காண்பித்த ஈடுபாட்டை இவ்விரண்டு ஆலயங்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும்
காண்பிக்கவில்லை.
எனவே நாளடைவில் இரண்டுகோவில்களும்
சீரழிந்து, புதர்களால் சூழப்பட்டு, கோபுரங்களில் செடிகள் முளைத்து
பாழடைந்து போயின. இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமய ஈஸ்வரர்
கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்திக் கொண்டது. அதன் பின்பும் கோவிலைச்
சீரமைக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில்களின்
நிலையைக் கண்டு மனம் வருத்தமுற்ற ஊர் மக்கள், மீனவர் சமுதாயத்தின்
உதவியுடனும் ராமகிருஷ்ணா மடத்தின் ஆதரவுடனும், கோவில்களைச் சுற்றியிருந்த
புதர்களையும் செடிகொடிகளையும் அகற்றி, தங்களால் முடிந்த அளவுக்குச்
சீரமைத்தனர். எந்தப் பணியையும் முன்னெடுத்துச் செய்யாமல் இருந்த
அறநிலையத்துறை, ஊர்மக்கள் நன்றாக சீரமைத்த பிறகு, ஆதி நாராயண பெருமாள்
கோவிலையும் கையகப்படுத்திக்கொண்டது.
இதனிடையே 13வது நிதி ஆணையம் (
13th
Finance Commission) தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின்
பாதுகாப்பிற்காக ரூபாய் 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
அதிலிருந்துரூபாய் 52 லக்ஷம் பழவேற்காடு ஆதி நாராயண பெருமாள் கோவிலின்
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக அறநிலையத்துறைக்கு வழங்கப்பட்டது.
இதனால் கோவில் ஓரளவிற்குத் தன்னுடைய பழைய பெருமைமிகு நிலைக்குத் திரும்பும்
என்று ஊர் மக்களும் பக்தர்களும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் ஒதுக்கப்பட்ட பணத்தைக்கொண்டு கோவிலைச் சீரமைக்கும் பெயரில் புல்டோசர்
வைத்து கோவிலைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட அறநிலையத்துறை,
பக்தர்களின் நம்பிக்கையையும் சேர்த்து தகர்த்து எறிந்தது.
அறநிலையத்துறையின் அராஜகப் போக்கைப்
பொறுக்காமல்தான், கோவில் பாதுகாப்பைத் தன் தலையாய நோக்கமாகக் கொண்டு
பணியாற்றி வரும் ஸ்ரீகுமார் என்கிற பக்தர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார்.
கோவில்களின் அற்புதமும் அறநிலையத்துறையின் அலட்சியமும்
ஆதி நாராயண பெருமாள் கோவில், சமய ஈஸ்வரர்
கோவில் ஆகிய இரண்டு கோவில்களுமே செம்புறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவை.
செம்புறைக்கற்களுக்கு செம்பூரான்கற்கள் என்றும் பெயர். இளஞ்சிவப்பு
நிறத்தில் இருக்கும். ஆங்கிலத்தில் LATERITE STONES என வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கிரானைட் கற்கள்தான் உண்டே தவிர செம்புறைக்கற்கள் கிடையாது.
எனவே இவை கர்நாடக, கேரள அல்லது ஆந்திரப் பகுதிகளில் இருக்கும்
செம்புறைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவையாக இருக்க வேண்டும்.
நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத 11
மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் அண்டைய பிராந்தியப் பகுதிகளிலிருந்து
செம்புறைக்கற்களை பெருமளவில் கொண்டு வந்து, கோவிலின் ஒவ்வொரு நிலையையும்
முறையாக நிர்மாணித்து, ஒவ்வொரு சிற்பத்தையும் கவனமாகப் பார்த்துச்
செதுக்கி, ஒவ்வொரு மண்டபத்தையும் சரியாகக் கணக்கிட்டு கட்டுவது என்பது
சாதாரண காரியம் கிடையாது. அது ஒரு பிரம்மாண்ட காரியமாகும்.
செம்புறைக்கற்கள் இரும்பு ஆக்ஸைடு
உள்ளடக்கியவை ஆதலால், பூமிக்கு அடியில் இருக்கும் வரை மிருதுவாக இருப்பவை.
ஆனால் பூமியிலிருந்து தோண்டி வெளியே எடுக்கப்பட்டவுடன் வெய்யிலும் காற்றும்
பட்டால் மிகவும் கடினமாக ஆகிவிடக்கூடியவை. அவை நுண்ணிய துவாரங்கள்
கொண்டவையாதலால் நீர்ப்படுகையாகவும் செயல்படுபவை. அவை சுண்ணாம்புக்
கலவையுடன் கலக்கும்போது இயற்கையின் சீற்றங்களைத் தாங்கி நீண்ட காலம்
உறுதியாக இருக்கும் தன்மையைப் பெறுகின்றன.
அக்காலத்தில் இரண்டு கோவில்களையும் கட்டிய
வல்லுனர்களும் பணியாளர்களும் வெறும் உளியையும் சுத்தியலையும்
வைத்துக்கொண்டு பிரம்மாண்ட கோபுரங்களை நிர்மாணித்து, பெரிய மண்டபங்களை
அமைத்து, அழகான சிற்பங்களையும் செதுக்கியிருப்பது வியந்து போறத்தக்கதாகும்.
கோட்டையைப் போன்ற மதிலும், பெரிய கோபுரமும், அகன்ற நுழைவாயிலும் கொண்டது
ஆதி நாராயண பெருமாள் கோவில். நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மராமத்துப்
பணிகளும் கருக்கு வேலைகளும் கூடியது. வெளிமண்டபம் முழுவதும் ராமாயணக்கதைகள்
8 அங்குல அளவில் சிறிய சிற்பவடிவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்த
மண்டபத்தில் நடன மங்கையர் சிற்பங்களும், தசாவதாரங்களின் சிற்ப வடிவங்களும்
அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் ஒவ்வொரு நீளமும் அகலமும் அற்புதமாகச்
செதுக்கப்பட்ட சிற்பங்களைக் கொண்டவை. தூண்களும் மேற்கூரைகளும் பலப்பல
உருவங்களைக் கொண்டவை. ஒரு தூணில் பலாப்பழத்தை உரித்துத் தின்னும் குரங்கின்
வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அது பார்ப்போரின் கண்களைக் கவரும் விதத்தில்
தத்ரூபமாக இருக்கிறது. மேற்கூரையில் நான்கு குரங்குகள் செதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை ஒரே குரங்கைப் போன்று நம் பார்வைக்குத் தெரியும் விதத்தில்
செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் மச்சக்கன்னிகள் (பெண்ணுடல்
பாதியும் மீனுடல் பாதியும் கொண்ட உருவங்கள்), மனித-விலங்குகள் (மனித உடல்
பாதி மிருக உடல் பாதி கொண்ட உருவங்கள்), பல தலைகள் கொண்ட உருவங்கள்
ஆகியவையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் வரலாற்றைச் சித்தரிக்கும்
கல்வெட்டுகளும் இருக்கின்றன.
ஆதி நாராயண பெருமாள் ஸ்ரீதேவியுடனும்
பூதேவியுடனும் காட்சி தருகிறார். அபய ஹஸ்தத்துடன் அருள் புரிகிறார்.
சன்னிதிக்கு வெளியேயும் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரத ஹஸ்தத்துடன் காட்சி
தருகிறார். நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகளுடன் கூடிய பலி பீடம் அழகாக
உள்ளது.
ஆதி நாராயண பெருமாள் கோவிலுக்கு அருகில்
சமய ஈஸ்வரர் கோவிலும் உள்ளது. இதுவும் செம்புறைக்கற்களால் அற்புதமாகக்
கட்டப்பட்ட கோவில். இக்கோவிலிலும் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள்
காணக்கிடைக்கின்றன. கல்வெட்டுக்களும் உள்ளன.
நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த
அன்னியர்கள் நமது கோவில்களை எப்படி அழித்தார்களோ, அதைவிடக் கொடூரமாக
அறநிலையத்துறை இந்தக் கோவில்களை அழிக்க முனைந்திருக்கிறது. புனர்
நிர்மாணம், சீரமைப்பு என்கிற பெயர்களில், கோவில்களின் சுற்றுச்சுவரை
முழுமையாகத் தரைமட்டமாக ஆக்கிவிட்டது. கோவில் வாயில்களையும் இடித்து
வாயிற்படிக்கட்டுகளையும் உடைத்துவிட்டது. தூண்கள் தகர்த்தெரியப்பட்டு
கோவிலைச் சுற்றி வீசப்பட்டுள்ளன. சரளைக்கற்கள் அகற்றப்பட்டு அவ்விடங்களில்
செங்கற்களையும் சிமெண்டையும் கொண்டு பூச்சுவேலை நடக்கின்றது. ஆங்காங்கே
முளைத்திருக்கும் செடி கொடிகளைக் கூடச் சரியாக நீக்கவில்லை. கோவில்
அடித்தளத்தின் வலிமையைக் கூட்டாமல் கோபுரத்தின் எடை கூடும் விதத்தில்
கான்கிரீட் விமானம் கட்டப்பட்டுள்ளது. இது தூண்கள் மீது அதிகப்படியான எடையை
அழுத்தும் விதமாக உள்ளது.
வாயிலில் இருந்த வேலைப்பாடுகளுடன் கூடிய
அழகான பிரம்மாண்டமான மரக்கதவு உடைக்கப்பட்டு, உடைக்கப்பட்ட பகுதிகள் வெளியே
கோவிலைச் சுற்றி வீசப்பட்டுள்ளன. அதே போல 12 அடி உயரம் கொண்ட மரத்தினாலான
அழகிய தூண் ஒன்றையும் தகர்த்து வெளியே வைத்திருந்தனர். அந்த அழகிய தூணும்
மேலும் 1000 கிலோ எடையுள மரத்தினாலான பொருட்களும் திருடர்களால்
கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. அலட்சியமாக இருந்த அறநிலையத்துறை
காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. பழைய வரலாறுகளைச் சொல்லும் ஆவணங்களாக
விளங்கும் கல்வெட்டுகள் மணல் பூச்சுகளினாலும், வெள்ளையடிப்பினாலும்,
சிமெண்டு சுண்ணாம்பு பூச்சுகளினாலும் அழிக்கப்பட்டுள்ளன.
ஒரு கோவிலைப் புதுப்பிக்கும் போது, ஆகம
விதிகளின் படி, சுவாமி விக்ரகங்களை நீரிலோ அல்லது அரிசியிலோ தான்
பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஆனால் அறநிலையத்துறை இந்தக் கோவிலின்
விக்ரகங்களை ஏதோ வேண்டாத பொருட்களைப் போல கண்ட மேனிக்குப் போட்டு
வைத்துள்ளது. பாதகமான இந்தச் செயலினால் அறநிலையத்துறை ஹிந்துக்களின்
மனங்களையும் மத உணர்வுகளையும் கடுமையாகப் புண்படுத்தியுள்ளது.
ஆலயங்கள் பாதுகாப்புப் பணியில் ஸ்ரீகுமார்
சென்னையைச்
சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத்தின் உறுப்பினரான ஸ்ரீகுமார் ஆலயப்
பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, அறநிலையத்துறையிடமிருந்து பல
தகவல்களைப் பெற்று, தன் பணிகளைச் செவ்வனே செய்து வருபவர்.
தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற
நாளிதழ்கள் பழவேற்காட்டில் அறநிலையத்துறையின் கொடுமையான செயல்களைச்
செய்தியாக வெளியிட்டதைப் பார்த்த ஸ்ரீகுமார், தானும் நேரிடையாக அங்கே
சென்று பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்
கீழ் அறநிலையத்துறைக்குப் மனுக்களை அவர் அனுப்பியதில், அறநிலையத்துறை சில
கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துள்ளது. அவர்கள் அளித்த பதில்களைக் கொண்டு
ஆய்வு செய்த ஸ்ரீகுமார், அறநிலையத்துறை பல விதிகளை மீறிச்
செயல்பட்டிருந்ததைக் கண்டு பிடித்தார்.
அவர் கண்டுபிடித்ததன்படி, அறநிலையத்துறையின் விதி மீறல்கள் எப்பேர்பட்டவை என்று பார்ப்போம்:
விதிகளும் மீறல்களும்
- ஒரு கோவிலைப் புனர் நிர்மாணம் செய்வதற்கு
முன்பு மாநில தொல்லியல் துறையைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் அவர்களை
ஆலோசிக்காமலே ஆதி நாராயண பெருமாள் கோவிலைப் புதுப்பிக்க நடவடிக்கை
எடுத்துள்ளது அறநிலையத்துறை.
- கோவில்களின் புதுப்பித்தலுக்கு ரூபாய் 50
லட்சத்திற்கு அதிகமான மதிப்புள்ள பணி ஒப்பந்தங்களை ஏற்று அங்கீகரிக்க
தமிழக அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆனால் பழவேற்காடு கோவிலைப்
பொறுத்தவரை அறநிலையத்துறை ஆணையரே அங்கீகாரம் அளித்துள்ளார்.
- அதே போல ரூபாய் 50 லட்சத்திற்கு
அதிகமாகச் செலவு பிடிக்கும் வேலைகளைச் சரிபார்க்கும் அதிகாரம்
நெடுஞ்சாலைத்துறை அல்லது பொது பணித்துறையைச் சேர்ந்த தலைமைப்
பொறியாளருக்குத்தான் உண்டு. ஆனல் இந்தக் கோவில் விஷயத்தில் அவர்களின்
ஆலோசனையையோ அல்லது அனுமதியையோ பெறவில்லை.
- கோபுரம், விமானம், மண்டபங்கள்
போன்றவற்றைச் சீரமைக்கும் பணியையோ அல்லது புதிதாகக் கட்டும் பணியையோ, அரசு
அமைத்துள்ள ஸ்தபதிகள் குழுவில் உள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற,
ஸ்தபதியிடம்தான் அளிக்க வேண்டும். ஆனால் இந்தக் கோவிலின் பணி அரசுக்
குழுவில் இல்லாத அரசு அங்கீகாரம் பெறாத கீர்த்திவர்மன் என்கிற நபருக்குக்
கொடுக்கப்பட்டுள்ளது.
- ஸ்தபதியின் திட்டமும் திட்ட
மதிப்பீடுகளும் நெடுஞ்சாலைத்துறை அல்லது பொதுப்பணித்துறையின் தலைமைப்
பொறியாளரின் கையொப்பத்தைப் பெற்றிருக்க வேண்டும். அது இங்கே
செய்யப்படவில்லை.
- ஒரு கோவிலைப் புதுப்பிக்கும்போது,
அக்கோவிலில் உள்ள சிற்பங்கள், விக்ரகங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள்,
கலைப்பொருட்கள், வடிவமைப்புகள், வேலைப்பாடுகள் மற்றும் பல பழமை வாய்ந்த
பொருட்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் ஆதி நாராயண பெருமாள்
கோவிலைப் பொறுத்தவரை இந்த முக்கிய விதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுதல்கள்
இரண்டு
கோவில்களின் சிறப்புகளையும், அறநிலையத்துறையின் அலட்சிய விதி மீறல்களையும்
தன்னுடைய மனுவில் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீகுமார், பின்வரும்
வேண்டுதல்களை உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
- கோவிலைச் சீரமைப்பதற்குத்தான்
அறநிலையத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே தவிர, கோவிலை இடித்துவிட்டுத்
திரும்பவும் கட்டுவதற்கு அல்ல. ஆனால் அறநிலையத்துறை ஆதி நாராயண பெருமாள்
கோவிலைப் பல இடங்களில் விதிகளை மீறி இடித்துத்தள்ளி மீண்டும் புதிதாகக்
கட்டிவருகிறது.
- இந்தப் பணியில் ஈடுபடுவதற்கு முன்பு,
தொல்லியல் துறை வல்லுனர்களையோ, ஆகம விதிகள் அறிந்தவர்களையோ ஆலோசிக்காமல்,
தன்னுடைய இஷ்டத்திற்கு மனம்போன போக்கில் செயல்பட்டுள்ளது அறநிலையத்துறை.
- செம்புறைக்கற்களால் கட்டப்பட்ட கோவில்
என்பதால் அதைச் சீரமைக்க விஷயம் தெரிந்த பணியாளர்களைத்தான் வேலைக்கு
அமர்த்த வேண்டும். ஆனால் சாதாரண கட்டிடத் தொழிலாளர்களை அமர்த்தி
பொதுப்பனித்துறை பொறியாளர்களின் மேற்பார்வையில் விட்டுள்ளது அறநிலையத்துறை.
- அறநிலையத்துறையின் அலட்சியத்தை
செய்தித்தாள்கள் வெளியிட்டவுடன் வேலையை நிறுத்தி வைத்த அறநிலையத்துறை, சில
காலம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மக்கள் மறந்திருப்பார்கள் என்கிற
நினைப்பில் மீண்டும் கோவிலை இடித்துக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- ஆதி நாராயண பெருமாள் கோவிலின் சீரமைப்பை
நிறுத்தி வைத்த அறநிலையத்துறை, சமய ஈஸ்வரர் கோவிலைச் சீரமைக்கும் பணியைத்
துவக்கியுள்ளது. அந்தப் பணியையும் அரசு அங்கீகாரம் பெறாத கீர்த்திவர்மனிடமே
ஒப்படைத்துள்ளது. இதை அனுமதித்தால் ஆதி நாராயண பெருமாள் கோவிலுக்கு
ஏற்பட்ட அதே கதிதான் இந்தக் கோவிலுக்கும் ஏற்படும்.
- ஆதி நாராயண பெருமாள் கோவில், சமய ஈஸ்வரர்
பெருமாள் கோவில் போன்ற பழம்பெருமை வாய்ந்த கோவில்களைச் சீரமைக்கும்
திறமையோ, விஷய ஞானமோ, பொறுப்போ அறநிலையத்துறைக்குக் கிடையாது. எனவே அந்தப்
பணியை தொல்லியல்துறையிடம் கொடுக்க வேண்டும். அல்லது தொல்லியல் துறையின்
கீழ் வல்லுனர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர்களிடம் இப்பணியை
ஒப்படைக்கலாம்.
- இதே பழவேற்காடு ஊரில் டச்சுக்
கம்பெனியாரின் கோட்டையையும் கல்லறைகளையும் பராமரித்து வரும் தொல்லியல்
துறை, அவற்றை விட மிகவும் பழமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்த
இவ்விரண்டு கோவில்களையும் ஏன் பராமரிக்கக் கூடாது?
- 1986 முதல் 1992 வரை இந்திய அரசின்
கலாச்சார அமைச்சகம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தைப் புனர்
நிர்மாணம் செய்வதற்குப் பல நவடிக்கைகளை எடுத்தது. எங்கேயோ அன்னிய தேசத்தில்
இருக்கும் ஒரு ஆலயத்தின் நலனைப் பாராட்டி பணி செய்த கலாச்சார அமைச்சகம்,
நம்முடைய நாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த கோவில்களைப் புனர் நிர்மாணம்
செய்ய அதே ஈடுபாட்டை ஏன் காண்பிக்கக் கூடாது? கலை மற்றும் கலாச்சாரத்தின்
அனைத்துப் பரிமாணங்களையும் பாதுகாத்துப் பரப்புவதையே தன் குறிக்கோளாக,
நோக்கமாக (MISSION STATEMENT) அறிவித்துள்ளது கலாச்சார அமைச்சகம். அதன்படி
நமது நாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த சின்னங்களையும் பாதுகாத்து
வருகிறது. எனவே, இவ்விரண்டு கோவில்களை பாதுகாப்பதும் கூட அதனுடைய
குறிக்கோளுக்கு ஒத்து வருவதாகவே இருக்கிறது.
- இவ்விரண்டு கோவில்களை விதிகளை மீறி
சீரமைப்பதை நிறுத்தவேண்டும் என்று விண்ணப்பித்தும், அறநிலையத்துறை
கண்டுகொள்ளவில்லை. தன்னுடைய வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆகவே,
அரசியல் சாஸனத்தின் 226வது க்ஷரத்தின் படி நவடிக்கையெடுக்கும்படி
இந்நீதிமன்றத்தை வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
- மேற்கூறிய காரணங்களை மனதில்கொண்டு,
மாண்புமிகு உயர் நீதிமன்றம், ஆதி நாராயண பெருமாள் கோவில் மற்றும் சமய
ஈஸ்வரர் கோவில் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணியிலிருந்து அறநிலையத்துறையை
நீக்கி, அப்பணிகளை தொல்லியல் துறையிடமும் மத்திய கலாச்சார அமைச்சகத்திடமும்
ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
- இவ்வழக்கின் மீதான் தீர்ப்பு வரும்வரை பழவேற்காட்டில் அறநிலையத்துறை மேற்கொண்டு வரும் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோருகிறேன்.
ஸ்ரீகுமாரின் மேற்கண்ட கோரிக்கைகளை
ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அறநிலையத்துறையின் பணிகளுக்குத் தடை
விதித்து உத்தரவிட்டது. மேலும் அறநிலையத்துறைக்கும், தொல்லியல் துறைக்கும்,
கலாச்சார அமைச்சகத்துக்கும் மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி நோட்டிஸ்
அனுப்பும்படியும் உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்துள்ளது.
ஸ்ரீகுமார் இவ்வழக்கில் வெற்றி பெறும்
பட்சத்தில், ஆலயங்களின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் ஒரு திருப்பு
முனையாக இவ்வழக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கலை மற்றும் கலாச்சார
ஆர்வலர்களும், ஆன்மீகப் பாரம்பரியப் பிரியர்களும், பக்தர்களும்,
பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதிலும் ஐயமில்லை.
-VSRC