Wednesday, 19 November 2014


பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் உள்ளன. மாவட்ட அளவில் கடந்த 11,12,13,14 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக நல்லமழை பெய்தது. குறிப்பாக வேப்பந்தட்டை தாலுகாவில் நல்லமழை பெய்தது. இதனால் அரும்பாவூர் பெரிய ஏரி, வெங்கலம் சின்ன ஏரி, பாண்டகப்பாடி ஏரி ஆகிய 3 ஏரிகள் கடந்த 14ம் தேதி முதல் நிரம்பி வழிந்து வருகின்றன. நிரம்பி வழிந்த தண்ணீரைக் கொண்டும், ஓடைகளில் வந்து சேர்ந்த தண்ணீரைக் கொண்டும் மேலும் சில ஏரிகள் 100 சதவீதக் கொள்ளளவை எட்டி வருகின்றன.

 இந்நிலையில் கடந்த 16ம்தேதி வேப்பந்தட்டை அருகேயுள்ள வெண்பாவூர் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. அதே போல குன்னம் தாலுகா, வடக்கலூர் ஏரியும் நிரம்பி வழியத் தொடங்கியது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடல் போலக் காட்சி தரும் மிகப்பெரிய ஏரியான அரும் பாவூர் சித்தேரி நேற்று முதல் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. 52.63 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியஏரி நிரம்பி வழிந்த போது, சித்தேரி 5 சதவீதத் தண்ணீர்கூட நிரம்பாமல் மாடுகள் மேய்ந்த நிலையில் தான் காணப்பட்டது.
 தொடர்ந்து பெரியஏரி தண்ணீரும், வேப்படி பாலக்காடு பகுதி மழை நீரும் வந்து சேர்ந்ததால் நேற்று முதல் அரும்பாவூர் சித்தேரி நிரம்பி வழிகிறது. சித்தேரி 18.11 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். அரும்பா வூர் பெரிய ஏரி, சித்தேரி ஆகிய இரண்டு ஏரிகளின் மூலம் சுற்றுவட்டாரத்திலுள்ள 228.07எக்டேர் ஆயக்கட்டுபகுதி பாசன வசதி பெற்றுப் பயன் பெறும் வாய்ப்புள்ளது. இதனிடையே தொடர் மழையில் சிறிது தொய்வு ஏற்பட்டு வானம் காய்ந்து கிடப்பதால் நிரம்பும் நிலையில் இருந்த மற்ற ஏரிகள் அப்படியே நின்று விட்டன.
நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எதிர்பார்ப்புகளை ஏமாற்றி மாலையில் லேசான மழை தூறல்கள் மட்டுமே பெய்தது.

-தினகரன்.

0 comments:

Post a Comment