Friday, 21 November 2014

தாராளமயமாக்கல் வந்த பிறகு பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு முன்பாக இந்தியாவில் தடம் பதித்து கடந்த 35 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ஒரே நிறுவனம் ஜேசிபி என்றால் அது மிகையல்ல.
இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவையான அடிப்படை கட்டமைப்புத் துறையில் ஜேசிபி-யின் பங்கு அளப்பரியது. வீதியில் ஏதோ ஒரு கட்டிடத்தை இடிக்கின்ற ஒரு கனரக வாகனத்தை பார்த்த நொடியிலேயே அதை ஜே.சி.பி. என்று அழைக்கின்ற அளவுக்கு பிரபலமாகியுள்ளது.
கட்டிடங்களை இடிப்பதற்கு மட்டுமல்ல நிலக்கரி சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவுக்கு வந்ததற்கு நிறைய கதைகள் உண்டு. ஜே.சி.பி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பால் பம்ஃபோர்ட் தனது 21 வது வயதில் 1966-ம் ஆண்டு முதன் முறையாக தன் தந்தையுடன் இந்தியா வந்தார். அப்போது அவருக்கு இந்திய வாகன சந்தை பற்றியெல்லாம் தெரியவில்லை. எனினும், லண்டனில் தான் செய்த வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் எஸ்கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஜே.சி.பி.யை இந்தியாவில் தடம் பதிக்க வைக்கிறார்.
1979-ம் ஆண்டு ஜே.சி.பி. தயாரிப்பு தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்கினார். இந்தியாவில் முதல் முறையாக வாகன உற்பத்திக்காக தனி தொழிற்சாலை ஆரம்பித்த முதல் நிறுவனம் ஜே.சி.பி.தான் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த 35 ஆண்டு பயணத்தில் இந்தியாவின் நீள அகலம் முழுக்க பயணித்த ஜே.சி.பி க்கு கிடைத்த வரவேற்புகள் ஏராளம். இதுதான் ஜே.சி.பி என்னும் நிறுவனத்தின் பெயரை வாகனத்தின் பெயராக கொண்டாடுகிற அளவுக்கு பிரபலமாக்கியுள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் ஆரம்பித்து கடைக்கோடி கிராமங்கள் வரை ஜே.சி.பியின் டயர் படாத இடமென்று எதுவும் இல்லை எனலாம். எவ்வளவு பெரிய கோட்டையாக இருந்தாலும் ஒரே தட்டில் தரைமட்டம் ஆக்கிவிடும் ஜே.சி.பி, இடித்த உபரி பொருட்களை அப்புறப்படுத்துவது, இடிக்கப்பட்ட இடத்தை சமன்படுத்துவது என ஒற்றை இயந்திரமாக பல வேலைகளை செய்கிற அளவுக்கு வடிவமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதனை பின்பற்றி ஏகப்பட்ட நிறுவனங்கள், கன ரக வாகனங்களை தயாரிக்க ஆரம்பித்தன.
ஜே.சி.பி.யின் ஒருநாள் வாடகையே பல ஆயிரங்களை தொடுகிறது. கார், வேன் போன்ற வாகனங்களை ஓட்ட பயிற்சி பெற்றவர்களும் அவற்றின் உரிமையாளர்களும் பல ஆண்டுகள் காத்திருந்து பெறுகிற வருவாயை, ஜே.சி.பி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஒரு சில மாதங்களில் பெற்று விடுகிறார்கள். இதனால் அரசு மறுவாழ்வு பயிற்சிகளில் கூட ஜே.சி.பி. நிறுவனத்தின் பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக ஜே.சி.பி நிறுவனத்தின் வர்த்தக தொடர்பு அதிகாரி ஜம்சீத் சிங் கூறுகையில், “கடந்த 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜே.சி.பி நிறுவனம் இதுவரை 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. இவற்றில் 2 லட்சம் வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இதுவரை புணேயில் 2 தொழிற் சாலைகளும், ஹரியாணா மாநிலம் பல்லாபார்க்கில் ஒரு தொழிற் சாலையும் இருந்த நிலையில் ஜெய்ப்பூரில் மேலும் 2 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் 12 தொழிற் சாலைகள் உள்ள நிலையில் இதற்கடுத்து, இந்தியாவில்தான் 5 தொழிற்சாலைகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுவரை கனரக வாகனத்துக்கான தொழில்நுட்ப உதிரி பாகங்களை அதிகம் தயாரித்த நிறுவனம் தற்போது, வரும் காலங்களில் ‘டெலஸ்கோப் ஹேன்ட்லர்’ எனப்படும் சுமைதூக்கி கருவிகளை அதிகளவில் தயாரிக்கவுள்ளது என்றார்.
வருமானம் ஈட்டக்கூடிய அளவுக்கு ஜே.சி.பி.யை கையா ளுவது குறித்து தமிழ்நாடு கனரக மற்றும் பளுதூக்கும் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜனார்த் தனன் கூறியதாவது: பொதுவாக வாகனங் களை வசதிக்காக பயன்படுத்துபவர் களுக்கு இணையாக அவற்றை வணிக நோக்கில் பயன்படுத்து பவர்களும் அதிகளவில் உள்ளனர். ஆட்டோவில் ஆரம்பித்து மஹிந்திரா வேன், டெம்போ டிராவலர்களை மாத வாடகைக்கு விட ஆரம்பித்திருக்கிறார்கள்.
கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கியவர்கள், அவற்றை கொண்டு சம்பாதிப்பதைக் காட்டிலும் இ.எம்.ஐ கட்டி நொடிந்து போனவர்கள் தான் அதிகம். ஆனால் ஜே.சி.பி. வந்த பிறகு நிறைய பேர் வெறும் வாகன உரிமையாளர்கள் என்ற அளவில் மட்டுமன்றி தொழில் முனைவோராகவும் மாறியுள் ளனர். இன்றைக்கு ஒரு ஜே.சி.பி.யின் விலை ரூ.25 லட்சத்துக்கு சந்தைகளில் கிடைக்கிறது. 25 லட்சமா என்று நிறைய பேர் இதனை வாங்குவதில்லை.
இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் போன்ற பொதுத்துறை வங்கிகள் ஜே.சி.பி நிறுவனத்தின் கனரக வாகனங்களை வாங்குவதற்கு எளிதில் கடனுதவி அளிக்கின்றன. ஒரு மணி நேரத்துக்கு 700 முதல் 900 ரூபாய் ஜே.சி.பி-க்கு வாடகையாக பெறலாம். இதுவே மாதக்கணக்கிலென்றால், 95000 வரை வாடகை பெறலாம். ஜே.சி.பி. இயக்குவதற்கான பட்டய வகுப்புகள் கூட உள்ளன.
இவ்வளவு பணத்தை முதலீடு செய்து ஜே.சி.பி.யை வாங்கிய பின் ஏதாவது கோளாறு என்றால் என்ன செய்வது என்று தயங்குகிறார்கள். ஒவ்வொரு மாவட்ட அளவிலும் ஜே.சி.பி.யை சரி செய்வதற்கான ஆட்கள் உள்ளனர். எப்படி வீட்டில் வாஷிங்மெசின், பிரிட்ஜ் எல்லாம் பழுதடைந்தால், உடனே வந்து சர்வீஸ் செய்து தருகிறார்களோ, அதே போல்தான் ஜே.சி.பி.க்கும் சர்வீஸ் வசதி உண்டு. குறிப்பிட்ட காலம் வரை இலவச சர்வீஸ் வசதியும் உண்டு என்று அவர் கூறினார். 

-தி இந்து.

0 comments:

Post a Comment