Wednesday, 19 November 2014


அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் வகையில் பிரதமரின் மக்கள் நிதி திட்டம் (பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா) தொடங்கப்பட்டது. இதில் கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு நிதி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. கணக்கு தொடங்கி 6 மாதத்துக்கு பிறகு இதன்மூலம் ஓவர்டிராப்டாக ரூ.5,000 கடன் பெறவும் வசதி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 26ம் தேதிக்குள் 7.5 கோடி பேருக்கு கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக்கு ரூ.90 செலுத்தினாலே போதும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குபவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்கு பிறகு பலன்பெறலாம். இதற்காக எல்ஐசி நிறுவனம் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் காப்பீடு கோரி வரும் விண்ணப்பங்களை பொறுத்து கூடுதல் நிதியை அரசிடம் இருந்து இந்நிறுவனம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1000க்கு 3 ரூபாய் என்ற அடிப்படையில் ரூ.30,000 காப்பீட்டுக்கு ரூ.90 செலுத்தினால் போதுமானது.

எல்ஐசி நிறுவனத்தின் ஆம் ஆத்மி பீமா யோஜனா ஏழைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் மிகக் குறைந்த தொகையே பிரிமியமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் சேரும்போது ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மத்திய அரசின் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்தும், நிலமற்ற குடும்பங்களுக்கு மீதி 50 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. இதை அடிப்படையாக வைத்தே ஜன்தன் யோஜனாவிலும் ரூ.90 கட்டணத்தில் காப்பீடு வழங்க திட்டமிட்டதாக தெரிகிறது. முதன் முதலாக ஜன்தன் யோஜனா திட்டம் பற்றி பிரதமர் நரேந்திரமோடி சுதந்திரதின உரையில் அறிவித்தபோது இந்த காப்பீடு இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டது.

74% கணக்கில் பணம் இல்லை:

ஜன்தன் யோஜனாவில் 7 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. ரூ.5,400 கோடி டெபாசிட் செய்யப்ப்டடது. கடந்த 7ம் தேதி நிலவரப்படி, இதில் சுமார் 5.3 கோடி கணக்குகளில், அதாவது 74 சதவீத கணக்குகளில் பணம் இல்லை என்று நிதி சேவைகள் துறை புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 4.2 கோடி கணக்குகள் ஊரக பகுதிகளிலும், 2.9 கோடி கணக்குகள் புறநகர்களிலும் திறக்கப்பட்டுள்ளன.

-தினகரன்.

0 comments:

Post a Comment