திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வரும் 26ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மகாதீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 2ம் தேதி மகா தேரோட்டம், 5ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இந்த கொப்பரையை, ஆண்டுதோறும் விழா தொடங்குவதற்கு முன்பு சீரமைப்பது வழக்கம். அதன்படி தீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கொப்பரையின் அடிபாகத்தில் உள்ள வளையம் சேதமடைந்ததால் அதை மாற்றி, வர்ணம் தீட்டி, அர்த்தநாரீஸ்வரர் உருவம் வரையப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு வரும் 4ம் தேதி கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட உள்ளது.
பக்தர்களுக்கு இன்சூரன்ஸ்:திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் பெறும் வகையில் பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வசதியை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும் கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், சேவைப் பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கும் இந்த காப்பீடு வசதி பொருந்தும். தேரோட்டத்தின்போது மாட வீதியில் பக்தர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் தொகையை பெறலாம்.
0 comments:
Post a Comment