Saturday, 22 November 2014

காஸ் சிலிண்டருக்கான மானிய சுமையை ஈடுகட்ட, வசதி படைத்தவர்களுக்கு மானியத்தை ரத்து செய்ய இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்ளூர் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி விலையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இருப்பினும் அந்த சுமையை மக்களின் மீது ஏற்றாமல் இருக்க, பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டரின் சந்தை விலை சென்னையில் ரூ.863 ஆக உள்ளது. மானியமாக ஒரு சிலிண்டருக்கு ரூ.459ஐ மத்திய அரசு வழங்குகிறது. பொதுமக்களுக்கு, மானிய விலையில் சிலிண்டர் ஸி404க்கு வழங்கப்படுகிறது.

மானியம் அதிகரித்து கொண்டே வருவதால் மத்திய அரசுக்கு பெரும் சுமை ஏற்பட்டு வருகிறது. இத னால் மானிய காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய தால் திட்டம் கைவிடப்பட்டது.இதையடுத்து, தற்போது காஸ் சிலிண்டருக்கான மானிய சுமையை ஈடுகட்ட மத்திய அரசு புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது. பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மானிய சலுகை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதன் முதல் கட்டமாக எண்ணெய் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சந்தை விலையில் சிலிண்டர்களை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் வசதி படைத்தவர்களுக்கு காஸ் மானியம் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் கூறுகையில், ‘காஸ் மானியத்தில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாடு உள்ளது. வசதி படைத்தவர்கள் நான் உட்பட, காஸ் மானியம் பெற தகுதியானவரா என்பதை முடிவு செய்ய வேண்டும். இதற்கான திட்டம் தயாராக உள்ளது. விரைவில் எந்தெந்த பிரிவினருக்கு மானியம் ரத்தாகும் என்பது அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில் மத்திய அரசு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை‘ என்றார். எனவே, விரைவிலேயே இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-தினகரன்.

0 comments:

Post a Comment